பொக்கிஷம்

திரைவிமர்சனம் ( கவிஞர் இரா.இரவி)

எழுத்து, இயக்கம், நடிப்பு - சேரன்
தயாரிப்பு - நிமிசந்த் ஜேபக்
1970ஆம் ஆண்டில் நிகழ்ந்த காதலை திரைப்படத்தில் ஒரு காவியம் போல படைத்து இருக்கிறார். இயக்குனர் சேரன் படம் என்றால் தைரியமாக குடும்பத்துடன் சென்று பார்க்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். அவரிடம் ஒரு பேட்டியில் எல்லோரும் மசாலா படம் எடுக்கும் காலத்தில், நீங்கள் மட்டும் கலைப்படம் எடுக்கக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு மதுக்கடையில் கூட்டம் கூடுகிறது என்பதற்காக மருந்துக் கடையை மூடி விட முடியுமா? என்றார்.

இந்தப் படத்தை பற்றி அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் இந்தப் படம் போதை ஏற்றும் மசாலா மதுக்கடை அல்ல, காதலில் தோல்வியுற்ற, காயமுற்ற இதயங்களின் வடுக்களை மயிலிறகால் வருடி விடும் மருந்துக்கடை என்று சொல்லலாம். உயிரோட்டமான காதல் கதையை மிகக் கன்னியமாக காட்சிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் சேரனின் முத்திரை பதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளது. அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் சில ஒப்பிடு உள்ளது. காதல் கடிதங்கள் பொக்கிஷமாக காக்கப்பட்டு, அதனை கடைசியில் ஒப்படைக்கும் காட்சி நெகிழ்ச்சி. இலக்கிய வடிவில் இயல்பான திரைப்படம் என்ற வாசகம் வெறும் விளம்பர வாசகமில்லை. உண்மை என்பதை மெய்ப்பித்து உள்ளார். இயக்குநர் சேரனின் தன்னம்பிக்கை பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல். தமிங்கிலம் இன்றி தரமாக வசனம் உள்ளதற்கு பாராட்டுக்கள்.

லெனின் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி உள்ளார். இயக்குநர் சேரன். கதாநாயகி பத்மபிரியா- நதீராவாகவே மாறி விட்டார். தேசிய விருது வழங்கலாம். நல்ல நடிப்பு சேரனின் தந்தையாக திரு. விசயக்குமார் சிறப்பாக நடித்து உள்ளார். மனைவி இறந்ததும், மறுமணம் செய்யாமல் இரு மகன்களை பாசத்தோடு வளர்க்கும் சிறந்த தந்தையாக திரு.விசயக்குமார் தந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்த செய்தி அறிந்து உடன் மருத்துவமனைக்கு வந்து, தந்தைக்கு உதவியாக இருக்கும் போது பக்கத்து படுக்கையி;ல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் மகள் நதீராவோடு நேர்ந்த இலக்கிய நட்பு, காதலாக மலர்ந்த பரிமாணத்தை மிக நேர்த்தியாக காட்சியாக்கி இருக்கிறார். கலை இயக்குனர் ஒளிப்பதிவு இயக்குநர், இசையமைப்பாளர் சபேஷ் முரளி, பாடல் ஆசிரியர் யுகபாரதி அனைவரின் உழைப்பையும் உணர முடிந்தது

நதீராவிற்கு கீதாஞ்சலி நூல் அஞ்சலில் அனுப்பும் இலக்கிய நட்பு புனிதம். படம் பார்க்கும் போதும், இடைவேளையின் போதும், படம் முடிந்து வந்த பிறகும் அவரவர் காதலை அசை போட வைக்கின்றது. அது தான் படத்தின் வெற்றி. படத்தில் இரட்டை அர்த்த வசனம் இல்லை. கவர்ச்சி நடிகையின் குத்துப்பாட்டு இல்லை. வெட்டுக்குத்து இல்லை. இவைகள் தான் படத்தின் பலமாக உள்ளது. விஞ்ஞானம் வளர்ந்து விரல் நுனியில் உலகம் இன்று சுருங்கி விட்டது. ஆனால்
1970களில் இது போன்ற விஞ்ஞான வசதிகள் இல்லை. அப்போது காதலர்களுக்கு மிகப்பெரிய தூதுவர்களாக இருந்தது கடிதங்கள் தான். கடிதம் எழுதி விட்டு, பதில் கடிதத்திற்காக காத்திருக்கும் காத்திருப்பு, கதாநாயகன் லெனின் காதலிடமிருந்து கடிதம் வரவில்லை. என ஏங்குவது தான் அனுப்பும் கடிதம் காதலிக்கு போய் சேருகிறதா என வந்து கவனிப்பது அஞ்சல் அலுவலத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பது இப்படி பல்வேறு காட்சிகளில் நம்மை 1970ஆம் ஆண்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார் இயக்குநர் சேரன்

மருத்துவமனையில் பக்கத்து படுக்கையில் இருந்த பெண்மணிக்கு திடீரென அறுவை சிகிச்சை உடனடியாக இரண்டாயிரம் செலுத்தச் சொல்லும் போது, அப்பா இன்னும் வரவில்லை என நதீரா பதட்டம் அடையும் போதும், லெனின் அப்பாவிடம் அனுமதி பெற்று, இரண்டாயிரம் தந்து உயிர் பிழைக்கக் காரணமாக இருப்பது மனிதநேயம் விதைக்கும் காட்சி. இந்த உதவியே நட்பாக மலர்ந்து, காதலாக மாறும் காட்சிகள் கவித்துவம்.

கவிஞர் யுகபாரதி மிகச்சிறப்பாக பாடல் எழுதி உள்ளார். திருக்குறளே நற்றிணையே என இலக்கிய நூல்கள் பாடலில் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உள்ளது. நதீராவின் அப்பா முதலில் காதலை அங்கீகரித்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டு இரண்டாவது மகளுக்கும் திருமணம் செய்ய பணம் சேர்க்க வேண்டும். சிறிது காலம் கழித்து திருமணம் செய்யலாம் என லெனினை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு பின்னர் அவர் லெனின் போன பின் காதலை எதிர்த்து, உடனடியாக வீட்டை விற்று விட்டு மலேசியாவிற்கு மகளை அழைத்துச் சென்று விடுகிறார். லெனின் நதீராவை தேடித் தேடி களைத்து விடுகிறான். நதீரா தோழியைச் சந்திக்கிறார். வீட்டு வேலைக்காரன், தபால் நிலைய அதிகாரி, பள்ளிவாசல் எனத் தேடி ஓடி வாடி, வதங்கி வலியோடு வாழ்ந்து நதீராவிற்காக எழுதிய மடல்களை முகவரி தெரியாததால் பெயரை மட்டும் எழுதி ஒட்டி வைத்து பொக்கிஷமாக பெட்டியில் வைத்து விட்டு, தனத தந்தைக்காக வேறு ஒரு பெண்ணிடம் உண்மையைச் சொல்லி, தான் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்று நல்ல கணவனாக நல்ல தந்தையாக வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறான் லெனின். இந்த கடிதங்களை டைரியை படித்த மகன், தனது தந்தை லெனினின்p ஆழமான காதலை உணர்ந்து அம்மாவின் அனுமதியோடு அப்பாவின் காதலி நதீராவைத் தேடி கண்டுபிடித்து மலேசியா சென்று அப்பா எழுதிய மடல்களை ஒப்படைக்கின்றான் அம்மா என்கிறான்.

சினிமாத்தனம் இன்றி, வழக்கமாக சராசரி திரைப்பட அணுகுமுறை தவிர்த்து தனி முத்திரை பதித்து உள்ளார். நடுத்தர வர்க்கத்து காதலை, சாதியை மதத்தை குடும்ப கௌரவத்தைக் காரணங்கள் காட்டி, தூய்மையான காதலைச் சிதைத்து விடும் போக்கு இன்றும் தொடர்கின்றது. அதனை நன்கு விளக்கி உள்ளார். சிற்பி சிலையைத் செதுக்குவது போல காட்சியை அழகுறச் செதுக்கி உள்ளார். கடிதக் காட்சிகள் அதிகமாக உள்ளன. அவற்றைக் குறைத்து இருக்கலாம். ஒரு இந்திப் பாடல் உள்ளது. அதனைத் தவிர்;த்து இருக்கலாம். சேரனின் கடின உழைப்பை உணர முடிகின்றது.

கதாநாயகி பத்மபிரியா இஸ்லாமியப் பெண்ணாக வாழ்ந்து காட்டி உள்ளார். படத்தின் இறுதிக் காட்சியில் முதிர்ந்த பெண்ணாக நல்ல ஒப்பனை. மொத்தத்தில் இயக்குநர் சேரன், என்ன நினைத்தாரோ, அதனைக் காட்சியாக்கிட, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளரும் பாராட்டுக்குரியவர் பொக்கிஷம் தமிழத் திரைப்பட உலகின் கலங்கத்தைப் போக்க வந்த கலைப் பொக்கிஷம்.

படத்தின் இறுதிக் காட்சிகள் இதுவரை எந்தத் திரைப்படத்திலும், சொல்லாத, காண்பிக்காத காட்சிகள் இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வரும் ஒவ்வொருவருக்கும் அவரவர் காதல், மலரும் நினைவுகளாக மலருகின்றது. காதலில் தோல்வியுற்றவர்கள் காதலன், காதலியை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா? என்ற ஏக்கத்தை பாடம் விதைக்கின்றது. லெனின் இறந்தபின் மகனின் உதவியால் லெனின் காதலியும் மனைவியும் செல்லிடப் பேசியில் பேசும் காட்சி மிகவும் நெகிழ்ச்சி

பெற்றோர்கள் செய்த சதியால், காரணம் தெரியாமலேயே பிரிந்த காதலர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு எல்லாம் மாமருந்து இந்தப் படம். இயக்குநர் சேரன் மன தைரியத்துடன் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து ஆபாசமின்றி தரமான திரைப்படத்தைத் தந்து வரும் தனது போக்கை அப்படியே தொடர வேண்டும். பொதுமக்களும் ஆரவார ஆபாசப் படங்கள் பார்ப்பது விடுத்து. இது போன்ற தரமான படங்களை திரையரங்கிற்கு சென்று பார்த்து படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.


 

eraeravik@gmail.com