சிறப்புமிக்க சிறுதானியங்கள்

 

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
 

ணவாகப் பயன்படக்கூடிய மாச்சத்து நிறைந்த கனிகளை அல்லது விதைகளைத் தரக்கூடிய புல் இனத்தாவரங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் ‘சீரியல்’ (cereal) என்று பொதுவாக அழைக்கப்பெறுகின்றன. இவற்றுள் அரிசி (rice), கோதுமை (wheat), மக்காச்சோளம் (corn), சோளம் (sorghum), பார்லி (barley), றை (rye), ஓட்ஸ் (oats) என்பவற்றுடன் ‘மிலெற்ஸ்’ (millets) எனப்படும் சிறுதானியங்ககளும் அடங்குகின்றன.

வரகு
(kodo millet), கேழ்வரகு அல்லதுகுரக்கன் (finger millet), பனிவரகு (common millet / proso millet), தினை (foxtail millet / Italian millet)), கம்பு (pearl millet), சாமை (little millet), குதிரைவாலி (barnyard millet)என்பவற்றைச் சிறுதானியங்களுக்கு உதராணமாகக் கூறலாம். மற்றைய தானியங்களுடன் ஒப்பிடுகையில் இவை அளவில் சிறியதாகக் காணப்படுவதால் இவை ‘சிறுதானியங்கள்’ என்று அழைக்கப்பட்டிருத்தல் கூடும். அத்துடன் மிகவும் குறுகிய பரப்பளவிலேயே இன்று இவை பயிரிடப்பெறுகின்றனஎன்றகாரணத்தினாலும் ‘சிறுதானியங்கள்’ என்னும் பெயர்இன்றைய காலகட்டத்தில் இவற்றுக்குப் பொருத்தமாய் இருப்பதைக் கவனிக்கலாம்.இன்று நாம் இவற்றை மறந்துவிட்டாலும் முன்னர் ஒருகாலத்தில் எமது பிரதான உணவாக இருந்தவ இந்தச்சிறுதானியங்கள்தான்.

ஒருகாலத்தில் குறுநிலமன்னர்களுக்கும் நில உடைமையாளர்க்கும் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்த நெல்லரிசிச்சோறு பிற்காலத்தில் ஓரளவு வசதிபடைத்தவர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக இருந்தபோது குரக்கனும் தினையும் கம்பும் வரகும் ஏழைகளின் உணவாகக்கருதப்பட்டன. சாமை பறவைகளுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய உணவாகிவிட்டது.சிறுதானியங்கள்பயிரிடப்பெறும் நிலங்கள் படிப்படியாகக் குறைந்தன. சமீபகாலங்களில் இந்தச் சிறுதானியங்களின் சிறப்புக்கள் ஆய்வுகள்மூலமாக உறுதிப்படுத்தப்பட்டபின்னர் இவற்றை வாங்குவோர் எண்ணிக்கை இன்று கூடிக்கொண்டு வருகின்றது.தேவைகருதி சிறுதானியங்களின் உற்பத்தி மீண்டும் அதிகரித்துவருகிறது.

தவிடு நீக்கி மினுக்கப்படாத தானியமே முழுத்தானியம்
(whole grain) என்று குறிப்பிடப்படுகின்றது. வெள்ளைப்பாண், வெள்ளைஅரிசிச்சோறு, காலை உணவாகப் பயன்படும் பெரும்பாலான தானியங்கள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது தவிடுநீக்காத கறுப்பரிசி (brown rice) போன்ற முழுத்தானியங்கள் உடல்நலத்துக்கு கூடிய நன்மை தரக்கூடியன என்பதே ஆய்வாளர்களின் முடிபாகும். அந்தவகையில் முழுத்தானியமாகப் பயன்படும் குரக்கன் முதலான சிறுதானியங்களும் ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளாகவே கொள்ளப்படுகின்றன.

சிறுதானியங்களில் தவிடும் நார்ச்சத்தும் கூடுதலாக உள்ளன.சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. இந்த நார்ச்சத்து கூடுதலாக உள்ள சிறுதானியங்களில் இருந்து பெறப்படும்மாப்பொருள்சமிபாடு அடைவதற்கு நேரம் எடுக்கின்றது. இவற்றை உண்டதும் இரத்தத்தில் சீனியின் அளவு மெதுவாக ஏறுவதால் ‘இன்சுலின்’ சுரப்பும் குறைவாகவே இருக்கும். இவ்வகையில் சர்க்கரை வியாதிக்கு ஒரு தடுப்பாக இந்தச் சிறுதானியங்கள் பயன்படுகின்றன. சிறுதானியங்களில் மக்னீசியம் என்னும் உலோகச்சத்து கூடுதலாக இருப்பதும் ஒரு சிறப்பாகும்.சர்க்கரைநோயைக்கட்டுப்பாடில் வைத்திருக்க இந்த மக்னீசியமும் அவசியமாகும்.

பி
(B) வைட்டமின்கள் மற்றும் பொசுபரஸ் என்பவற்றுடன் இரும்புச்சத்து, கல்சியம் பொட்டாசியம் மக்னீசியம் சிங் ஆகிய உலோகச்சத்துக்களும் சிறுதானியங்களில் செறிந்து காணப்படுகின்றன. இருதயநோய்களுக்கான குறிகுணங்கள், உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த கொலேஸ்ரெறோல் என்பவற்றால் அவதிப்படும் பருவவயது கடந்த பெண்கள் சிறுதானியங்களை வழக்கமாக உண்டுவருவது நன்மை பயக்கும்.

பித்தப்பைக்கற்கள்
(Gallstones) உருவாவதைத் தடுக்கும் குணமும் சிறுதானியங்களுக்கு உண்டு. இவற்றில் காணப்படும் அதிகப்படியான நார்ச்சத்து பித்தம் கூடுதலாகச் சுரப்பதைத்தவிர்ப்பதன்மூலம் பித்தப்பைக் கற்கள் தோன்றுவதைத் தடுக்கின்றன.

கோதுமை, றை, பார்லி என்பவற்றில் காணப்படும் குளூட்டன்
(gluten) என்னும் புரதச்சத்து ஒருசிலருக்கு ஒத்துவருவதில்லை. இத்தகையோருக்கு குளூட்டனால் சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட இடமுண்டு. சிறுதானியங்களில் இந்தக் குளூட்டன் கிடையாது என்பதால் எவரும் இவற்றைத் தாராளமாகச் சாப்பிடமுடியும்.

நார்ச்சத்து கூடுதலாக உள்ள சிறுதானியங்களில் செய்யப்பட்ட சோறு, கூழ், ரொட்டி, பிட்டு போன்ற உணவுகள் வயிற்றை எளிதில் நிரப்பிவிடுவதால் சாப்பாட்டின் அளவும் குறைந்து உடல்நிறையைக்கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

நெற்பயிரோடு ஒப்பிடுகையில் சிறுதானியப்பயிர்களின் நீர்த்தேவை மிகவும் குறைவாகும். செழிப்பில்லாத மண்ணிலும் வளர்ந்து பயன் தரக்கூடிய இந்தத் தானியங்களின் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயமாகும்.


 

தானியங்களின் போஷாக்குச்சத்துக்கள்: ஓர் ஒப்பீடு

100 கிராம் தானியத்தில் காணப்படும் மாச்சத்து தவிர்ந்த பிற முக்கியமான சத்துக்கள்

 

 

புரதம்

(கிராம்)

நார்ச்சத்து

(கிராம்)

கனியுப்புக்கள்

(கிராம்)

இரும்புச்சத்து

(மில்லிகிராம்)

கல்சியம்

(மில்லிகிராம்)

கம்பு

10.6

1.3

2.3

16.9

38

கேழ்வரகு(குரக்கன்)

7.3

3.6

2.7

3.9

344

தினை

12.3

8

3.3

2.8

31

பனிவரகு

12.5

2.2

1.9

0.8

14

வரகு

8.3

9

2.6

0.5

27

சாமை

7.7

7.6

1.5

9.3

17

குதிரைவாலி

11.2

10.1

4.4

15.2

11

அரிசி

6.8

0.2

0.5

0.7

10

கோதுமை

11.8

1.2

1.5

5.3

41

ஆதாரம்:Millet Network of India - Deccan Development Society - FIAN, India

 

 

குரக்கன் (கேழ்வரகு)
 

  

குரக்கன் பயிர்முளைவிட்ட குரக்கன்

 

சிறுதானியங்களுள் பலராலும் அறியப்படும் ஒரு தானியம் குரக்கன். இதனைத் தமிழ்நாட்டில் கேழ்வரகு என்றுதான் குறிப்பிடுவார்கள்.இந்தியாவில் ராகி (ragi) என்னும் பெயரிலும் இது அறியப்படும்.

குரக்கன் இன்று நன்கு அரைக்கப்பட்ட மாவாகவே பலசரக்குக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குரக்கன் மாவில் 12% நீராகவும் 80% கார்போஹைட்ரேட் எனப்படும் மாச்சத்தும் உள்ளது. உடலுக்குத்தேவையான சக்தியை இந்தமாப்பொருள் வாயிலாக நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அதேசமயம் குரக்கனில் உள்ள மாச்சத்து மிகவும் மெதுவாகவே சமிபாடு அடைவதால் சர்க்கரை நோயாளர்க்கு ஏற்ற உணவாக இது உள்ளது.குரக்கன்மாவில் உள்ள சில வேதிப்பொருள்கள் இதில் உள்ள மாச்சத்து சமிபாடு அடைவதையும் அகத்துறிஞ்சப்படுவதையும் தாமதப்படுத்துவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சடுதியாக உயர்ந்துவிடுவதில்லை.

குரக்கன் புட்டு, குரக்கன் இடியாப்பம்,குரக்கன் தோசை, குரக்கன் இட்லி, குரக்கன் வடை, குரக்கன்ரொட்டி, குரக்கன் முறுக்கு, குரக்கன் கஞ்சிஎன்று பலவகையான சுவையான உணவுத்தயாரிப்புக்களை இன்று செய்யப்பழகிக்கொண்டார்கள்.

அனைத்துத் தானியங்களுடன் ஒப்பிடுகையில் கல்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து குரக்கனில்தான் மிகக்கூடுதலாக உண்டு.கோதுமையுடன் ஒப்பிடுகையில்
30 மடங்கு அதிகமான கல்சியம் சத்து குரக்கனில் உண்டு. முதியவர்களில் ஒஸ்ரிஒபோரொசிஸ் எனப்படும் எலும்புச்சோகை மற்றும் எலும்பு முறிவு என்பன ஏற்படாமல் தவிர்க்க இந்தக் கல்சியம் அவசியமானதொன்றாகும்.பாலூட்டும் தாய்மாருக்கும் கல்சியம் நிறைந்த குரக்கன் சிறந்த உணாவாக உள்ளது. தாய்ப்பாலில் இருந்து விடுபடும் பாலகர்களுக்கும் கொடுக்கக்கூடிய குரக்கன் தயாரிப்புக்கள் இன்று வரத்தொடங்கிவிட்டன.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் குரக்கன் சிறந்த உணவாகும். இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும் வைட்டமின்
C குரக்கன் முளைக்கும்போது தோற்றுவிக்கப்படுகிறது.இதனால்முளைவிட்ட குரக்கனைக் காயவைத்து எடுத்தமாவில் கிடைக்கும் இரும்புச்சத்து இலகுவாக அகத்துறிஞ்சப்படுகிறது.

உடற்பருமனைக் குறைப்பதற்கும் குரக்கன் உதவமுடியும்.வெள்ளைஅரிசியுடன் ஒப்பிடுகையில் குரக்கனில் நார்ச்சத்து கூடுதலாக உண்டு. இந்தச் சத்து சமிபாட்டை ஊக்குவிப்பதோடு வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வை நீண்டநேரம் வைத்திருக்கும். இதனால் அளவுக்கு மேலதிகமாகச் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இதிலுள்ள டிரிரோபான்
(tryptophan) என்னும் அமினொ அமிலமும் பசியுணர்வைக்குறைக்கக்கூடியது. மேலும் மற்றைய தானியங்களுடன் ஒப்பிடுகையில் குரக்கனில் கொழுப்புச்சத்து குறைவாகும். இருக்கும் கொழுப்புக்கூட நிறைவில்கொழுப்பு (unsaturated fat) எனப்படும் ஒருவித நல்லகொழுப்பாகவே இருப்பதும் இதன் சிறப்பு எனலாம்.குரக்கனில் உள்ள லெசிதின் (lecithin) மற்றும் மிதையொனின் (methionine) என்னும் அமினோ அமிலங்கள் ஈரலில் உள்ள மேலதிகமான கொழுப்பை வெளியேற்ற உதவுவதன்மூலம் கொலெஸ்ரெறோல் அளவையும் குறைக்கின்றன.

குரக்கனில் ஒக்சாலிக் அமிலம் கூடுதலாக உள்ளதால் சிறுநீரகக்கற்களால் அவதிப்படுபவர்கள் இதனைக் குறைவாக உண்பது நல்லது.

Finger millet என்பது இதன் ஆங்கிலப்பெயர்.
Eleusine coracana L. என்பது குரக்கனின் தாவரவியல் பெயர்.

 

தினை
 

 

 

 

 

சங்ககாலத் தமிழகத்தில் சாதாரணமக்களின் பிரதான உணவாக இருந்தது தினை. நெல்லரிசிச்சோற்றை அரசன் கொடுத்தவிருந்தில்தான்புலவர்களும் பாணர்களும் காணமுடிந்தது. தினை பயிரிடப்பட்டு இருந்த வயலை ஏனல் என்று குறிப்பிட்டார்கள். தினைப்பயிரை யானை பறவைகள் என்பன அழித்துவிடாமல் இளம்பெண்கள் காவலுக்கு இருந்தார்கள். தாங்கள் காவல் காக்கும்போது அங்கு வராமல் விட்டதற்காக யானைக்கும் கிளிக்கும் இளம்பெண்ணொருத்தி நன்றி கூறுவதுபோல் ஒரு பாடல் நற்றிணையில் உள்ளது.


அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வோம் கொல்யாமே...
வலன் உயர் மருப்பின்
நிலம் ஈர்த் தடக்கை
யானைக்கு அன்றியும்............
இரும்புகவர் கொண்ட ஏனல்
பெரும்குரல் கொள்ளாச்
சிறுபசுங் கிளிக்கே

                                    நற்றிணை: பாடல்
194


சர்க்கரைநோயாளர் உண்ணத் தகுந்த ஒரு தானியமாகத் தினையும் உள்ளது. இதில் உடலுக்குச் சக்திதரும் மாச்சத்துடன் கூடவே
11 சதவீதம் புரதமும் 6.7 சதவீதம் நீர்ச்சத்தும் 4 சதவீதம் கொழுப்புச்சத்தும் உள்ளன.

தினையைப் பிரதான உணவாகக் கொள்ளும் சமூகங்கள் மத்தியில் நீரிழிவுநோய் அபூர்வமாகவே காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.நீரிழிவைக்கட்டுப்படுத்தும் பலவகையான வேதிப்பொருள்கள் தினையில் கண்டறியப்பட்டுள்ளன.

எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் தினை மாத்திரம்கொடுக்கப்பட்ட எலிகளில் எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி இரத்தச்சர்க்கரையின் அளவு
70 சவீதம் குறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் இந்த எலிகளில் ட்ரைகிளிசெறைட் (triglyceride) என்னும் கொழுப்பு மற்றும் தாழ் அடர்த்தி கொலெஸ்ரெறோல் (LDL Cholesterol) மொத்த கொலெஸ்ரறோல் (total cholesterol) என்பவற்றின் அளவு குறைந்தும் அதேசமயம் நல்ல கொலெஸ்ரெறோல் என்பபடும் உயர் அடர்த்தி கொலெஸ்ரெறோலின் (HDL cholesterol) அளவு கூடியம் அவதானிக்கப்பட்டுள்ளது
Foxtail millet என்பது தினையின் ஆங்கிலப்பெயர்.
Setaria italica(L.) BEAUV என்பது தினையின் தாவரவியல் பெயர்.


வரகு

  

நெல் அரிசியைப் போல் சோறாக ஆக்கி உண்ணக்கூடியது வரகு.பண்டையதமிழகத்தில் ஏழைகளின் உணவாக வரகரிசிச்சோறும் இருந்துள்ளது.ஔவையார் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததாகக் கூறுவார்கள். புல்வேளூர்ப் பூதன் என்னும் ஓர் ஏழை அன்பன் கொடுத்த விருந்துக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று புகழ்ந்து பாடினார் ஔவை.இத்தனைக்கும் வரகரிசிச்சோறும் கத்தரிக்காய் வாட்டல்கறியும் புளித்தமோரும்தான் அந்த விருந்து.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்


தேங்காய்பூக்கீரையின் (சிறுபூளைச்செடியின்)பூக்களை ஒத்திருக்கும் வரகரிசிச் சோற்றுடன் வேங்கைமரத்தின் பூந்துணர்களின் வடிவம்கொண்ட அவரைக்காய்க்கறி சேர்த்துத் தயாரித்த சுவைமிகுந்த உணவு சங்ககாலத்து முல்லை நில மக்களுடையது என்ற விபரத்தைசங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.


நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன
அவரை வாப் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவிர்


இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைத்தும் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் குணமும் வரகரிசிக்கு இருப்பது இந்தியாவில் டாக்டர் டானியல்
(MSU) என்பவர் மேற்கொண்ட ஒரு சில ஆய்வுகள்மூலம் அறியப்பட்டுள்ளது.

நீரிழிவு, வாதக்குணங்கள் என்பவற்றுக்கு மருந்தாக அமைவதுடன் காயங்களை ஆற்றும் குணமும் வரகுற்கு உண்டு.

உடற்பருமனைக் குறைக்கும்
(quercetin) வரகு உதவும்.மாதவிடாய்க் கோளாறு உடைய பெண்களுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

kodo millet என்பது வரகின் ஆங்கிலப்பெயர்.
Paspalum scrobiculatum var. scrobiculatum என்பது வரகின் தாவரவியல் பெயர்.
 

 

கம்பு
 

 

 

 

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, B11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பு தானியத்தில் உள்ளது.

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.

நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.


Pearl millet, bajra  என்பன கம்பின் ஆங்கிலப்பெயர்கள்.
Pennisetum glaucum R.BR (Pennisetum typhoideum  என்பது கம்பின் தாவரவியல் பெயர்.

 

சாமை
 

 


 

நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.இதனை உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமல் தடுத்திடவும் ஒரு உணவாகசிறந்த வாய்ப்பாக அமையும்.

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது
.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.Little millet, Common millet, prosomillet   என்பன சாமையின் ஆங்கிலப்பெயர்கள்.
Panicum miliaceum L.   என்பது சாமையின் தாவரவியல் பெயர்.


 

 

 

 

sivakad@gmail.com