எழுத்தாளர் ஏ.பீர் முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்.......

ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸ்

கேள்வி : நூல் மதிப்பீட்டுத் துறையில் தொடர்புபட்டு கட்டுரைகள் எழுதிய நீங்கள் அவற்றைத் தொகுத்து திறன் நோக்கு என்ற நூலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த வகையில் சமகால நூல் மதிப்பீட்டுப் போக்குகள் பற்றிய தங்கள் கருத்து என்ன ?

பதில் :  நூல் மதிப்பீடு தொடர்பிலான கருத்தாடல் வெளியில் விமர்சனம் , திறனாய்வு, நூல் மதிப்பீடு போன்ற சொற்களுடன் வேறு பல சொற்களும் இன்று. பயன்பாட்டில் உள்ளன. பின்னமளவிலாயினும் இச்சொற்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. சினிமா , நாடகம் போன்ற துறைகளில் விமர்சனம் என்ற சொல் தற்போதும் பயன்பாட்டில் இருந்தபோதிலும் தமிழ் இலக்கியப் பரப்பில் அச்சொல் காலாவதியாகிவிட்டது என்றே நான் கருதுகின்றேன். திறன் நோக்கு என்ற சொல்லை இங்கு நான் பயன்னடுத்த முடியுமாயினும் சமரசத்திற்காகவும் வாசகர்களின் நலவு கருதியும் இவற்றில் ஏதாவது ஒரு சொல்லை பொருத்தம் கருதி எடுத்தாள விரும்புகின்றேன். இலக்கியத்தின் வளர்ச்சி என்பது படைப்புகளினாலோ அவற்றின் எண்ணிக்கையினாலோ மட்டும் அடையாளம் பெறுவதில்லை. படைப்பின் மேன்மையும் சேர்ந்ததே இலக்கிய வளர்ச்சி. நூல் மதிப்பீடு உட்பட திறனாய்வின் வெளிப்படுத்தல்களுக்கும் இந்த வளர்ச்சியில் கணிசமான பங்கு உண்டு. இந்தப் புள்ளியில் இருந்துதான் சமகால நூல்மதிப்பீட்டுப் போக்குகளை விளங்க வேண்டியுள்ளது. இன்று பல்வேறு தலைப்புகளில் தங்களுக்குத் தோதுப்பட்டவகையில் நூல் மதிப்பீட்டை இயற்றி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை நூலின் மறைகனதி பற்றி மூச்சு விடுவதேயில்லை. நூலாசிரியருக்கு எள்ளளவும் நோகாமல் இரசனைக் குறிப்புகளாக திறனாய்புப் பணி நடைபெற்று வருகின்றது. நூல் வெளிவந்த உடனேயே மதிப்பீடும் வந்து விடுகின்றது. யார் இதனைச் செய்ய வேண்டுமென்ற கோட்பாடு எதுவும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரியவில்லை. அபிப்பிராயம் தெரிவிப்பவர் விமர்சகராக ஆகிவிட முயற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக திறனாய்வுத்துறை தெளிவான பாதை நோக்கிச் செல்வதாக கூற முடியாதுள்ளது  பேராசிரியர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களின் அல்லது பல்கலைக்கழகத்துக்கு வெளியே மு.தளையசிங்கம் . எஸ்.பொன்னுத்துரை போன்றவர்களின் பங்களிப்புக்கு ஈடாக எவரினதும் பணியை சமகாலத்தில் பார்க்க முடியவில்லை. இத்துறைக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது பற்றி இன்று அல்ல 2011 இலேயே நான் பதிவு செய்துள்ளேன்

கேள்வி :   நூல் மதிப்பீட்டுக் கட்டுரைகளை நீங்கள் எழுதியபோது நோக்கல் என்ற சொல்லை தலைப்பாக இட்டதன் பின்னணி பற்றி கூறுவதை எதிர்பார்க்கிறேன்.?

பதில் : செங்கதிர் என்ற இலக்கியச் சஞ்சிகை 2008 இலிருந்து நமது தேசத்தின் கிழக்கில் வெளியாகிக் கொண்டிருந்த காலம். அதன் ஆசிரியரான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் என்னைத் தொடர்பு கொண்டு அச்சஞ்சிகைக்காக நூல் மதிப்பீடுகளைச் செய்து திறனாய்வுக் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொண்டார்.
விசுவாமித்திர பக்கம் என்ற பகுதியில் இரண்டாம் விசுவாமித்திரன் என்ற புனைபெயரில் நூல் மதிப்பீடுகளைச் செய்தேன். நோக்கல் என்ற தலைப்பில் அவை பிரசுரமாயின. நூலின் அழகியல் அம்சத்தை, அதன் உருவ உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் அவை. எனது எழுத்தின் தன்மையை வெளிப்படுத்த ஒரு சொல் தலைப்பாக வர வேண்டுமென்று கருதினேன். பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அறுபது எழுபதுகளில்
நோக்கல் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அச்சொல்லை நானும் செங்கதிர் சஞ்சிகையில் பயன்படுத்தினேன். நோக்கல் என்ற சொல் மிகவும் பொருத்தம் என்பது என் துணிபு இத்தொடரில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்னால் மதிப்பீடு செய்யப்பட்டன. கால ஓட்டத்தில் நோக்கல் என்பதிலும் திறன் நோக்கு என்ற சொல் பொருத்தம் என்று கருதினேன்.கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியபோது திறன் நோக்கு என்ற சொல்லை நூலின் தலைப்பாக அங்கீகரித்தேன்

கேள்வி : திறனாய்வு என்ற சொல் நூல்மதிப்பீட்டுத் துறையில் உங்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்று கூறுகிறீர்களா?

பதில் : ஆம் இதனைச் சொல்ல நான் தயங்கவில்லை. ஆரம்பத்தில் விமர்சனம் என்ற சொல்தான் பாவனையில் இருந்தது. அ.ச.ஞானசம்பந்தன் என்ற தமிழ் நாட்டுப் பேராசிரியரே இச்சொல்லுக்கு இணையாக திறனாய்வு என்ற சொல்லை 1950 இல் அறிமுகம் செய்தவர். இச்சொல்லை தமிழ் இலக்கியப் பரப்பில் லாவகமாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர் கைலாசபதியே. இச்சொல்லின் வருகையோடு தமிழ் இலக்கிய வெளியில் புதுக் காட்சிகள் தென்படத் தொடங்கின என்பது என்னவோ உண்மைதான். நான் அதனை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சாட்சியம் தருகிறேன். ஆனால் இச்சொல்லின் பயன்பாட்டின் பின்னால் பகுதியளவாக தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. தமது துறையின் மூக்கணாங்கயிறு தம் கைகளில் இருப்பதை விரும்பிய பல்கலைக்கழக தமிழ்த் துறையினர் திறனாய்வு என்ற சொல் தமக்குச் சாதகமானது என்று கருதினார்கள்போல் தெரிகிறது. மட்டுமல்லாது , தன்னளவில் ஆய்வு என்ற சொல் கொண்டிருந்த பரந்த எல்லைகள் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வெளியில் ஆக்க இலக்கியத்தில் இருந்த பலர் திறனாய்வு முயற்சிகளில் ஈடுபடத் தயக்கம் காட்டினர் திறனாய்வு என்ற சொல்லை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததன்மூலம் படைப்பாளியாக இல்லாமலேயே ஒரு படைப்பை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு பேராசிரியர்களுக்கு வாய்த்தது.பேராசியர் கா.சிவத்தம்பி ஒரு படைப்பாளியாக அல்லாமல் திறனாய்வு முயற்சிகளில் கூடுதலாக ஈடுபட்ட ஒருவரே. பேராசிரியர் கைலாசபதி தலைமையில் ஒரு குழுவினர் இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும் இச்சொல் காரணமாய் அமைந்தது. தாங்கள் விரும்பியோரை தூக்கிப் பிடிக்க அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவும் போய்விட்டது. ஒரு சிலரை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்ன நியாயம்? என்று நேருக்கு நேராய் கா.சிவத்தம்பியிடம் கேள்வி கேட்ட எம்.ஏ. நுஃமான் பின்னர் தானும் ஒரு சிலரைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையைத் தொடர்ந்தமைக்கு அவர்களுக்கிருந்த பல்கலைக்கழக அந்தஸ்தும் திறனாய்வு என்ற சொல்லும் செளகரியமாக அமைந்தன எனக் கொள்ளலாம். இவ்வாறான காரணங்களால் திறனாய்வு என்ற சொல்மீது எனக்கு விசுவாசம் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

கேள்வி :  இலங்கையின் திறனாய்வுத் துறை கடந்து வந்த பாதைபற்றி சொல்லுங்கள் ?

பதில் : தொல்காப்பியர் காலம்முதலே திறனாய்தல் என்ற பணி இடம் பெற்று வந்துள்ளது. ஆனால் நவீன இலக்கியத்தின் வருகையோடுதான் விமர்சனப்பாங்கான அணுகுமுறை அறிமுகமானது.
விபுலாநந்த அடிகள் எழுதிய பல கட்டுரைகள் திறனாய்வுப் பார்வையில் எழுந்தவையே. அவரே தமிழ் திறனாய்வின் முன்னோடி ஆவார். 1940 களில் நம்மவரிடையே திறனாய்வு முயற்சிகள் முளைவிடத் தொடங்கின . யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சி குழு உறுப்பினர்களாக இருந்து கொண்டு அ.ந .கந்தசாமி போன்றவர்கள் இப்பணியில் ஈடுபட்டார்கள். மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை ஆரம்பித்து அதில் எழுதினார்கள். 1950களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்கள் தங்கள் பாட விதானத்துடன் திறனாய்வு விடயங்களை உள்ளீடாகக் கொள்ளத் தொடங்கின 1960கள் விமர்சனப் பார்வை தூக்கலாக இருந்த காலமாக கொள்ளப்படலாம். நல்லதும் கெட்டதும் அதில் பேசப்பட்டன. இக்காலகட்டத்தில் எம்.ஏ.ரகுமான் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான இளம்பிறை என்ற சஞ்சிகை இத்துறையில் பாரிய பங்களிப்புச் செய்தது. 1970 காலகட்டத்தில் சமூகம் சார்ந்து மட்டுமல்லாது அழகியல் சார்ந்தும் இலக்கியம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலம் பெற்றது. கவிஞர் மஹாகவி போன்றவர்கள் மேற்கிளம்பிவர இக்கோரிக்கை உதவியது. எண்பதுக்கு முன்னரான கால் நூற்றாண்டு காலம் திறனாய்வுத் துறையின் பொற்காலம் எனலாம் இக்காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்து கூர்மையான பங்களிப்பு செய்தவர்களின் பட்டியல் பேராசிரியர்களான கைலாசபதி , கா.சிவத்தம்பி ஆகியோருடன் தொடங்கி கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் கோ.குகன் என்பவருடன் வந்து நிற்கின்றது.
அவ்வாறே பல்கலைக் கழகத்துக்கு வெளியே மு .தளையசிங்கம் எஸ்.பொன்னுத்துரை ஆகியோருடன் ஆரம்பித்து
தற்போது இணையத்தில் நூல் மதிப்பீடுகளை அசுர வேகத்தில் எழுதிக் குவிக்கும் பெண்எழுத்தாளரான வெலிகம ரிம்சா முகம்மது வரை நீண்டு கிடக்கிறது.விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்கள் சிலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள் திறனாய்வுக்குத் தேவையான களத்தை ஈழகேசரி தயார் செய்து கொடுத்தது. அலை ,கலைசெல்வி , மல்லிகை , ஞானம் , ஜீவநதி , செங்கதிர் , படிகள் போன்ற சஞ்சிகைகளின் பங்களிப்புகளும் பாராட்டத்தக்கது.

கேள்வி : நம்மைப் பொறுத்தவரையில் திறனாய்வு தொடர்பில் அறுபது எழுபது காலகட்டம் முக்கியமானது என்று சொன்னீர்கள். அது பற்றி விளக்க முடியுமா?

பதில் : திறனாய்வு சம்மந்தப்பட்ட வகையில் அறுபதுகள் தொடங்கி எண்பதுகள்வரை முக்கியமான காலகட்டம்தான். கலையழகை தேடிக் கண்டடையும் ஒரு குழுவும் சமூக விடுதலைக்கான தேவையே எழுத்தாக வேண்டுமென்று மற்றொரு குழுவும் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பம் அது. இடதுசாரி அரசியலின் பின்னணியில் மாக்சிய நோக்கு பலம் பெறத் தொடங்கியது. கைலாசபதி இதற்குத் தலைமை தாங்கினார். திறனாய்வு முயற்சிகளில் நம்மவர்களைப் பட்டியல் போடும் முறை இவர் காலத்திலே அறிமுகமானது.எனினும் எழுபதுகளில் கைலாசபதி , சிவத்தம்பி முகாமில் இருந்த எம் ஏ.நுஃமான் போன்றவர்கள் கலையம்சம் புறக்கணிக்க முடியாதது என்ற கோசத்தை முன்வைத்தனர். ஓரளவு வெற்றியும் பெற்றனர். இன்னுமொரு பக்கத்தில் எஸ்.பொன்னுத்துரை குழுவினர் முற்போக்குவாத குழுக்களுக்கு எதிரான பார்வையில் கலைத்துவ முக்கியத்துவத்தை முன்னிறுத்தி எழுதினர்.

மு.தளையசிங்கம் புதிய அணுகுமுறையொன்றை பதிவு செய்தார். அவர் கலை மற்றும் மாக்சிய அணுகுமுறைகளுக்கு மத்திய புள்ளியில் நின்று தனது எழுத்துக்களை முன்வைத்தார். கலை மையப்பார்வை அல்லது மாக்சிய அணுகுமுறை என்றில்லாமல் இரண்டும் இணைந்தால் மட்டுமே படைப்பை முழுமையாகக் காணலாம் என்று கூறினார். நமது திறனாய்வு வரலாற்றில் தவிர்க்க முடியாத இன்னொருவர் கே.எஸ்.சிவகுமாரன். அறுபதுகளில் இருந்து இன்றுவரை இப்பணியில் சளைக்காது ஈடுபட்டு வருவர். இவர் 1960 களில் விமர்சனப் பாங்கில் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியவர். எஸ்.பொ .வின் " தீ " என்ற நாவலுக்கு 1962 இல் அவர் எழுதிய விமர்சனம் இதற்கு நல்ல உதாரணமாகும்.. "தீ " ஒரு குறிக்கோள் இல்லாத நாவல் மட்டுமல்ல நல்ல தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கத் தவறிவிடுகிறது என்றும் அருவருக்கத்தக்க நாவல் என்றும் விமர்சனம் எழுதினார். ஆனால் எண்பதுகளின் மத்தியில் தான் ஒரு விமர்சகர் அல்லர் என்றும் நூல் மதிப்புரை எழுதுபவரே என்றும் பகிரங்கமாக தெரிவித்தார். விமர்சகர்களின் இடத்தை மதிப்புரையாளர்கள் நிரப்பும் மாற்றம் எண்பதுகளில் ஆரம்பமாகத் தொடங்கிவிட்டது என்பதை விளக்கவே இதனைச் சொன்னேன். எண்பதுகளுக்குப் பின்னர் திறனாய்வின் பாதை வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

கேள்வி : அண்மைக்காலத்தில் திறனாய்வுச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புதிய , நவீன கோட்பாடுகள் பற்றியெல்லாம் பேசப்படுகின்றன . அதுபற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன?

பதில் :  இது தொடர்பில் முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்தவொரு கோட்பாடும் அது முன்வைக்கப்படும் சூழ்நிலையின் பொருத்தப்பாட்டுக்கு ஏற்பவே நிலைத்திருக்கக் கூடியது. திறனாய்வியலோடு தொடர்புபட்டுப் பேசப்படும் பல கோட்பாடுகள் மேலைத்தேய சூழ்நிலையை அடியொற்றி உருவானவை.. அவை எப்படி நமக்குப் பொருந்தி வரும்?. படைப்பு வெளியானதும் ஆசிரியன் இறந்து விட்டான் என்று கூறப்படுகின்றது. படைப்பு வெளியாகும்போதுதானே ஆசிரியன் அறிமுகம் ஆகின்றான். பிறப்பே இறப்பாகுமென்றால் தர்க்கரீதியாக பூச்சியம் தானே விடையாக வரும்.குலை தள்ளியதும் மரணத்தை எதிர்நோக்கும் வாழைச்செடியாக நூலாசிரியனைப் பார்க்கும் கோட்பாடு அது. மறுபுறத்தில் வாசகன் படைப்பாளியைப் புறந்தள்ளிவிட்டு அவனது ஊழியத்தின்மீது சவாரி செய்யும் கோட்பாட்டுக்கு எப்படி கோசம் போட முடியும். ? இன்னும் சொல்லப் போனால் நாட்டார் இலக்கியத்தின் பக்கம் இக்கோட்பாடுகள் தலைகாட்டவே முடியாது .அங்கே ஆசிரியனும் இல்லை . பிரதியும் இல்லை. இக்கோட்பாடுகள் அறிமுகமான சூழ்நிலை தொடர்பாகவும் அதனை விளங்கிக் கொண்ட முறையிலும் சில பிரச்சினைகள் உள்ளன என எம்.ஏ.நுஃமான் கூறியுள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பி சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் ''பின் நவீனத்துவம் என்றால் என்னவென்று கிண்டலும் கேலியுமாகப் பேசுகின்ற தன்மை மேல்நாட்டுப் பேராசிரியர்களிடமும் இருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.. இக்கூற்றுகள் நமக்கு எதைச் சொல்கின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது. சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத திறனாய்வியல் தொடர்பிலான நவீன கோட்பாடுகள் பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். இன்னுமொரு விடயத்தையும் சுட்ட விரும்புகின்றேன். அமைப்பியல், நவீனத்துவம் , பின்நவீனத்துவம் என்றெல்லாம் பேசப்பட்டது உண்மைதான்.நமது நாட்டில் இப்போது சிலரால் மாத்திரம் மெல்லிய குரலில் அவைபற்றிப் பேசப்படுகின்றன.. ஆனால் தமிழ்நாட்டில் பொருத்தமற்ற சூழ்நிலை காணப்பட்டபோதிலும் இந்த நவீனத்துவங்களில் இன்னமும் பிசினாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்பதுதான் விளங்கிக் கொள்ள முடியாதிருக்கின்றது.

கேள்வி : திறனாய்வியல் தொடர்பாக சமகால நடவடிக்கைகளில் எவ்வாறான மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ?

பதில் : நல்லது. இது சம்மந்தமாக பல பிரேரிப்புகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன். முதலாவதாக திறனாய்வு என்ற சொல்லுக்குப் பதிலாக திறன் நோக்கு என்ற சொல் பிரதியீடு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும். அதற்கான காரணங்களை இந்நேர்காணலின் சில இடங்களில் தெளித்துள்ளேன்.

திறனாய்வு என்பது திறன் , ஆய்வு ஆகிய சொற்களின் கூட்டு ஆகும். திறனை ஆய்வு செய்தல் என்பது இதன் பொருள். அப்படியாயின் படைப்பில் திறன் உள்ளது என்ற எடுகோளுடன் ஆய்வு செய்தல் என்ற கருத்தை இச்சொல் தருகிறது. படைப்பில் திறன் உள்ளதா ? என்பதை முதலில் அறிய வேண்டும். இருந்தால் தானே ஆய்வு செய்யலாம். கரிசனையோடு பார்த்தல் அல்லது ஊன்றிக் கவனித்தல் என்பதை நோக்குதல் என்ற சொல் குறிக்கும் . எனவே ஆய்வு என்பதிலும் நோக்கல் என்பது மிகப்பொருத்தமான சொல்லாகக் காணப்படுகின்றது. திறன் உள்ளதா? இல்லையா ? என்பதை நோக்குதல் . எனவே திறனாய்வு என்பது திறன் நோக்கு ( அல்லது திறனோக்கு ) என்பதால் பிரதியீடு செய்யப்படல் வேண்டும் என்று கூறுகின்றேன். அதன் பொருத்தப்பாடு பற்றிய கலந்துரையாடலை பல்கலைக்கழக மட்டத்திலும் வெளியிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும். மற்றுமொரு பிரேரணை திறனாய்வு முறைமையானது முகாமைத்துவ செயற்பாடாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

திறனாய்வின்போது நூலாக்கத்தின் நோக்கம் , அது அடையப் பெற்றுள்ளதா என்பதை மதிப்பிடுதல், படைப்பு ஊழியத்தின் சமூகப்பலன் ஆகியனபற்றி கவனத்தில் கொள்ளப்படுகின்றது.தொழில் துறை நிர்வாகத்தில் நடைமுறையில் இருக்கும் முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் திறனாய்வு முறைமையிலும் பாலில் நெய்யாகப் பதுங்கி இருப்பதை உணர முடியும். எனவே திறனாய்வியலை திறன் நோக்கு முகாமைத்துவ அடிப்படையில் ஒழுங்கமைத்தல் சாத்தியமா என்பது கவனத்திற் கொள்ளப் படுதல் வேண்டும். இன்னுமொரு பிரேரணையும் உண்டு. அரசியலில் மாற்றுச் சிந்தனைகள் வரவேற்கப்படுவதைப்போல திறனாய்வியலிலும் மாற்றுச் சிந்தனைகள்பற்றிக் கவனம் செலுத்துதல் அவசியம். நேற்றைய புதிதுதான் இன்றைய மரபு என்பதும் இன்றைய புதிதுதான் நாளைய மரபு என்பதும் விதி. புலமைத் திமிர் காரணமாக புதியவர்களின் சிந்தனைகளைப் புறந்தள்ளுவதும் நரை தரும் அநுபவத்தின் மேன்மையை அரைவேக்காட்டுத்தனத்தால் விலக்கி வைக்க முயலும் இளசுகளின் அணுகுமுறையும் தவிர்க்கப்படுதல் வேண்டும். பிறிதொரு பிரேரணையும் உண்டு. அணிந்துரை வழங்குதல், நூல் வெளியீட்டு விழாக்களில் உரையாற்றுதல் என்பவற்றுக்கான நேர ஒதுக்கீடுகளை குறைத்து தேசிய அளவில் திறனாய்வு மகாநாடுகளையும் கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்தல். இதன் மூலம் திறனாய்வுத்துறை கூடுதல் பலம் பெறும். மேலுமொரு பிரேரணை இது பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் திறனாய்வுக் கட்டுரைகள் , அதுதொடர்பான நூல்கள் , மொழிபெயர்ப்புகள் என்பவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையொன்றைத் தாபித்தல் வேண்டும் சிறுகதை , நாவல் , கவிதை , மொழிபெயர்ப்பு என்பவற்றுக்குப் பரிசு என்று பறையறிவிப்புச் செய்யும் அரசுமுறைத் திணைக்களங்கள்கூட திறனாய்வுக்கு பரிசுகள் வழங்குதல்பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை என்பதுதான் இப்பிரேரணையின் நோக்கமாகும். இந்த விடயங்களுக்கு புறம்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒன்றை என் அபிப்பிராயமாகச் கூறி வைக்க விரும்புகின்றேன். இன்றைய இலத்திரனியல் உலகின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மழையிருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத நுட்பத்துடன் திறன் நோக்கு எத்தனத்தில் ஈடுபடுதல் வேண்டும்.அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தவப் புதல்வர்களாக நாம் கணிக்கப்பட வாய்ப்புகள் உருவாகலாம் உருவாக்கலாம்.