வில்லூரானுடனான நேர்காணல்.....

ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸ்

மரபு இலக்கியம் சார்ந்த நூல்களின் வாசிப்பும் தேடலும் பாரதியின் கவிதைகள்,பாடல்கள் மீதான ஈர்ப்புமே தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது என கூறுகின்றார்.

புதுக்கவிதைகளை கல்வியறிவு இல்லாதவர்களும் எழுதிவிடமுடியும்.அதனாலேயே கவிஞர்களும் கவிதைகளும் புற்றீசலாய் வெளிவந்துகொண்டிருக்கின்றன.இவற்றின் தரம் எவ்வாறானதென்பதை காலமே தீர்மானிக்கும் என்கிறார்.


கேள்வி:- உங்களுடைய சிறுவர் பாடல் நூலுக்கு அரச இலக்கிய விருது அண்மையில் (11.09.2018) கிடைத்துள்ளது. அவ்வகையில் உங்களின் சிறுவர் பாடல் கவிதையா,கதையா,பாடல் சார்ந்ததா ?

பதில்:- என்னுடைய சிறுவர் பாடல்கள் எனும் நூலிலுள்ள அறுபது பாடல்களும் பாடும் வகையில் சந்தத்துடன் அமைந்தவாறான பாடல் சார்ந்த இலக்கிய வகையினுள் உள்ளடக்க முடியும் எனினும் கவிதையாகவும் படிக்கலாம்.கதைப்பாடல்கள் அமைப்பிலும் சில பாடல்கள் எனது தொகுப்பிலுள்ளன. புதிய நரியும் புரிந்துணர்வுள்ள காக்கையும்,முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன்,புத்திமான் பலவான் ஆகியன இத்தகையன.

கேள்வி:- பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகவும் தற்பொழுது அதிபராகவும் பணியாற்றும் உங்களுக்கு இலக்கியத் துறையில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?

பதில்:-
பாடசாலை கல்வி பயிலும் காலங்களிலிருந்தே இயல்பாக கவியெழுதும் ஆற்றல் இருந்தபோதிலும் சாதாரணதரம் படிக்கும் போது தினகரன்,தினமுரசு ஆகியவற்றுக்கு எழுதினேன். தினமுரசு செய்தித்தாளில் பிரசுரமான எனது கவிதைகளை ஆவணப்படுத்திய போது அதனை வாசித்துவிட்டு தருவதாக பெற்றுச் சென்ற ஒரு விரிவுரையாளர் அதனை தவறவிட்டுவிட்டார்.எனது எழுத்துலக ஆரம்ப கால கவிதைகள் அவை என்பதால் எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. ஒளி மஞ்சரி போன்ற வானொலி நிகழ்ச்சியிலும் சில கவிதைகளை எழுதினேன்.அதன் பின் ஆசிரியர் பணியில் விஞ்ஞானப் பாடத்தை அர்ப்பணிப்புடன் கற்பித்து வரும் நிலையில் 2015 களில் முகநூலில் கவிதை எழுத தொடங்கிய பின்னரே எனது கவிதை இலக்கிய உலகம் விரிவுபடத் துவங்கியது. அதன் மூலம் உலகளாவிய ரீதியில் ஒரு மரபுக்கவிஞனாக இனங்காணப்பட்டு நாட்டிலும் கடல் கடந்தும் பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்று கவிஞனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளேன். சிறுவர் பாடல்கள் எனும் நூலை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2016 இல் வெளியீடும் செய்துள்ளது.

மரபு இலக்கியத்தை முகநூலினூடாக கற்று அதில் தேர்ச்சிபெற தேடல்களை மேற்க்கொண்டு மிகை வாசிப்பினூடாகவுமே இலக்கிய பயணம் ஆரம்பமானது.தலைப்பையுள்வாங்கி எழுதுகோலை எடுத்தால் தாமாகவே தமிழ்ச்சொற்கள் தாளில் தவழுகின்றன.அதனாலேயே கடவுளின் கொடையென கருதுகின்றேன்.மரபு இலக்கியம் சார்ந்த நூல்களின் வாசிப்பும் தேடலும் பாரதியின் கவிதைகள்,பாடல்கள் மீதான ஈர்ப்புமே தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

கேள்வி:- இன்றைய காலப்பகுதியில் மரபுக் கவிதைகளின் வரவு மிக கணிசமாக குறைந்துள்ளது.அவ்வகையில் மரபுக் கவிதைகளை முறையாக புலவர்களிடம், நூல்களில் கற்காமல் முகநூலூடாக கற்று மரபுக் கவிதை படைக்க முடியும் என கருதுகின்றீர்கள் ?

பதில்:- மரபு என்றுமே வாழும்.நவீனம் மரபிலிருந்தே தோன்ற முடியும்.மரபுசார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளே நவீன கவிதை என்று கூறப்படுகிறது.

மரபு என்பது கட்டுப்பாடுகளையும் இலக்கண வரம்புகளையும் கொண்டிருப்பதனால் எல்லோராலும் இலகுவில் எழுதமுடியாது. நவீன பின்நவீனத்துவக் கவிதைகளை எவராலும் இலகுவில் எழுதி விடமுடியும் ஆனால் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாலேயே மரபுக் கவிதைகளை எழுத முடியும்.

தரமான கவிதை படைக்க இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டிருக்க வேண்டும் என்பது கருத்தேயன்றி கவிதையெழுதுவதற்கான தடைகளல்ல.மரபுக் கவிதைகளை யாப்பிலக்கணத்தின் படி உறுப்பியலில் எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை முதலியவற்றையும் ஆசிரியப்பா,வெண்பா,கலிப்பா,வஞ்சிப்பா,மருட்பா ஆகிய பா வகைகளையும் அடிப்படையாக கொண்டே எழுதவேண்டும்.

புதுக்கவிதைகளை கல்வியறிவு இல்லாதவர்களும் எழுதிவிடமுடியும்.அதனாலேயே கவிஞர்களும் கவிதைகளும் புற்றீசலாய் வெளிவந்துகொண்டிருக்கின்றன.இவற்றின் தரம் எவ்வாறானதென்பதை காலமே தீர்மானிக்கும்.

காவியங்கள்,கூத்துப்பாடல்கள்,கும்மி,சிந்து,சினிமாப் பாடல்கள் மரபு தெரிந்த ஒருவராலேயே சிறப்பாக எழுதமுடியும்.புதுக்கவிதையாளர்களால் எழுதிவிட முடியாது.பாரதி போன்று பல கவிஞர்கள் மரபில் எழுதி பின்னர் புதுக்கவிதைக்குள் நுழைந்தவர்களே கவிதை தளத்தில் இடம்பிடித்துள்ளனர்.எனவே மரபைக் கற்று அன்றைய ஆரம்பகால வடிவங்களில் உள்ளது போன்றல்லாது எளிமை மிகுந்ததாக மாற்றி படைப்புகளை கொண்டுவரமுடியும்.ஆதலால் இன்றைய தலைமுறையினர் மரபினையும் கற்று புதிய கவிதைக்குள் பிரவேசிப்பது அவசியம்.

எளிமை,அழகான சொல்லாடல் அணி,விரிந்த கருத்தை சுருங்கச் சொல்லி வாசகனின் உள்ளத்தில் தூண்டுதலையும் மாறுதலையும் உருவாக்க வேண்டும்.கவிதை கவிஞனுக்கானதல்ல சமூகத்திற்கானது என்பதையுணர்ந்து கவிதை படைக்க வேண்டும்.புரியாத சொற்களையும் படிமங்களும் நிறைந்த எளிமையற்ற கவிதைகளை கவிதையென்று கூறமுடியாது.கவிதை எதுவானாலும் யாருக்காக எழுதுகிறோம் என்பதில் கவிஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி :- சிறுவர் படைப்புகள் சார்ந்து எழுதுபவர்கள் எவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் ?

பதில்:- சிறுவர்களின் மொழிவளம்,கற்பனைத்திறன்,கிரகிக்கும் திறன்,அலசி ஆராயும் திறன்,மதிப்பிடும் திறன் என்பன சிறுவர் இலக்கியம் மூலம் வளரும். சந்தம்,எளிய சொற்கள்,தெளிவான பொருள்,நல்ல கற்பனை,சிறந்த உணர்ச்சி இவைகளைக் கொண்ட பாடல்களே சிறுவர் பாடல்களாகும்.

எழுதுகின்ற பலரும் சிறுவர் உளவியலின்றி எழுதுவதனாலேயே நவீனகால இலக்கிய படைப்புளுள் கடினமானதாக சிறுவர் இலக்கியம் விளங்குகின்றது.

சிறுவர் இலக்கியப் படைப்பாளி சிறுவர் உளவியலை முழுமையாக அறிந்து தன்னை ஒரு சிறுவராக கருதி பொருத்தமான பிடித்த பொருள்கள் சார்ந்ததாக அவர்களது வட்டத்திற்குள் இருந்து எழுத வேண்டும்.

கேள்வி :-  நீங்கள் சிறுவர் பாடல் எழுதுவதற்கான அடிப்படை பின்னணி ?

பதில் :- ஆரம்பக் கல்வி மாணவரிடையே ஒழுக்க விழுமியங்களையும் தமிழ் இலக்கியத்தின் செழுமையினையும் ஆடல் பாடலினூடாக மகிழ்ச்சிகரமான கற்பித்தலை கொண்டுவர வேண்டுமென்ற அடிப்படையிலேயே நிறைவான பாடல்களை எழுதியுள்ளேன் என்றார்.

கேள்வி:- மரபினை இணையம் வழி பயின்று சிறுவர் படைப்புகளை எழுதியுள்ளதாக அறியமுடிகிறது. அவ்வகையில் இணையத்தினூடாக கற்று காத்திரமான ஆக்கபூர்வமான பாடல்களை உங்களால் படைக்க முடிகிறதா ?

பதில்:- பொறுமையும் நேரமும் தேடலும் வாசிப்பும் எமது குறிக்கோளின் மீதான தன்னம்பிக்கையும் தொடர் முயற்சியும் இருந்தால் எவர் துணையுமின்றி இணையவழி தமிழை கற்று பிற எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கவும் அவர்கள் கையாண்ட நுட்பங்களை அறியவும் முடியும்.

முயற்சியிருந்தால் முடியாதது எதுவுமில்லை.இணைய வழி வாசிப்பே என்னை உயர்த்தி படைப்பாளனாக இனங்காட்டியுள்ளது. எண்ணமே வாழ்வு,"நல்ல எண்ணங்கள் நல்லனவற்றையே தேடும் வளரும்".

கேள்வி:- சிறுவர்களை சிறுவர் இலக்கியம் மற்றும் கலையிலக்கிய ஆற்றுகைகள் சார்ந்து ஈடுபடுத்துவதில் பெற்றோர் கசப்புணர்வுகளையே கொண்டுள்ளனர்.இந்நிலையினை முறையாக நெறிப்படுத்த பெற்றோர்,உறவினர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

பதில்:- பரீட்சை மற்றும் தொழிலையடைவதை அடிப்படை நோக்கமாக கொண்ட கல்வி,மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறழ்வான நடத்தையுட்பட பல்வேறு தீமையான செயல்களுக்கும் தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது.

இயந்திரமயமான வாழ்வியல் சூழலில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வை பாடசாலைகள்,கல்வி அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலின் அவசியத்தையும் அன்பு காப்பு கணிப்பு போன்ற உளவியல் சார் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இலக்கிய கலையாற்றுகைகள் ஊடாக ஒரு சிறந்த ஆளுமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.இலக்கியமும் ஒரு வகையில் ஆன்மீகமே என்பதை பெற்றோர் உட்பட பலர் உணர வேண்டும்.

கேள்வி:- குழந்தைப் பாடல்களில் எப்பாடலின் தேவை உணரப்படுகிறது

பதில்:- குழந்தையை நோக்கிப் பாடுவதும் குழந்தையை நோக்கிப் பாடப்படுவதும் என இரு முறைகளில் எழுதப்படுகின்றன.குழந்தை தானே பாடும் பாடல்களில் புத்திமதி இருக்காது.மொழியையும் உலகத்தையும் கற்றுக்கொள்ள இசையோடு பாடும் பாடல்களே அவர்களுக்கு உதவுகின்றன.

கேள்வி:-  சிறுவர் படைப்புகளை படைக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ?

பதில்:-  சிறுவர்கள் பழக்கப்பட்ட சூழலின் காட்சிகள்,விலங்குகள்,நடத்தைகள் என்பவற்றோடு நாமும் குழந்தையாக மாறி உளவியலை அறிந்து அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட எளிமையான சொற்களினூடாக எழுத வேண்டிய தேவையுள்ளது.

இதுவரை வெளிவந்த சிறுவர் இலக்கிய வகைகளை தேடி அவற்றை வாசித்து எத்தகைய நுட்பங்களை கையாண்டுள்ளனர்.தற்காலத்துக்குப் பொருத்தமான வகையில் தற்போது எத்தகைய தலைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

கேள்வி:-  கலையிலக்கிய படைப்புத் துறையில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு அத்தி பூத்தாற் போல ஒரு சிலரே தலை காட்டுகின்றனர்.இவ்வாறு இருப்பது ஆரோக்கியமானதா ?

பதில்:- பொருளாதாரத்தோடு போட்டியிட்டு வாழவேண்டிய இயந்திரமயமான வாழ்வியல் சூழலில் பொருளாதாரத்தை தேடிக்கொள்வதிலும், தொழிநுட்பயுகத்தினால் ஈர்க்கப்பட்டமையினாலும் ஆர்வமின்மையுமே நேரமின்மையுமே காரணமாக அமைகிறது.