உணவு முறையும் - சர்க்கரை நோயும்

டாக்டர் அ. பன்னீர்செல்வம்


பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளையும் உணவின் முக்கியத்துவத்தை பொதுமக்களும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் "ஆரோக்கியமான உணவு முறையும் சர்க்கரை நோயும்' என்ற தலைப்பை உலக நாடுகளை அனுசரிக்கச் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

ஆரம்ப காலங்களில், உடலில் இருந்து சர்க்கரை அதிகம் வெளியேறுவதால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவு சாப்பிட்டால் நல்லது எனக் கருதப்பட்டது. அது பலன் அளிக்காததால் அம்முறை கைவிடப்பட்டது.

சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்று பார்ப்போம். உடலில் போதுமான இன்சுலின் சுரக்கவில்லையெனில் நாம் அருந்திய உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் இன்சுலின் மூலம் பயன்படுத்தப்பட்டு உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதிகமாக உள்ள குளுக்கோஸ் கிளைகோஜனாகவும், புரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்தாகவும் மாறாது. ஆகவே, இரத்தத்தில் குளுக்கோஸின் (சர்க்கரையின்) அளவு கூடுதலாகும். இதுபோன்ற சூழ்நிலையில், சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவை மீண்டும் உண்டால் அதனால் அதிகமாகும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயலாமல் உடல் சிரமப்படும். ஆகவே, உணவு முறை மிக முக்கியமானது. உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றின் மூலம்தான் நம் உடல் இயங்குகிறது. ஏற்கெனவே கூறியதுபோல் நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தையும் மற்ற சத்துகளையும் கையாள்வதற்கு உடலில் போதுமான இன்சுலின் இருக்கவேண்டும். ஏன் இன்சுலின் அளவு குறைகிறது?

சிறுவயதில் சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் பெரும்பாலும் செயலிழந்து விடுகின்றன. இதற்குப் பல காரணங்கள். இன்சுலின் சுரப்பு இவர்களிடம் மிகமிகக் குறைவாக இருக்கும் (அ) இல்லாமலேகூட இருக்கும். இந்த வகையான சர்க்கரை நோயாளர்கள் முதல் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் அவசியம் குறைந்தது இருவேளையாவது இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொண்டு போதுமான அளவிற்கு சாப்பிட வேண்டும். ஆனால், சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இன்சுலின் ஊசியை எடுத்துக்கொண்டு குளிர்பானங்கள் அருந்தினாலோ (அ) இனிப்பு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வராது. ஆகவே, இவர்கள் நீரிழிவு மருத்துவர்(அ) உணவு பரிந்துரையாளர் கூறும் உணவுமுறைகளைக் கூர்ந்து கவனித்து பின்பற்றுவது நல்லது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை, மேலும் சுரந்த இன்சுலின் சரிவர வேலை செய்வதும் இல்லை. ஆகவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இவர்கள் சில உணவுவகைகளை சாப்பிடாமல் இருத்தல் (அ) தவிர்த்தல் நல்லது. அன்றாடம் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது?

காலையில் எழுந்த உடன் சர்க்கரை போட்ட காபி, தேநீர், சிற்றுண்டிக்குப்பிறகு மீண்டும் சர்க்கரை போட்ட காபி, தேநீர், மதிய உணவில் அளவுக்கு அதிகமான பச்சரிசி (அ) புழுங்கலரிசி சாதம், உருளைக் கிழங்கு (அ) மற்ற கிழங்குகள், மாலையில் உருளைக்கிழங்கு சேர்த்து போண்டா, பஜ்ஜி (அ) சிப்ஸ், இரவில் மீண்டும் சாதம் மற்றும் கிழங்கு வகைகள், வாழைப்பழம் போன்ற பழவகைகள் இடைப்பட்ட நேரங்களில் குளிர்பானங்கள் ஆக சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள இந்த உணவு வகைகளை அன்றாடம் உண்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாகிறது. அதைக் குறைப்பதற்கு இன்சுலினும் அதிகம் தேவைப்படுகிறது. எனவே, சர்க்கரை இல்லாமல் காபி, தேநீர் அருந்தப் பழகுவது நல்லது. இனிப்பு தேவையெனில் சுக்ரோலோஸ் எனும் மாத்திரைகளை காபி, தேநீருடன் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், சுண்டல்கள் தேவையான அளவு சாப்பிடலாம். மோர், எலுமிச்சை பழச்சாறு, தக்காளிப் பழச் சாறு உப்பிட்டோ (அ) சுக்ரோலோஸ் போட்டோ பருகலாம். இவற்றால் சர்க்கரையின் அளவு கூடாது.

மேலும், அரிசி உணவையே மூன்று வேளையும் உண்பதற்குப் பதிலாக, ஒரு வேளை தினை, சாமை, வரகு போன்ற சிறுதானிய உணவு வகைகளைப் பயன்படுத்தலாம். இவற்றில், நார்ச்சத்து கூடுதல், மாவுச்சத்து குறைவு. தற்போது, பிரைடு ரைஸ் கலாசாரம் பெருகிவிட்டது. மாவுச்சத்து மட்டுமல்ல, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை அடிக்கடி அதிகம் உண்பதால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, உடல் எடை அதிகமாதல், கெட்ட கொலஸ்டிரால் அதிகமாதல், நல்ல கொலெஸ்டிரால் குறைதல், மிகு ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு இளம் வயதிலேயே (அதாவது முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள்) ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது, இளம் வயதிலேயே மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே, எது உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பதை யோசனை செய்து சாப்பிடுவது நல்லது.

இளம் வயது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் அதிக கொலெஸ்டிரால் இவற்றால் வரும் பிரச்னைகள் இவற்றைத் தவிர்க்க உணவுமுறை, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியன முக்கியம். இவற்றை அனுசரிக்காமல் மருந்து, மாத்திரைகளையும், மருத்துவமனைகளையும் நம்பி இருந்தால்,உடல் நலம் கெடுவதுடன் பணமும் நேரமும் விரயமாகும். எவையெல்லாம் நல்ல உணவு, எவையெல்லாம் நல்ல உணவு அல்ல என்ற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேற்கூறிய நோய்களின் தாக்கம் மக்களிடம் குறையும்.