'மண்டூரவடகம்' ஆயுள்வேதம் கூறும் இரும்புச்சத்து மாத்திரை

 

முனைவர் பால.சிவகடாட்சம்


'
ிஞ்ஞான அணுகுமுறை' என்றாலே அது ஐரோப்பியரால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு உணர்த்தப்பட்ட ஒன்றுஎனத் திடமாக நம்பும் பலர் எம்மவர் மத்தியில் உள்ளார்கள். விஞ்ஞான அணுகுமுறையில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரேயே கருதுகோள் என்றஒன்று உண்மை என அங்கீகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நமது பண்டைய மருத்துவமான ஆயுள்வேதத்தில் கூறப்படும் மருந்துகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்பெரும் தடைகள் காணப்படுகின்றன.


முறையான ஆய்வுகள் இல்லாமல் நம் முன்னோர்கள் நோய்களுக்கான மருந்துகளைஎவ்வாறு கண்டுபிடிக்கமுடிந்தது என்றகேள்வி எழுகின்றது.பெரும்பாலான மருந்துகள் பலநூற்றாண்டுகாலமாகப் 'பட்டறிந்து தெளியும்' படிமுறையாலேயே கண்டறியப்பட்டன என்று இதற்கு இலகுவானஒரு விடையைத் தந்துவிடலாம். ஆனால் இது அவ்வளவு எளிதான விடயமல்லஎன்பதைஆயுள்வேத மருத்துவத்தில் காமாலை நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் 'மண்டூரவடகம்' எனப்படும் ஒரு மருந்தை மாத்திரம் உதாரணமாகஎடுத்துக்கொண்டு நிறுவ முற்பட்டுள்ளேன்.

 

'காமாலை' என்பது அனீமியா (anemia) என்று இன்று அறியப்படும் ஒரு வியாதியின் பழந்தமிழ்ப்பெயர். சோகை,பாண்டு என்ற பெயர்களிலும் இந்த நோய் அறியப்படும். நிகழ்சகாப்தம் (current Era) 16ஆம்பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற பரராசசேகரம் என்னும் ஆயுள்வேத மருத்துவ நூலில் இந்த நோய்க்கு மருந்தாக' மண்டூரவடகம்' கூறப்படுகிறது. 11ஆம்நூற்றாண்டுக்குரிய 'திருமுக்கூடற்சாசனம்' என்று அறியப்படும் இதமிழ்க்கல்வெட்டு ஒன்றிலும் இந்த மருந்தின்பெயர் இடம் பெற்றுள்ளது. வீரராஜேந்திர சோழனின் (நி..1063-1069) ஆட்சிக்காலத்தில் 'வீரசோழன் ஆதுலசாலை' என்னும் பெயருடன் இயங்கிய ஓர் ஆஸ்பத்திரிபற்றிய பலதகவல்களை இந்தச்சாசனம் தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியலும் இந்தச் சாசனத்தில் தரப்பட்டுள்ளது. இந்தப்இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகளுள் 'மண்டூரவடகம்'என்பதும்ஒன்றாகும்.

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய ஆயுள்வேதமருத்துவத்தில் 'காமாலை' நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டுவந்த 'மண்டூரவடகம்' பற்றி ஆராயுமுன் 'அனீமியா' எனப்படும் காமாலை நோய்பற்றி முதலில்அறிந்துகொள்வோம்.


அனீமியா நோய் பல்வேறு காரணிகளால் தோற்றுவிக்கப்படுமாயினும் உடலில் இரும்புச்சத்துக்குறைபாடு ஏற்படுவதே இதற்கு முக்கியகாரணம் எனலாம்.செங்குருதிக்கலங்களில் உள்ள சிவப்புநிற ஹீமோக்குளோபின் என்னும் புரதம் ஒட்சிசனை சுவாசப்பையில் இருந்து உடலின் பலபாகங்களுக்கும் எடுத்துச்செல்லுகின்றது. உடலில்இந்த ஹீமோக்குளோபின்உருவாகுதற்குஇரும்புச்சத்து அவசியம். ஹீமோக்குளோபின் கொண்ட செங்குருதிக்கலங்களின் எண்ணிக்கை குறையுமானால் உடற்சோர்வு மூச்சுத்திணறல் களைப்பு தலைச்சுற்று தோல்வெளிறல் போன்ற அனீமியாவுக்குரியபல அறிகுறிகள் காணப்படும்.இரும்புச்சத்துக்குறைபாட்டினால் காமாலை நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் களிமண் போன்ற பொருள்களைத் தேடிச்சென்று உண்பதைக்கவனிக்கலாம்.

 

உடலில் இருந்து கூடுதலான இரத்த இழப்பு ஏற்படுதல், இரும்புச்சத்து உள்ள உணவுகளை (குறிப்பாக மாமிச உணவுகளை) தவிர்த்தல், இரும்புச்சத்து உள்ள உணவுகளை உண்டபோதும் உடலில் அது சரிவர அகத்துறிஞ்சப்படாது விடுதல், போன்ற பல காரணங்கள் இரும்புச்சத்துப் பற்றாக்குறையைத் தோற்றுவிக்கின்றன.

கீரை போன்ற தாவர உணவுகள் சிலவற்றில் இருந்தும் இரும்புச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். எனினும் தாவர உணவுகள் வாயிலாக அல்லது மாத்திரைகள் மூலமாகப் பெறப்படும் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதில் சில தடைகள் உள்ளன. தாவர உணவுகள் வாயிலாகஅல்லது மாத்திரைகள் மூலமாக இரும்புச்சத்தைப் பெறும்போது அந்தச்சத்து அகத்துறிஞ்சப்படுவதற்கு வைட்டமின்
c எனப்படும் அஸ்கோர்பிக் அமிலத்தின் உதவி தேவைப்படுகின்றது.இந்த வைட்டமின் எலுமிச்ச, லெமன, தோடை என்பவற்றில் கூடுதலாக உண்டு. எனவே இவர்கள் தமது உணவுடன் வைட்டமின் c செறிந்தபழங்கள் காய்கறிகள் என்பவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

 

இரும்புச்சத்து மாத்திரையை உணவுடன் சேர்த்து எடுக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறைக்கப்படுகின்றன. அதேசமயம் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுதலையும் இது வெகுவாகக் குறைத்துவிடுகின்றது. இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதற்குத் தடையாக இருக்கக்ககூடிய கல்சியம் உள்ள உணவுகளால் ஏற்படக்கூடிய தடைகளை வைட்டமின் c  நீக்கிவிடுகிறது.
 

காமாலை நோய்க்கு மருந்தாகக் கொடுக்கப்பட்ட 'மண்டூரவடகம்' தயாரிக்கும் முறைபற்றி ஈழத்துத் தமிழ்மருத்துவநூலான பரராசசேகரம் (நி..16ஆம் நூற்றாண்டு) கூறுவதை அடுத்துக்கவனிப்போம்.

 

உத்தமமாம் எலுமிச்சம் பழத்தின்சாற்றை
     ஒன்றுக்குப்பாதியாய் வெயிலில்வைத்து
சுத்திசெய்த கிட்டத்தூள் கூட்டிக்காய்ந்து
     சொற்குழம்புப் பருவமதில் கடுகமூன்று
சித்திபெறும் உள்ளிஇவை கூட்டிஆட்டி
     சேர்த்துஉண்டை உட்கொள்ள மோரும்சோறும்
பத்திபெறும் தென்கதிரை முருகவேள்தன்
     பதம்பணிவோர் வினைஎனக் காமாலை மாறும்

 

'வடகம்' என்பது வெய்யிலில் உலர்த்திப் பதன்படுத்தப்பட்ட உருண்டையைக் குறிக்கும். சூடேற்றப்பட்ட இரும்பு கொல்லன்பட்டறையில் அடிக்கப்படும்போது சிதறும் இரும்புத்தூளை நன்றாகத்துருப்பிடிக்கும்வரை மண்ணுடன் சேர்த்துவைத்துஎடுத்து அதனைக்'கிட்டத்தூள்' அல்லது 'மண்டூரம்' என்றார்கள்.இந்தக்கிட்டத்தூள் முதலில் பசுமூத்திரத்தில் ஊறவைக்கப்பட்டும்பின்னர் சட்டியில் போட்டுமாவாகும்வரை வறுத்தெடுக்கப்பட்டும் சுத்திசெய்யப்படுகிறது.


வெயிலில் வைத்துச் செறிவாக்கப்பட்ட எலுமிச்சம் பழச்சாற்றில், சுத்திசெய்யப்பட்ட'கிட்டத்தூள்'சேர்க்கப்பட்டு மேலும் காயவைக்கப்படுகிறது. இந்தக்கலவை குழம்புப்பருவத்துக்கு வந்ததும் அதனுடன்சுக்கு மிளகு திற்பலி உள்ளி என்பன சேர்த்து ஆட்டுரலில் போட்டு ஆட்டி உருட்டிமண்டூரவடகம் தயாரிக்கப்படுகின்றது.மண்டூரவடாகத்தைச் சோற்றுடனும் மோருடனும் உண்டுவரக் காமாலை நோய் மாறும் என்பதை மேற்காணும் பாடல் தெரிவிக்கின்றது. இரும்புச்சத்து நிறைந்த மண்டூரவடகத்தை எடுக்கும்போது ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் இதனை சோற்றுடனும் மோருடனும் சேர்த்துண்ணும்படி கூறியிருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

மனிதன் வேட்டை ஆடி உண்டுவாழ்ந்த காலம்போய் விவசாயம் செய்ய ஆரம்பித்து இரும்புச்சத்து குறைந்த மக்காச்சோளம் போன்ற தாவரஉணவுகளைக் கூடுதலாக உண்ணத்தொடங்கிய காலப்பகுதியிலேயே அனீமியா எனப்படும் காமாலை நோயும் தொடங்கிவிட்டது என்கின்றனர் ஐரோப்பிய மருத்துவ வரலாற்று ஆய்வாளர்கள். எனினும் உலகில் இன்று
200 கோடி மக்களைப் பாதித்திருக்கும் இந்தக் காமாலை நோய் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் தோற்றுவிக்கப்படுகிறது என்ற உண்மையை இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன்னரேயே ஐரோப்பியமருத்துவர்கள் அறிந்துகொண்டார்கள்.

 
சிறுகுழந்தைகளில் தாம் மேற்கொண்ட ஆய்வுகளின்மூலமாக இரும்புச்சத்துக் குறைவான உணவுகளாலேயே'அனீமியா 'ஏற்படுகின்றது;இரும்புச்சத்தை மேலதிகமாகச் சேர்த்துக்கொடுப்பதன்மூலம் அனீமியாவைக் குணப்படுத்த முடியும் என்றுதாம் கண்டறிந்த உண்மையை இங்கிலாந்தைச் சேர்ந்தஹெலன் மக்கே
(Helen Mackay )என்னும் பெண்மணிஆய்வுக்கட்டுரை ஒன்றின்வாயிலாக 1931 ஆம் ஆண்டில் மருத்துவ உலகுக்கு அறியத்தந்தார். அனீமியாவின் குறிகுணங்கள் காணப்படும்போது அது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்பட்டுள்ளது என்பதை நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் என்னும் நிறப்பொருளின் அளவுகுறித்த பரிசோதனைகள் மூலமாகவே உறுதிப்படுத்தமுடியும்.'அனீமியா' ஏற்படுவதற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கு இவ்வளவு நீண்டகாலம் எடுத்ததற்கு இதுவே காரணம் என்கிறார்கள்ஐரோப்பிய மருத்துவ வரலாற்று ஆய்வாளர்கள்.

 

'அனீமியா' பற்றிய ஐரோப்பிய மருத்துவ வரலாறு இவ்வாறு இருக்கையில்இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே'காமாலை' நோய் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகின்றது என்பதை எவ்வாறு நம்முன்னோர் கண்டுபிடித்தார்கள்என்ற கேள்வி எழுகின்றது. இரத்தப்பரிசோதனை ஏதும் செய்தார்களா? இல்லையானால் வேறு எந்தமுறையில் அதனை அறிந்துகொண்டார்கள்?'மண்டூரவடகம்' தயாரிக்கும்போது இரும்புத்தூளுடன் எலுமிச்சம்பழத்தை ஏன் சேர்த்துக்கொண்டார்கள்? இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் C அவசியம் என்பதையும் அந்த வைட்டமின் C எலுமிச்சம்பழத்தில் நிறைந்துள்ளது என்பதையும் அவர்கள் எவ்வாறு அறிந்திருக்கமுடியும்? இவற்றுக்கு எல்லாம்நாம் விடைகாணமுடிந்தால் ஆயுள்வேதம் பற்றிய பலசந்தேகங்களுக்கு நாம் விடை காணமுடியும்.