ஜோக்கர் (திரை விமர்சனம்)

கவிஞர் இரா.இரவி


எழுத்து - இயக்கம்: ராஜூ முருகன்

குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மளமளவென படம் இயக்காமல் நின்று நிதானமாக, பொறுமையாக காலம் எடுத்துக்கொண்டு இயக்கி இருக்கும் தரமான படம் ஜோக்கர். இயக்குனர் ராஜூமுருகன் அவர்களுக்கு முதல் பாராட்டு.

குப்பைப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு பெறும் காலத்தில், மிக நல்ல படத்திற்கு ஆங்கிலப்பெயர் சூட்டி வரிவிலக்கை இழந்துள்ளார். நல்படம் என்பதால் விதிவிலக்கு செய்து வரிவிலக்கு வழங்கலாம். ஜோக்கர் என்பதற்கு பதிலாக கோமாளி என்றோ, தென்னாலி என்றோ பெயர் சூட்டி விவாதம் இன்றி வரிவிலக்கு பெற்று இருக்கலாம்.

ஒரு படத்தின் வெற்றிக்கு வரிவிலக்கும் உதவி புரியும். இதனை கவனத்தில் கொண்டு இருக்கலாம்.

நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் படத்தை இயக்கி உள்ளார். கிராமத்து மெல்லிய காதல் கதை, கழிவறை அவசியம், அரசியல் ஊழல், காவல்துறை அராஜகம் என ஒரே படத்தில் நாட்டுநடப்பை தோலுரித்துக் காட்டி உள்ளார். கதாநாயகனுக்கு படத்தில் பாத்திரத்தின் பெயர் "மன்னர்மன்னன்". புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தன் மகனுக்கு சூட்டி மகிழ்ந்த பெயர் "மன்னர்மன்னன்". படம் முழுவதும் பல புரட்சிக்கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி உள்ளார். வசனம் மிக நன்று. படம் பார்க்கும் பார்வையாளர்கள். அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல படம்.

பாரத பிரதமரின் கழிவறை கட்டும் திட்டத்தில் கூட நடக்கும் ஊழல், மணல் கொள்ளை தடுப்பவர்களை கொலை செய்யும் கொடூரம், அரசியல்வாதிகள் கூட்டத்திற்கு ஆள் பிடித்துச் செல்லும் அவலம் என்று நாட்டில் நடக்கும் அனைத்தையும் துணிவுடன் படத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு படத்தில் மிக நல்ல பாத்திரம். உருவத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் போல வருகிறார். கதாநாயகன் மன்னர் மன்னன் பாத்திரத்தில் மனம் சிதைந்து தன்னைத்தானே குடியரசுத்தலைவர் என்று அறிவித்துக் கொண்டு அலைபேசி கோபுரத்தில் ஏறி பதவி ஏற்றுக் கொள்வது. பொதுமக்களிடம், காவலர்களிடம் பேசும் போது இந்தியாவின் ஜனாதிபதி என்று சொல்லி பேசும் போது நகைச்சுவையாக இருந்தாலும் பேசும் வசனம் அனைத்தும் அர்த்தம் உள்ளவை.அருகில் அக்கினிச்சிறகுகள் நூல் வைத்து இருக்கிறார் .தோற்றத்தில் மனிதர் அப்துல் கலாம் போல காட்சியளிக்கிறார் .

படத்தில் பலம் வசனம் என்றே சொல்ல வேண்டும் .குறிப்பான சில வசனங்கள் இதோ "குண்டு வைக்கிறவனை விட்டுடுங்க.கோயிலில் உண்டக்கட்டி வாங்கறவனைப்பிடிங்க" "குளிர்பானத்தைத்தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு பிடிக்கல ".மேகியை தடை பண்ணுனா சீனாவுக்குப் பிடிக்கல ".இப்படி சிந்திக்க வைக்கும் பல வசனங்கள் உள்ளன பாராட்டுக்கள்.

கட்டெறும்பைப் பார்த்தால் நசுக்கி விடும் இயல்பு சராசரி மனிதர்களுக்கு உண்டு. ஆனால் கட்டெறும்பு தன்மீது ஊறிய போதும் நசுக்காமல் அப்படியே எடுத்து உயிரோடு அனுப்பி விடும் நேயம். மணல் லாரி ஏறி காயம்பட்ட ஆட்டுக்கு நீதி வேண்டி போராடி மனுநீதிச்சோழனை நினைவூட்டுகின்றார். மன்னார் மன்னன் தோழி இசையின் உதவியுடன் முகநூலை நன்கு பயன்படுத்தி அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளிடம் போராடி ஆட்டுக்குட்டிக்கு இழப்பீட்டு வாங்கித் தருகிறான்.

கடைசியில் மன்னர் மன்னனையும், மணல் லாரி ஏற்றி கொலை செய்து விடுகிறார்கள். அவருக்கு உதவியாளராக வரும் இசை, போராட்டம் அறிவிக்க படம் முடிகின்றது.சராசரி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மனிதநேயம் ,விலங்கு நேயம் ,பூச்சிநேயம் யாவும் புத்தி பேதலித்தவனுக்கு உள்ளது .என்பதை இயக்குனர் நன்கு உணர்த்தி உள்ளார் .

இன்றைய இளம் பெண்கள் வருங்கால கணவன் குறித்தும் கணவன் இல்லம் குறித்தும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர் .மன்னர் மன்னன் விரும்பிய கிராமத்துப்பெண்ணும் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறாள். வீட்டில் கழிவறை இருக்க வேண்டும் .என்பதே .இவன் வீட்டில் இல்லை .கட்ட முயற்சி செய்கிறான் அரசை நாடுகிறான் .அரை குறையாக கட்டிய கழிவறைக்குச் சென்ற நிறைமாத கர்ப்பிணி மீது சுவர்கள் இடிந்து விழுந்து காயம் அடைகிறாள் .கிராமத்திற்கு குடியரசுத் தலைவர் வருகை தருவதால் மருத்துவமனை கொண்டு செல்ல விடாமல் காவல் துறை தடுக்கின்றது .பின் தாமதமாகக் கொண்டு சென்றதால் குழந்தை இறந்து விடுகிறது .அவள் கோமா நிலைக்கு செல்கிறாள் .

கோமாவில் இருக்கும் மனைவி நலம் பெற சகல மத வழிபாடுகளும் செய்கிறான், அலகு குத்துகிறான், சவுக்கடி தனக்குத் தானே தருவித்துக் கொள்கிறான், ஆனால் எந்த மதக்கடவுளும் மனைவிக்கு நலம் தரவில்லை. இவனே மனைவியின் சிறுநீர் எடுத்து சுத்தம் செய்வது, கேட்க பாடல் ஒலிபரப்புவது, மனைவி தந்த ரோஜாச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது என்று ஒரு கணவன், மனைவியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் இயக்குனர் ராஜூ முருகன்.

கோமாவிலிருந்து விடுபடாமல் மனைவி மிகவும் கஷ்டப்படுவதால், கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுகின்றான். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று கருணைக்கொலைக்கு அனுமதி தர முடியாது என்று வழக்கு தள்ளுபடி ஆகின்றது. அகிம்சைவாதியான காந்தியடிகள் கூட, துடிக்கும் கன்றுக்க்குட்டியை கொன்று விடலாம் என்று கருணைக் கொலைக்கு ஆதரவு தந்த போதும், நமது நாட்டு சட்டம், நீதிமன்றம் கருணைக் கொலைக்கு அனுமதி தரவில்லை என்பதை படத்தில் உணர்த்தி உள்ளார்.

தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போலவே கருணைக் கொலையையும் எதிர்ப்பவன் நான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. காரனம் கோமாவில் பல ஆண்டுகள் இருந்து விட்டு, பின்னர் நினைவு திரும்பி நலம் பெற்றவர்கள் உண்டு. உயிரைக் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

அரசியல்வாதிகளின் ஊழல், அரசு அதிகாரிகளின் ஊழல் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டி உள்ளார். இந்தப்படத்திற்கு தேசிய விருது வழங்க வேண்டும். படத்தில் துணிவுடன் உண்மை பேசி இருப்பதால் விருது தர யோசிக்கலாம். மதுரையில், படம் பார்க்க வந்தவர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கரவொலி தந்தார்கள். இது பல தேசிய விருதுகளுக்கு சமம்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் பல கோடி ஊதியம் தந்து, வெளிநாடு சென்று, பல கார்களை உடைத்து பிரமாண்ட செட்டுகள் போட்டு, குத்துப்பாட்டு, வெட்டு, குத்து வைத்து மசாலாப்படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம்.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அந்த பாத்திரமாகவே மாறி படத்தில் வாழ்ந்து உள்ளனர். படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து படத்தில் ஒன்றி விடுகிறோம். ‘மக்கள் கூட கதாநாயகனை விட வில்லன்களையே விரும்புகிறார்கள்’ என்ற வசனம் சிந்திக்க வைத்தது. பொதுநல வழக்கு போடும் நல்லவர்கள், கொடுமைகளுக்கு, ஊழல்களுக்கு எதிராகப் போராடும் போராளிகளை நினைவுபடுத்தும் மிக நல்ல படம். படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை. வன்முறை இல்லை. குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம். இந்தப்படத்தை வெற்றிப்படமாக்குவது நமது கடமை. நல்ல படம் தொடர்ந்து வந்திட வாய்ப்பாக அமையும்.