எழுத்தாளர், மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:

அகில்

1.மருத்துவராக இருந்துகொண்டே தங்களால் எப்படி இலக்கியத்திலும் முத்திரை பதிக்க முடிகின்றது?

தமிழ் இலக்கியத்தில் சிறுவயது முதல் எனக்கு ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலங்களிலும் தமிழ் இலக்கியத்தை ஆர்வமுடன் படிப்பேன். தமிழ்மொழி என்பது,

''தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக்கும் கனியேயென் முத்தமிழே புத்திக்குள்
உண்ணப்படுந் தேனேயுன்னோடு வந்துரைக்கும்
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள்''


என்று தமிழின் இனிமையைப் பாடுகிறார் தமிழ்விடுதூது ஆசிரியர்.

''கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தமொழி''


என்று தமிழின் தொண்மை சொல்லப்படுகிறது.

'
'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விளையாடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்.....''


என்று தமிழின் பெருமையைப் பாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன்.  இத்தகைய தமிழ் எனது தாய்மொழி என்னும் போது அது எனக்குப் பெருமை.

சிறுவயது முதல் கலைஞருடைய கவிதைகளை ஆர்வத்தோடு கேட்பது என்னுடைய வழக்கம். கலைஞருடைய கவிதைகளை எனது தந்தையார் இசைத்தட்டுக்களில் பதிவுசெய்து வைத்திருந்தார். அவற்றை நான் அடிக்கடி ரசித்துக்கேட்பேன். கலைஞருடைய அந்தக் கவிதைகளில் அறிஞர் அண்ணாவைப் பற்றிய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்

'
'பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம்- - அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;.........''


இதுமாதிரியான நல்ல கவிதைகளைக் கேட்கின்றபோது எனக்கு தமிழ்மீது ஒரு ஈடுபாடு தானாகவே வந்தது. பள்ளியில் படிக்கும்போது பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் எல்லாம் பங்குபற்றி நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி. ஆகவே தாய்மொழியை நாம் நன்றாகக் கற்கமுடியும். ஆழ்ந்து அனுபவிக்கமுடியும்.

2. நீங்கள் எழுதிய நூல்களின் பெயர்கள்?

எனது முதலாவது படைப்பு புதுக்கவிதை சார்ந்தது. 'நேசம்விரும்பும் நெருப்பு பூக்கள்' என்பது அக்கவிதைத் தொகுப்பின் பெயர். அடுத்து 'புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை' என்ற நூல்வள்ளலாரைப்பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறேன். 'எனது அம்பறாத் தூணியிலிருந்து...' என்பது என்னுடைய மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. இது தவிர 'வள்ளலாரும் பெரியாரும் என்று ஒரு நூலும் என நான்கு நூல்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

3. உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்திய நூல்கள்?

நான் நிறைய நூல்களைப் படித்திருக்கிறேன். அதுவும் கலைஞருடைய நிறைய நூல்களை நான் படித்திருக்கிறேன். அதிலும் அவருடைய கவிதைகளையே நான் விரும்பிப் படிப்பேன்.

அவை தவிர, 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற ம.பொ.சிவஞானம் எழுதிய நூல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்நூல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்றது. அதை வாசித்தபோதுதான் வள்ளலாரைப் பற்றிய ஒரு முழுமையான விளக்கம் எனக்குக் கிடைத்தது. இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தவாதி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார் என்பதை அந்நூலின் மூலம் நான் தெரிந்துகொண்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்றைய காலத்திற்கு ஏற்புடையதாக, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, பின்பற்றக்கூடியதாக அவரது கொள்கைகள் இருந்தன. இக்கொள்கைகளை எல்லோருமே பின்பற்றினோமானால் எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்சனைகளோ, சாதி சமய வேறுபாடுகளோ, இனங்களோ இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட கருத்துக்களை தெளிய வைக்கின்ற ம.பொ.சிவஞானத்தின் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தநூல்.

4.அண்ணாவின் கொள்கைகளில் பிடிப்புமிக்க கலைஞரின் குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள். உங்களுக்கு வள்ளலார் மீது ஈடுபாடு ஏற்படக் காரணம் என்ன?

கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனைப் பொருத்தது. அத்தோடு வள்ளலாருடைய சிந்தனைகள் என்பது பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சார்ந்த ஆன்மீகச் சிந்தனைகள். ஆறிவியல் பூர்வமாக ஆன்மீகத்தை அனுகியவர் வள்ளலார். விஞ்ஞானத்தோடு மெஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு அவரது பாடல்கள் அமைந்திருக்கும். அவருடைய பாடல்களில் சமூக சித்தாந்தம், புராதன மறுப்பு, சாத்திர சம்பிரதாயங்களுடைய எதிர்ப்பு, பலதார எதிர்ப்பு, கடவுள் ஒருவர் என்னும் கொள்கை என்பவற்றை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கும். கடவுள் கொள்கை என்பது ஒரு அனுபவம்தான். அன்பும், அறிவும் என்கிற இரண்டும் கலந்த கலவிதான் கடவுள். அந்த அனுபவத்தை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கை.

வள்ளலாரை நிறையப்பேர் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சாமியாரைப் போல அவரை ஆக்கிவிட்டார்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தவாதியாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பது பலருக்கும் இன்றுவரைக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. கலைஞருக்கும் கூட வள்ளலாருடைய சீர்திருத்தக் கொள்கைகளை மிகவும் பிடிக்கும். கேரளாவைச் சேர்ந்த நாராயணதுரை, தெற்கே வைகுண்டர் போன்றவர்கள் காட்டிய சீர்திருத்தங்களைத் தாண்டிய பல கொள்கைகளை அதற்குமுன்பே வள்ளலார் கூறியிருக்கிறார். விவேகானந்தருடைய சீர்திருத்தங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளலார் தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளில் அவற்றை சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தவாதியினுடைய கொள்கைகளை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது. அவருடைய கொள்கைகளும் கருத்துக்களும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். ஆகவேதான் நான் அவருடைய சீரிய சிந்தனைகளைக் கடைப்பிடித்து வருகிறேன்.

5.''வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்று பாடிய வள்ளலார் மன்றத் தலைவர் நீங்கள். இலங்கைத் தமிழர்கள் வாடியபோது வருந்தினீர்களா?

நிச்சயமாக வாடினேன்.எப்படி வாடாமல், வருந்தாமல் இருக்கமுடியும். சுhதாரணமாக ஒரு உயிர்துடிக்கின்றபோது, யாராக இருந்தாலும், எந்த உயிராக இருந்தாலும் வருத்தம் ஏற்படாமல் இருக்கமுடியாது. உலகப் பொதுமறை திருக்குறளும்,

''அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போற்றாக்கடை''


என்றுதானே கூறுகிறது. ஒரு உயிர் துடிக்கின்றபோது அதைப் பார்க்கின்ற இன்னொரு உயிரும் துடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த உயிருக்கு ஒரு அர்த்தம் இருக்கமுடியும்.

இலங்கைத் தமிழர்களுடைய நிலையை அறிந்து நான் வெந்தேன். நொந்தேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு ஒரு சேகத்தை உணர்ந்தேன். வெளியில் சொல்லமுடியாத ஒரு சோகம் அது. இன்றும் என்னுள் அந்த வேதனை இருக்கிறது. எனக்குள் விம்மி வெடித்துக்கொண்டிருக்கிறது. நாமெல்லாம் ஒரு கையாலாகாமல் இருந்து விட்டோமே என்கிற, வெளியில் சொல்லமுடியாத வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். இது உண்மை.

6.சென்னை போன்ற நகரங்களில் உயர் பதவிகள் கிடைத்த போதும், மறுத்துவிட்டு பிறந்த மண்ணான திருவெண்காட்டிலேயே மருத்துவம் புரியக் காரணம் என்ன?

நான் பிறந்தது முதல் இந்த கிராமத்து மக்களோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். சென்னையிலே ஒரு பெரிய பதவி எனக்குக் கிடைத்தது. உண்மைதான். ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை. ஒரு தொழிலைச் செய்கின்றபோது அதிலே ஆத்ம திருப்தி வேண்டும். என் சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னால் பலரும் பயன்பெற வேண்டும். நான் மக்களுக்கு ஒரு முழுமையான சேவையைச் செய்யவேண்டும் என்று கருதினேன். என்னை தெய்வமாக மதிக்கின்ற இந்த மக்களுக்கு நான் சேவை செய்யவேண்டும் என்று நினைத்தேன்.இங்கு சேவை செய்வதில் எனக்கு கிடைக்கின்ற திருப்தி சென்னையில் அந்த உயர்பதவியில் எனக்கு நிச்சயம் கிடைக்காது. அந்தவகையிலேதான் இந்த மக்களுக்கு தொடர்ந்தும் எனது சேவையை வழங்கி வருகிறேன். அதிலேயே ஆத்ம திருப்தியும் அடைகிறேன். இந்தக் கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரைப் போல என்னை மதிக்கிறார்கள். அவர்களுக்கு நான் தொடர்ந்து எனது சேவையை வழங்குவேன்.


7.அரக்க குணம் படைத்தவர்களுக்கு இரக்கம் கற்பிக்க என்ன செய்யவேண்டும்?

ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு திருக்குறளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

''அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இல்லார்க்கு,
என்பு தோல் போர்த்த, உடம்பு''


என்கிறார் திருவள்ளுவர். திருக்குறளில் இல்லாதது ஒன்றுமே இல்லை. மகாத்மா காந்தி பிறந்த மண் இந்த இந்திய மண். எவ்வளவோ சித்தர்கள் எல்லாம் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். பட்டினத்தார் வாழ்ந்த புண்ணியபூமி இது. இரக்க சிந்தனை ஒவ்வொரு மனிதனுனக்கும் இருக்க வேண்டும். இரக்கம் இருந்தால் தான் இந்த உலகம் தழைக்கும்.

8.வள்ளலார், பெரியார் இருவரையும் ஒரு வரியில் ஒப்பிட முடியுமா?

இருவரையுமே
'சமுதாய மேடு பள்ளங்களை சரிசெய்ய வந்த புரட்சிகரமான சீர்திருத்தவாதிகள்'
என்று கூறலாம்.

9. இன்றைய எழுத்தாளர்களில் நீங்கள் விரும்புபவர் யார்?

நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புக்களை நான் வாசித்து இருக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்துவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய எழுத்துக்களை நான் ஒவ்வொருமுறையும் ரசித்துப்படிப்பேன். அப்துல் ரகுமானுடைய கவிதைகளையும் நான் விரும்பிப் படிப்பேன். அவருடைய புதுக்கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் இருவரையுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்கு என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது. அந்தளவுக்கு பிடிக்கும்.

10. எழுத்து என்பது எப்படி இருக்க வேண்டும்?

எழுத்து என்பது சமூதாயத்திலே ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டுபண்ண வேண்டும். புதிய விதைகளை வாசகர்கள் மனதில் விதைக்க வேண்டும். கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய எழுத்துக்களை பார்த்தீர்கள் என்றால் அவருடைய எழுத்துக்கள் எல்லாம் இன்றைக்கு விதையாகி விட்டதோ என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய கவிதைகள் உணர்ச்சிமயமாக இருந்தன. படைப்பு என்பது வாசகனிடத்தில் உணர்வைத் தூண்ட வேண்டும். உணர்வைத் தூண்டுவதுதான் உண்மையான எழுத்தாக இருக்கமுடியும்.

11.ஊடகங்களின் வருகையால் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கருத்து பற்றி உங்கள் கருத்து?

அப்படிக் கூறமுடியாது. புத்தகங்களை படிப்பது என்பது ஒரு ஆனந்தம். புத்தகத்தை படிப்பதன் மூலம் கிடைக்கின்ற ஆனந்தத்தை ஊடகங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. புத்தகத்தின் வாயிலாக எழுத்தாளனுடைய முகத்தை நேரடியாகப் பார்க்கலாம். எத்தனையோ நாடகங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் புத்தகத்தில் ஒரு நாவலையோ, அல்லது ஒரு கதையையோ வாசிக்கும்போது கிடைக்கும் உணர்வு அந்த நாடகங்களைப் பார்ப்பதன் மூலம் கிடைப்பதில்லை. புத்தகங்களின் வருகையும் குறைந்துவிடவில்லை. நிறைய புத்தகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ஊடகங்களினால் அவற்றிற்குப் பாதிப்பு என்று கூறமுடியாது.

12. வருங்கால மருத்துவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்பும் அறிவுரை?

வருங்கால மருத்துவர்கள் பணத்தை மட்டும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணத்தோடும் சேவை செய்யவேண்டும். பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையான மனித நேயத்தோடு நாம் ஒருவருக்குச் சேவை செய்தோமானால் அது அந்த இறைவனுக்குச் செய்கின்ற சேவையைப் போன்றது. இந்த மருத்துவ சேவை என்பது இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற ஒரு மகத்தான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழைகளுடைய வயித்தில் எக்காரணம் கொண்டும் குத்தக்கூடாது.

13. உடல்தானம் பற்றி உங்கள் கருத்து?

இறந்த பிறகு மண்ணுக்கு இரையாகின்ற இந்த உடம்பை இன்னொருவர் பயன்பெற நாம் ஏன் கொடுக்கக் கூடாது. இறந்த பிறகும் வாழலாம் என்பதற்கு இறைவனால் நமக்கு தரப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு இது. பலர் இரத்த தானம் செய்கிறார்கள். சிறுநீரகத்தை தானம் செய்கிறார்கள். ஏன் தற்போது எலும்புகளைக் கூட தானம் செய்கிறார்கள். இறந்த பிறகு கண் தானம் செய்கிறார்கள். இதயத்தை தானம் செய்கிறார்கள்.

இறந்த பிறகு நம் உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதை விட இன்னொருவர் வாழ நமது உடல் உறுப்புக்களை தானம் கொடுத்து அதன்மூலம் நாம் இறந்த பிறகும் வாழலாமே. இது அற்புதமான ஒரு மருத்துவ விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. வரவேற்கக் கூடிய விடயம்.

14. மரபுக் கவிதைகளை விட புதுக்கவிதைகள் மீது உங்களுக்கு அதிக நாட்டம் ஏற்படக் காரணம் என்ன?

புதுக்கவிதை மட்டுமல்ல மரபுக் கவிதைகளையும் நான் எழுதிவருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் ஒரு தமிழ் ஆசிரியரிடம் முறையாக மரபுக்கவிதை எழுதக் கற்றிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டுமே ஒன்றுதான். இரண்டையுமே ரசிக்கலாம். ஒரு வரியில் கூட கவிதை எழுத முடியும். ஒருவரியில் கவிதை என்றால் 'அம்மா' என்று சொன்னால் அது கூட ஒரு அற்புதமான கவிதைதான். மரபுக்கவிதைக்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அது ஒரு கட்டுக்குள் இருப்பதால் சிலருக்கு கடினமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு புதுக்கவிதை ஒரு வாய்ப்பாக இருக்கிறது. கவிஞனுக்கு கற்பனைதான் முக்கியம். புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? என்பதல்ல.