நிலக்கிளி பாலமனோகரனுடன் ஒரு நேர்காணல்....

அகில்

                                
எழுத்தாளர் திரு. பாலமனோகரன் இரண்டு வாரங்களுக்கு முன் டென்மார்க்கில் இருந்து கனடாவுக்கு வருகை தந்திருக்கிறார்.  இவரது நிலக்கிளி நாவல் எல்லோராலும் பேசப்பட்ட ஒரு படைப்பு. அவர் கனடாவில் இவ்வாரம் இரண்டு நாவல்களை வெளியிடவுள்ளார்.  அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட நேர்காணல் இது.

உங்கள் இலக்கியப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது இலக்கியப் பயணம் என்று குறிப்பிடும்போது, நிலக்கிளி நாவல் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான காலப்பகுதியில் இருந்துதான் எனது பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரபலமாயிற்று. அதன் பின்னர் தொடர்ந்து வீரகேசரி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுதிவந்தேன். நிலக்கிளியைத் தவிர மேலும் இரண்டு நாவல்களும் வீரகேசரியில் பிரசுரமாகின. பின்னர் நான் வட்டப்பூ என்ற ஒரு நாவலை எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதில் அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்கள் இருப்பதால் அதைப் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். அந்த நாவலை எப்படியாவது பிரசுரிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. பின்பு ஒரு சமயம் நான் இந்தியாவிற்குச் சென்றிருந்தேன்.  அங்கே மறுபடியும் அந்த நாவலை எழுத எண்ணினேன். என்னிடம் நாவலின் குறிப்புக்கள் மட்டுமே இருந்தன. அதனை வைத்துக்கொண்டு 48 மணிநேரம் உட்கார்ந்து அந்த நாவலை எழுதிமுடித்தேன். நர்மதா ராமலிங்கத்திடம் அதனைக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் 'கதை நன்றாக இருக்கிறது. ஆனால் தற்போதய சூழ்நிலையில் இந்த இலக்கிய முயற்சிக்கு பெருமளவு ஆதரவு இல்லை. இதைப் பிரசுரிக்க முடியாது' என்று கூறிவிட்டார். 'காலம் வரும்போது பிரசுரிக்கிறேன்' என்றார்.  பின்னர் நான் ஹோமா பதிப்பகத்தினூடாக அந்த நாவலை 'நந்தாவதி' என்ற பெயருடன் தமிழ்நாட்டிலேயே வெளியிட்டேன்.

அதன்பிறகு 1984 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறி டென்மார்க்கிற்கு வந்து சேர்ந்தேன். சிறிதுகால இடைவெளியின்பின்னர் மீண்டும் எனது எழுத்துப் பணி ஆரம்பமானது. ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த முதல் சிறுகதை என்னுடைய சிறுகதையாக அமைந்தது. எனது 10 சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதி இரு ஐரிஷ; மொழி எழுத்தாளர்களிடம் கொடுத்திருந்தேன். அதை அவர்கள் இருவரும் இணைந்து டானிஷ; மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இவ்வாறு நான் டானிஷ; - தமிழ் மொழியியலாளன் ஆனேன். பின்னர் நான் டானிஷ; - தமிழ் அகராதி ஒன்றைத் தொகுத்தளித்தேன். இதை ஒரு ஸ்தாபனம் தனது 11 ஆவது பிறமொழி அகராதியாக வெளியிட்டது. அதன் 6 ஆவது, 7 ஆவது பதிப்புக்கள் தற்போது வெளிவந்துள்ளன. தற்போது வட்டம் பூ நாவலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளேன்.

உங்களது இலக்கியப்பணிக்கு உந்துசக்தியாக இருந்தது எது என்று கருதுகிறீர்கள்?
அப்போது எனக்கு சுமார் இருபத்தைந்து வயதிருக்கும். எனக்கு முதல்முதல் ஆசிரிய நியமனம் கிடைத்தது மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில்தான். அங்கே பணிபுரிந்த சமயம் ஒரு உறவினரோ, நண்பரோ என்னிடம் சிறுகதை ஒன்றைக் கேட்டிருந்தார். நானும் ஒரு சிறுகதையை எழுதி அதை அப்பாடசாலையில் உயர்தர வகுப்பில் படித்த ஒரு மாணவனிடம் கொடுத்து, அழகுற எழுதித் தரும்படி கொடுத்தேன். எனது கதையைப் படித்த அம்மாணவன் தனது ஊரில் உள்ள வ.அ விடம் அச்சிறுகதையைக் கொடுப்போம் என்று கூறினான். அவன்  கூறித்தான் வ.அ என்பவர் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளர் என்பதை நான் அறிந்துகொண்டேன். அவரைச் சந்தித்த போது, அவருக்கு என் எழுத்துநடை மிகவும் பிடித்திருப்பதைப் பற்றிக் கூறினார். அத்தோடு நான் எழுதியது சிறுகதை அல்ல ஒரு நாவல் என்றும் குறிப்பிட்டார். சிறுகதை, நாவல் பற்றிய பல கருத்துக்களை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டார். என் எழுத்துத் திறமையை இனம் கண்டவர் அவர். எதை எழுத வேண்டும். எதைச் சிந்திக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியவர் அவர். அவர்தான் எனது முதலாவது சிறுகதையை சிந்தாமணிக்கு அனுப்பி வைத்தார். அடுத்து வீரகேசரி பத்திரிகை பற்றியும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். வீரகேசரிப் பத்திரிகை ஈழத்தில் பல எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்காற்றியது. என்னைப் போன்ற பல புதிய எழுத்தாளர்களது ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கம் கொடுத்தது.

நீங்கள் ஒரு எழுத்தாளராக இருப்பது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
நான்  ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல. ஓவியங்களும் நன்றாக வரைவேன். எழுத்து என்று சொல்லும்போது, குறிப்பாக ஒரு சிறுகதை அல்லது நாவலை பிறர் எதற்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் என் மனதை ஒரு நிகழ்வு ஆழமாகப் பாதிக்கும்போது ஏற்படும் ஓர் அருட்டுணர்வின் காரணமாகத் தான் என்னுள் கதை பிறக்கிறது. சில சம்பவங்கள் நம்மை சிந்திக்கவைக்கின்றன. புதிய எண்ணம், புதிய கருத்துக்களை தோற்றுவிக்கின்றன. அவற்றை அவ்வப்போது குறித்து வைத்துக்கொள்வேன். பிற்பாடு அவை எனது படைப்புக்களினூடு வெளிவரும். எந்தக் கருத்துக்கள் எங்களுக்குள் உறைந்து இருக்கின்ற மனிதத்தை தட்டி எழுப்புகின்றதோ, அவற்றை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். சிறந்த மனித நேயக்கருத்துக்களை வாசகர்களுக்கு வழங்க வேண்டும். நான் ஒரு சிறந்த தமிழனாக இருப்பதை விட ஒரு நல்ல மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்.

கனடாவில் பல நல்ல இலக்கிய அமைப்புக்கள் இருக்கின்றன. நீங்கள் வாழும் டென்மார்க்கில் உள்ள இலக்கிய அமைப்புக்கள், ஆர்வலர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
டென்மார்க்கில் இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஏனென்றால் நான் வசிப்பது தலைநகரை அண்டிய பிரதேசத்தில். தமிழர்கள் அப்பகுதியில் வாழ்வது மிகவும் அரிது. ஆனால் டென்மார்க்கின் பிறபகுதிகளில் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கி.செ.துரை என்பவர் திரைப்படம், நாடகங்கள் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருபவர். கவிஞர்கள் பொன்னண்ணா, முல்லையூரான் மற்றும் குலசிங்கம், ஆரதிபாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்;. கவிஞர் முல்லையூரான் இறந்துவிட்டார். மிகவும் சிறந்த கவிஞர். குலசிங்கம் டெனிஷ; மொழிக் கவிதைகள் பலவற்றை நேரடியாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

உங்கள் புதிய முயற்சிகள் பற்றி கூறுங்கள்?
நான் 1984 ஆம் ஆண்டு டென்மார்க் வந்தபின் இன்றுவரை நிறைய குறிப்புக்கள் சேகரித்து வைத்துள்ளேன். ஆனால் அவற்றை படைப்புகளாக்கி, பிரசுர வடிவைக் காண்கின்ற வாய்ப்போ, வசதியோ கிட்டவில்லை. இப்பொழுது ஓரளவுக்கு அந்த நிலை வந்திருப்பதாக கருதுகிறேன். அடுத்து நாவல் ஒன்றை எழுதும் எண்ணம் உள்ளது.

படைப்புக்கள், குறிப்பாக சிறுகதை, நாவல்கள் மண்வாசனை செறிந்த பேச்சுவழக்கிலேயே அதன் மொழிநடை அமைந்திருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் சிலர் பொதுவான ஒரு நடையையே கையாள்கிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இரண்டு நடையுமே கலந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒரு படைப்பை வாசிக்கும்போது வாசகனுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது. எனக்கு புரியாத மொழிநடையில் நான் எழுதினால் வேறு யாருக்கு புரியப்போகிறது? ரிக்ஷhக்காரன் பேசும் மெட்ராஸ் பேச்சு வழக்கில் தொடர்ந்து எழுதினால் அது சலிப்பை ஏற்படுத்தும். அதைப்போல பழைய பண்டித மொழியிலேயே தொடர்ந்து எழுதினாலும் சலிப்பை ஏற்படுத்தும். ஆகவே இரண்டையும் கலந்து எழுதவேண்டும். நாம் ஈழத்திலே பாவிக்கும் மிகச் சாதாரணமான சொற்கள் கூட இந்திய வாசகர்களுக்குப் புரிவதில்லை. எனது நிலக்கிளி நாவலை எடுத்துக்கொண்டால் அதில் பல இடங்களில் கதாபாத்திரங்கள் மிகவும் சாதாரண மொழியிலேயே உரையாடுவதைக் காணலாம். எனவே நாம் எந்த மொழிநடையைக் கையாண்டாலும் வாசகர்களுக்கு புரியக்கூடிய வகையிலும், சலிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும்.

புத்தகம் ஒன்றை எழுதி வெளிக்கொண்டு வருவது என்பது ஒரு பிரசவ வேதனைக்கு ஒப்பானது என்பர். இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் நூல் வெளியீடுகள் பணச்சடங்கிற்காக நடத்தப்படுபவை என்று விமர்சிக்கப்படுகின்றன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஒரு எழுத்தாளன் தன் படைப்பை புத்தக வடிவில் கொண்டுவர அவன் நிறைய செலவு செய்யவேண்டியிருக்கிறது. பிறகு அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதும் மிகவும் கடினமான செயற்பாடாகவே உள்ளது. ஒரு சிறந்த படைப்பாளி சிறந்த விற்பனையாளனாகவும் இருப்பான் என்று கூறமுடியாது. நிறைய நண்பர்கள் வட்டம், இலக்கிய வட்டம் இருந்தால்தான் அது சாத்தியமாகும். சிலபேர் தம் குடும்பத்தையும் பாராமல் காணி, பூமியை விற்றுக்கூட நூல்வெளியீடு செய்தவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அது தவறு. எங்களை நம்பியிருப்பவர்கள், எங்களை சுற்றியிருப்பவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களது முக்கிய கடமை. எழுத்தாளர்களுக்கு மக்களது ஆதரவு வேண்டும். அவனுக்கு பணரீதியான ஆதரவு வழங்க வேண்டும். அவனுடைய முயற்சிக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊக்கம் அது. ஒரு உன்னத இலக்கியப் பணி இது. இதைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

புலம்பெயர் எழுத்தாளர்கள் சிலர் 'போர்க்கால அனுபவங்கள் எங்களுக்கு இல்லை. அத்தோடு அதற்கு முற்பட்ட காலத்தைய அனுபவங்களை வைத்து படைப்புக்களை எழுத முனைந்தால் அவை பற்றி ஏற்கனவே பல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  எனவே புலம்பெயர் நாட்டினை மையப்படுத்தியே எமது படைப்புக்களை உருவாக்க முடியும்' என்கின்றனர். நீங்கள் ஒரு புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் இது பற்றிய உங்கள் கருத்து......? 
மனிதன்  என்பவன் தனியே ஒருவன் மட்டுமல்ல. அவன் ஒரு சமுதாயத்துடன் இணைந்து வாழ்பவன். அவன் தனித்து வாழமுடியாது. அந்தவகையில் எங்கோ ஒரு இடத்தில், ஒரு மூலையில் நடக்கின்ற பிரச்சினையை, போர் அவலங்களை, அதுவும் எமது சமூகத்திற்கு நடக்கின்ற அவலங்களை நாம் தாராளமாக உணர்ந்து எழுத முடியும்.  நிறைய சம்பவங்களை, செய்திகளை பத்திரிகைகள், வானொலிகள் வாயிலாக அறிகிறோம். அவற்றை வைத்து கற்பனையும் கலந்து எத்தனையோ படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.

சில எழுத்தாளர்கள் ஒரு படைப்பை எழுதிவிட்டு அதை அப்படியே பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவதாக கூறுகிறார்கள்;. இவ்வாறான படைப்புக்கள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்;?
இதை என்னால் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதாரணமாக ஒரு கதைக்கருவை எடுத்துக்கொண்டால் அந்த விடயம் மனதுள் கிடந்து அரித்துக்கொண்டே இருக்க வேண்டும். சில பத்து, பதினைந்து ஆண்டுகள் கூட நெஞ்சில் புதைந்து கிடக்கும். அவை சம்மந்தமான விடயங்களை அவ்வப்போது குறித்துக்கொள்ள வேண்டும். கதையை எழுதத் தொடங்கும்போது அவை எம்மை அறியாமலேயே கதையில் வந்து விழுந்துகொண்டிருக்கும். அது ஒரு ஆச்சரியமான விடயம்தான். ஆனால் எழுதிமுடித்த பின் அதை மறுபடி, மறுபடி வாசித்துப் பார்க்கவேண்டும். சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அத்தோடு ஒரு வாசகன் படைப்பை எப்படிப்பார்ப்பான் என்பதை நாம் கதையை பூரணமாக எழுதிய பின் வாசிக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக நான் எழுதிய ஆங்கில நாவலில்கூட ஒரு சில சொற்பதங்கள் தவறாக இருந்தன. அ.முத்துலிங்கம், மற்றும் சில எழுத்தாளர்களிடம் என் கதைப்பிரதியைக் கொடுத்தபோது அவர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினார்கள். இறுதியாக அது நூலுருப்பெறும் முன்னர் நான் அவற்றை திருத்திக்கொண்டேன்.

ஒரு படைப்பு என்பது அழகாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு சொல்லும் சரியாக அமைய வேண்டும். சாதாரணமாக பாடசாலையில் வகுப்பறையில் ஒரு கட்டுரை எழுதும்போது கூட எவ்வளவு விடயங்களைக் கருத்தில் கொள்கிறோம். அப்படியிருக்கும்போது ஒரு படைப்பு என்றுவரும் நிலையில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். சொற்பிழை, வசனப்பிழை என்று எத்தனையோ தவறுகள் ஏற்படலாம். இரண்டு, மூன்று பேரிடமாவது படைப்பை வாசிக்கக் கொடுக்கவேண்டும்.

காலத்தின் எதிரொலியாக இணையத்தளங்களில் பல புதிய படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். இது தமிழ் இலக்கியத்துறைக்கு ஒரு வளம் சேர்க்கும் என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக இது வரவேற்கப்பட வேண்டும். முன்பு ஒரு படைப்பை வெளிக்கொணர்வது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. பத்திரிகைகளுக்கு எழுதியனுப்பும் எல்லாப் படைப்புக்களுமே பிரசுரிக்கப்படுவதில்லை. பத்திரிகைகளுக்கு எழுதுபவர்களும் மிகவும் குறைவானவர்களாகவே காணப்பட்டார்கள். தற்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக நிறைய படைப்பாளிகள் இணையத்தளங்களில் எழுதுகிறார்கள்.

எழுதுவது என்பது ஒரு சுயதிருப்தியை, ஆன்மதிருப்தியை தருவது. தன்னுடைய படைப்பை மற்றவர்கள் படிக்கவேண்டும். ரசிக்கவேண்டும் என்ற  ஆவல் இயற்கையானது. இணையத்தளத்தில் எழுதுபவர்கள் ஏதோ ஒரு உணர்வு தூண்டப்பட்டு எழுதுகிறார்கள். ஆனால் எல்லோராலுமே எழுதமுடியுமா என்பது சந்தேகம். அந்தவகையில் எழுதுபவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள் உயிர்வாழ்தல் என்பது ஒரு மிகப் பிரமாண்டமான விசயம். இந்த உயிர்வாழ்தலில் நம் பிள்ளைகள் நம் எச்சங்கள். அதே போல எழுத்துப்பணியும் எமது எச்சங்களே. எங்களுக்குப் பிறகும் வாழப்போவது அவைதான்.

நீங்கள் வட்டம்பூ  நாவலை ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதாக அறிகிறோம். அந்த அனுபவம் பற்றி?
ஆம் வட்டம்பூ என்ற நாவலலைத் தான் நான் ஆங்கிலத்தில்  டீடநநனiபெ ர்நயசவ என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதுவது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. தமிழில் நான் எழுதுவதைப் போலவே எளிமையான நடையில்தான் எனது ஆங்கில நாவலையும் எழுதியுள்ளேன். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எனது சொற்சேமிப்பு என்பது அவ்வளவு பிரமாண்டமானது அல்ல. சில தமிழ்ச் சொற்களுக்கு அதற்குரிய சரியான சொல்லைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிக்கலாகத்தான் இருந்தது. அந்தக் கதையில் வரும் குழுமாடு என்ற சொல்லும் அப்படிப்பட்டதுதான்.

ஒரு ஓவியனை எடுத்துக்கொண்டால் எத்தனையோ விதமான வர்ணங்கள், தூரிகைகள் அவனிடத்தில் இருக்கும். ஆனால் அவன் ஓரு ஓவியத்திற்கு எல்லா வர்ணங்களையுமோ, அல்லது எல்லாத் தூரிகைகளையுமோ பயன்படுத்துவான் என்றில்லை. இரண்டு, மூன்று வர்ணக்கலவைகளைக் கொண்டே மிகச் சிறந்த ஓவியங்களைப்  படைத்துவிட முடியும். அவ்வாறே சில கடின சொற்பதங்கள், சொற்சேமிப்புக்கள் இருந்தும் அவை எல்லாவற்றையும் நான் பயன்படுத்தவில்லை. சில கடினமான ஆங்கில வார்த்தைகளைப் பாவிக்கும்போது வாசகர்களுக்கு வாசிப்பில் களைப்பை ஏற்படுத்தும். அவ்வாறன்றி எனது ஆங்கில நாவலை எளியநடையிலேயே எழுதியுள்ளேன்.

உங்களது ஆங்கில நாவலுக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது?
நான்  எதிர்பார்த்ததைவிட மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  
Tamilnet  இணையத்தளத்தில்; இந்த நாவல் குறித்து மிகவும் நல்ல விமர்சனம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய கோணத்தில் அக்கட்டுரை அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலர் என்னோடு தொடர்புகொண்டு நாவலை அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அந்த நாவலுக்கு கிடைத்த ஆதரவும், வரவேற்பும் என்னை இன்னுமொரு ஆங்கில நாவலுக்கு தயார்ப்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். நான் எழுதிய மொழிநடை அவர்களுக்கு சரியான முறையில் போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற ஆத்ம திருப்தியைத் தந்துள்ளது.

உங்களுடைய நாவலை தமிழில் வாசிக்கும் போது ஏற்படும் அதே உணர்வு அந்த ஆங்கில நாவலிலும் எதிர்ப்பார்க்கமுடியுமா?
தமிழில் நிலக்கிளி நாவலை எடுத்துக்கொண்டால், அதுபற்றி வாசகர்கள் கூறும்போது புத்தகத்தை வாசிக்கத்தொடங்கிய பின்னர் கதை முழுவதையும்  வாசித்து முடித்துவிட்டுத்தான்; அதை கீழே வைக்கமுடிந்தது என்பார்கள். அதே கருத்தைத் தான் இந்த ஆங்கில நாவலை வாசித்த வாசகர்களும் தெரிவிக்கிறார்கள். ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடும் ஆர்வத்தை என் எழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன. ஆங்கில நாவலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இறுதியாக வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உள்ள சுத்தியோடு உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வெளியிடுவது இலக்கியம். அது உண்மையை, யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும். சமகால படைப்புக்களை நிறைய வாசிக்க வேண்டும். ஏனைய எழுத்தாளர்களோடு இணைந்து படைப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இரசனைகள். கருத்துக்கள் இருக்கும். அவற்றை மதிக்கவேண்டும். இரசிக்க வேண்டும்.