பாகுபலி

திரைவிமர்சனம்:  ஞா.ஆரணி


நடிகர்கள்: பிரபாஸ், ராணா டகுபாட்டி, தமன்னா,
                      அனுஷ்கா ஷெட்ட, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர்.

இசை: கீரவாணி

இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமௌலி

2015இல் வெளிவந்த 'பாகுபலி: The Beginning' என்ற படத்தின் இரண்டாவது பாகம் 'பாகுபலி: The Conclusion' ஆகும். முதலாவது படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் Apirl 28 ஆம் திகதி வெளியானது. இப்படம் முதலாவது பாகம் முடிந்த இடத்தில் ஆரம்பமாகிறது. காலகேயர்களுக்கு எதிராக நடந்த போரில் மகிழ்மதி வெல்கிறது. ராஜமாதா சிவகாமி, அமரேந்திர பாகுபலி அடுத்த அரசனாகவும், அவளது சொந்த மகன் பல்லாள் தேவன் படைத்தளபதியாகவும் வரவேண்டும் என அறிவிக்கிறார்.

அமரேந்திர பாகுபலி கல்யாணம் செய்ய சிவகாமி ஒரு பெண்ணைத் தேடுகிறார். இத்தோடு சிவகாமியும் அவர் அரசனாக முன் மகிழ்மதியை மாறுவேடத்தில் ஒரு சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிறார். அவரும் சரி என துணைக்கு கட்டப்பாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். இருவரும் இவ்வாறு சென்று மக்களது கஷ்டங்களை அறிகின்றனர்.

படம் இவ்வாறு செல்லுகையில் அமரேந்திரபாகுபலியும் குந்தளதேச சிற்றரசின் இளவரசியான தேவசேனாவை (அனுஷ்காவை) சந்திக்கிறார். அவள் மீது காதல் கொள்ளும் பாகுபலி எவ்வாறு தேசசேனாவுடன் பழகிறார் எனப் படத்தைப் பார்த்து அறியுங்கள்.

தான் அரசனாக வேண்டும் என விரும்பும் பல்லாள்தேவன் எவ்வாறு அரசைக் கைப்பற்றுகிறான் என்றும், கட்டப்பா ஏன் அமரேந்திர பாகுபலியை கொல்கிறார் என்றும், பின்னர் அமரேந்திர பாகுபலியின் மகன் மகேந்திர பாகுபலி மகிழ்மதியை மீண்டும் கைப்பற்றுவாரா? எனவும் படத்தைப்பார்த்து அறியுங்கள்.

பிரமாண்டமான காட்சிகளும், பெரும் பணச் செலவும், மிகவும் இலாபம் ஈட்டியது எனவும் புகழ்பெற்ற முதலாவது படத்தைவிட இரண்டாவது படம் இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. பாகுபலி
1ஐ விட பாகுபலி 2, இரண்டு மடங்கு பணச் செலவுடன் எடுக்கப்பட்டது. எமக்குத் தெரிந்த இடமான மகிழ்மதியையும் அதில் இருப்பவர்களையும் புதிதாகத் காணுகிறோம். அத்துடன் புதிதாக குந்தளதேசம் மற்றும் அங்கு வாழும் இளம் தேவசேனாவையும் அவரது குடும்பத்தையும் சந்திக்கிறோம்.

தேவசேனாவாக அனுஷ்காவும், சிவகாமியாக ரம்யா கிருஷ்ணனும் மிக நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக போர்வீரரும் இளவரசியுமான தேவசேனா எவ்வாறு யார் பிழைவிட்டாலும், அதை அஞ்சாமல் வீரமுடன் எதிர்ப்பது நன்றாக காட்டப்படுகிறது.

பாகுபலி தேவசேனாவை மகிழ்மதிக்கு அழைத்துச் செல்லும்போது அவளுக்கு மானபங்கமோ, ஆபத்தோ நேரத் தான் விடமாட்டேன் என வாக்குறுதி கொடுக்கிறார்.அதை நம்பிவரும் தேவசேனாவை அரசனாகச் சூழ்ச்சி செய்யும் பல்லாள்தேவனின் ஆட்கள் அவமதிக்கின்றனர். தேவசேனா மீது தீய எண்ணத்துடன் தொட முயலும் ஒருவனின் விரல்களை தேவசேனா வெட்டுகிறார். அரச அவையில் சங்கிலிகளில் கட்டப்பட்டு விசாரணைக்கு நிற்கும் தேவசேனாவிடம், 'பெண்களைத் தவறாகத் தொடுபவனின் விரல்களை வெட்டுவது தவறு' எனக்கூறும் பாகுபலியைப் பார்த்து கவலைப்படும் பார்வையாளர்களையும், திரை அரங்கையும் அதிரவைக்கும் பாகுபலியின் அடுத்த செய்கை பார்வையாளர்களது கைத்தட்டலை பெறுகிறது.

முதல் படத்தைப்போல இதிலும் ஒரு சிறந்த அரசன் எவ்வாறு இருக்கவேண்டும் எனக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு 'உயிரைப்படைப்பவர் கடவுள், உயிரைக் காப்பாற்றுபவர் வைத்தியர், உயிரைக் காப்பவர் அரசன்' எனக் கூறுப்படுகிறது. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது இருந்தாலும், தேவசேனாவிற்கும், சிவகாமிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், வசனங்களும், அவர்களுக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களும், மற்றும் இந்நடிகைகள் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமையும் இப்படத்தில் நன்றாகக் காட்டப்படுகின்றன. தென்இந்திய சினிமாவின் பிரமாண்டத்தையும், தரத்தையும் காட்டும் இப்படத்தை எல்லோரும் கட்டாயம் திரையில் பார்க்க வேண்டும்.

 



 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்