ஈழத்து பழம்பெரும் பெண் எழுத்தாளரான வல்வை கமலாபெரியதம்பி அவர்களுடன் ஒரு நேர்காணல்

அகில்


1.நீங்கள் எவ்வளவு காலமாக எழுதிவருகிறீர்கள்? உங்கள் கன்னி முயற்சி பற்றிக் கூறுங்களேன்?

என்னுடைய கன்னி முயற்சி என்னும்போது எனது முதலாவது சிறுகதை எனது பதினாறாவது வயதில் வீரகேசரிப் பத்திரிகையில் வெளியானது. அந்தக் கதையின் பெயர் ஜோடிக்கிழவர். அது தவிர என் ஆரம்ப காலங்களில் நான் ஒரு நாவல் எழுதியிருந்தேன். ஓங்கார நாதம் என்பது அந்த நாவலின் பெயர். அதுபோலவே இசைத்துறை சம்மந்தமாக 'கானக்கலை' என்ற தலைப்பில் ஒரு நூலையும் எழுதியிருந்தேன். இந்த இரு என் கன்னிமுயற்சிகளுமே அச்சேறாமல் போய்விட்டது. அதன் பிரதிகள் கூட தற்போது என்வசம் இல்லை. ஈழத்தில் இருக்கும்போது தொடர்ந்து வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு கதைகளை எழுதிவந்தேன்.

நான் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர்தான் எனது சிறுகதைகளை தொகுப்பாக வெளியிட்டேன். தொடர்ந்து எனது நாவல் மற்றும் கவிதைகள், பாடல்கள் என்பனவும் நூலுருப்பெற்றன. அதற்கு பேருதவியாகவும் இருந்தவர் எனது கணவர். அச்சேறியவை தவிர இன்னும் பல சிறுகதைகளும், கட்டுரைக் கோப்புக்களும் என்வசம் வைத்திருக்கிறேன்.

எழுத்துத் துறையில் மட்டுமன்றி இசைத்துறை, நாடகத்துறையிலும் எனக்கு சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது. என் பதினாறு வயது முதல் இலங்கையில் இருந்த காலம்வரை இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாடகியாக விளங்கினேன்.


2.நீங்கள் எழுத்துலகிற்குள் பிரவேசிக்க காரணமாய் இருந்தது எது? அல்லது காரணமாய் இருந்தவர்கள் யார்?

என் எழுத்துலகப் பிரவேசத்திற்கு காரணமாய் இருந்தவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. ஆனால் காரணமாக இருந்தது எது என்னும்போது என்னுடைய புத்தகப் படிப்பின்மீது எனக்கிருந்த ஆசைதான் என்னை எழுதத் தூண்டியது என்று கருதுகிறேன்.

சிறுவயது முதல் நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுப் படிப்பதுதான் எனது வேலை. கொழும்பு மெதடிஸ் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நான் எனது ஆரம்பக் கல்வியைப் பெற்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் நிறைய வாசிக்கத் தொடங்கினேன். தனியே கதைகள் என்றில்லாமல் பல்வேறு விடயங்கள் சார்ந்த நூல்களையும் வாசிப்பேன்.

'பத்து புத்தகங்களை நீ வாசித்தால் பதினோராவது புத்தகத்தை நீயே எழுதலாம்' என்று கூறுவார்கள். அது உண்மைதான். வாசிக்கும்போது தான் புதிய புதிய சிந்தனைகள், கருத்துகள் தோன்றுகின்றன. தமிழ்ப் புத்தகங்களை மட்டுமன்றி பெரும்பாலும் நான் ஆங்கில நூல்களையே விரும்பிப்படித்திருக்கிறேன்.

தமிழில் பழம்பெரும் எழுத்தாளர்களுடைய நூல்களையெல்லாம் வாசித்திருக்கிறேன். எனது தாயாருக்கு அவரது தந்தை வாங்கிக்கொடுத்த நூல்களைக் கூட வாசித்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களுடைய பெயர்கள் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. சட்டநாதன், மாதவய்யர் போன்றவர்களுடைய படைப்புக்களையும் வாசித்தாக ஞாபகம். பத்திரிகைகளில் பிரசுரமாகும் அனைத்துக் கதைகளையும் வாசித்திருக்கிறேன். இவ்வாறு பல்வேறு வழிகளிலும் எனக்குக் கிடைத்த நூல்களையெல்லாம் வாசித்தேன். அந்த வாசிப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது என்று நினைக்கிறேன்.

3. உங்கள் எழுத்துலக சாதனை என்று எதனைக் கருதுகிறீர்கள்?

என்னுடைய நாவல் 'நம் தாயர் தந்த தனம்' – அதைத்தான் எனது சாதனை என்று கருதுகிறேன். மற்றைய எனது படைப்புகள் எனது மனதில் தோன்றியவற்றை கதைகளாக எழுதினேன். ஆனால் 'நம் தாயர் தந்த தனம்' எனக்கு பிடித்த நாவல். என் ஊரைப் பற்றியும், என் ஊர் கலாச்சாரம், எமது குலதெய்வம், எம் மக்களுடைய பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்பவற்றையெல்லாம் அதில் பதிவுசெய்திருக்கிறேன். என் தாயின் காலம், எனது தாயின் தாய் அதாவது எனது பாட்டியின் காலம், அதன் பிறகு எனது காலம், பிற்பாடு எனக்கு பின்னர் வரக்கூடிய சந்ததியினரின் காலம் என்ற வகையில் அந்த நாவலை நான்கு பாகங்களாகப் பிரித்து கதையை எழுதியிருக்கிறேன். என் படைப்புக்களில் எனக்கு பூரண திருப்தியைத் தந்த படைப்பும் இதுதான்.


4. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருக்கும் ஒரு இலட்சியம் இருக்கும். ஒரு எழுத்தாளர் என்ற வகையில் உங்கள் இலட்சியம் என்ன? உங்களுடைய அந்த இலக்கை எட்டிவிட்டீர்களா?

என்னுடைய எழுத்து மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் எனது கொள்கை, இலட்சியம், விருப்பம். என்னுடைய கதைகளும், கருத்துக்களும் இளைய சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையவேண்டும். அவர்களை நல்ல பாதையில் இட்டுச் செல்லவேண்டும். சிலர் எழுத்துக்கள் என்ற பெயரில் கண்டதையும் அபத்தமாக எழுதுவார்கள். என் எழுத்துக்கள் அப்படி இருக்கக்கூடாது. என்னால் முடிந்தவரை நல்ல கருத்துக்களையே என் படைப்புக்களில் கொண்டுவருகிறேன். என் இலட்சியத்திற்காக என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். என்னுடைய கருத்துக்களால் யாருக்காவது பயன்கிடைத்திருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. அது பெரிய சாதனை இல்லையென்றாலும் அதுவே எனது இலட்சியம்.

5. கதை எழுதுவது பற்றிய உங்களது கொள்கைகள் பற்றிக் குறிப்பிடுங்களேன்?

கதை எழுதுவது என்பது எனக்கு இயல்பாக வந்த ஒரு கலை. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு கதையை கண்டுபிடித்து, உருவாக்கி விடுவேன். பின்னர் எழுதத் தொடங்கினால் ஆற்றொழுக்குப் போல அப்படியே கதை வந்து விழுந்துகொண்டிருக்கும். உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருப்பதில்லை. கதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.


6.ஓவ்வொரு எழுத்தாளர்களுடைய படைப்புக்களிலும் பொதுவாக அவர்களைக் கவர்ந்த ஒரு எழுத்தாளனுடைய எழுத்துக்களின் பாதிப்பு இருக்கும் என்று சொல்லுவார்கள். இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பாதிப்பு இருக்கிறதுதான். ஆனால் ஒருவருடைய பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது. சிறுவயது முதல் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் என்று எல்லாவற்றையும் வாசிப்பேன். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் தான் என்னை அதிகம் ஈர்த்தவை. அதுதவிர அகிலனின் கதைகளும் நிறைய வாசித்து இருக்கிறேன். ஆனால் எல்லாக் கதைகளையும் நான் ரசிப்பதில்லை. அவருடைய கதைகள் ஒருவிதமானவை. பெரும்பாலான அவருடைய கதைகளில் ஒருவனுக்கு இரண்டு பெண்களுடைய தொடர்பு இருப்பதுபோல கதைகளைக் கொண்டு செல்வார். அதை வாசிக்கும்போது எனக்கு படுகோபம் வரும். ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கவேண்டும். இது என்ன இப்படிச் சொல்கிறார் என்று கோபம் வரும்.

நா. பிச்சமூர்த்தி, லக்சுமி ஆகியோரும் எனக்கு பிடித்த எழுத்தாளர்களே. முக்கியமாக எழுத்தாளர் லக்சுமி பல நல்ல நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். நான் திரைப்படங்களையும் ரசித்துப் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் தில்லானாமோகனாம்பாள், நாடோடி போன்ற படங்களை விரும்பி பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

7. நீங்கள் ஒரு பெண் எழுத்தாளர் என்றவகையில் பெண்ணியம் - Feminism
  பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னைப் பொருத்தவரை ஆணும் பெண்ணும் சரிசமம். எமது இந்துசமயமும் அதைத்தான் சொல்கிறது. எமது கடவுளும் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில்தான் காட்சிகொடுக்கிறார். சக்தியின்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. ஆணுக்குப் பெண் அடிமை என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். திராவிடர் காலத்தில் இம்மாதிரியான கருத்து இருக்கவில்லை. ஆரியர்கள் - பிராமணர்கள் வருகையின் பின்னர்தான் ஆணை குறிப்பாக கணவனை தெய்வமாக்கி அவரை வணங்க வேண்டும் என்றெல்லாம் சொல்லத்தொடங்கினார்கள். என்னைப் பொருத்தவரை ஆணும் பெண்ணும் சரிசமன். எனது குடும்பத்திலும் நான் அப்படித்தான் வாழ்கிறேன். கணவன் பாதி, நான் பாதி என்பது போல எல்லாவற்றிலும் நாம் ஒன்றாகவே கருத்தொருமித்துச் செயல்ப்படுகிறோம். எனது எல்லா வேலைகளிலும் அவரும் பங்கெடுத்துக்கொள்வார்.

அந்தக் காலத்தில் பல ஆண் படைப்பாளிகளே பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசியிருக்கிறார்கள். பாரதியார் பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்வாகப் பாடியிருக்கிறார்.

''நாணமும் அச்சமும் நாய்கட்;கு வேண்டுமாம்'' என்று பாடினார்.

''நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்''
கொண்ட பெண்களைப் பற்றி பாரதியார் உயர்வாகப் பேசியிருக்கிறார்.

கவிநாயகம் தேசியவிநாகம்பிள்ளை 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமப்பா' என்று சொல்லியிருக்கிறார்.

கவிஞர் சுத்தானந்த பாரதியார்,

''வீட்டிற்கரசியும் பெண்ணன்றோ – உயர்
வீரமணிக்கலம் பெண்ணன்றோ
நாட்டிற்கரசியும் பெண்ணன்றோ
பொதுநல வலக்கரம் பெண்ணன்றோ''
என்று பெண்ணைப் போற்றியிருக்கிறார்.


8. புலம்பெயர் நாட்டில் உங்களின் இலக்கியப் பணி பற்றிக் கூறுங்கள்?

கனடாவுக்கு நான் புலம்பெயர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. இங்கு வந்த பின்னர்தான் எழுத்துத் துறையில் அதிக ஈடுபாட்டோடு செயற்படத் தொடங்கினேன் என்று சொல்லலாம். அதுவரை பத்திரிகைகளில் வெளிவந்த எனது படைப்புக்களை நூல்களாக வெளியிட்டேன். அத்தோடு கனடாவில் வெளிவரும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எனது சிறுகதை, கட்டுரைகளை எழுதத்தொடங்கினேன். தமிழருவி, செந்தாமரை, ஈழநாடு, ஈழமுரசு, நம்நாடு பத்திரிகை என்பன அந்தவகையில் குறிப்பிடத்தக்கன. ஈழத்தில் இருக்கும்போது அவ்வப்போது பத்திரிகைகளுக்கு சிறுகதை, கட்டுரைகளை எழுதிவந்தாலும் இசைத்துறையிலேயே அதிக ஈடுபாட்டோடு செய்ற்பட்டு வந்தேன். ஒரு எழுத்தாளராக என்னுடைய உலகம் விரிந்தது இந்த புலம்பெயர் மண்ணில்த்தான்.

9. புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர் எழுத்தாளர்கள் என்பது பற்றிய உங்களின் கருதுகோள்......?

புலம்பெயர் மண்ணில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். ஒரு சிலர் நன்றாக, தரமாக எழுதுகிறார்கள். சிலருடைய எழுத்துக்கள் அவ்வளவு நன்றாக இல்லை. நான் கனடாவிற்கு வந்த புதிதில், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு பத்மநாதன், தங்கவேல், சந்திரமோகன் என்று சில நல்ல எழுத்தாளர்கள் தரமான படைப்புக்களை எழுதினார்கள். எழுத்தாளர் சந்திரமோகன் இலங்கையில் இருக்கும்போதே பத்திரிகைகளுக்கு எழுதியவர். நான் அவருடைய பல கதைகளை வாசித்திருக்கிறேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. தற்போது அண்மைக்காலங்களாக எழுதுபவர்களைப் பற்றி உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் நான் இப்போது வாசிப்பது குறைவு. அத்தோடு பெரும்பாலும் ஆங்கில நாவல்களைத் தான் வாசித்து வருகிறேன்.


10.மூன்று தசாப்தங்களாக எழுத்துப்பணியில் இருந்து வருகிறீர்கள். வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?


நீங்கள் எழுதுகிற எழுத்துக்களால் எமது வருங்காலச் சந்ததி பயன்பெற வேண்டும். உங்களுடைய எழுத்து என்றும் நிலைக்கக் கூடிய எழுத்தாக இருக்கவேண்டும். நல்ல தரமானதாக இருக்கவேண்டும். பேனாவைப் பிடித்துவிட்டோம் என்பதற்காக கண்டதையும் எழுதக் கூடாது. நல்ல தத்துவங்கள், வாழ்வியல் உண்மைகளைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய வகையில் எழுத வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து.


11.கானக்குயில், கலைச்செல்வி, செந்தமிழ் சொற்செல்வி என்றெல்லாம் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். இசைத்துறையில் உங்கள் பங்களிப்புப் பற்றிக் கூறுங்களேன்?

எனது ஐந்து வயதிலேயே நான் பாடத் தொடங்கிவிட்டேன். அதாவது சொற்களை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாத பருவத்திலேயே நான் பாடத் தொடங்கிவிட்டேன். எனது பன்னிரண்டாவது வயதில் கற்பனாசுரங்கள், ராகமாலிகை என்பவற்றை எல்லாம் பாடக்கூடிய தேர்ச்சி எனக்கு கைவரப்பெற்றது. ராக சுரங்கள் பாடப்பாட நானே பாடல்களை இயற்றி, நானே இசையமைக்கவும் முடிந்தது. அவ்வற்றை பல கச்சேரிகளிலும், ஆலயங்களிலும் பாடியிருக்கிறேன். பாடுவதில்தான் எனக்கு பெரும் சந்தோசம். வட இந்து மகளிர் கல்லூரி கீதத்தை நானே இயற்றி இசையமைத்துக் கொடுத்திருக்கிறேன். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய ஊஞ்சற் பாட்டையும் நானே இயற்றி பாடியிருக்கிறேன்.

சென்னையில் இசைத்துறையில் படித்து டிப்ளோமாப் பட்டமும் பெற்றிருக்கிறேன். அத்தோடு என் பதினெட்டாவது வயதில் இசையாசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினேன். எனது பதினாறு வயது முதல் (1948 – 1988) இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாடகியாக விளங்கினேன். இலங்கையின் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், மாத்தளை, பதுளை, கம்பளை, தெல்லிப்பளை, நெடுந்தீவு, புங்குடுதீவு உள்ளிட்ட பல்வேறு பாகங்களிலும் கச்சேரிகளை நடத்தினேன். அவற்றின்போது பல கீர்த்தனைகளை நானே இயற்றி, இசையமைத்துப் பாடிவந்தேன். கதாப்பிரசங்களையும் அவ்வப்போது நடத்தியிருக்கிறேன். ஒருகாலத்தில் என்னை எழுத்தாளர் என்பதை விட ஒரு பாடகியாகவே பலரும் அறிந்திருந்தனர்.


12.எழுத்துத்துறை, இசைத்துறை மட்டுமல்லாது நாடகத்துறை மற்றும் ஓவியத்துறையிலும் ஈடுபாடு உடையவராக இருக்கிறீர்கள். அந்த வகையில் உங்கள் நாடகத்துறை, ஓவியத்துறை அனுபவங்களைப் பற்றிக் கூறுங்களேன்?

நாடகங்களிலும் ஓவியங்களிலும் எனக்கு சிறுவயது முதல் மிகுந்த ஈடுபாடு உண்டு. எனது பாடசாலைக் காலங்களில் நானே நாடகங்களை எழுதி, என் சக மாணவிகளுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சிறுநாடகங்களை எழுதி, மேடையேற்றி, நானே நடித்தும் இருக்கிறேன். அப்போது நான் எழுதிய 'ஆபத்தும் சம்பத்தும்' என்ற வானொலி நாடகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் கைலாசபதி ஆகியோருடனும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கல்லூரி விழாக்களுக்கு எனது மாணவிகளை நடிக்க பயிற்றுவித்ததோடு, மனோண்மணி போன்ற முழுநேர மேடை நாடகத்தையும் எழுதி அரங்கேற்றியுள்ளேன். சந்திரோதயம், குறவஞ்சி உள்ளிட்ட நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளேன். இதில் குறவஞ்சி கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் அரங்கேறியபோது பிரதம விருந்தினராக வருகைதந்திருந்த ஸ்ரீமதி பண்டாரநாயக்கா என்னை நேரில் பார்த்து பாராட்டியது நினைவில் உள்ளது. குறவஞ்சியில் வடஇந்துக்கல்லூரி பழைய மாணவிகளான இன்றைய புகழ்பெற்ற ரங்கா விவேகானந்தன் குறத்தியாகவும், கனடா மனோரஞ்சிதம் செல்வகுமாரின் தாயார் மனோரஞ்சித மலரை வள்ளியாகவும் ஆடி நடிக்கவைத்தேன்.

ஓவியத்துறையில் உள்ள எனது திறமையையும் வெளியிட உதவியது வடஇந்து மகளிர் கல்லுரியின் புகழ்பெற்ற 'மியுசிக் இன் ஆர்ட்' என்ற கண்காட்சிதான். அதில் கர்நாடக சங்கீதத்து ஸ்வரங்களை அவற்றிற்குரிய முழு விளக்கத்துடன் வரைந்து உருப்படிகள், வாத்தியங்கள், கச்சேரி முறைகள் முதலியவற்றை ஓவியங்களாக வரைந்து கல்வி அதிகாரிகள் உட்பட பலரது பாராட்டையும் பெற்றேன். கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததுடன் அச்சேறாத எனது எழுத்துப் பொக்கிசங்களைப் போல எனது ஓவியங்களும் அப்படியே அங்கேயே விடப்பட்டு விட்டன.