கவிஞர், நடிகர் பா.விஜயுடன்  ஒரு நேர்காணல்.......

அகில்

1) அடிப்படையில் நீங்கள் ஒரு கவிஞர். நடிப்புத்துறைக்குள் நீங்கள் பிரவேசித்த காரணம் என்ன?

அடிப்படையில் கவிஞனாக இருந்துகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிகனாக வேண்டும் என்பது எனது இலட்சியம் கிடையாது. அதேசமயம் நடிப்பு என்பது ஒரு கவிஞனுக்கு அப்பாற்பட்ட விஷயமோ, அன்றி இயலாத காரியமோ என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. சில சந்தர்ப்பங்கள் சிலபேருக்கு அமையும். அதுபோல ஒரு சந்தர்ப்பமாக, ஒரு வாய்ப்பாக அமைந்ததுதான் நான் நடிப்பதற்கான பயணம். நடித்தே ஆகவேண்டும் என்று எனக்குள் ஒரு தவமோ, விரதமோ இல்லை. நல்ல ஒரு திரைப்படத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னிடம் இருந்தது. அந்த ஆர்வத்தின் வெளிப்பாடுதான் நான் ஞாபகங்கள் திரைப்படத்தில் நடித்தது. தொடர்ந்து இதுபோன்ற கவித்துவமான படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய முழுமையான எண்ணம். ஆர்வம் எல்லாம்.

2) ''ஞாபகங்கள்'' திரைப்படம் ஒரு சோகமான காதல் காவியம். அப்படத்தின் நாயகன் என்றவகையிலும், நீங்கள் ஒரு கவிஞன் என்ற வகையிலும் காதலைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்?


உலகில் மனிதனாகப் பிறந்துவிட்டு வாழ்ந்து முடிப்பதற்குள் சில நினைவுகள் நம்முடைய மனதிலிருந்து இறக்கிவைக்க முடியாத, மறந்துபோக முடியாத நினைவுகளாக நமது வாழ்வில் பதிவாகும். அதை எவரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடத் தேவையில்லை. அது நமக்குள்ளே இருக்கிற பட்சத்தில் அது சுகமானதாக இருக்கும். காதல் என்பதும் அவ்வகை உணர்ச்சி சார்ந்ததே. அது ஒரு மிகச்சுகமான ஒரு வலி. அதை உணர்ந்து பார்ப்பவர்களால் நிச்சயமாக அந்த உணர்வை அடையமுடியும். ஞாபகங்கள் திரைப்படத்தை பொருத்தவரை முழுக்க முழுக்க ஒரு ரம்மியமான கவித்துவமான காதல்கதை. இந்தக்காதல், ஒரு சோகமான முடிவைத் தழுவியது என்கிற நிஜம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கலந்திருந்ததால் அந்தப் படத்தை அவ்வகையான படமாக என்னால் எடுக்கமுடிந்தது. மற்றபடி காதல் என்கிற உணர்ச்சி எப்போதும் ஒரு மிகப்பெரிய புனிதத் தன்மையோடும், உயிரோடு கலந்து பேசுகிற ஒரு உணர்வாகவுமே இருக்கிறது. இன்றளவும் மானுடத்தை அழகான, வர்ணமயமான தூரிகையால் வரைந்து கொண்டிருக்கிறது காதல்.

3) ''ஞாபகங்கள்'' திரைப்படத்தின் மறக்க முடியாத ஞாபகங்கள்.......

ஞாபகங்கள் திரைப்படத்தின் மறக்கமுடியாத ஞாபகங்கள் எனும்போது, அதாவது ஒரு கவிஞனாக ஒரு பேனாவைப் பிடித்து தமிழை எழுதி திரையுலகத்திலே பாடல் எழுதி பல புத்தகங்களை எழுத வேண்டும் என்ற இலட்சியத்தோடு சென்னைக்கு வந்த ஒரு சாதாரண இளைஞன் நான். அந்த இளைஞனால் ஒரு தமிழ் திரை உலகத்திலே தடம் பதித்து முத்திரை பதித்து ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க முடியும் என்கிற ஒரு பதிவை ஞாபகங்கள் திரைப்படம் செய்திருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றி தோல்வியைக் கடந்து இந்தப் பதிவு என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.
ஆக இந்த ஞாபகத்துக்குள் ஊறிக்கிடக்கிற பல ஞாபகங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதனுடைய முதல் நாள் படப்பிடிப்பு, நான் முதன்முதலாக நடிகனாக கமராவின் முன் நின்ற அந்தக்கணம், அந்தப் படத்தினுடைய துவக்கநாள், என்னுடைய வீட்டிலேயே என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களோடு ஒரு சின்ன கடவுள் வாழ்த்தோடு நாங்கள் தொடங்கிய அந்தத் தருணம், அதற்குப் பிறகு பற்பல சோதனைகளைக் கடந்து ஞாபகங்கள் திரைப்படம் முழுமையாக முழுமைபெற்ற நாள், அதைக்கடந்து ஞாபகங்கள் திரைப்படம் ஜூலை மூன்றாம் திகதி வெளியிடப்பட வேண்டும் என்று திட்டமிட்டபடி எந்தத் தடங்கலும் இல்லாமல் ஜூலை மூன்றாம் திகதியே வெளியான அந்தத் தருணம் என்று ஞாபகங்கள் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் பல மறக்கமுடியாத ஞாபகங்கள் மட்டுமல்ல என் வாழ்க்கைக்குத் தேவையான பல நூறு அனுபவங்கள் ஞாபகங்கள் படத்தில் எனக்குக் கிடைத்தன.

4) தொடர்ந்து வேறு பல திரைப்படங்களிலும் நடிக்க இருப்பதாக அறிகிறோம். அதுபற்றி......?

ஆமாம். நடிப்புத்துறையைப் பொருத்தவரை மக்கள் ஏறக்குறைய ஒரு நடிகனாகவும் என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் நடிகனாகவே வாழ்ந்துவிட வேண்டும் என்கிற கனவு எனக்குக் கிடையாது. என்னுடைய சுவாசம் கவிதை. கவிஞனாகத்தான் என்னுடைய ஜீவன் இருக்கும். இருந்தாலும் இடையிடையே நல்ல படங்கள், சமூக ரீதியான கதையம்சங்கள் கொண்ட, போராட்ட களங்களை விபரிக்கின்ற திரைப்படங்களை நடிக்க வேண்டும் என்கிற ஆவல் என்னுள் இருக்கிறது. அப்படிப்பட்ட கதைக்களன் தயாராகிவருகிறது. நானே அக்கதையை எழுதியும் வருகிறேன். பிறரிடமும் கதை கேட்டு வருகிறேன். விரைவில் நல்ல ஒரு திரைக்கதை அமைத்தபிறகு அந்தத் திரைப்படம் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும். இன்னும் ஓரிரு மாதங்களில் என்னுடைய அடுத்த படத்திற்கான தலைப்பு மற்றும் விபரங்கள் முறைப்படி வெளியிடப்படும்.

5) ஒரு நடிகர் என்ற வகையில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பாத்திரத்தில் அல்லது வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம், ஆசை ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. அந்தப் பாத்திரத்திற்கு நான் தகுதி உடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தப் பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னால் சிலர் என்னை விமர்சிக்கவும் கூடும். சிலபேர் கோபிக்கவும் கூடும். ஏன் சிலபேர் மனமார வாழ்த்தவும் கூடும். இந்தக் கேள்வி உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் நான் பதிலையும் உண்மையானதாகத்தான் சொல்லவேண்டும். அதனால் என்னுடைய நடிப்புத் துறையைப் பொறுத்தவரைக்கும் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒரு உலகத் தலைவர் இருக்கிறார். அந்தத் தலைவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு முன்னார் நான் ஒரு விளக்கத்தையும் சொல்ல நான் விரும்புகிறேன். ஒரு கடவுளாக ஒரு கதாபாத்திரத்திலே நடிக்கவேண்டும் என்றால் அந்த நடிகன் கடவுளாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. கடவுளுக்குரிய அந்த முகபாவங்கள், கடவுளினுடைய தன்மையை அறிந்த ஒரு மனோநிலை இவை இருந்தால் போதுமானது. அதுமாதிரி நிறைய திரைப்படங்களை, நிறைய நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். கடவுள் அவதாரங்களாக, இராமராக, இயேசுவாக, முகமது நபியாக, சிவனாக, பார்வதியாக எத்தனையோ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்தவகையில் ஒரு நடிகனாய் நானும் அந்த உலகத் தலைவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்புகிறேன். அந்த உலகத் தலைவர் நமது வீரத் தமிழ் இனத்தினுடைய விளைநிலம். அப்படிப்பட்ட வீரத்தமிழன் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடைய பாத்திரத்தில் நடிக்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.

6) அவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்குள் உருவானது?

நான் அவருடைய தீவிரமான ரசிகன். ரசிகன் என்று எப்படிக் கூறுகிறேன் என்றால், அவர் தமிழர்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த விதம், தமிழர்களுக்காகவே வாழ்ந்த அந்த வீரம், தமிழர்களுடைய காவல் தெய்வமாக விளங்கிய அவருடைய உருவம், கம்பீரம், அவருடைய பேச்சு, கொள்கை, தத்துவங்கள், அவருடைய வழிநடத்துகின்ற தன்மை, ஆளுமை, யுத்தங்களில் அவர் கடைப்பிடித்த ஒழுங்குமுறை, மக்களுக்காக அவர் செய்த ஏகோபித்த மக்கள் திட்டங்கள், இப்படி அவரைப்பற்றி நிறைய பிடித்த விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவரைப் பற்றி நிறைய புத்தகங்கள், வரலாறுகள் படித்து உணர்ந்து இருக்கிறேன். நான் தினம் படிக்கின்ற புத்தகங்களில் அவரைப் பற்றிய வாழ்வியல் சம்மந்தமான புத்தகங்கள் மிக முக்கியமானவை. இப்படி என்னை அறியாமலேயே என் சிறுவயது முதலே தலைவர் வே. பிரபாகரன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பல இலட்சம் இளைஞர்களுக்கும் அவர் மீது ஈடுபாடு உண்டு.

அவரைப் பற்றி நான் ஒரு புத்தகம் கூட எழுதிவருகிறேன். ஈழத்தமிழர்களுடைய இன்றைய வாழ்நிலையைப் பற்றி அதில் எழுதிவருகிறேன். அது விரைவில் வெளிவர இருக்கிறது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'வலி'. அதில் நான் ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன். அந்தக் கவிதை,

''அவன் கடவுள் மாதிரி
இருக்கிறான் என்றாலும்
இல்லைதான் என்றாலும்
இருக்கிறது
அவன்மீது ஒரு
பயமும் பக்தியும்''


இப்படி எனக்குள் கவிதையாகவும், பல பேருடைய இலட்சிய கர்த்தாவாகவும் விளங்குகின்ற அந்த வீரனுடைய பாத்திரத்தை என்னால் ஏற்று நடிக்க முடியும் என்று நம்புகிறேன். நிச்சயம் ஒருநாள் அதற்கொரு சந்தர்ப்பம் வரும்.

7) நீங்கள் ஒரு கவிஞன் என்றவகையில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கின்றீர்கள். பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய கவிதைகளுக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்பொழுது நடிப்புத்துறையிலும் கால் பதித்திருக்கிறீர்கள். இந்தநிலையில் ஒரு கவிஞனாக உங்களுடைய இலக்கை எட்டிவிட்டீர்கள் என்று கருதுகிறீர்களா?

ஒரு கவிஞனாக என்னுடைய இலக்குகள் மிகவும் பிரமாண்டமானவை. திரைப்படத்துறையைப் பொறுத்தவரை என்னுடைய இலக்குகள் ஓரளவுக்கு நிறைவேறி இருக்கிறது. தேசிய விருது வாங்க வேண்டும் என்று நினைத்தேன். வாங்கிவிட்டேன். தமிழக அரசுடைய விருது, மக்களுடைய அங்கீகாரம் என்று திரைப்படத்துரையைப் பொறுத்தவரை என் இலக்கை கிட்டிவிட்டேன். ஆனால் ஒரு கவிஞனாக எனக்கான அங்கீகாரம் இன்னும் போதவில்லை என்றே கருதுகிறேன். ஒரு மாபெரும் கவிஞனாக உலக அரங்கத்தில் கருதப்படவேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய இலக்கு. அதற்கான இலக்குகள், தேடல்கள் மிக அதிகமாக என்னுள் தினந்தோறும் அரும்பிக்கொண்டே இருக்கிறது. நிச்சயமாக அந்த இலக்கை நான் அடைவேன்.

8) திரையுலகைப் பொருத்தவரை நிறைய விருதுகள், குறிப்பாக தேசிய விருதும் வாங்கிவிட்டீர்கள். இந்த நிலையில் உங்கள் அடுத்த திரையுலக இலக்காக எதைக் கருதுகிறீர்கள்?

மக்களுக்காக ஜனரஞ்சகமான பாடல்களை எழுதி, அதன்மூலமாக மீண்டும் மக்களுக்குரிய, மக்களுக்கு பிடித்தமுறையில் ஒரு பெரிய அளவில் ஒரு பாடலை எழுதி, அதற்காக மீண்டும் ஒரு தேசிய விருது பெறவேண்டும் என்பதே என்னுடைய அடுத்த இலட்சியம்.

9) அண்மைக்காலங்களாக திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இதை நீங்கள் ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற வகையில் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ரீமிக்ஸ் பாடல்களைப் பொறுத்தவரை அதன் வெற்றிகளை உண்மையான வெற்றிகள் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்தப் பாடல்கள் ஏற்கனவே பெரிய அளவில் பிரபலமடைந்த பாடல்கள். அந்த வெற்றிக்கு காரணகர்த்தாக்கள் வேறுவேறு படைப்பாளிகள். எமது முன்னோர்கள். மூத்த தலைமுறையினர். அவர்களுடைய படைப்பினை நாம் பயன்படுத்தி வேறுவடித்தில் கொடுப்பது என்பது ஒரு தவறான காரியம் என்று சொல்லிவிடவும் முடியாது. உதாரணமாகச் சொல்வதென்றால், திருக்குறளுக்கு புதுக்கவிதையில் உரை எழுதினால் அது திருக்குறளை புதுக்கவிதையில் ரீமிக்ஸ் பண்ணியதாக அர்த்தமாகாது. அது திருக்குறளுக்கு ஒரு உரை எழுதியது போல்தான் கொள்ளப்படும். அதேபோலத்தான் முன்னோர்கள் வடிவமைத்த அந்தப் பாடல்கள் அதன் அழகு சிதையாமல் செய்யும்வரை அது பாராட்டப்படும். ஆனால் அதேசமயம் அது அழகை சிதைக்கும் பணியாக அமைந்தால் அதுவே அந்த முன்னோர்களுடைய படைப்பை அவமரியாதை செய்தது என்று ஆகிவிடும். எது எப்படியிருப்பினும் புதிய படைப்புக்களுக்குத்தான் ஒரு மதிப்பு, மரியாதை, மகத்துவம் எல்லாம். அதற்குத்தான் காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இருக்கும்.

10) திரைப்படப் பாடல்களைப் பொருத்தவரை இன்றைய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததாக குத்தாட்டப் பாடல்களும், துள்ளிசைப் பாடல்களும் அமைகின்றன. பாடலின் சொல்லோ, பொருளோ விளங்கமுடியாதவாறும், சொற்கள் இரட்டை அர்த்தம் கொண்டதாயும் இருக்கின்றன. உங்களுடைய பாடல்களை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு இனிமை, ஒரு அழகு, மென்மை இருக்கும். இந்தநிலையில் நான் மேற்குறிப்பிட்டது போன்ற பாடல்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவ்வாறான பாடல்களை எழுத நீங்கள் முயற்சிக்கவில்லையா?

குத்தாட்டப் பாடல்கள் என்பது இப்பொழுது தமிழ் சினிமாவில் பல்கிப்பெருகிக்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்தான கலாச்சாரம். அமெரிக்க கலாச்சாரம் எவ்வளவு ஆபத்தோ அதேமாதிரிதான் திரையுலகில் இந்த குத்தாட்டப் பாடல்கள் பெருகிவருவதும்.

குத்தாட்டப் பாடல்களுக்கு முற்றிலும் எதிரானவன்தான் நான். என்றாலும்கூட அந்த அசுத்தமான காற்றை நானும் சுவாசித்தாகவேண்டிய கட்டாய சூழலில் திரைப்படத்துறை. அதில் நானும் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இந்த அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தி ஒரு சுகந்தமான சூழலை உருவாக்க வேண்டும் என்கிற தாகமும் தவிப்பும் என்னுள்ளும் இருக்கிறது. அதற்கான வெளிப்பாடுகளாய் நான் பெரும்பாலும் கவித்துவமான பாடல்களையே எழுத முயற்சித்து வருகிறேன். இருந்தபோதிலும் குத்தாட்டப் பாடல்களைப் பொறுத்தவரைக்கும் அதில் ஒருவகையில் அந்த இசையை வேண்டுமானால் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இசையாக இருக்கலாம். ஏனென்றால் அந்தப் பாடல்களில் உபயோகிக்கப்படுகின்ற இசைக்கருவிகள் எல்லாமே கிராமிய வாத்தியங்கள். நம்முடைய தமிழர்களுடைய கிராமிய வாத்தியங்களான் உறுமி மேளம், நாதஸ்வரம், நையாண்டி மேளம், தவில் போன்றவைதான் அதில் உபயோகிக்கப்படுகிற வாத்தியங்கள். ஏறக்குறைய கிராமியத்தனமான குரலுடையவர்கள் மாத்திரமே அந்தக் குத்தாட்டப் பாடல்களில் ஆண், பெண் பாடல்களைப் பாடவைக்கப்படுகிறார்கள். ஆகவே அந்த முயற்சி ஆரோக்கியமானது. ஆக நான் இசையைக் கூட குறைகூறமாட்டேன்.

குத்தாட்டப் பாடல்களுடைய உச்சக்கட்ட விரசமே பாடல்வரிகள் தான். அந்த வரிகள் அந்த வகையான விரசமாக அமையும்போது குத்தாட்டப் பாடல்கள் முகம் சுளிக்கக்கூடிய பாடல்களாக மாறிவிடுகின்றன. ஆக இந்தக் குற்றச்சாட்டை முழுக்க முழுக்க பாடலாசிரியர் பக்கம்தான் வைக்கவேண்டும். பாடலாசிரியர்களையும் முழுமையாக குற்றம்கூற முடியாது. காரணம், அவர்களும் அதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதை எழுதச் சொன்ன இயக்குநர்கள், அதை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்கள், அதை இசையமைத்த இசையமைப்பாளர்கள் என்று அனைவருமே அந்தப் பாடலாசிரியனுக்குப் பின்னால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் தான்.

ஆக ஒட்டுமொத்தமாக நான் சொல்லவருவது ஒரு மனரீதியான ஒருங்கிணைந்த மன மாற்றம் திரையுலகில் நிகழ்ந்தால் மாத்திரமே இவ்வகைக் குத்தாட்டப் பாடல்கள் நிறுத்தப்படும். அதாவது வரிகள், வார்த்தைகள், இரட்டையர்த்தப் பிரயோகங்கள் நிறுத்தப்படும். இதற்கு அடிப்படையான இன்னுமொரு காரணம் மக்களுடைய வெகுஜன ரசனை இப்பொழுது மிகமிக மலிவாகவும் ஒரு தரமிழந்த தன்மையோடும் காணப்படுவது தான். மக்களுடைய வெகுஜன ரசனை என்பது தரமான ரசனையாக மாறினால் இவ்வகையான பாடல்கள் காலப்போக்கில் கரைந்துபோகும்.

11) சிறந்த கவிதைகளைப் படைக்கும் படைப்பாளி நீங்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரை நீங்கள் குறிப்பிட்ட வரையரைக்குள், எல்லைக்குள் வைத்து நடிப்பீர்களா? அல்லது எந்தவகையான படம் என்றாலும் ஒத்துக்கொள்வீர்களா?

திரைப்படத்தை பொறுத்தவரை நான் குறிப்பிட்ட சில பாத்திரங்களை மட்டுமே தெரிவுசெய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தவகையில் வருகின்ற எல்லாப் பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. என்னுடைய முகத்திற்கு பொருந்துகிற மாதிரி ஒரு இயல்பான பாத்;திரங்களாக மாத்திரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். உதாரணமாக எந்தவொரு கதைப் பின்னணியும் இல்லாமல் வெறுமனே கதாநாயகன் கதாநாயகியோடு வந்து ஆடிப் பாடிவிட்டுப் போகின்ற பாத்திரங்களை என்னால் செய்யமுடியாது. நல்ல விசயத்தைச் சொல்லுகின்ற கதாபாத்திரமாக, ஒரு சமூகத்திற்காக போராடுகின்ற இளைஞனுடைய ஒரு பாத்திரமாக, ஒரு வாழ்க்கையில் பார்க்கின்ற ஒரு இளைஞனுடைய பாத்திரமாக மாத்திரமே என்னால் நடிக்க முடியும் என்று நம்புகிறேன்.


நன்றி பா. விஜய் அவர்களே. உங்கள் இலக்கினை அடையவும், உங்கள் கனவுகள் நிறைவுகாணவும் எங்கள் வாழ்த்துக்கள்.