கல்லும் கண்ணாடித் துண்டும் 

 

கோயிலில் கொலுவீற்றிருக்க வேண்டிய நான் குப்பை மேட்டுக்கு வந்து சேர்ந்தேன் - குற்றம் ஏதும் நான் செய்ய வில்லை - சிற்பி செய்த குற்றம் என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது. என் துன்பக்கதையைக் கேட்க எந்த மனித ருக்கும் நேரம் இருக்காது - நீயாவது கேள் - உன் கதியும் என் கதி போல் இருப்பதால் உன்னிடம் சொல்லுகிறேன். கேவலம், ஒரு கல் கதை சொல்வதா! அதை நாம் கேட்பதா என்று நீ சொல்லமாட்டாய் - நீ உடைந்து போன கண்ணாடித் துண்டல்லவா! என்னை உடைத்துத் துளாக்கியதும் அல்லாமல் உன் கதையை வேறு கேட்கச் சொல்கிறாயா? என்ன துணிவு உனக்கு? என்று கோபித்துக் கொள்ளாதே! உண்மையைச் சொல்லுகிறேன். என் மீது ஒரு குற்றமுமில்லை. உனக்குத் தீங்கு இழைக்க வேண்டும் என்று நான் துளியும் எண்ணியதில்லை. நான் எனக்கேற்பட்ட கதியை எண்ணி ஏக்கத்துடனே தெருவு ஓரத்தில் கிடக்கிறேன். அந்த முரடன் எடுத்து வீசினான் குறிபார்த்து ; நீ உடைந்து விட்டாய். நடந்தது அது! என் மீது என்ன குற்றம்? என்னால் உனக்கு இந்தக் கதி நேரிட்டதே என்று நான் உள்ளபடி வருத் தப் படுகிறேன். துயரம் எனக்கும் தெரியும்! எத்தனையோ தொல்லைகளை நான் அனுபவித்திருக்கிறேன்.

நூற்றுக்கால் மண்டபம் கட்ட இந்த ஊரில் ஒரு முயற்சி நடந்தது. உளி கொண்டு சிற்பி தூண்களைச் செதுக்கும் போது எனக்கு கொள்ளை ஆனந்தம். நாம் கோவிலிலே கொலுவிருக்கப் போகிறோம்; ஆயிரக்கணக்கான மக்கள் நமது அழகைக் கண்டு மகிழப் போகிறார்கள், பத்திரிகைகளிலே படம் கூடப் போடுவார்கள்; வெளிநாட்டுக்காரர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். படங்களை எடுத்துக்கொண்டு போய் தங்கள் நண்பர்களுக்கெல்லாம் காட்டுவார்கள். நமது புகழ் பல நாடுகளிலே பேசப்படும் என்றெல்லாம் எண்ணி எண்ணிகளிப்பு அடைந்தேன். அந்தக் களிப்பின் காரணமாகத் தான், உளியால் ஏற்படுத்தப்பட்ட வேதனையைக்கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு தவறும் செய்யவில்லை. சிற்பியின் உளியின் கூர்மையைத் தாங்கிக் கொண்டேன். அவனுக்கு என்ன மனச்சங்கடமோ தெரிய வில்லை. வேலையில் பழுது ஏற்பட்டுவிட்டது. என்னைத் தூக்கிக் கீழே எறிந்துவிட்டு, தூண் அலங்காரத்துக்கு வேறு கல்லைத் தேடிக் கொண்டான். தேவாலயத்துக்குச் செல்ல வேண்டிய நான், தெருச் சுற்றி ஆக்கப்பட்டேன். பல காலம் கஷ்டப்பட்டேன்; இளைத்து, களைத்து, உருமாறிப் போய் விட்டேன். 

எண்ணிய எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஏக்கம். எதற்கும் பயனற்றுப் போனோமே என்ற வருத்தம். என்னோடு இருந்த மற்ற கற்கள் எத்தனையோ மேலான நிலையில் இருக்க, நான் இந்த நிலையை அடைந்து விட்டேன். நாம் என்ன தவறு செய்தோம். நமக்கு இந்தக் கதி ஏற்பட என்று எண்ணிக் கொள்வேன். யாரிடமாவது கூறலாம் என்று ஆவல் ஏற்படும்! ஒரு கல் சொல்வதைக் கேட்க யார் முன்வருவார்கள்? துக்கத்தை அடக்கிக் கொண்டு தேவாலயத்தில் கொலுவிருக்கும் நிலை கிடைக்கா விட்டாலும், வேறு ஏதாவது ஒரு தகுதியான நிலை, நாலு பேர் பார்த்து மெச்சக்கூடிய நிலை கிடைக்காதா என்று ஆவலுடன் ஏற்படும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கிடந்தேன்.

வெகு காலத்திற்குப் பிறகு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நல்ல வாய்ப்புதான். நாட்டிலே ஏதோ ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்களாமே! அதனாலே எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டிற்று. ஊரிலே உள்ள பெரிய மனிதர்கள், படித்தவர்கள், ஆட்சியிலே உள்ளவர்கள் பாதை ஒன்று புதிதாகப் போட்டார்கள். சாதாரணமாக பாட்டாளிகள் பாதை போடுவர். எட்டணா, ஒரு ரூபாய் கூலி வாங்குபவர்கள். அப்படிப்பட்டவர்கள் அல்ல என்னைத் தொட்டு எடுத்தவர்கள்! அதிலும் என்னைத் தொட்டு எடுத்தவர், தம்முடைய கைவிரலில் இருந்த வைர மோதிரங்களை முன்னெச்சரிக்கையாக கழற்றி பத்திரப்படுத்தி கொண்டு என்னைத் தொட்டு எடுத்தார். போட்டோ கூட எடுத்தார்கள். புதிய பாதையில் நான் இடம் பெற்றேன். மந்தி வந்திருந்தார், பாதையைத் திறக்க புதிய புதிய மோடார்கள், ஊர்வலம்! மேளக்கச்சேரி, பூமாரி! பெரிய கொண்டாட்டம்! கோயிலிலே இடம் கிடைக்காவிட்டால், என்ன! அங்கு என்ன பக்தர்கள் மட்டுமா வருகிறார்கள்! பக்தர்களை விடப் பகல் வேடக்காரர் அல்லவா அதிகம்! அதைவிட அதிகம் அளவில் வெளவால்களல்லவா வட்டமிடுகின்றன. அப்படிப்பட்ட இடத்திலே இருப்பதைவிட மந்திரிகளும், ராஜதந்திரிகளும், மிராசுதாரர்களும், மிட்டாதாரர்களும், பட்டம் பெற்றோரும், பதவி வகிப்போரும் நடமாடி பாராட்டிடும் இடமல்லவா கிடைத்தது என்றெண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். கர்வம் என்றுகூடச் சொல்லலாம்.

இந்த மகிழ்ச்சி நீடித்ததா - அதற்கு நான் கொடுத்து வைத் திருக்க வேண்டாமா! பெரிய பெரிய தலைவர்களுடைய பாராட்டுதல் பெற்ற அந்தப் பாதை மூன்றே மாதத்தில் பழுதாகிவிட்டது. முதலில் பாதையை விட்டு வெளியே கிளம்பியது நான் தான்! என் மீது தவறு இல்லை! என்னைச் சரியானபடி அழுத்தி வைக்கவில்லை, பாதை போட்டவர்கள்; படம் எடுக்கிறார்களா , படம் எடுக்கிறார்களா, என்று பார்த்துக் கொண்டிருப்பதிலே காட்டிய அளவு அக்கரை, போதுமான அளவு பள்ளம் தோண்டினோமா, போட வேண்டிய அளவு மண்ணைப் போட்டோமா, அழுந்த வேண்டிய அளவு அழுத்திவிட்டோமா, கல் சரியாகப் பதிந்ததா, வெளியே வந்துவிடாதபடி பக்குவம் செய்திருக்கிறோமா என்பதிலே அக்கறை காட்டவில்லை. 

பாவம், அவர்கள் பாதை போட்டுப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு மிட்டாமிராசு, கோர்ட்டு கோட்டை, கடை கண்ணி, இவைகளிலே பழக்கம்! ஐயாயிரம் செலவிட்டுப் போடவேண்டிய பாதையை இரண்டாயிரம் ரூபாய் செலவில் போட்ட பெருமையைப் பெற்றார்கள். இரண்டே மழைக்கெல்லாம் நான் வெளியே கொண்டு வந்து விடப்பட்டு விட்டேன். இருந்த இடமும் கிடைத்த நிலையும் போய்விட் டது; மறுபடியும் ஊர்சுற்றி ஆக்கப்பட்டுவிட்டேன். நீயே சொல்லு! இதிலே நான் செய்த குற்றம் ஏதாவது இருக்கிறதா? உதைபட்டேன்; வீசி எறியப்பட்டேன்; மழைத் தண்ணீரால் உருட்டப்பட்டேன்; யாரிடம் சொல்லி என் குறையைப் போக்கிக் கொள்ள முடியும்? படாத பாடுபட்டுக் கொண்டு பக்கிரியாகிக் கிடந்தேன்.

பல நாட்கள், கோயிலிலும் இடம் கிடைக்கவில்லை. ஆட்சிக் கொலு இருப்போர் அமைத்த பாதையிலும் இடம் இல்லை; நமக்கு இனி என்னதான் கதி என்று ஏங்கிக் கிடந்தபோது, என்னையும் என் போன்ற வேறு கற்களையும் குவித்து, சேறு போட்டுக் குழைத்து, ஒரு குடியானவன் தன் தோட்டத்துக் குடிசையின் மண் சுவற்றில் ஏற்பட்டுப் போயிருந்த வெடிப்புக்குப் போட்டு அடைத் தான். முதலிலே வருத்தமாகத்தான் இருந்தது. கோயிலில் கொலுவிருக்க எண்ணினோம்; கடைசியில் குடிசைக்கு வந்து சேர்ந்தோம்; இதுதானா நமக்கு வாய்த்த இடம் என்று பிறகு நானாக மனதைத் தேற்றிக் கொண்டேன். கோயிலா கட்டும், கோட்டையிலே கொலுவிருக்கும் மந்திரிகளாகட்டும், குடிசைகளில் உள்ள ஏழை மக்கள் கொடுக்கும் காணிக்கை, வரிப்பணம் இல்லாமல் வாழமுடியுமா, வளரமுடியுமா? ஆகவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக விளங்கும் ஏழையின் குடிசையில் இடம் பெற்று இருப்பது, உண்மையான மேல் நிலையாகும் என்று நினைத்துக்கொண்டேன். மனதுக்கு ஒரு நிம்மதி கூட ஏற்பட்டது; ஆனால் அந்த மகிழ்ச்சியும் நிம்மதியுமாவது நிலைத்ததா என்றால் அதுதான் இல்லை.

அந்த உழவன் மாடாக உழைத்து ஓடாகிப் போனான். ஆனால் வாழ முடியவில்லை . வறுமை. உழவுச் செலவுக்குப் பட்ட கடனைக்கூடத்திருப்பித்தர முடியாத நிலை ஏற்பட்டு ஊரை விட்டே ஓடிவிட்டான், பட்டணத்திலே கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவ! நான் அனாதையானேன். குடிசையைக் கவனிப்பார் இல்லை; கலனாகிவிட்டது. மறுபடியும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது! நான் வெளியே வந்துவிட்டேன் மறுபடி யும் பலருடைய காலுக்குப் பந்தானேன். உலகத்தின் மீதே கோபம் கோபமாக வந்தது. ஒரு குற்றமும் நாம் செய்ய வில்லை; சிற்பியின் கவனக்குறைவால் கோயிலில் இடம் பெற முடியாமல் போயிற்று; பாதை போடத் தெரியாதவர்களிடம் சிக்கியதால் பாதையில் நிலைத்து நிற்க முடியாமல் போய் விட்டது; உழவனை வாழவைக்க அரசாள்பவர் தவறி விட்டதால் குடிசையில் இருந்த இடமும் போய்விட்டது. இனி நாம் பயன்படுவதானால் கொடுமையை ஒழிக்க ஏதாவதொரு நல்ல காரியத்திற்குப் பயன்பட வேண்டும் என்று எண்ணி னேன்! ஆனால் நானோ ஒரு கல். நானாக ஒரு காரியமும் செய்ய முடியாது. என்னைத் தக்கவிதத்தில் பயன்படுத்த தக்கவர் வரவேண்டும். வருவார், வருவார் என்று தவம் கிடந்தேன் . 

வந்தான் பனிரெண்டு வயது சிறுவன் ஒருவன். ஐயோ பாம்பு! பாம்பு' என்று அலறியபடி என்னை எடுத்துக் குறி பார்த்து பாம்பின் மீது வீசினான். துள்ளி விழுந்தது பாம்பு. அசையவில்லை! எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒன்றுக்கும் உதவாத்து என்ற கெட்ட பெயர் இனி இல்லை. அக்ரமத்தை ஒழிக்கப் பயன்பட்டோம் பாம்பு செத்தது நம்மால் - நம்மாலான உதவியை உலகத்துக்குச் செய்தோம் என்ற மகிழ்ச்சி; பெருமை கூட! அந்தச் சிறுவனும் மகிழ்ச்சியால் துள்ளினான். "பெரியப்பா ! பெரியப்பா!' என்று கூவினான். ஒரு முதியவர் வந்தார். 'பாரு, பாம்பு! கல்லாலே அடித்தேன்! செத்துப் போச்சு! பெரிய பாம்பு! அதோ, அந்தாலே வேலி பக்கம்' என்று கூவினான். பெரியவர் கடகடவெனச் சிரித்தார். சிறுவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'அட என் சூரப்புலி ! அதோ அந்தக் கட்டுவிரியனைத்தானேடா சொல்றே! அட என் சிங்கக்குட்டி! அதை நான் ஒரு அரைமணி நேரத்துக்கு முந்தி என் கைத்தடியாலே ஒரு தட்டு தட்டிக் கொண்ணு போட்டு தூக்கி எறிஞ்சேன். செத்துப்போன பாம்பை நீ சாகடிச்சயா!' என்று சொல்லி மேலும் சிரித்தார்.

சிறுவன் வெட்கிப் போனான். அவன் மட்டுமா? எனக்கே வெட்கமாகிப் போய்விட்டது. ஒரு நல்ல காரியமாவது செய்து முடித்தோம் என்று திருப்திப்பட்டோம். கடைசியில் பார்த்தால் பாம்பு நம்மாலே சாகவில்லை; செத்த பாம்பின் மீது நாம் விழுந்தோம்; அவ்வளவுதான் என்பது தெரிந்தது. எனக்கு அந்தப் பாம்பை பார்க்கக்கூடப் பிடிக்க வில்லை. கேவலமான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். பல நாள் கழித்து நான் இருந்த இடத்தில் ஒரே பரபரப்பு! போலீசாரின் நடமாட் டம்; அதிகாரிகளின் கண்ணோட்டம், உழவர்களின் கூட்டம். உழவர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும் பெரிய தகராறு. மிராசுதாரர் தம்முடைய மூன்றாவது மகளுடைய திருமணத் துக்காக வைர நகைகள் வாங்கி வரச் சென்றாராம். அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு கிராமம் வந்திருக்கிறார். உழவர்கள் பட்டினி, விளைச்சல் சரியில்லாததால் . பணம் கேட்கப் போயிருக்கிறார்கள். முடியாது! கிடையாது! என்று சொல்லி இருக்கிறார். உழவர்களில் ஒருவன், இதற்கெல்லாம் கிடைக்குமா ! வைர நகை வாங்க பணம் கிடைக்கும், என்று பேசிவிட்டான். அவனைக் கட்டிவைத்து அடித்து விட்டார் மிராசுதாரர். உழவர்கள் திரண்டு விட்டார்கள், படை எடுப்பது போல. ஊருக்கே ஆபத்து என்று மிராசுதாரர் செய்தி அனுப்பவே போலீஸ் படை வந்துவிட்டது.

போலீசுடன் மோதிக் கொள்ளக் கூடாது என்று உழவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அமைதி நிலவிற்று . மிராசுதாரருக்கு இது பிடிக்கவில்லை . அதற்காக அவருடைய எடுபிடி ஒருவன் போலீசார் தங்கியிருந்த இடத்தின் மீது கற்களை வீசினான். அந்தப் பாவியிடம் முதன் முதல் சிக்கியது நான்தான். இரும்புத் தொப்பி மீது விழுந்தேன். போலீஸ்காரர் தலை மீது கூட அல்ல; போலீஸ் பதறிற்று. ஊதுகுழல் சத்தம் கிளம்பிற்று. குடிசைகளுக்குள் நுழைந்தார்கள்! தடி அடி. துப்பாக்கி. எல்லாம் ஒரு மணி நேரத்தில்! ஊரே அமளி துமளி , போலீசார் மீது கற்களை வீசிக் கலகம் செய்ததாக பல உழவர்கள் கைது. வழக்கு நடந்தது. வீசப்பட்ட கற்கள் வழக்கு மன்றத் தலைவர் முன்பு வைக்கப்பட்டன. அதில் நானும் இருந்தேன். என்னை அவர் தொட்டுக்கூடப் பார்த் தார். உழவர்கள் தான் என்னை எடுத்துப் போலீஸ் மீது வீசினார்கள் என்று சொல்லுகிறார்கள். என்னை எடுத்து வீசியவனே மிராசுதாரனின் அடியாள். எனக்குத் தெரியும்; கேவலம், நான் சொல்வதையா கேட்டுக்கொண்டு இருப்பார்கள்! கல் உருவில் இருக்கும் கடவுளே பேசுவதில்லையே! நானோ வெறுங்கல்! கோயிலுக்குக்கூடப் பயன்படாத கல் !

மிராசுதாரர் பக்கம் பேச வந்த வக்கீல் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவராம். ஆயிரம் ரூபாயாம் அவருக்கு. அவருடைய பேச்சு எடுபடுமா, ஒரு கல்லுடைய பேச்சு செல்லுமா! வாய் மூடிக் கிடந்தேன்; பலர் தண்டிக்கப்பட்டார்கள்! என்னைப் போலத்தான் அவர்களும்! செய்த குற்றத் துக்காகத் தண்டனை. அக்ரமம் கண் முன்னாலே நடக்கிறது. தடுக்கமுடியவில்லையே! நியாயத்துக்காக வாதாட முடிய வில்லையே என்று நான் எண்ணித் துக்கப்பட்டு என்ன பலன்? நானாவது கேவலம் கல். பெரிய பெரிய மனிதர்கள், படித்தவர்கள், இந்த அக்ரமம் நடப்பதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களாலேயே இந்த அக்ரமத்தைத் தடுக்க முடியவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? சிறு கல்.

இனி எக்கேடு கெட்டாலும் சரி என்று எண்ணிக் கொண்டேன். அவ்வளவு வெறுத்து விட்டது, வாழ்க்கை . மறுபடியும் தெருச்சுற்றியானேன். இனி ஒரு நல்ல நிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன். இந்த உலகில் நல்லவர்களுக்கு இடம் இல்லை என்று கண்டுகொண்டேன். யார் எடுத்து எங்கே வீசினாலும் அங்கே விழுந்து கிடப்பது என்றாகிவிட்டது என் நிலை.

இந்தச் சமயத்தில் தான் ஏதோ காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வந்தான். பலர் அவனைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். 'பைத்தியம், பைத்தியம்' என்று கூவினார்கள்; பாவம், என்னென்ன தொல்லைகளைக் கண்டவனோ! எந்தத் தொல்லையால் அவன் மனம் குழம்பிவிட்டதோ! யார் கண்டார்கள். திடீரென்று அவன் தான் என்னை எடுத்தான். இந்த வீட்டின் மீது வீசினான். சன்னல் திறந்திருந்ததால் நான் நேராக உன் மீது வந்து விழுந்தேன்! நீ சுக்கு நூறாகி விட்டாய் நடந்தது இது. என் மீது கோபித்துக் கொள்ளாதே. என்னை இந்த உலகம் இந்தக் கதிக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. நான் ஒரு குற்றமும் செய்ததில்லை. என்னை மன்னித்துவிடு. உனக்கு ஆத்திரமாக இருந்தால் என்னை ஏசுவதாக இருந்தால் ஏசு. நான் பொறுத்துக் கொள்கிறேன். எத்தனையோ இழிவுகளை, தொல்லைகளைத் தாங்கிக் கொண்ட எனக்கு நீ மனம் நொந்து நாலு வார்த்தை பேசு. வதைத் தாங்கிக்கொள்வது கடினம் அல்ல. எதற்கும் என் கதையைச் சொல்லிவிட்டேன். இரக்கம் காட்ட முடியாவிட் டாலும் என்னைப் புரிந்து கொண்டாலே போதும். நான் கொடுமை செய்பவன் அல்ல - கொடுமைக்கு ஆளானவன். 

கல் தன் கதையைச் சொல்லி முடித்ததும், கண்ணாடித் துண்டு பரிதாபத்தோடு கல்லைப் பார்த்துப் பேசியது:

"உண்மையிலே எனக்கு உன் மீது கோபம் இல்லை. நான் உடைபட்டு துண்டு துண்டாகப் போனது பற்றி எனக்கு வருத்தம் கூட இல்லை. ஒருவிதத்தில் சொல்லப் போனால் நான் உடைபட்டு துண்டு துண்டாகிப் போவதுதான் முறை. எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இனி இருக்கக்கூடாது என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் உடைத்தெறிந்துவிட்டாய். உனக்கு நன்றிகூடக் கூறவேண்டும்" என்று சொல்லிற்று.

கல் திகைத்தது! இவ்வளவு வெறுப்பு உனக்கு ஏற்படக் காரணம் என்ன? நான் காடு மேடு கிடந்தவன் ; கலக்க மடைந்தேன். நீயோ மாடி வீட்டில் இருக்கிறாய். மேனி மெருகுடன் வாழமுடிகிறது. உனக்கு இத்தனை வெறுப்புக்குக். காரணம்?" என்று கேட்டது. கண்ணாடித்துண்டு, ஒரு குறைவுமின்றித்தான் நான் வாழ்ந்து வந்தேன். பதினெட்டு வயதுப் பாவை பத்தரைமாற்றுத் தங்கம் உடல், உள்ளம் இரண்டும்; எப்போதும் கலகலப்பான சிரிப்பு. அப்படிப்பட்ட கட்டழகிக்குத் துணையாக இருந்துவந்தேன். ஒரு நாளைக்கு இருபது முறையாவது அந்தப் பூங்கொடியாள் என் எதிரே நிற்பாள். முகத்துக்குப் பவுடர் போதுமா? நெற்றிக்குப் பொட்டு சரியாக இருக்கிறதா? புருவத்துக்கு மை அளவாக இருக்கிறதா? என்று என்னிடம் வந்துதான் தெரிந்து கொள்வாள். புதுச் சேலை கட்டிக் கொண்டால் முதலில் என்னைத் தான் வந்து பார்ப்பாள். அவ்வளவு அன்பு என்னிடம்.

எனக்கும் அவளுக்கும் அவ்வளவு நேசம். அப்படிப்பட்ட பொற்கொடியாள் என்ன கதி ஆகிவிட்டாள் தெரியுமா! நான் கண்ணாடி ! நீயோ கல். நமக்கு நேரிட்டுவிட்ட கதியை எண்ணிக் கலக்கமடைகிறோம். நீ கதையே சொல்லி விட் டாய். அந்தக் காரிகையோ பூவிழந்தாள், பொட்டு இழந்தாள், புன்னகை இழந்தாள். எந்தக் கண்கள் மலர் போல் இருந்தனவோ, அவைகளிலிருந்து இரத்தக் கண்ணீர் குபுகுபுவென வழிகிறது. இளமையையும், அழகையும், அலங்காரத்தையும், அகமகிழ்ச்சியையும் கண்டு கண்டு களிப்புடைய நான் அவளுக்குத் துணையாக இருந்தேன். அப்படிப்பட்ட நான், அவளுக்கு அவளுடைய விதவைக் கோலத்தை, வேதனையை எடுத்துக் காட்டும் செயலை , எப்படிச் செய்ய மனம் ஒப்புவேன். துள்ளிக் கொண்டு வந்து நிற்பாளே நம் எதிரில் அந்த மான் விழியாள்! இனி அவள் வருவாளா! வந்து என் எதிரே நின்றால் மனம் என்ன பாடுபடும்.

அழகை எடுத்துக் காட்டி வந்த நான் அவதியைக் காட்டவா! இனி இங்கு இருக்க வேண்டுமா? கூடாது! கூடாது! என்று எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! என் வேதனையை நீக்கவே வந்தது போல நீ வந்தாய், நான் உடைபட! சிதறுண்டு போக! மணாளனைப் பெற்று மகிழ்ந்திருந்த அவளுக்கு நான் தேவையாக இருந்தேன். அவளோ விதவையானாள் - இனி அவளுக்கு நான் ஏன்? விதவை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு - அவள் சிறுமியாக, கன்னியாக, மணப்பெண்ணாக, மணாளனை முதன் முதல் சந்தித்தபோது வெட்கித் தலை குனிந்த பாவையாக....... இப்படிப்பட்ட நிலைகளை எல்லாம் கண்டு வந்த நான், அவள் இளைத்து, கருத்து, ஏங்கி, பெருமூச்செறிந்து, கண்ணீர் வடித்துக் கலங்கும் நிலையைக் காணவும் வேண்டுமா? காட்டவும் வேண்டுமா! வேண்டாம்! வேண்டாம்! உடைந்து போனதுதான் முறை. என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது. அதுவே நான் விரும்பியது. எனக்கு நீ பெருத்த உதவிதான் செய்து இருக்கிறாய் என்று சொல்லிற்று.

கல், ஏதும் பதில் பேச முடியாத நிலையில் திகைத்துக் கிடந்தது.

வீட்டுப் பெரியவர், வேலைக்காரியை அழைத்து, 'என்ன செய்வது? அப்படிப்பட்ட மாப்பிள்ளையே போய்விட்டான்! இந்த நிலைக்கண்ணாடி போனதுதானா பிரமாதம். கூட்டி எடுத்துக் கொண்டு போய்ச் சாக்கடைக் குழியிலே போடு' என்றார்.

கல்லும் கண்ணாடித் துண்டும் சாக்கடைக் குழியிலே போடப்பட்டன.

 

--------

'காஞ்சி' பொங்கல் மலர் 1965

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)