முருங்கை இலை பூ காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் முருங்கைப்பற்றி என்ன சொல்கிறது.......

உண்டிடு முருங்கை தன்னில் உறும் இலை வாயு மந்தம்
அண்டிடா மயக்கம் தீரும் அணுகிடும்பித்தம் பூவால்
கண்டகண் பசாட்டினோடு கருங்கண்ணோய்ப்படலம் போகும்
மண்டுகாய் பெலன் உண்டாக்கும் மறுவில் பத்தியத்திற்காமே.


இதன் பொருள்: முருங்கை இலையை உண்பதால் வாய்வு மந்தம் என்பன சேராது. மயக்கம் தீரும். பித்தம் சேரும். முருங்கைப்பூ கண்படலம் போன்ற கண்ணோய்களுக்கு மருந்தாகும். முருங்கை உடலுக்குப் பலத்தைக்கொடுக்கும். இது ஒரு குற்றமும் இல்லாத பத்தியக்கறியாகும்.

மேலதிகவிபரம்: உணவுப்பற்றாக்குறை காணப்படும் ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மாற்றுணவாக முருங்கை இலை காய் என்பன பயன்படுகின்றன. முருங்கை இலையில் புரதச்சத்துகல்சியம் இரும்பு என்பவற்றுடன் உடலில் வைட்டமின் Aயாக மாற்றம்பெறும்
beta-carotene வைட்டமின் C வைட்டமின் Eஎன்பனவும் நிறைந்து காணப்படுகின்றன.

ஒரு முட்டை அல்லது ஒரு கப் பாலில் கிடைக்கும் கல்சியம் சத்து
100 கிராம் முருங்கை இலையில் கிடைக்கிறது.200கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தும் ஒரு கரட்டில் கிடைக்கும் வைட்டமின் Aயும் ஒரு தோடம்பழத்தில் கிடைக்கும் வைட்டமின்Cயும் 100 கிராம் முருங்கை இலையில் கிடைகின்றது. ஆனால் இதிலுள்ள வைட்டமின் C சமைக்கும்போது இழக்கப்பட்டுவிடுகிறது. இலைகளைச் சிலநிமிடங்களுக்குள் சமைத்து முடிப்பது நல்லது.

பிஞ்சு முருங்கைக்காயும் இவ்வாறே சத்துணவு நிரம்பப்பெற்றது. ஆபிரிக்காவில் முற்றிய முருங்கைக்காயின் விதைகளைப் பிரித்தெடுத்து வறுத்து உண்பார்கள்.

முருங்கை விதையில் இருந்து ஒரு வித எண்ணெய் பெறப்படுகிறது. எண்ணெய் எடுத்தபின் பெறப்படும் பிண்ணாக்கு பசளையாகவும் நீரைச் சுத்தப்படுத்தவும் கடல் நீரில் இருந்து உப்பை அகற்றவும் பயன்படுகிறது.

முருங்கையில் புற்றுநோய் எதிர்ப்புக்குணம் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இந்தவிடயத்தில் இதில் உள்ள பென்சைல் ஐசோ தையோசயனேற்
(benzyl isothiocyanate)என்னும் இரசாயனம் உதவுகிறது. புற்றுநோய்க்கான இரசாயன சிகிச்சை பெறுபவர்களின் உயிர்க்கலங்களுக்கு இந்த இரசாயனம் வலுவளிக்கிறது. புறொஸ்ரேற் கான்சர் (prostate cancer) தோல் கான்சர் (skin cancer) உடையவர்களுக்கும் பலனளிக்கின்றது.

வாதம் முடக்குவாதம் மூட்டுவலி என்பவற்றுடன் வரும்வலி வீக்கம் பயன் தருகிறது.
.
முருங்கைக்காய்க்கு பாலுறவில் விருப்பத்தை ஏற்படுத்தும் குணமும் உள்ளது என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.

பாலூட்டும் தாய்மாருக்கு பாற்சுரப்பை அதிகரிக்கவும் முருங்கை இலை உதவுகிறது.

முருங்கை பாதுகாப்பான உணவு நல்ல பத்தியக்கறி என்பது பொதுவான அபிப்பிராயம்.எனினும் கர்ப்பிணிப் பெண்கள்இதனைத்தவிர்ப்பது நல்லது. இந்தியாவின் உத்தரப்பிரதேசமானிலத்தின் சில மாவட்டங்களில் இது கருக்கலைப்புக்குப் பயன்படுவதாக அறியப்படுகிறது.

Drumsticks, Indian horse-radish என்பன முருங்கையின் ஆங்கிலப் பெயர்கள்
Moringa oleifera LAM.என்பது இதன் தாவரவியல் பெயர்.