வல்லாரை

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் வல்லாரைப்பற்றி என்ன சொல்கிறது.......

வல்லாரை இலையை உண்ண மடிந்திடும் பயித்தியங்கள்
அல்லாத கறைக்கி ராணி அனல் உடம்பெரிப்பு மேகம்
பொல்லாத மற்று நோய்கள் போமென நந்திக்கு அன்னாள்
எல்லார்க்கு முதல்வனாய இறைபகர்ந்திட்ட வாறே.


இதன் பொருள்: வல்லாரை உணவை உண்ண பைத்திய வியாதிகள் தீரும். வயிற்றோட்டம்மேகநோய் மற்றும் பொல்லாத நோய்கள் பலவும் போகுமென எல்லோர்க்கும் முதல்வனாகிய இறைவன் நந்திக்கு உரைத்தனன்.

மேலதிகவிபரம்: சொறி அரிப்பு போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு வல்லாரை மருந்தாகப் பயன்படுகிறது. சிறு வெட்டுக்காயங்கள் எரிகாயங்கள் போன்றவற்றுக்கு வெளிப்பிரயோகமாக வல்லாரை பயன்படுகிறது.

நரம்புத்தளர்ச்சியைப் போக்கி மனதுக்குப் புத்துணர்வு தரக்கூடியது. பதட்டத்தைகுறைக்கவும் மனதில் அமைதியை ஏற்படுத்தவும் வல்லாரை உதவுகிறது.ஞாபகசக்தியை ஊக்குவிக்கும் குணம் வல்லாரைக்கு இருப்பதாக நம்பபடுகிறது. இதன் காரணமாக அல்சைமர்
(Alzheimer) போன்ற மறதி வியாதியால் பாதிக்கப்படுவோருக்கும் பயன்தரக்கூடியது.

இரத்தக்குழாய்களின் ஒடுங்கிவிரியும் சக்தியை
(elasticity) ஊக்குவிப்பதால் இரத்தச் சுற்றொட்டத்தை சீராக்குவதன்மூலம் இரத்தக்குழாய்கள் தளர்ந்து சுருண்டு கிடக்கும்வெரிக்கோஸ் (varicose) நாளங்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

பீனிசம்மூக்குநீர்ப்பாய்ச்சல்
(sinusitis) உள்ளவர்கள் முழுத்தாவரத்துடன் சிறிதளவு மிளகும் சீனியும் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்த குடிநீரை சில வாரங்கள் குடித்துவரலாம்.

தோல்வியாதி உடையவர்கள் உலர்த்தி எடுக்கப்பட்ட வல்லாரைத்தூள் அரை தேக்கரண்டியை ஒரு கப் தண்னீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்துவரலாம்.

வல்லாரையும் சிவப்பு வெங்காயமும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சலாட்டை (salad)தொடர்ந்து சாப்பிட்டுவருவது இருமல் தடுமல் போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு நிவாரணம் கொடுக்கும்
.
வல்லாரைக்குடிநீர்: வல்லாரை இலைகள் பன்னிரண்டை ஒரு கோப்பைகொதிநீரில் போட்டுப் பத்துநிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் இக்குடினீரை வடித்தெடித்து தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கவும். படுக்கைக்குப்போகுமுன் இதை அருந்தினால் சுகமான நித்திரை கிடைக்கும்.

இந்தக்கீரையை காக்கைவலிப்பால் அவதிப்படுவர்களுக்குக் குறிப்பாகச் சிறுவர்களுக்குக் கொடுக்ககூடாது. வல்லாரையைத் தொடர்ந்து ஆறுவாரத்துக்குமேல் எடுக்கக்கூடாது என்றும் இரண்டு வார இடைவெளிவிட்டு பின்னர் மீண்டும் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.அளவுக்குமிஞ்சி வல்லாரை சாப்பிட்டால் தலைவலி தலைச்சுற்று என்பன ஏற்படலாம்.பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வல்லாரையை கொடுக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

GotuKola என்ற வல்லரையின் சிங்களமொழிப் பெயரே இன்று உலகம் அறிந்த வர்த்தகப் பெயராக உள்ளது.

Centella asiatica (L.) URBAN என்பது இதன் தாவரவியல் பெயர்.