பேராசிரியர் இரா.செல்வி அவர்களுடன் ஒரு நேர்காணல்

அகில்
முனைவர் இரா.செல்வி: எழுத்தாளார், குறும்பட இயக்குனர், தமிழ்பேராசிரியர்.


அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்? உங்கள் சொந்த ஊர் கோயமுத்தூரா?

இரா.செல்வி: இல்லை. எங்கள் சொந்த ஊர் கரூரில் உள்ள நடந்தை கிராமம். ஆனால் நாங்கள் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் குளிர்பிரதேசமான நீலகிரிமாவட்டத்தில்தான். என் தாத்தாவும் எங்கள் உறவினர்களும்; பஞ்சம் பிழைக்க நீலகிரி மாவட்டத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். தற்போது கோயமுத்தூரில் வாழ்கிறோம். நான் எங்குப் பிறந்து வளர்ந்தாலும் வாழ்ந்தாலும் எங்கள் முன்னோர் வாழ்ந்த கரூர்' நடந்தை' கிராமத்தைத்தான்; எங்கள் சொந்த ஊர் என்பேன். நான் 'நடைந்தைக்காரி' என்று சொல்வதைத்தான் விரும்புகிறேன்.

அகில்: தங்கள் படிப்பு, தொழில் குறித்துக் கூறுங்கள்?.

இரா.செல்வி: எனது பள்ளிப்படிப்பு நீலகிரி மாவட்டம் அரவங்காடு வட்டாரத்தில் உள்ள உபதலை அரசு மேனிலைப்பள்ளில். கல்லூரிப்படிப்பு ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில். என் தந்தையார் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றியவர். 1994ஆம் ஆண்டு போர்மேன் பதவி உயர்வுடன் கோவைக்கு மாற்றலானார். எங்கள் குடும்பம் கோவைக்குக் குடிபெயர்ந்தது. நான் கிடைத்த வேலைகளை மகிழ்வுடன் செய்து வந்தேன். ஆங்கில மெட்ரிக் பள்ளி ஒன்றில் ஓராண்டு, கோவை மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அறிவொளி இயக்கத்தில் திட்ட அலுவலராக ஓராண்;டு, பொள்ளாச்சி ந.க.ம. கல்லூரியில் இரண்டாண்டு எனப் பணியாற்றினேன். என் தந்தையார் 1998 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். அந்த ஆண்டே எனக்குக் கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் நிரந்தரப்பணி வாய்த்தது. 18 ஆண்டுகளாகத் தமிழ்ப்பேராசிரியாராகப் பணியாற்றி வருகிறேன்.

அகில்:  நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, எப்படி?

இரா.செல்வி:  நான் முதலாமாண்டு விலங்கியல் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி ஆண்டுமலருக்குக் சிறுகதை எழுதலாம் என்று எண்ணம் தோன்றியது. அப்போது நான் மார்க்சிய இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று எதையும் கேள்விப்பட்டது இல்லை. பக்தி இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும்தான் ஈடுபாடு இருந்தது. இந்நிலையில் 'அவளைத்தேடி' என்ற தலைப்பில் சிறுகதை எழுதி ஆண்டு மலருக்குக் கொடுத்தேன். அக்கதை தெரிவு செய்யப்பட்டு ஆண்டு மலரில் வெளிவந்தது. விலங்கியல் துறை பேராசிரியர்கள் உனக்குள் படைப்பாக்கத் திறன் இருக்கிறது. தொடர்ந்து எழுது என்றனர். நான் எழுதவிரும்பவில்லை. சமூகசேவையில் ஈடுபடவேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தன்.

அகில்:  அந்தக்கதைக்குப் பிறகு மீண்டும் எப்போது எழுதினீர்கள்?

இரா.செல்வி: எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்த காலத்தில் என் கல்லூரி குருநாதர் பேராசிரியர் முனைவர் கி.முப்பால்மணி ஐயா அவர்கள் சோவியத் இலக்கியங்களை அறிமுகம் செய்து வைத்தார். இரஷ்ய இலக்கியங்களை வாசிக்கின்ற போது 'யதார்த்தவாத இலக்கியங்கள்' பற்றி அறிந்தேன். யதார்த்தமாக எழுதிச் சமூகமாற்றத்திற்குப் பாடுபடுவதுதான் படைப்பாளியின் நோக்கமாக இருக்கவேண்டும்;. கல்லூரித் தமிழ்த்துறையில் சிறுகதை போட்டி வைப்பார்கள். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது 'யார் பொறுப்பு' என்று தலைப்புக் கொடுத்தார்கள். நான் எங்கள் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் செய்த ஊழலைத் தட்டிக்கேட்டுப் போராடியதைக் கதைவடிவமாக்கினேன். முதல்பரிசு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து எழுதும் எண்ணம் வரவில்லை.

கோவை அறிவொளி இயக்கத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றிபோது கிராமத்து மக்களுக்கு ஏற்ற வகையில் விழிப்புணர்வு கதை எழுதித்தர வேண்டும். கல்லூயில் 'யார்பொறுப்பு' என்ற தலைப்பில் எழுதிய கதையைப் 'பெட்டிசன் இராமாத்தாள்'; என்ற தலைப்பில் சற்று மாற்றி எழுதினேன். இக்கதையைப் படித்துவிட்டு அறிவொளி இயக்க மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த முனைவர் இராதாகிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தார். இராமாத்தாள் யார்? நீங்களா? என்றார். நானும் ஆமாம் என்று சொல்ல தைரியமான புரட்சிப் பெண் என்று பாராட்டினார்.

கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் வேலை கிடைத்த நிலையில் ஞானி ஐயா அவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னோடு பேசிக்கொண்டிருந்த ஐயா ஞானி ' உங்களுக்குள் நல்ல கதை சொல்லி இருக்கிறாள். நீங்கள் சிறந்த எழுத்தாளராக வளரமுடியும் என்றார். அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் வாழும்; புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்எழுத்தாளர் திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் பெண்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வருடம் தோறும் நடத்திவந்தார். அவர் இங்கிலாந்தில் இருந்ததால் அப்போட்டியை நடத்தித்தரும் பொறுப்பை ஞானி ஐயா ஏற்றிருந்தார். என்னையும் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். 'தப்புக்கிழங்கு' என்ற தலைப்பில் கதை எழுதித்தந்தேன். கதை முதல்பரிசு பெற்றது. வருடந்தோறும் போட்டி நடைபெறும்போது ஞானி ஐயா கடிதம் போட்டுவிடுவார்;. நானும் தவறாமல் கலந்து கொண்டேன். கற்பூரச்செத்தைகள், ஒப்பாரி, ஞானநல்லறம,; நிலவுசுடும் போன்ற தலைப்புகளில் கதைகள் எழுதிப் போட்டியில் கலந்து கொண்டேன். கற்பூரச்செத்தைகள் கதையும் முதல் பரிசு பெற்றது. நான் இலக்கிய உலகில் காலடி வைக்கக்காரணமாக இருந்தவர் கோவை ஞானி ஐயாதான்.

அகில்:   உங்கள் முதல் படைப்பு வெளிவந்த போது உங்களுடைய மனநிலை என்ன?

இரா.செல்வி: என் முதல்படைப்பு என்று தப்புக்கிழங்குக் கதையைத்தான் சொல்வேன். இக்கதை நீலகிரியில் வாழும் ஏழை பெண்களின் தொழிலான தப்புக்கிழங்குப் பறித்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதை பரிசு பெற்ற நிலையில்தான் 'பரவாயில்லை யதார்த்தமாக எழுதும் திறன் வந்துவிட்டது' என உணர்ந்தேன். மகிழ்ந்தேன்.

அகில்: உங்களுடைய எந்தக்கதை முதல்முதலாகப் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது?

இரா.செல்வி: கற்பூரச்செத்தைகள் கதைதான். இக்கதையைக் கோவை ஞானி ஐயா, நாவலாசிரியர் பொன்னீலன், மறைந்த தனுஷ்கோடி இராமசாமி, மற்றும் முற்போக்குப் படைப்பாளர்கள் பலரும் பாராட்டினார்கள். இக்கதை பெரியார் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருந்தது. மணிமேகலை, தமிழச்;செல்வன் ஆகிய இருமாணவர்கள் கடிதம் இட்டுக் கதை உண்மையில் நடந்ததா? என்று விசாரித்தனர். இக்கதையைத்தான் சற்று மாற்றிக் குறும்படமாக இயக்கித் தயாரித்தேன்.

அகில்:   இதுவரை எழுதிய சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

இரா.செல்வி: 'ஞான நல்லறம கதைதான். ஒரு கலை இலக்கியவாதி. பின் நவீனத்துவப் போக்கைக் கடைப்பிடித்துக் கடும்நோய்க்கு ஆளாகிறான். எதுவாழ்வென்று தெரியாமல் மாற்றுக்கலாச்சாரத்தைப் பின்பற்றி நிலைதடுமாறிய அவனுக்கு இதுதான் வாழ்வு என்று புரியவைக்கும் ஏழை பெண் துளசி. கதைக்குப் பரிசு கிட்டவில்லை. ஆனால் ஞானி ஐயா 'நல்ல கதைப்பா' என்றார். பரிசுபெற்ற கதைகளோடு சிறந்த கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிடும் ஞானி ஐயா 'ஞான நல்லறம்' கதையையும் தொகுப்பு நூலில் இடம்பெறச் செய்தார். மனிதர்கள் யாரும் குற்றவாளிகளாப் பிறப்பது இல்லை. சூழ்நிலை அப்படிக் குற்றவாளிகளாக மாற்றுகிறது. அத்தகையோரை அகிம்சைவழியில் திருத்தவேண்டியுள்ளது. திருத்தும் முயற்சி என்பது சத்யாகிரகப்போராட்டமே. சத்தியசோதனைகள் ஏராளம் வரும். சகிப்புத்தன்மை முக்கியம். துளசியும் அப்படிச் சகிப்புத்தன்மை கொண்டு வெற்றிகாணும் பெண்.

அகில்: உங்களுடைய படைப்புகளுக்கு எதிர்வினைகள், விமர்சனங்கள் எப்படி இருந்தது?

இரா.செல்வி:  ஞான நல்லறம் கதையை வாசித்த பெண்வாசிப்பாளர்கள் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றார்கள். கதை பழமைவாதம் போதிப்பதாகக் கூறினார்கள். பெண்ணியமும் மனிதகுலவிடுதலையும் நூல் கலைஞர் தொலைக்காட்சியில் சுபவீரபாண்டியன் அவர்களால் விமர்சிக்கப்பட்டது. 'அம்மையார் மார்க்சியம் ஏங்கெல்ஸ் என்று புரட்சிகரமாகச் சிந்திக்கின்றார். அதேசமயம் இந்துத்துவா சிந்தனையும் இழையோடுகிறது' என்றார். பெண்ணியநோக்கில் நான் எழுதிய ஜல்லிக்கட்டு கட்டுரையை விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கிடையில் என்படைப்புகளை ஆதரிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

அகில்:   விலங்கியல் படித்த நீங்கள் ஏன் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்தீர்கள்?

இரா.செல்வி:  சின்ன வயதில் காந்தி ஆசிரமம், அனாதை இல்லம் போன்று நல்ல சேவை நிறுவனங்களில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று வீட்டில் சொல்லிக்கொண்டு இருந்தேன். விலங்கியல் படித்ததும் படித்தது போதும் என்று முடிவுசெய்தேன். ஒருநாள் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பெண் ஒருவர் அழைத்தார் என்று அவருடன் மாதர் சங்கக் கூட்டத்திற்குச் சென்றேன். பெண்கள் படும் இன்னல்கள் பற்றிப் பேச நேர்ந்தது. என்னை நீலகிரி மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அப்போது எனக்கு வயது 20. ஆறுமாதம் கூட்டம், தெருவில் இறங்கிப்போராட்டம், உண்ணா விரதப்போராட்டம் என்று சென்றுவந்தேன். ரூப்கன்வர் என்ற பெண் உடன்கட்டை கொடுமைக்குப் பலியானபோது அனைத்து இந்திய ஜனநாயக மாதர்சங்கம் நாடுதழுவிய கண்டனப் போராட்டங்களை நடத்தியது. நீலகிரியில் நாங்கள் நடத்தினோம். நான் இச்சங்கத்தில் சேர்ந்த விசியம் என் பெரியப்பாவிற்கு (அப்பாவின் பெரியப்பா மகனுக்கு) தெரிந்துவிட்டது. இச்சங்கத்தில் எப்படிச் சேர்ந்தாள்? ஏன் சேர்தாள்? போராளியாக மாறிவிட்டாளே என்று என் பெரியப்பா கவலைப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்து என்னை அருகில் அமர்த்தி அச்சங்கத்தில் இருந்து விலகிவிடு என்றார். பெரியப்பா ஐNவுஊ –யில் தலைவராக இருந்தவர். ஆகவே நான் அவரிடம் 'முதலாளித்துவச் சிந்தனையாளர் நீங்கள். இப்படித்தான் அடக்குவீர்கள்' என்று வாக்குவாதம் புரிந்தேன். ' அப்பாவி பெண் நீ. உன்னைச் சங்கத்தில் சேர்த்துத் தெருவில் இறக்கிப் போராட வைக்கின்றார்களே... அவர்கள் தங்கள் பெண்களை இயக்கத்தில் சேர்த்துப் போராட வைக்கின்றனரா? போராளிப் பெண்களை மணக்கத்தான் விரும்புவார்களா? நன்றாகச் சிந்தித்துப்பார். நீ ஆஸ்த்துமா நோயாளி. ஒரு நல்ல வேலையில் சேர்ந்து அமைதியாக வாழத்தானே உன்னை உன் பெற்றோர் படிக்க வைத்தார்கள். இன்னும் நீ படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே அந்தச் சங்கத்தை விட்டு விலகி மேற்கொண்டு படி' என்று அறிவுரை கூறிவிட்டுப்போனார்;. அன்று என் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தது. அப்பா ஒருவர் சம்பளம். ஐந்து பெண்பிள்ளைகள். ஓர் ஆண்மகன். நான் சம்பாதிக்கொடுத்தால் குடும்பம் முன்னேறும். எம்எஸ்ஸி படித்தால் நல்லவேலை கிட்டும் என்றார்கள். அதற்கு வெளியூர் சென்றுதான் படிக்கவேண்டும். பணம் செலவாகும். ஆகவே ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியம் இருந்ததால் சேர்ந்து படித்தேன். எனக்கு நல்ல வழிகாட்டியாகப் பேராசிரியர் முனைவர் கி.முப்பால்மணி ஐயா விளங்கினார்.

அகில்: பெண்ணியம் சார்ந்ததாகப் 'பெண்மையச்சிந்தனைகள்', 'பெண்ணியமும் மனிதகுல விடுதலையும்' ஆகிய இரண்டு நூல்கள் கொண்டுவந்திருக்றீர்கள். இத்தகைய நூல்களை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது.?

இரா.செல்வி: நான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் ஆறுமாதம் இருந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அப்போது அச்சங்கம் வெளியிட்ட மகளிர்சிந்தனை என்ற இதழ்களை வாசிக்க நேர்ந்தது. சோசலிசப் பெண்ணியச் சிந்தனைகளுடன் படைப்புகள் விளங்கும். அப்போது பெண்ணியம் என்று சொல்லைக் கேள்விபடாத நேரம். திறனாய்வுக் கொள்கைகளும் தெரியாது. ஆனால் மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்து படித்த நிலையில் பல தத்துவங்களையும் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது. எம்ஃபில் படித்த போது பேராசிரியர் முப்பால்மணி அவர்கள் 'பெண்ணியம்' என்ற துறையில் ஆய்வுமேற்கொள் என்றார். அப்போதுதான் முதன்முதலாய்ப் பெண்ணியம் என்ற சொல்லை அறியநேர்ந்தது. தொண்ணூறுகளில் தமிழில் வெளிவந்த பெண்ணிய புத்தகங்கள் என்று மொலீனா தேன்மொழியின் 'பெண்ணிலைவாதம் சில கேள்விகள்' அபர்ணாமகந்தாவின் 'மார்க்சியமும் பெண்ணிலைவாதமும'; ஆகிய இரண்டு நூல்களே இருந்தன. திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்களின் 'காலந்தோறும் பெண';, 'காலந்தோறும் பெண்மை' ஆகிய இரு நூல்கள் பெண்ணியச் சிந்தனைகளுடன் விளங்கின. பெண்ணியம் கோட்பாட்டளவில் பேசப்படுகிறதே தவிர தத்துவமாகப் பார்க்கப்படவில்லை. மூலசாங்கியம் என்று சொல்லக்கூடிய பொருள்முதல்வாதத் தத்துவத்தில் 'மூலப்பிரகிருதி' என்ற பெண்தத்துவம் நிலவுகிறது. இதை நான் மூலப்பெண்ணியமாகப் பார்த்தேன். இதை அடியொற்றிதான் நான் தொடர்ந்து பெண்ணிய ஆய்வில் ஈடுபட்டுவருகிறேன். என்னுடைய முனைவர்பட்ட ஆய்வேட்டைப் 'பெண்மையச் சிந்தனைகள்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன். பல்வேறு ஆய்வுக்கருத்தரங்கங்களில் வாசித்து அளித்த கட்டுரைகளையும் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் தொகுத்துப் ' பெண்ணியமும் மனிதகுலவிடுதலையும்' என்னும் தலைப்பில் நூலாக்கினேன். மார்க்சிய சிந்தனையாளர்கள் மட்டுமன்றி ஆன்மிகவாதியான சொல்வேந்தர் திரு சுகிசிவம் அண்ணன் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலரும் நூல்களை வாசித்து விட்டு ஆதரித்தபோது ஓர் உண்மை புரிந்தது. யாவரும் உடன்படும் வகையில் பெண்மையத்தத்துவம் விளங்குகிறது என்பதை உணர்ந்தேன். என் இரண்டாம் நூலான பெண்ணியமும் மனிதகுலவிடுதலையும் நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2013 ஆண்டுக்கான இலக்கிய விருது கிடைத்தது.

அகில்:  உண்மையான பெண்ணிய எழுத்தாளர்கள் யார்? என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கிறது. இந்த மனநிலையை நீங்கள் எப்படிப் பார்கிறீர்கள்?

இரா.செல்வி: பெண்ணியவாதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. ஆணாகவும் இருக்கலாம். பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டு எழுதும் பல ஆண்படைப்பாளர்கள் பாலியல் சம்பந்தமான செய்திகளையே எழுதுகின்றனர். பெண் இனத்தைக் காமப்பொருளாகச் சித்திரிக்கின்றனர். கட்டற்ற பாலுறவுக்குப் பெண்களைத் தயார்ப்படுத்தும் போக்கைத்தான் இவர்களது எழுத்துகளில் பார்க்கமுடிகிறது. இத்தகைய எழுத்துகள் மீண்டும் பெண்ணை அடிமையாக்கும் ஆணாதிக்க எழுத்துகளே. பெண்ணிய எழுத்தாளர்களில் ஒரு சிலர் இயற்கைக்கு எதிராகத் தாய்மைப்புறக்கணிப்பையும் லெஸ்பியன் உறவையும் ஆதரித்து எழுதுகின்றனர். இவற்றால் பெண் இனம் புதிய புதிய சிக்கல்களுக்குத்தான் ஆளாக நேரும்.

அகில்: அப்படியாயின் உண்மையான பெண்ணிய எழுத்தாளர்கள் யார் என்று சொல்லமுடியுமா?

இரா.செல்வி: பெண்விடுதலை என்பது ஒட்டுமொத்த மனித குலவிடுதலையை உள்ளடக்கிய உன்னத உலகத்தத்துவம். இதை உணர்ந்து எழுதக்கூடிய பெண்ணிய எழுத்தாளர்களைக் கண்டறியும் நோக்கில்தான் பெண்படைப்பாளர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களது சிறுகதைகளை முனைவர்பட்டத்திற்காக ஆராய்ந்தேன். ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு தனித்திறன். காய்கறி கடைகளில் பல்வேறு காய்கறிகள் இருக்கின்றன. அவற்றை வாங்கி வருகிறோம். காய்களைச் சேர்த்துச் சமைத்தால்தான் சுவையான சாம்பார், கூட்டு, பொரியல், அவியல் ஆகியவை கிடைக்கும்.அதுபோலத்தான் பெண்படைப்பாளர்களின் சிந்தனைகள் விளங்கின. இவற்றை ஒருங்கிணைத்தால் ஆற்றல் பொருந்திய ஒருமித்த பெண்ணியச்சிந்தனையை உருவாக்கமுடியும் என்ற உண்மை என் ஆய்வில் கண்டறியப்பட்டது. உண்மையான பெண்ணிய எழுத்தாளர்கள் என்று நான் தேர்ந்தெடுத்த 12 பெண் எழுத்தாளர்களைக் கூறுவேன். ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்க விரும்பிய பெண் எழுத்தாளர்களில் ஒருவர் 'என் எழுத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க மாட்டேன்'; என்றார். காரணம்புpரியவில்லை. அவர் பேச்சில் ஆணவம் தெரிந்தது. ஆனால் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் என்னை மிகவும் ஆதரித்தார். அவர் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் கடைசி காலத்தை எப்படிக் கழித்தார் என்பதை உலகம் அறியும். நான் சென்னை சென்றபோதெல்லாம் அவரைப்பார்த்து வந்தேன். அவர் மருத்துவமனையில் உடல்வலியோடு அவதியுற்ற நிலையிலும் ஒரு நாவல,; சிறுவர்களுக்கான நாடகம் என எழுதிக்கொண்டிருந்தார். என்னிடமும் காட்டினார். வீடு வாசல் எல்லாம் இழந்து சாகும் வரை பெண்விடுதலைக்காகக் குரல்கொடுத்து உண்மையான பெண்ணியவாதியாகத் திருமதி இராஜம் கிருஷ்ணன் அவர்கள் திகழ்ந்தார்.

அகில்:   'பெண் எழுத்தாளர்தானே' என்ற ஆணாதிக்க மனோபாவத்தை நீங்கள் எப்படிப் பாhக்கிறீர்கள்?

இரா.செல்வி: 'சிறுகதை மன்னன்' என்று புதுமைப்பித்தன் பாராட்டப்பட்டார். ஆனால் 'சிறுகதை அரசி' என்று பெண்படைப்பாளர் ஒருவரும் இல்லையா? என்ற கேள்வி என்னுள் அடிக்கடி எழும். ஊடகங்கள் ஆண்படைப்பாளர்களுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பெண்படைப்பாளர்களுக்குத் தருவதில்லை என, என் முனைவர்பட்ட ஆய்வுக்குப் பேட்டி தந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் வருத்தமுடன் கூறினார். வளரும் எழுத்தாளரான எனக்கும் இந்த நிலைதான். நான் கையெழுத்திட்டுத் தந்த என் இரண்டாவது நூலான பெண்ணியமும் மனிதகுலவிடுதலையும் நூலைத் தூக்கி எறிந்துவிட்டுப் போன ஒரு அறிவுஜீவியை நான் அறிவேன். இத்தகைய ஆணாதிக்க மனோபாவம் படைத்தவர்கள் பற்றி எனக்கு எந்தக்கோபமும் இல்லை. நான் நேர்மையுடன் வாழ்கிறேன். நேர்மையான விசியங்களைத்தான் எழுதுகிறேன். நியாயம் தருமம் உணர்ந்த ஆடவர்கள் என் எழுத்துகளை ஆதரிக்கத்தான் செய்கிறார்கள்.

அகில்:  இன்று எழுத்தாளனுக்கு என்று சுதந்திரம் இருக்கிறதா? பெருமாள் முருகனின் மாதொருபாகன்; பிரச்சினையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரா.செல்வி:  எழுத்துச்சுதந்திரம் இல்லை என்றுதான் சொல்வேன். புரட்சிகர எழுத்தாளர்கள் படு கொலை செய்யப்படுகிறார்கள். பெருமாள்முருகன் போன்றோர் எச்சரிக்கப்பட்டார்கள். பெருமாள்முருகனின் மாதொருபாகன் கதையை என்னால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. எனக்கு விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோடு 'மாதொருபாகன'; எந்தளவுக்குப் பழமையோ தெரியாது. அதே கொங்குநாட்டில் வாழும் கொங்குமக்களுக்குக் குலதெய்வம் செல்லாண்டியம்மன். இவள் மிகவும் தொன்மைவாய்ந்த தாய்த்தெய்வமாகக் 'கானமர்செல்வி', 'கடல்கெழு செல்வி' என்று சங்கப்புலவர்களால் போற்றப்பட்டவள். செல்லாண்டி அம்மன் கன்னி தெய்வம். மாரியம்மன் கோவிலில் கம்பம் நட்டுப் பிடுங்கும் சடங்குகள் உள்ளன. கம்பம் என்பது கணவனைக் குறிக்கும். கம்பம் நடும்நாள் மணநாள். கம்பம் பிடுங்கும் நாள் மாரியம்மன் விதவை ஆகும்நாள். இந்தச் சடங்குகள் செல்லாண்டியம்மன் கோயிலில் நிகழ்த்தப்படுவதில்லை. செல்லாண்டியம்மனைக் குலதெய்வமாக வைத்துக் கொண்டாடும் கொங்குநாட்டு மக்கள் எப்படி எல்லாம் உன்னதமாக வாழ்கிறார்கள் என்பதைக் 'கல்தூண்' என்ற திரைப்படம் சித்திரித்தது. மாதொருபாகன் கோயிலை வைத்து நாவல் எழுதிய முனைவர் பெருமாள்முருகன் செல்லாண்டியம்மன் கோயிலையும் இதன் தொன்மத்தையும் பார்க்கத்தவறிவிட்டார் என்பது என் விமர்சனம்.

அகில்:  உங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதைத் தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?

இரா.செல்வி: நான் பெண்ணிய அரசியல் குறித்துச் சிறுகட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பெரிய நூலாக ஆக்கவேண்டும். ஆகவே அதற்கான புத்தகங்களை வாசித்து வருகிறேன்.

அகில்: இணைப்பேராசிரியரான உங்களுக்குக் குறும்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட பின்னணி என்ன?

இரா.செல்வி: எங்கள் கல்லூரியில் கூடுதல் படிப்பு என்று பட்டயப்படிப்பு உள்ளது. தமிழ்த்துறை சார்ந்து 'திரைக்கதையாக்கம்' என்ற படிப்பு. நான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். குறும்படங்கள் ஆவணப்படங்களுக்குத் திரைக்கதை எழுதும் பயிற்சி தரவேண்டும். செய்யுள், கவிதை ஆகிய இலக்கியங்களை நடத்துவதற்கும் திரைக்கதை எழுதுவதற்கான நுட்பங்களைக் கற்பிப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஒரு தமிழ்ப்பேராசியர் என்பதால் திரைக்கதை குறித்து என்ன சொல்லித்தருவார் என்று மாணவர்கள் எண்ணக்கூடும். அதற்கான தகுதி இவரிடம் இருக்கிறது என்று மாணவர்கள் உணரவேண்டும். ஆகவேதான் நான் இரண்டு படங்களை இயக்கித் தயாரித்தது.

அகில்:   'கற்பூரச் செத்தைகள்' குறும்படத்திற்கான வித்து எது?

இரா.செல்வி: நண்பர் திரு ஸெல்வன் அவர்கள் திரைப்பட இயக்குநர். அவர் 'கற்பூரச்செத்தைகள்' கதையைப்படித்துவிட்டுக் குறும்படமாக ஆக்கினால் பெருவெற்றி அடையும் என்றார். நான் ஊட்டியில் படித்த காலத்தில் கல்லூரி உண்டு. நான் உண்டு. சினிமாக்காரர்கள் ஊட்டிக்கு வந்து டூயட் காட்சிகளைப் படம் பிடிப்பார்கள். என்னுடன் படித்த மாணவர்கள் படப்பிடிப்பைக் காண்பதற்கு ஓடுவார்கள். வந்து படப்பிடிப்புப் பற்றிப் பெருமையாகக் கூறுவார்கள். ஒரு முறை ஒரு நடிகை புதைகுழியில் வீழ்ந்து தத்தளிப்பதுபோன்று காட்சி எடுத்தார்களாம். அந்தப்படம் வெளியானபிறகு நானும் படம்பார்த்தேன். எனக்குக் கவலை வந்தது. அந்தப்படத்தில் மூழ்கிச் செத்த கதாநாயகி மீது அல்ல. கற்பூரச்செத்தைப் பொறுக்கச் சென்ற பெண் ஒருத்திப் புதைகுழியில் மாட்டி இறந்து போனாதாகச் சின்னவயதில் என் அம்மா சொல்லக்கேட்டிருந்தேன். அந்தப் பெண்ணை எண்ணித்தான் வருந்தினேன். அந்தப் பெண்ணைவைத்துதான் கற்பூரச்செத்தைகள் கதை எழுதினேன். சிறுகதையில் கற்பூரமரம் (யூகலிப்டஸ் மரம்) சாய்ந்துவிழுந்து செல்லம்மாள் கதாப்பாத்திரம் இறந்ததாக எழுதினேன். நண்பர் ஸெல்வன் இச்சிறுகதையைக் குறும்படமாக எடுத்துத் தருகிறேன் என்றார். அதற்கு அவருக்கு நேரம் வாய்க்கவில்லை. கனடாவாழ் நண்பர் திரு அகில்சாம்பசிவம் அவர்கள் சென்னை வந்திருந்தபோது அவரை நானும் என்தம்பியும் சென்று சந்தித்தோம். குறும்படம் எடுப்பதன் அவசியம் பற்றிப்பேசினோம். நான் கற்பூரச்செத்தைகள் சிறுகதையைச் சற்று மாற்றித் திரைக்கதையாக்கி என் தம்பிக்கு அறமுகமான படப்பிடிப்புக் குழுவின் உதவியுடன் படம் எடுத்தேன். படத்தில் செல்லம்மாள் பாத்திரத்தைப் புதைகுழியில் இடறிவிழுவதாகக் காட்டினேன்.

அகில்:   உங்களுடைய முதல் குறுப்பட அனுபவம் எப்படி இருந்தது?

இரா.செல்வி: குன்னூர் சோலடாமட்டம் என்ற சிறு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். கணவன் கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்கு நடிப்புவரவில்லை. எப்படியோ நடித்தால்போதும் என்றிருந்தது. சரியான முன்னேற்பாடுகள் இல்லை. நிறைய தொழில்நுட்பக்குறைபாடுகள். கொட்டும் மழையில்படப்பிடிப்பு. என் சின்ன அத்தைவீட்டார் உடன் இருந்து உதவினர். படப்பிடிப்பு முடிந்து கோவை திரும்புகையில் இதை எல்லாம் நான்தான் முன்நின்று செய்தேனா? என்று எனக்குள் வியப்பு மேலிட்டது.

அகில்:   குறும்படம், இலக்கியம் இரண்டையுமே எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரா.செல்வி:  இரண்டிற்கும் சமூகத்தை மாற்றி அமைக்கும் வல்லமை உண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள் எந்த ஒன்றையும்; காட்சி ஊடகங்கள் வழி காணவே விரும்புகின்றனர். அவர்களுக்காக நல்ல குறும்படங்கள் எடுக்கவேண்டியுள்ளது. குறும்படத்திற்கும் அடிப்படைத் தேவை நல்ல கதைகள்தாம். அந்தக்கதைகளைத் திரைக்கதையாக்கும் உத்தியில்தான் படங்கள் வெற்றியுறுகின்றன.; திரைக்கதை எழுதவும் இலக்கியப்புலமை அவசியம்.

அகில்:   உங்களுடைய குறும்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது?

இரா.செல்வி: கற்பூரச்செத்தைகள் குறும்படத்தை எங்கள் பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் வெளியிட்டேன். வெளியீட்டு விழாக்குச் சிறப்புவிருந்தினர்களாகக் கவிஞர் புவியரசு, கோவை ஞானி ,என்குருநாதர் பேராசியர் முனைவர் முப்பால்மணி;, திருச்சி கவிஞர் மணமேடுகுருநாதன் நாவலாசிரியர் மா. நடராஜன் எங்கள் கல்லூரிமுதல்வர், செயலர், திரைப்பட இயக்குனர் ஸெல்வன், காவல்துறை னுளுP திரு நடராஜன் ஆகியோர்கலந்து கொண்டு நல்லமுயற்சி என்று பாராட்டினார்கள். விழாவில் கலந்துகொண்ட சிறப்புவிருந்தினர்கள் பேசாரியர்கள் மாணவர்கள் யாவரும்;; திரைக்கதையைக் குறைகூறவில்ல. படம் சிறப்பாக உள்ளது. தொழில்நுட்பத்தில்தான் குறைபாடு என்றார்கள.; திருப்பூர் அரிமா சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் கற்பூரச்செத்தைகள் குறும்படத்துக்கு விருது கிடைத்தது. இரண்டாவது படமான 'பூவாத்தாள்' குறும்படத்தைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் நடந்த மாவட்ட மாநாட்டிலும் மன்னார்குடியில் நடந்த மாநிலமாநாட்டிலும் வெளியிட்டது. லழரவரடிந-ல் வெளியிட்டுப் பலரும்பார்த்தவண்ணம் உள்ளனர்

அகில்: குறும்படம் எடுக்க அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு தேவை எனக் கருதுகிறீர்களா?

கட்டாயம் தேவை. திரைக்கதையாக்கம் மட்டும்போதாது. கேமரா குறித்த அறிவும் அவசியம் வேண்டும். சாதாரண கேமராவில் படம் எடுத்துத் தந்துவிட்டு நிறைய லென்ஸ் போட்டு எடுத்ததாகக் கூறி நிறைய பணம் வசூலிக்கின்றனர் என்பதைப் படம்வெளியீட்டின்போதுதான் தெரிந்தது. ஆகவே தொழில்நுட்ப அறிவு கட்டாயம் தேவை. நானும் பயிற்சி எடுக்கவேண்டிள்ளது.

அகில்: உங்கள் குறும்படங்கள் மக்களைச் சென்றடைய என்னவிதமான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? பொதுவாக என்னென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

இரா.செல்வி:  முன்னரே குறிப்பிட்டதுபோல் youtubeல் வெளியிட்டுள்ளேன். பிறமொழினர் புரிந்து கொள்ளும் வகையில் பூவாத்தாள் குறும்படத்துக்கு ஆங்கிலத்தில் ளரடி வவைடை கொடுத்துள்ளேன். முகநூலிலும் போட்டுள்ளேன். இனி போட்டிகளுக்கும் அனுப்பவேண்டும.;

அகில்:   உங்களின் அடுத்தகட்ட குறும்பட முயற்சி என்ன?

இரா.செல்வி:  மே மாதத்தில் தப்புக்கிழங்கு சிறுகதையைக் குறும்படமாக்க எண்ணம். முன்னதாகத் தயார்நிலையில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்பு நூலையும் கட்டுரைத்தொகுப்பு நூலையும் வெளியிடவேண்டும்.

அகில்:   தாங்கள் சிறுகதைப்போட்டி வைப்பதாக விளம்பரப்படுத்தியிருந்தீரகள் இது குறித்துக் கூறுங்கள்?

இரா.செல்வி: எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் போல் சிறுகதைப் போட்டி நடத்தவேண்டும் என்று எண்ணம் பிறந்தது. நான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவை கிளையில் துணைத்தலைவராக இருக்கின்றேன். மேலும் என் அம்மா அப்பா பேரில் 'சரசுஇராமசாமி' என்ற பெயரில் அறக்கட்டளை உருவாக்கியுள்ளேன். ஆகவே தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்துடன் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்த விரும்பினேன். மாநிலச் சங்கத் தலைவர் மகிழ்வோடு சம்மதித்தார். போட்டிக்கான அறிவிப்பை விளம்பரப்படுத்தினோம். 57 கதைகள் வந்துள்ளன். மூன்று நடுவர்கள். பரிசளிப்பு விழா மார்ச்சு இறுதியில் வைக்கப்படவுள்ளது.

அகில்:  இறுதியாக ஒரு கேள்வி. இன்றைய இலக்கியவாதிகளின் போக்கு குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இரா.செல்வி: இலக்கியவாதிகளுக்கு நேர்மை வேண்டும். பேனாவில் மெய் ஊற்றி எழுதவேண்டும். சொந்த வாழ்வில் துர்மார்க்கர்களாக வாழ்ந்து எழுத்திலும் பேச்சிலும் சிறந்த போராளி என்றும் புரட்சிக்காரன் என்றும் உத்தமன் என்றும் ஊரை நம்பவைத்த போலி எழுத்தாளர்களை நான் அறிவேன். அவர்களது முகத்திரைகளைக் கிழிப்பது கடினம் அல்ல. ஆனால் நமக்குமேல் ஒரு தருமதேவதை இருக்கிறாள். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்று எல்லோருடைய மனதையும் அலசி ஆராய்ந்த வண்ணம் இருக்கிறாள். கடும்தண்டனையும் தருகிறாள். இவளிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. படித்தவன்; பாவமும் சூதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றார் பாரதியார். அப்படித்தண்டிக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்தி காதில் விழத்தான்செய்கிறது. நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. இதை ஒழுங்காகச் செய்துவிட்டு மடிவோமே என்று என் கல்லூரிப்பணிகளைச் செவ்வனே செய்து ஓய்வான நேரத்தில் கலை இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
 


 

கற்பூரச் செத்தைகள்

பூவாத்தாள்

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved. (தமிழ் ஆதர்ஸ்)