நூலகவியலாளர் திரு என்.செல்வராஜாவுடனான நேர்காணல்:

திரு. இ.மகேஸ்வரன்,

(இலங்கையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு மாவட்டங்களில் பல்வேறு நூலகங்களிலும் 1976 முதல் நூலகராகப் பணியாற்றிய திரு என். செல்வராஜாவை அவரது பல்தொகுதி நூலான நூல்தேட்டம் வாயிலாகவும், சஞ்சிகைகள், பத்திரிகைகளின் வாயிலாகவும் நாங்கள் நன்கறிவோம். போர்க்காலச் சூழலில் 1991இல் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தற்போது லண்டனில் குடும்பத்தினருடன் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் எழுத்துலக பணியில் 'நூல்தேட்டம்' எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூடாகவும் தொகுதிக்கு 1000 இலங்கைத் தமிழர்களின் தமிழ் நூல்கள் என்ற வகையில் மொத்தம் 6000 நூல்களைப் பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ குறிப்புரையுடன் கூடியதாக இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம்.)

1. முதலில் நூல்தேட்டம் என்றால் என்ன? இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை அடைந்துள்ள இலக்கு என்ன என்பதைச் சற்று விரிவாக விளக்கமுடியுமா?

நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும், இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் இன்றுவரை தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகம், ஐரோப்பா மற்றும் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் வரவையும் இருப்பையும் முழுமையாகப் பதிவுசெய்த முயற்சி எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இந்நூல்கள் பற்றிய தகவல்களை விரிவாகப் பதிவுசெய்து கொள்வதற்காகவும், பல்வேறு ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாக மட்டுமே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சிறப்பம்சம் என்று நான் கருதுகின்றேன்.

2. இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி எம்மவர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா?

ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்ற சில இலக்கியவாதிகள் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெற்றிருக்கவில்லை. இவர்கள் இலக்கியவாதிகளாக இருந்தமையால், பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே தமது பட்டியல்களில் பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள். இலங்கைத் தேசிய நூலகமும் நிறுவன ரீதியில் கணிசமான அளவு தமிழ்நூல்களைப் பதிவுசெய்கின்றது.

3. நூல்தேட்டம் இலக்கியத்துறைக்கும் அப்பால் இலங்கையில் வெளியாகியதும் இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்பட்டதுமான அனைத்து நூல்களையும் உள்ளடக்குகின்றது அல்லவா?

ஆம். இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை ஒரு ஆய்வாளர் முழமையாகத் தரிசிக்க முடிகின்றது.

4. இலங்கைத் தேசிய நூலகம் தனது தேசிய நூற்பட்டியலிலும் தமிழ் நூல்களை அடக்குகின்றது என்பதை நாம் அறிவோம். இது முழமையாக மேற்கொள்ளப்படவில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின் கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும்,
ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. அங்கு பணிபுரியும் தமிழ் நூலகர்கள் தமது கைக்கெட்டும் தமிழ் நூல்களை இதில் பதிவுசெய்கிறார்கள். இருப்பினும் புவியியல் மற்றும் பல்வேறு காரணிகளால் இதில் உலகெங்கும் அச்சிடப்படும் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

5. எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுகிறீர்கள்?

இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை
ISBN  இலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இந்தியாவில் அச்சிடப்படுவதாலும் இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நூலின் பருமன், உள்ளடக்கம், படைப்பாளியின் அக்கறையின்மை, விரிவான விநியோகத் திட்டமின்மை என்பன அவற்றுட் சிலவாகும். இந்நிலையில் இந்நூல்களின் வரவு பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

6. புகலிடத்தில் இலங்கைத் தமிழர்களின் புத்தகக் கலாச்சாரம் பற்றி என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?

இலங்கையிலிருந்து பாரிய புலப்பெயர்வொன்று ஏற்பட்ட எண்பதுகளின் பின்னர் இலங்கையின் பிரபல படைப்பாளிகள் சிலரும் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தார்கள். நிலக்கிளி பாலமனோகரன் டென்மார்க்கிலும், இந்து மகேஸ் ஜேர்மனியிலும், அமுதுப் புலவர் லண்டனிலும், கவிஞர் கந்தவனம் கனடாவிலும், உதயணன் பின்லாந்திலும், லெ.முருகபூபதி மெல்பர்னிலும், எஸ்.பொ, மாத்தளை சோமு போன்றொர் சிட்னியிலும் தமது இலக்கியப்பணியைத் தொடர்கிறார்கள். இப்பட்டியல் மிக நீண்டது. மாதிரிக்கொன்றாகவே மனதில் வந்த ஒழுங்கில் குறிப்பிடுகின்றேன். இவர்கள் தவிர புகலிடத்திலேயே தமது இலக்கியப்பணியை தொடங்கிய இளம் படைப்பாளிகள் கூட்டமொன்றும் உள்ளது. இவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் இயக்கப்படும் ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, மற்றும் எழுத்து ஊடகங்கள் அனைத்தும் ஆரோக்கியமான புகலிட இலக்கிய வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன. சில இளம் படைப்பாளிகள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளிலும் அடிக்கடி முகம்காட்டுபவர்களாக இருக்கிறார்கள்.

7. தமிழில் இவர்கள் எழுதுவதை படிக்கும் வாய்ப்புள்ள சூழலில் இளைய தலைமுறையினர் உள்ளனரா? அவர்களது தமிழறிவு எப்படி இருக்கின்றது?

நான் இங்கு குறிப்பிடும் எழுத்தாளர்களின் தமிழ்ப்படைப்புக்களை வாசிக்கும் நிலையில் முழுமையான இளைய தலைமுறையினர் இல்லை என்பது உண்மைதான். இந்த நிலை புகலிடத்தில் மாத்திரம் நிலைப்பதல்ல. ஏன் இலங்கையில்கூட இளையோரிடையே வாசிப்புக்கலாச்சாரம் அருகிவருவதைப்பற்றி பத்திரிகைகளில் எம்மவர்கள் கவலைகொள்வதை நான் அவதானித்து வருகின்றேன். இங்கு புகலிடத் தமிழர்களைப்பற்றி எனது கருத்து என்னவென்றால் முற்றிலும் வேற்று மொழிச் சூழலில் கல்வி கற்கும் எமது இளம் தலைமுறையினரிடம் பொதுவான வாசிப்புப்பழக்கம் குறைந்துள்ளது என்று சொல்லமாட்டேன். அவர்களது தேசிய கல்வித்திட்டத்தின்கீழ் நிறையவே வாசிக்க வேண்டியுள்ளது. அவர்கள் தமிழ் நூல்களை வாசிக்கும் ஆற்றல் கொண்டிருப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் வாசிக்கும் ஆற்றல் பாடசாலை வேலைத்திட்டங்களால் அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது. இல்லாவிட்டால் ஹரிபொட்டர் போன்ற பெருநூல்கள் இவர்களின் கைகளில் விருப்புடன் செல்வதற்கு வழியேற்பட்டிராது.

8. புலம்பெயர் தமிழர்களினதும் சிறார்களினதும் வாசிப்பு அறிவு திருப்திகரமாக இருப்பதாகக் கருதுகிறீர்களா?

ஆம் நிச்சயமாக. இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியே. என்னைப் பொறுத்தவரையில் முதலில் ஏதாவது மொழியின் மூலமான வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர் அவர்கள் எந்த மொழியில் வாசிப்பது என்ற முடிவையும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளலாம். சிறுவயதில் தமிழ் நூல்களில் தமது வாசிப்பை ஆரம்பித்து, ஆங்கில நூல்களின் வாசிப்பில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பலரை நாங்கள் கண்டிருக்கிறோம். லண்டனை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் இங்கு பாடசாலைகளிலும் பொது நூலகங்களிலும் வாசிப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகளில் இது தீவிரமாகச் செயற்படுத்தப்படுகின்றன. லண்டனில் பல பிரதேசங்களில் மூத்த எழுத்தாளர்களின் முயற்சியில் வாசகர் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. வித்துவான் வேலன் இலக்கிய வட்டம் போன்ற பல அமைப்புகள் சிறிய அளவில் கூட்டுமுயற்சியாக தமிழ் நூல் வாசிப்பில் ஈடுபடுகின்றார்கள். கோபன் மகாதேவா என்ற தமிழறிஞரின் முயற்சியில் இயங்கும் இலக்கிய வட்டத்தினர் பூந்துணர் என்றொரு நூலையே வெளியிட்டிருக்கிறார்கள். தமது இலக்கிய வட்டத்தினரின் முயற்சிகளை தொகுத்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படியான பல நலன்விரும்பிகள் தமிழ் மொழியை தம்மிடையேயும் இளையோரிடையேயும் வளர்ப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். டென்மார்க்கில் இளம் தமிழ் வாசகர்கள் வானவில் என்ற பெயரில் ஒரு இணையத்தளத்தையே வைத்திருக்கிறார்கள். அதில் தமிழில் மாத்திரமல்லாது டேனிஷ; மொழியிலும் தமது படைப்புக்களை அவர்கள் பதிவுசெய்கிறார்கள். இதன்பின்னணியில் திரு. ஜீவகுமாரன் அவர்கள் இயங்கிவருகின்றார்.

9. தமிழ்ப்பாடசாலைகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது எவ்வாறு இயங்குகின்றது?

புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் போகும் இடம் எல்லாம் கோயில் கட்டினார்கள் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் பள்ளிச் சாலைகளையும் தான் அமைத்தார்கள். அந்தந்த நாட்டுப் பாடசாலைகளில் சனி, ஞாயிறு வார இறுதிகளில் தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இங்கு தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தப்படுவதுடன் இசை, நடனம், நாடகம் போன்ற கலைத்துறைப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பெற்றோரின் நிதி ஆதரவுடன் தொண்டர் ஆசிரியர்களின் மூலம் இது நிறைவேறுகின்றது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்மொழிப் பரீட்சையில் சித்தி எய்தும் வகையிலும் இங்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் தேசிய மொழிக் கல்வித்திட்டத்தின்கீழ் பிறமொழிப் புலமை பெற்ற மாணவர்களுக்கு மேலதிக புள்ளிகள் வழங்கப்படுவது தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஓர் உந்தலாக அமைகின்றது.

10. இரண்டாம் தலைமுறையினரின் தமிழ்மொழிப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டீர்கள். இது படைப்பிலக்கியத்துறையில் அவர்களுக்கு எவ்விதம் பயனளிக்கும் எனக் கருதுகின்றீர்கள்.

இதுவரைகாலமும் பன்னாட்டு இலக்கியங்களை ஆங்கிலவழிமூலமே தமிழில் தரிசித்திருக்கிறோம். இனி வரும் காலத்தில் மூலமொழியிலிருந்தே அதன் தமிழ்வடிவத்தை சுவைக்கும் வாய்ப்பு ஏற்படும். அண்மையில் டேனிஷ் பழம்பெரும் படைப்பாளியான எச்.சி. அனசனின் கதைகளை திரு தர்மகுலசிங்கம் தமிழாக்கம் செய்து மித்ர வெளியீடாக வெளியிட்டிருந்தார். மூலநூல் பிறந்த அந்த மண்ணிலிருந்து அதன் கலாச்சாரத்தை நுகர்ந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது. இதுபோலவே பின்லாந்தின் தேசிய இலக்கியமான கலேவலா என்ற காவியத்தை அங்கிருந்து உதயணன் எமக்குத் தந்திருக்கிறார். இதே போன்று இளைய தலைமுறையில் கலைச்செல்வன் தமிழ்க்கவிதைகளை பிரெஞ்சு மொழியில் வழங்கியிருக்கிறார். டேன்மார்க் பாலமனோகரன் தனது நாவல்களை டேனிஷ் மொழியில் தானே மொழிபெயர்த்திருக்கிறார். பல மொழியியல் அகராதிகள் எம்மவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பிரெஞ்ச், ஜேர்மன் மொழியில் பல அகராதி நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும் எனது நூல்தேட்டம் தொகுதிகளில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

11. நல்லது திரு செல்வராஜா அவர்களே, ஒரு நூலகரின் பார்வைக்கோணத்திலிருந்து எமக்கு பல தகவல்களை வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் பல நூல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். நீங்கள் இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம், இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக
2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய, சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.

இலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம்
(Street Atlas) ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய பல வரலாற்று முக்கியத்துவமான நூல்களைத் தந்த அந்த தமிழர்களையோ, அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.

இலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த
2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.

12. உங்கள் அண்மைய வெளியீடு பற்றி குறிப்பிடுவீர்களா?

வேரோடி விழுதெறிந்து என்ற தலைப்பில் அண்மையில் ஞானம் வெளியீடாக ஒரு நூலை வெளியிட்டிருக்கிறேன். இலங்கை, மற்றும் புகலிட நூலியல், இலக்கிய முயற்சிகள் பற்றி பல்வேறு கட்டங்களிலும் ஊடகங்களில் என்னால் எழுதப்பட்ட 20 கட்டுரைகளைத் தொகுத்திருக்கின்றேன். புகலிட இலக்கியம் பற்றிய ஒரு விரிவான பார்வையை இந்நூல் வழங்கும் என்று நம்புகின்றேன்.

13. இந்த நேர்காணலின் வழியாக வாசகர்களிடம் ஏதேனும் வேண்டுகோள்களை விடுக்க விரும்புகிறீர்களா?

நிச்சயமாக. நூல்தேட்டம் தொகுதிகளில் சகல தமிழ் நூல்களும் இடம்பெறவேண்டும் என்பதே எனது ஆவல். அந்த ஆவலே என்னை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்களை செலவிட வைத்திருக்கிறது. இந்த நேர்காணலை வாசிக்கும் படைப்பாளிகளும் வாசகர்களும், உங்கள் அருகாமையில் உள்ள நூலகத்தில் நூல்தேட்டம் பிரதிகளை பார்வையிடவேண்டும். அதில் இடம்பெறத்தவறிய உங்கள் நூல்களை எனக்குப் பதிவுக்காக அனுப்பிவைக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எனது லண்டன் முகவரி:
N.Selvarajah, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom  என்பதாகும். தபால்செலவினைக் குறைக்கும் நோக்குடன் எனது கொழும்பு முகவரிக்கும் நூல்களை அனுப்பிவைக்கலாம். காலக்கிரமத்தில் அவை எனக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த முகவரி: V.T.Rajaram, C/1/6 Veluvanarama Govt. Flats, Off Hampden Lane, Wellawathe, Colombo 6  என்பதாகும். தற்போது உருவாகிவரும் ஏழாவது தொகுதியில் இவை சேர்த்துக்கொள்ளப்படும் வாய்ப்புள்ளது.


selvan@ntlworld.com


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved. (தமிழ் ஆதர்ஸ்)