-      '36 வயதினிலே' (திரை விமர்சனம்)
 

வித்யாசாகர்

தன்னை தனக்குள் பார்க்கவைக்கிறது '36 வயதினிலே'


பெண்களுக்கு சிறகு முளைத்திருக்கும், ஆண்களுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கும், அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகளைப்போல  தெரிந்திருப்பார்கள், அம்மாக்களின் வயிற்றில் இனி பால்வார்க்க மகள்களே போதுமானவர்களாக தெரிவார்கள்; இதெல்லாம் நிகழ்ந்துவிட ஒருமுறை "36 வயதினிலே" பார்த்துவிடுங்கள்போதும்; கணப் பொழுதில் பெண்களின் முகம் மனதிற்குள் மின்னலாகத்தோன்றி மெல்லொளியாய் மாறிமாறி வீசும், மனதுள் காற்றில் பறக்கும் பெண்களென அத்தனைப்பேரையுமே ஒவ்வொருவரையையாய் கண்ணெதிரேக் காட்டிசிரிக்கும்..

வயதுக்கு வரம்பு போடாதீர்கள், வாழ்க்கைக்கு விளக்கம் தேடாதீர்கள், தொலைந்ததாய் ஒன்றுமேயில்லை; இல்லாததுள் ஏங்காதீர்கள், இருக்கும் வலியில் ஒளியாதீர்கள், எடுத்துச்செய்ய எத்தனையோ உண்டு யோசித்து முன்னேறுங்கள். விதைப்பது மரமுமாகலாம், மனதிற்குள்ளும் வெற்றி முளைக்கலாம், வெறுமனே இருப்பது ஞானமல்ல, தேடிக் கிடைப்பதும் அலசி ஆராய்ந்து பகுத்தறிவதுமே ஞானமாகும். பெறுவது மட்டும் வீரமல்ல கொடுப்பதும் வீரத்தில் சேரும், அடைவது மட்டுமல்ல மனதகன்று விரிவதும் வீரம்பற்றி பேசும். முயல்வதிலும் முனைப்பிலுமே வெற்றி தீர்மாணிக்கப்படுகிறது. மொத்தத்தில் எண்ணங்களே எதுவுமாகிறது.

எண்ணங்களின் தூண்டுதலே கனவுகளின் மூலம். கனவு இல்லாவிட்டால் கற்பனைக்கு வண்ணமோ கடப்பதற்கு உந்துதலோ இல்லாமல் போயிருக்கலாம். காரணம், கனவு தீர்மானிக்கிறது நாம் போடும் கையெழுத்தின் மதிப்பை, கனவு தீர்மாணிக்கிறது எதிர்காலத்தின் எனது மதிப்பை, கனவுதான் தீர்மாணிக்கிறது நாளைக்கு உங்கள்முன் நான் யாரென்பதை.

மனதின் மயக்கமோ கலக்கமோ ஒன்றும் தந்துவிடாது, விட்டொழியுங்கள் தயக்கத்தையும் பயத்தையும், ஒரு கனவினோடு புறப்படுங்கள், நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள துணிந்துவிடுங்கள், ஏமாற்றம் அச்சுறுத்தல் தோல்வி தான் கேட்டு கேட்டு வளர்ந்த அடிமைத்தனத்தின் பாடம் அத்தனையையும் தூக்கி தனது கனவிற்கு பின்னே எறிந்துவிட்டு எது என்னால் முடியாது? ஏன் முடியாது? எப்படி ஒரேயொருமுறை கூட எனது வாழ்வின் விழிப்புப்பற்றி சிந்திக்கவோ முயற்சிக்கவோ இல்லாமல் போனேனென்று யோசியுங்கள்.

தனது தாழ்வுமனப்பான்மை, தான் முன்னெடுத்துப்போயிடாத பல முட்டுக்கட்டைச் சிந்தனை என அத்தனையையும் நினைத்து கூசிப்போங்கள். ம்ம் பிறகு எண்ணிப் பாருங்கள்; வாழ்க்கை எத்தனை வசீகரமானது, தனது கையினால் வரைந்துக் கொள்ள இயலும் அழகிய சித்திரம் தானே வாழ்க்கைஅதைத்தீட்ட முதலில் வர்ணப்பூச்சு தேடுங்கள்.

நம்பிக்கை துணிவு முயற்சி என்னும் ஆயுதங்களை ஏந்தி மனதையொரு போராட்டத்தின் ஆயத்தத்திற்கு கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் போராடுவது எங்கே, யாருக்காக எவ்வித ஈரத்தோடென்றும் புரிந்திருங்கள். பிறகு பாருங்கள்; நடுநிலைக்கு வந்துவிட்ட' போராடுவதைக்காட்டிலும் செய்வதத்தனையையும் வாழ்வதற்கீடாகவே காணக்கிடைக்கும்.

இதுபோன்ற பல ஆழ மனதில் ஊன்றும் உணர்வுகளோடு "வாழ்வது வரம். வாழ்வது ருசி. வாழ்க்கை இனிமை மிக்கது. என்றாலும் அதை வாழும் மனிதர் நாமாக இருந்தாலன்றி அது வசப்படுவதில்லை" என்பதான யதார்த்த சிந்தனைகளை அத்தனை அழகாக உணர்த்துகிறது இந்த திரைப்படம். மானசீகமாய் பெண்களுக்குள் விதையாய்முளைக்க உணர்வில் நெக்கி நிற்கிறது "36 வயதினிலே"வின் ஒவ்வொரு காட்சிகளும்.

வேண்டாம் என்று பழகியவர்களை, முன்னெடுக்கவே இன்னும் பல கடமைபோதுமென்று பெண்களை அவர்களுக்குப் பிடித்த வட்டத்திற்குள் நிறுத்திய ஆண்களின் தோளில் கிடக்க; நில் படு சமை வேலைபார் போவேன சொக்கட்டானை பிடித்திழுத்து இழுத்து வலிக்க வலிக்க தான் விரும்பும் பக்கத்திற்கெல்லாம் பெண்களை திருப்பும் ஆண்களையும், அப்படிப்பட்ட ஆண்களுக்கு திரும்பும் பெண்களையும் கட்டிப்போடாமல் கன்னத்தில் அறைகிறது ஜோதிகாவின் நடிப்பும் வசந்தியாக வரும் அந்தப் கதாப்பாத்திரத்தின் கதறியழும் கண்ணீர்துளிகளும்..

"ஆண்களுக்குப் பெண்ணோ, அல்லது பெண்களுக்கு ஆணோ ஒருபோதும் எதிரியல்ல; அவர்களுக்குள் நட்புண்டு காதலுண்டு உயிர் கொடுக்க துணியும் அக்கறையுமுண்டு, அவற்றை கடந்து பழகிய அதிகார மிரட்டல்களையும், அடங்கியிருக்க இணங்கி சுருங்கிப்போன அடிமனவுணர்வின் துடிப்புக்களையுமே மெல்லமெல்ல நாம் மொத்தமாக களைந்துவிடவேண்டும்" எனும் கட்டாயத்தை காட்சிகளோடு கண்முன் விரித்துவைக்கிறது இந்த திரைப்படம்.

மகளுக்கு அம்மா போதும் அப்பா போதுமென்பதல்ல, அம்மாப்பா இருவரும் வேண்டும். மகனுக்கு அப்பா முன்மாதிரியாக இருக்கட்டும், முதல்மாதிரியாக மாற்றும் அம்மாக்களே இன்றைய இளைஞர்களுக்கு நிறைய வேண்டும்.

காதிலே கம்மல் குத்துகையில் சகித்துக்கொள் தைரியம் வர வை, மூக்குத்தி குத்தினால் சகித்துக் கொள் தைரியம் வர வை, வலையிலிட்டால்  பொறுத்துக்கொள் பரவாயில்லை, புடவை என்றாலும் அதனாலென்ன அழகுதானே உடுத்திக் கொள்; அதேநேரம் முடியுமா என்றால் ஒதுங்கிநிற்காதே துணிந்து எழு, புடவைக்குள் அடங்கிகிடந்த விதைகள் தான் அன்றும் இன்றும் வெளியே விருட்சங்களாய் கிளைபரப்பி காற்றுவீசி கம்பீரமாய் நிற்கின்றன மறந்துவிடாதே பெண்ணியரே; இது உனக்குமான மண், நீ பெற்றவயிற்றில் சுமந்த நிலத்தின் ஒரு பிடி. நீ கொடுத்தப் பாலின் ஈரம் ஊறிய உயிர்ப்பிது.

இங்கே வேறொன்றுமில்லை உன் வாழ்க்கை, எதுவும் முடியுமென்று நினை. உன்னாலும் முடியும் என்னாலும் முடியும் எந்தப் பெண்ணாலும் முடியும் என்று முழுதாக உணர். நம்பு. அதைத்தான் அத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் வசந்தி எனும் முப்பத்தியாறு வயது பெண்ணின் வழியே.

இப்படத்தில், நடிப்பு கதை திரைக்கதை அட்டகாசமான மனதை தொடும் கண்ணீர் வரவழைக்கும் யதார்த்தம் உணர்த்தும் வசனங்கள் என ஆர்வம் காட்சிகளின் மீது விரிவதனூடே இசையும் உள்ளே இசைகிறதுதிரைக்கதையுள் மனசு நெளிகிறது. வசனங்களில் கண்கள் வெப்பம் பூக்கப் பூக்க கேள்வியாய் பதிலாய் மாறி மாறி தெளிந்த உணர்வாக நினைவில் நிறைகிறது படம்.

பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல இந்த திரைக்கலை, பொழுதை ஆக்கவும் காட்சியின் வழியே நுழைந்து, நிமிர்ந்து, நடந்து, திரையரங்கு விட்டு வெளியேறும் பெண்களின் வெளிக்கொணரப்பட்ட துணிவின் சாட்சியாகவும் நிறைவுபெறுகிறது இத்திரைப்படம்.

சீரியலுக்குள் அழும் பெண்கள்.. அழும் பெண்கள்.. என்றுச்சொன்ன பல திரைப்படங்களுக்கு மத்தியில் சீரியல் பேரில் சிரிக்கவைத்து பேஸ்புக் வழியே கதையை கூட்டி நிகழ்காலத்து வாழ்க்கையின் நித்திய பதிவாக கண்களைப் பனிக்கச்செய்கிறது இந்த முப்பத்தியாறு வயதினிலே..

எனக்கென்னவோ திரையரங்கம் விட்டு வெளியே வருகையில்; எதிர்ப்படும் பெண்களெல்லாம் தக்கஅளவிற்கு ஏற்றவாறு நிமிர்ந்து நடப்பதாகவும், நேர்கொண்டு நமை பல கேள்வியோடு பார்ப்பதாகவும், எனது குற்றஉணர்ச்சியின் காரணமாக அவர்கள் எனை பறிகசித்துப் பார்ப்பதாகவுமே தோன்றியது. உள்ளே நான் வளர்க்கப்பட்ட சமூகத்தின் முன்னோர்களின் தவறிற்கு வருந்தும் அச்சத்தை ஏந்தி இனி மாற்றம் நோக்கி நடப்பதொன்றே உள்ளச்சமநிலைக்கு வழிகோலும் எனும் புரிதலை உணர்ந்துக்கொண்டே என்னால் அடுத்த அடியை மனசாட்சியோடு எடுத்துவைக்க முடிந்தது.

காரணம், சில காட்சிகளுண்டு, “ஐயோ.. இத்தனை வருடம் நான் என்னவாக வாழ்ந்தேனோ, எதுவாக இருந்தேன் என் கணவனுக்குன்னு தெரியலையே என்று வசந்தி தனது தோழியிடம் சொல்லியழும் காட்சி 'கத்திவைத்து மனதை குத்திப் போடுகிறது.

துன்பத்தில் பெண்ணிற்கு பெரிய துன்பமென்றால் அது தனது கணவன் தன்னுடைய மனைவியின் இயலாமையை எடுத்துக்காட்டி அவமானம் செய்வதன்றி வேறொன்றிருக்காது எனும் வசனம் நிச்சயம் நிறைய ஆண்களின் நேர்மையான மனதை பலமாகச் சுட்டிருக்கும்அத்தகையவாறு; நாம் கொண்டிருக்கும் பால்விகிதாச்சார மதிப்பை, ஒரு கீழ்த்தரமான ஒருதலைப்பட்சச் சாய்வை சில நேரம் இப்புறமும் சிலநேரம் அப்புறமுமாக சாய்த்துவிடும் அசிங்கமான மனநிலையை, தனக்கு கிடைத்த வாய்ப்பாக பெண்கள் சுட்டிக்காட்ட சற்றும் குறைவில்லாத வசனமது.

இன்னொரிடத்தில் வசந்தி சொல்வார், 'நானென்னை தொலைத்து விட்டேன் என்பார், அவர்கள் அவர்களை அடைந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தானே நானே என்னை தொலைத்தேன்' என்றுக்கேட்டு அழுவார்; அங்கே நமக்கு வசந்தியாக தெரிவது ஜோதிகா இல்லவேயில்லை நமது மனைவியும் அம்மாவும் அக்கா தங்கைகளும் தோழிகளுமே..

மிக முக்கியமாக, இந்த திரைப்படம் பேசுவது பெண் திரும்பப்பெறும் தனது கனவுகளைப் பற்றி மட்டுமல்ல. நீ நான் என நாம் வாழுமிந்த உலகின் தினசரி உணவு சீர்கேடு பற்றியும் பேசுகிறது. மிக வசியமாக, ஒரு மாற்றத்தை முன்வைக்கவேண்டிநச்சுமருந்தில் நனைத்த விதைத்த முளைத்த காய்கறிகளை மண்ணை நம்பி விதைத்துப் பாருங்கள் என்கிறது. விளைநிலங்களை வளைத்து வளைத்து கட்டிடங்களை கட்டினால்தானென்ன; எழுந்துநிற்பது கட்டிடங்களாக இருப்பினும் நிலைத்துநிற்பது அதற்கும்மேலான விவசாயமாக இருந்துபோகட்டுமே என்கிறது.

பிறர் பசிக்கு தனது உயிரையும் துச்சமென்று கருதி தரும் இனம் நம் தமிழினம். ஆனால் இன்று நாம் பசிக்கு ருசிக்க விசங்களைத்தானே விதைகளோடு நடுகிறோம்வளர்க்கிறோம்?

ஒரு மலையாளச் செய்தியில் காட்டுகிறார்களாம் "நம் மக்கள் இரண்டு பாகமாக விவசாயம் செய்கிறார்களாம்ஒன்று பூச்சிமருந்தான இண்டோசல்பான் அடித்ததுஅதெல்லாம் கேரளாவிற்கு அனுப்பவேண்டியாம்மற்றொன்று இண்டோசல்பான் அடிக்காததுஅது நமக்கு நாம் உண்ணவேண்டி மருந்தின்றி விளைவித்ததாம். இப்படி உறவின் கருவறுக்கும் வஞ்சத்தோடு ஒரு களம் கண்டு நிகழ்ச்சியைக் காட்டுவதாகக் காட்டி, பார் தமிழன் நம்மை கொல்வதற்காக நமக்கு வரும் காய்கறிகளிளெல்லாம் இண்டோசல்பான் அடித்து அனுப்புகிறான் பாரென்று' சாட்சியோடு காட்டுவதுபோல் காட்டி அரசியல் கத்திவைத்து மக்களின் சமதர்மத்தை டி.ஆர்.பி ரேட்டிங் எனும் சுயநலத்திற்காய் அறுக்கிறார்கள்.

உண்மையை யோசித்தால்; உள்ளூறிற்கு சாப்பிட விதைத்தது எல்லாம் உடனே பறித்து பயன்படுத்தப்பட்டுவிடும் எனவே இண்டோசல்பான் அடிக்கவேண்டாம். வெளியூருக்கு போவதெல்லாம் நெடுநாட்களுக்கு வேண்டும் பூச்சி பிடித்துவிடக் கூடாது என்பதால் பணம்போட்டு மருந்து வாங்கியடித்து அனுப்புகிறார்கள். இதில் யோசிக்கவேண்டியது என்னவென்றால் அந்த மக்களுக்கு இண்டோசல்பான் நச்சு, அதை பயன்படுத்துவது தவறு, எதிர்கலதையே அது முடத்திற்குள் புதைத்துவிடும், அது வேண்டாமென்று முன்னதாகவே புரிந்துப்போயிற்று, அவர்கள் அடிக்க ஆரம்பித்ததை அவர்களே விட்டுவிட்டார்கள். அந்த மாநிலமே இன்றதை தடைசெய்துவிட்டது. நாம் இன்னும் அந்த இண்டோசல்பானில் நனைந்து நனைந்து தான் ஆங்காங்கே உயிரையும் சேர்த்து காயவைக்கிறோம்.

என்றாலும், அவர்கள் ஆக்கும் அரசியல் போகட்டும், அது அவர்களின் குற்றம் அல்லது பார்வையின் குறை. ஆனாலும் நாம் என்னச் செய்கிறோம் நம் மண்ணை? நீ ஏன் நம் மண்ணை தாயாக எண்ணி, மழயை வரமாக வேண்டி, வியர்வையுள் நிலத்தை நனைத்து உழைப்பினால் செய்த விவசாயத்தில் பாட்டன் முப்பாட்டன் போல சாப்பிட்டு வளமாக ஏன் வாழக்கூடாது என்றுச் சிந்திக்கவைக்கிறது இந்த முப்பத்தியாறு வயதினிலே.

மொத்தத்தில் இந்தப்படம் ஒரு வரவேற்கத்தக்க புதிய வரவு. உணர்வுகளை நிமிண்டி உண்மையை ஒரு பெண்ணின் வாழ்க்கைஉதாரணத்தோடுக் காட்டிய ஆண்களுக்கானப் பொக்கிஷம். நமது கண்களை மறைத்திருக்கும் காலத்திரையின் சதை கிழித்து உள்ளத்துள் அழும் பெண்களை அப்பட்டமாக வெளிக்காட்டும் மகாகவியின் கவிதை. பெண்களுக்காக தனையறியாது அவன் செய்தான் அவன் செய்தான் என்றெண்ணி தானும் செய்துவந்த சாய்த்துவந்த தராசினை நேரே நிமிர்த்தி சமநிலையை உண்டாக்கயெண்ணி ஒரு ஆண் பெண்ணிற்காக வரைந்த திரையோவியம்.

இந்த ஓவியத்தின் அழகிற்குள் ரசனைக்குள் இயக்குனர் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் வசனகர்த்தா நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் இரவுபகல் பாராது உழைப்போடு பின்னி கிடக்கலாம். நீ நான் என யாராரோ இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அதத்தனையையும் ஒன்றுச்சேர்த்துஅந்த ஓவியத்தின் முதற்புள்ளியாக, கவிதையின் ஆணிவேராக, எதிர்காலப் பொக்கிசத்தின் மூலமுடிச்சாக நம் கண்ணிற்கு கம்பீரமாக தெரிவது நம் ஜோதிகா தான்.

எனவே ஜோதிகாவோடு சேர்ந்து நடித்த அனைவருக்கும், அந்தம்மா, அந்த குழந்தை, அந்த தம்பி, அந்த தோழி, அந்த சூசன், அந்த ராணி, அந்த மாமனார், அந்த பிரெசிடென்ட், அந்த போலிஸ் கமிஷ்னர், அந்த கணவர் என இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், குறிப்பாக, இவர்களையெல்லாம் இவ்வாறு இயக்கிய இயக்குனர் மற்றும் இயக்க இசைந்த தயாரிப்பாளரான, 'நம் ஏழைமாணவர்களை கிராமந்தோறும் சென்று தேடி வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து படிக்கவைக்கும்அகரம் பவுண்டேசன் நிறுவனர் திரு. சூர்யா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..