கவிஞர், ஓவியர் எஸ்.நளீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

க.கோகிலவாணி


புறச் சூழலின் தாக்கம் அதனால் ஏற்படும் மன உந்துதல் இவற்றில் இருந்து விடு பட எழுத்து துணை செய்கின்றது என்பது பொதுவான கருத்து. உங்களை எழுத தூண்டியது எது?

நிச்சயமாக சூழலின் தாக்கம்தான், என்னைச் சூழ்ந்த துயரம்தான் என்னை எழுதத் தூண்டியது. நான் கைப்பிள்ளையாக இருக்கும்போதே அது தொடங்கிட்டு. தாய் தந்தை, இரண்டு மூத்த சகோதரிகள் அவ்வளவுதான் குடும்பம். என்தாயின் சகோதரங்களால் வஞ்சிக்கப்பட்டது எனது குடும்பம். தாயின் சகோதரர் ஒருவர் வைத்த வழக்கால் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் எனது தாயார் நீதி மன்றமலைய வேண்டியதாகிட்டு. எங்கள் ஊரிலிருந்து சுமார் 40கி.மீ.பயணித்து நீதிமன்றம் செல்லவேண்டும். எனது தாய் மறக்காமல்; இப்போதும் நினைவு கூர்கிறார். நான் கைப் பிள்ளையாக இருந்தபோது நீதி மன்றத்துக்குள்வைத்து நிக்கருக்குள் மலம்கழித்த கதைகளையும் மட்டக்களப்பு வாவியில் மலம் கழுவிய கதைகளையும்.

என் தாயின் சகோதரிகூட விட்டுவைக்கவில்லை. இளைஞர்களாய் வளர்ந்திருந்த தனது ஆண் மக்களை திரட்டி வந்து கத்தி கோடரியோடு எங்கள் நிலங்களை அபகரித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்த வீடே நிரந்தரமில்லாத நிலை. எனது தாயின் தந்தை எனது தாய்க்கென்றிருந்த சொத்துக்களை எழுதிக் கொடுக்காத நிலையில் திடீர் மரணமெய்தியதன் விளைவு அது.

இது அன்று எனது தந்தையின் சுமூக நிலையைப் பாதித்தது. எனது தந்தை அன்பானவர் இன்று என்னுடன் ஒரு நண்பனாகத்தான் பேசுகிறார். தந்தை என்றவகையில் என்னிடம் பெரிதாய் எதையும் எதிர்பார்த்ததில்லை. என்றாலும் கோபக்காரர். சட்டென நெருப்பாகி விடுவார். தனது 'கோப்ரடிவ் மெனேஜர்'  தொழிலும் பிரதானவீதியில் அமைந்திருந்த பிடவைக் கடையும், பேக்கரியுடன் கூடியஹோட்டலும் தன் கை நழுவிப் போனதற்கு தனது கோபமும் பொடுபோக்கும்தான் காரணம் என்று நம்புவதற்குப் பதிலாக நான் பிறந்ததுதான் என்று நம்பினார். பின்னர் அவர் ஆத்மீகத்தில் அமைதிதேடி ஒதுங்கியபோது அது பிழையென உணரவும் செய்தார்.

ஆனால் எனது தாயோ எப்போதும் ஒரு குளிர்ந்த நீரோடையாகவே இருந்தார். உள்ளதும் ஒரு ஆண் பிள்ளையென எனது தந்தையே பொறாமைப் படும்படி செல்லமாக வளர்த்தார். கல்வியில் நாட்டமின்றி கட்டற்றுத்திரியும் என்னை பல சிரமங்களுடன் நாள் தோறும் பள்ளிக் கூடம் நோக்கி விரட்டிக்கொண்டே இருந்தார். இது நான் க.பொ.த. சாதாரண தரம் சித்தியெய்தும் வரை தொடர்ந்தது. ஆனால் இது வரையில் எழுத்துத் துறையில் எனக்கு எந்தவி நாட்டமும் ஏற்படவில்லை. பத்திரிகை வாசிக்கும்போது கவிதை புரியாத ஒன்றாக இருந்ததால் செய்திகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொண்டேன். அப்போது பாடசாலையில் தயாரித்த கையெழுத்து சஞ்சிகை ஒன்றுக்கு ஆக்கம் கொடுக்காததால் எனது வகுப்புத்தோழனும் நண்பனுமாகிய சஜ்ஜாத் சஞ்சிகை ஆசிரியராக இருந்ததால் ஏதோ ஒரு ஆக்கத்தை எழுதிவிட்டு அதன் கீழ் எஸ்.நளீம் என்று போட்டிருந்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஆனால் எனது க.பொ.த. உயர்தரக் கற்கைக் காலம் மிகவும் முக்கியமானது கவிதைகளைப் படிப்பதற்காக மாத்திரம் பத்திரிகைகளை வாங்கிய காலம் அது.1980களின் இறுதிப் பகுதியும் 1990களின் ஆரம்பமும் எங்களுக்கு மகப் பெரிய சோதனைக்காலம். கொலைகள் மலிந்து இடம் பெயர்வை நேரடியாக சந்தித்த காலம்.

அப்போது உயர்தரக் கல்விக்காக குடும்பத்தை விட்டுத் தனித்து கொழும்புக்குச் செல்ல வேண்டியதாகிட்டு. எனது ஒட்டுமொத்த அன்பையும் குடும்பத்தில் கொட்டிவைத்திருந்த எனக்கு வீட்டைவிட்டுத் தனித்துச் செல்லும் முதலாவது பிரிவுத்துயர். கொழும்பு ஸாஹிரா கல்லூரி நூலகம்தான் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மனனம் செய்வது போல திரும்பத்திரும்ப வாசித்த காலம் அது. ஊயிரிழப்பும் இடம் பெயர்வும் பிரிவும் ஏற்படுத்திய துயரம் ஒன்றுகுவிந்து "இதயக் குமிறல்" என்ற முதல் கவிதையைப் பிரசவித்தது. அது கல்லூரி மாணவ மன்றத்தில் வாசிக்கப் பட்டபோது கவி நூல்களைப் பரிசாகப் பெற்றுத்தந்தது.

என்றாலும் எனக்குள் கவிதை குடிகொள்வதற்கு காரணமாய் இருந்தது எனது தாய் என்ற விடயத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

2000ம் ஆண்டு எனது முதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கலாநிதி சித்ரலேகா மௌனகுரு அவர்கள் எனது தாயை சந்தித்தபோது "உங்கள் மகன் கவிதையெல்லாம் எழுதுகிறாரே எப்படி?" என்று கேட்டபோது அதற்கு என்தாயின் பதிலைக்கேட்ட கலாநிதி அவர்கள் எழுத்தாளர் எஸ். எல்.எம்.ஹனீபா அவர்களை சந்தித்தபோது நளீமின் கவிதைகளை விடவும் அவரது அம்மாவின் பேச்சு என்னை அதிகம் கவர்ந்தது என்றாராம். அது எனக்கு இன்னும் பெருமையாக இருந்தது.


பொதுவாகவே பின்நவீனத்துவம் சார்ந்து வெளிவரும் படைப்புகள் ஒரு குறிப்பிட்ட மட்டத்தினரை மட்டுமே சென்றடையும். உங்கள் படைப்புகளிலும் பின்நவீனத்துவ போக்கை காணமுடிகிறது. உங்கள் படைப்புகளுக்கு அந்த மட்டத்தினரிடம் இருந்து எழுந்த விமர்சனங்கள் குறித்து கூறமுடியுமா?

2006
நடுப்பகுதியில் இந்திய சஞ்சிகையொன்றில் வெளிவந்த எனது கவிதை யொன்றைப் பார்த்த ஒரு வாசகர் அதற்கு குறிப்பெழுதுகையில் "அசல் பின்நவீனத்தவக் கவிதை" என்று எழுதியிருந்தார். அதற்குப்பின் இப்போது நீங்கள்தான் கூறியிருக்கிறீர்கள்.

நான் ஒரு போதும் பின் நவீனத்துவத்தில் கவிதை எழுதவேண்டும் என்று நினைத்ததோ அதற்காக முயற்சித்ததோ கிடையாது. ஆதலால் நான் எழுதுவது பின்நவீனத்துவம் அல்ல என்பதோ, பின்நவீனத்துவத்தை வெறுப்பவன் என்பதோ அர்த்தமல்ல. மாறுதல்களை விரும்புகிற ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன். கவிதை என்பது பலபாதைகள் பிரிகிற ஒரு சந்தி. எல்லோரும் ஒரே பாதையில் செல்லாமல் கலைந்து ஆளுக்கொரு பாதையில் சென்று பார்க்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இதை பின்நவீனத்துவத்துடன் ஒப்பிட்டுப் பாhத்தால் இரண்டுக்குமிடையில் பெரியதொரு மாறுதலை காணமுடியாது.

புனிதம் என்று எதுவும் இல்லை. அனைத்தையும் கேள்விக்குட் படுத்தல், கட்டுடைத்தல், சமூகத்தில் கழித்து ஓரம்கட்டப்பட்ட விடயங்களையும் சீர் தூக்கிப் பார்த்தல் என்ற பின்நவீனத்துவத்தின் கூறுகளெல்லாம் ஒரு மாற்றுப் பிரதியையே வேண்டி நிற்கிறது. இதனால்தான் பின்நவீனத்துவம்பற்றி நினைக்காத ஒருவரின் எழுத்துக்களில்கூட அதன் பண்பை, சாயலை தரிசிக்க முடிகிறது. தமிழக எழுத்தாள்களான ரமேஸ்-பிரேம், மார்க்ஸ், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றவர்களது பின்நவீனத்துவம் குறித்த கருத்தாடல்களையும், படைப்புகளையும் படித்திருக்கிறேன். ஒவ்வொருத்தரும் பின்நவீனத்துவம் குறித்து வௌ;வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவைகளைப்பார்க்கும் போது பின்நவீனத்துவம் குறித்த நமது புரிதல் யானை பார்த்த குருடர்களின் கதையோ? என்றும் சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது.

பொதுவாக எனது கவிதைகள் விமர்சனங்களுக்குட்பட்டது குறைவு. இலங்கையிலுள்ள நூல் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள் நூல்களைத் தேடிச்சென்று நூலகங்களில் வாங்கி விமர்சனம் செய்வது அரிதாகத்தான் நிகழ்கிறது.

ஒவ்வொரு எழுத்தாளனும் நூலை வெளியீடு செய்துவிட்டு விமர்சகர்களைத் தேடிச் சென்று அல்லது தபாலில் அனுப்பி நூலைப்பற்றி எழுதுங்கள் என்று இரந்து கேட்கவேண்டி இருக்கிறது. இது எனக்கு அவ்வளவு விருப்பமானதாக இல்லை.

இதுவும் எனது எழுத்துக்கள் பரவலான விமர்சனத்துக்கோ, வாசிப்புக்கோ உட்படாததற்கான காரணங்களுள் ஒன்று.
இன்னும் சில விமர்சகர்கள் வித்தியாசமானவர்கள். தொலை பேசியில் தாமாகத் தொடர்பு கொண்டு உங்கள் நூலை அனுப்பிவையுங்கள் அந்தப் பத்திரிகைக்கு எழுதுகிறேன் சஞ்சிகைக்கு, வலைத் தளங்களுக்கு எழுதுகிறேன் என்று ஆசைகாட்டி நூலைப் பெற்றுக் கொண்டு சும்மா இருந்து விடுகிறார்கள். விமர்சனம் எழுதுவதுமில்லை, நூல் கிடைத்ததுக்கான பதிலுமில்லை. அதைக் கூட நாம்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். நூலின் விலையை விடவும் தபால் செலவு கூடிய இந்த நாட்களில் வீட்டிலிருந்தவாறே நூல்களைப் பெறுவதற்கு இதனை ஒரு வழியாகக் கையாள்கிறார்கள்.


இலைத்துளிர்த்துக் குயில் கூவும் எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளின் தலைப்புகள் அனைத்தும் வித்தியாசமாக உள்ளன. இவ்வாறான தலைப்புகளினூடாக கூறவிரும்புவது எதனை?


எனது முதல் கவிதைத் தொகுதியின் தலைப்பைப் பார்த்தால் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவனின் குரலாக அது இருக்கும் ஆனால் இந்தத் தொகுதியின் தலைப்போ மாறாக நம்பிக்கை யூட்டுவனவாக அமைந்திருப்பதைக் காணலாம். இலை தளிர்ப்பதும் குயில் கூவுவதும் நேரடியாக ஒரு வசந்த காலத்தை மாத்திரம்; குறித்து நின்றாலும் தமிழ், முஸ்லிம் இனங்களிடையே ஒரு நல்லுறவு மலரும், மலரவேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆதங்கத்தையும் பறைகிறது. இதுளூ காலம் எம்மீது நிகழத்துகின்ற மாறுதல்கள்தான் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. ஒரு கவிதையின் தலைப்பு ஒரு பெண்ணுடலில் முகம் போன்றது, முக்கியமானது. முக அழகைக் கொண்டுதான் பெரும்பாலும் உடலும் அழகைப் பெறுகிறது.
இதனால்தான் என் கவிதையில் உள்ள ஒரு முக்கிய வரியை கழட்டி கவிதைக்கு முகமாக வைக்கிறேன். என்னைக் கவர்ந்த மிகப் பெரும் எழுத்தாளர் கவிஞர், ஓவியர் கலீல் ஜிப்ரானுடைய "முறிந்த சிறகுகள்" நாவலில் ஒருவரி வரும் "வடிவமற்றவைகளெல்லாம் தமக்கான ஒரு வத்தினைத் தேடிக்கொண்டே இருக்கும" அந்த முயற்சியின் ஒரு அடைவாகவும் இது இருக்கக்கூடும்.

"புறாச் சிறகுகளின் சடசடப்பின்போதே உதிரும் இறகாய் நிகழும் கொலைகள்" என்ற வரிகளில் உள்ளடங்கிப் போனது தினமும் நிகழ்ந்தேறும் உயிர்ப் பலிகள். அழகான வரிகள் அழகான சொல்லாடல். அதே நேரத்தில் அந்தக் கவிதையில் வித்தியாசமான படிமத்தையும் காணக்கூடியதாய் உள்ளது. இந்த சிந்தனை உங்களுள் எவ்வாறு எழுந்தது?

இந்த நாட்டின் கடந்த காலம் கொடூரம் மிகுந்தது. அது மறக்கப்பட வேண்டியது. ஆனால் என்றும் நெஞ்சை விட்டு அகலாத கசப்பு மிகுந்தது. எத்தனையோ சமாதானப் பேச்சு வார்த்தைகளையும் யுத்தங்களையும் மாறிமாறி சந்தித்தாகிவிட்டது. இது சமாதானத்துக்கான யுத்தம் என்று அறிவித்து யுத்தம் செய்த ஒரேநாடு இலங்கையாகத்தான் இருக்கமுடியும்.
ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் கையில் வெண் புறாக்களோடும் வெண் தாமரைகளோடும்தான் வந்தார்கள். ஆனால் அவர்களால் நிகழும் கொலைகளை தடுக்க முடியவில்லை.
இது 2002ல் எழுதப்பட்ட கவிதை. அப்போது சமாதானப் பேச்சு வார்த்தை மிகப் பலமாக நடைபெற்ற ஆண்டு. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கிடையிலுமன்றி முஸ்லிம் தரப்போடும் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய ஆண்டு. பிரபாகரனுடன் கை குலுக்கிக் கொண்டும், தோளுடன் தோள்சேர்த்தும் முஸ்லீம் தலைவர்கள் பிடித்துக் கொண்ட படங்கள் அப்போது பத்திரிகைகளில் பிரசுரமாகின. என்றாலும் வாழைச்சேனை, மூதூர் உட்பட பல இடங்களில் உயிர்ப் பலிகள் நடந்து கொண்டேதான் இருந்தது. பொது மக்கள் மாத்திரமன்றி புலிகளின் பிரதேசத் தலைவர்கள், இராணுவத்தினர்கூட இறந்தார்கள். ஆனால் யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த ஏமாற்றம்தான் என்னுள் அக் கவிதையை விளைத்தது.

சிறுகதைகளும் எழுதுவதாக அறிந்தேன். உங்களது அடுத்தக்கட்ட வெளியீடு சிறுகதைத் தொகுதியா?

அப்படிச் சொல்வதற்கில்லை. இதுவரை எட்டுக் கதைகள்தான் எழுதியிருக்கிறேன். இதில் ஷஷஆறாவது பாங்கு||, "வண்ணான் குறி" போன்ற கதைகள் பத்தரிகைகளில் வெளி வந்தபோது சிலரின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. "கேள்வி கணக்க" வீரகேசரியில் வெளி வந்தபோது ஒருவரைக் குறிவைத்துத் தாக்கியதாக என் காதுக்கு எட்டாத தொலைவிலிருந்து முணுமுணுத்ததும் என்னை வந்தடைந்தது. தொகுதியாக வெளியிடுவதாக இருந்தால் குறைந்தது பதினைந்து கதைகளாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன். புதிய கதைகளை எழுத வேண்டியிருக்கிறது. மற்றும் முன்னர் எழுதிய கதைகளையும் மீள்பார்வை செய்து செப்பனிட வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொன்னால் எமது சிறுகதை ஜாம்பவான்கள் முன்னிலையில் எனது கதைகளை முன்வைக்க தயக்கமாக இருக்கிறது.

உங்கள் தொகுப்பிற்கு நீங்களே ஓவியமும் வரைந்துள்ளீர்கள். கவிதைகளின் வெளிப்பாடாக இந்த ஓவியங்கள் இருந்தாலும் அதற்கும் மேல் பல சிந்தனைகளை தட்டியெழச் செய்வதாக உங்களது ஓவியங்கள் உள்ளன. ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

கவிதை எனது தாயிடமிருந்து என்னில் ஊறியது என்று சொன்னால் ஓவியம் எனது தந்தையிடமிருந்துதான் என்னைத் தொற்றிக் கொண்டது. எனது தந்தை மிக அழகாக வரையக்கூடியவர். சில ஓவியங்களை வரைந்து பிரேம் செய்து எங்கள் வீட்டுச் சுவரில் தொங்க விட்டிருந்தார். நான் சிறு பராயத்திலேயே வகுப்புத் தோழர்களை அழைத்து வந்து எனது தந்தை வரைந்தது என பெருமையாகக் காட்டியிருக்கிறேன். மட்டுமன்றி நான் பாடசாலைக் காலங்களில் வரைந்த சித்திரங் களுக்கு அவர் உயிரூட்டித் தந்திருக்கறார். ஆனால் அவரும் ஓவியத்தினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவரல்ல.

சிறுபராயத்திலேயே எனது ஓவிய ஈடுபாடு தொடங்கிட்டு. வான் மேகங்களில் நிழல்களில் தரையில் சிந்திய நீரில், சுவரில் படிந்த அடுப்புப் புகைகளிலெல்லாம் உருவங்களைத் தேடிக் கண்டு பிடித்து அருகிருப்போரிடமெல்லாம காண்பித்துக் கொண்டிருந்தேன். மழை விட்ட அதிகாலை எழுந்து அமைதியாய் அந்த முற்றத்தின் திட்டில் தரையில் ஓவியம் வரைவதில் அன்று அலாதிப் பிரியம் இருந்தது. வீட்டுச் சுவர்களிலும் கதவுகளிலும் எனது ஓவியங்கள் நிறைந்து கிடந்தன. பாடசாலையில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு கொப்பி இருந்தாலும் எனக்கு எல்லாமே ஓவியத்துக்கானதாகவே இருந்தது. இதற்காக பலமுறை ஆசிரியர்களிடம் தண்டனை பெற்றிருக்கிறேன். என்றாலும் ஓவியம் என்னுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. எனது கவிதைகளை விடவும் எனது தலைப்பு ஓவியங்கள்தான்முதன் முதலில் பத்திரிகைகளில் பிரசுரம் கண்டது.

ஓவியம் சார்ந்து சாதனை செய்யும் திட்டங்கள் எண்ணலைகளில் உண்டா?

நிச்சயமாக !
பெரியளவிலான ஒரு ஓவியக் கண் காட்சியினை நடத்தவேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கிறது. "கென்வசில்" வரைந்த ஓவியங்கள், தாளில் வரைந்த ஓவியங்கள் பிரபலங்களின் முக உருவங்கள், கோட்டோவியங்கள், கணனி ஓவியங்கள், நூல்களுக்கு வரைந்த அட்டை ஓவியங்கள் எனப் பலவாகப் பகுத்து அந்தக் கண் காட்சியை நடத்தலாம் என நினைக்கிறேன். என்றாலும் அது இப்போதைக்குச் சாத்தியப் படப்போவதில்லை என்றும் தெரிகிறது. இன்று ஏனைய துறைகளைவிடவும் செலவு மிகைத்த துறையாக ஓவியத்துறை இருக்கிறது. கென்வஸ், பிரஸ், கலர், அதற்கான கலவை என்பன அதிக விலைகளில் விற்கப்படுகிறது.
சாதாரண அளவிலான ஒரு ஓவியத்தினை வரைவதற்கு சுமார் ஐந்தாயிரம் வரை செலவாகிறது. நான் அன்மையில் வரைந்த "ஏக்கம" என்ற ஓவியம் எனது அறையில் இருக்கிறது. அதைப் பார்ப்பவர்களெல்லாம் இது உங்கள் மகளையா வரைந்திருக்கிறீர்கள் எனக் கெட்கிறார்கள். நான் அப்படியொன்றும் நினைத்து வரையவில்லை.

உங்களை கவர்நத ஓவியர்கள் யார்?

மேற்குலகம் ஓவியத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கிறிஸ்தவம் ஓவியத்தினை ஆராதிக்கிற ஒரு மார்க்கம் என்பதாலோ என்னவோ.

பிரான்சின் ஆதிவாசிகளால் வரையப்பட்ட மிகப் பழைய குகை ஓவியமான "பாயும் குதிரை''  (
galloping horse
) முதற் கொண்டு பல ஓவியங்களும், ஓவியர்களும் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். நவ்சிகா (nawsicaa) என்ற ஓவியத்தை வரைந்த லோட் லீக்டென் என்னை மிகவும் கவர்ந்தவர். மோனாலிசாவை வரைந்த லியனாடோ டாவின்சி, டேவிட் (david) என்ற அற்புத சிலையை வடித்த மைக்கல் ஏஞ்சலோ என்போரெல்லாம் என்னைக் கவர்ந்தவர்கள்.
மற்றும் இந்தியாவின் அஜந்தா ஓவியம், இலங்கையின் சீகிரிய ஓவியம் மட்டுமன்றி புகழ் பூத்த இந்திய ஓவியர்களான ஆதிமூலம், எம். எப். ஹூசைன், கே. பீ. சந்தானராஜ், ராஸ்கி மருது போன்றவர்களும் இலங்கையின் நவீன ஓவியத்தில் ஈடுபாடு காட்டிய மார்க்கு மரபு ஓவியர்களான கனகசபை, முத்தையா கனகசபை மற்றும் சிங்கள ஓவியரான ஜொஜ் கீற் ஆகியோரும் என்னைக் கவர்ந்தவர்கள்

இவ்விடத்தில் இன்னுமொரு விடையத்தினையும் கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டவுலஸ் (
doulos) என்ற நடமாடும் நூலகமான கப்பல் இலங்கைக்கும் வந்தது.
அது இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது யுத்தத்தில் கலந்தகொண்ட அந்தக் கப்பலை மீள் வடிவமைப்புச்செய்து ஒரு நூலகமாக உலவ விட்டிருந்தார்கள், அது உலகைச் சுற்றிவரும் வரலாறு;று முக்கியத்துவம் வாய்ந்த தனது இறுதப் பயணத்தில் கொழுமபுத் துறை முகத்திலும் கால் பதித்தது.
அதில் பல அற்புதமான ஓவிய நூல்களை பார்ப்பதற்கும், வாங்குவதற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய பேறு என்று கருதுகிறேன்.

அதிக ஆர்வத்துடன் எந்த எழுத்துக்களை தேர்ந்தெடுத்து வாசிப்பீர்கள்.? வாசித்ததில் மிகவும் பிடித்தவர்கள் பற்றி கூறுங்கள்?

ஜனரஞ்சக எழுத்தை விடவும் என்னைக் கவர்ந்தது தீவிர எழுத்துத்தான். மாத இதழ், காலாண்டிதழாக வெளிவரும் சுமார் பதினைந்து வகையான சிற்றிதழ்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில் நவீனத்துவம், பின்நவீனத்துவம், தலித்தியம், சோசலிசம், பெண்ணியம் அனைத்தும் அடங்கும்.
நான் எழுதத்தொடங்கிய காலம் தொட்டு பல எழுத்தாளர்களை வாசித்திருக்கிறேன் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை ஈர்த்த அந்தப் பெயர்கள் மாறு பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. தற்போது என்னை மிகவும் கவர்ந்தவர்களாக கவிதையில் தேவதேவனும், சிறுகதையில் எஸ்.ராமகிருஷ்ணனும் இருக்கிறார்கள்.

naleemart@gmail.com 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.