முடக்கொத்தான்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் முடக்கொத்தான் பற்றி என்ன சொல்கிறது.......
முடக்கொத்தான் காலில் வாத முதிர்சூலைப் பிடிப்பு வாயு
தொடர்ச்சிசேர் சொறிசி ரங்கு தொலைவிலாக் கரப்பன் போக்கும்

இதன் பொருள்: முடக்கொத்தான் காலில் ஏற்படும் மூட்டுவாதம்,நீண்ட நாளாக இருக்கும் வயிற்றுவலி, வாய்வு, சொறி, சிரங்கு, மாறாத கரப்பன் என்பவற்றைக் குணப்படுத்தும்.

மேலதிகவிபரம்: மூட்டுவாதத்தை அகற்றுவதால் முடக்கு அறுத்தான் அல்லது முடக்கற்றான் என்ற பெயர் இந்தத் தாவரத்துக்கு உரித்தாகிற்று. முடக்கற்றான் நாளடைவில் முடக்கொத்தான் என்றாகிற்று.

மூட்டுவாதத்தால் அவதிப்படுவோர் நோவுள்ள இடங்களில் முடக்கொத்தானை அரைத்துப் பற்றுப்போடச் சுகம் கிடைக்கும்.

முடக்கொத்தான் இலையை நன்கு அரைத்து ஒரு பசைபோல் எடுத்து அந்தப்பசையைப் பிரசவவேதனைப்படும் பெண்ணின் அடிவயிற்றில் பூசிவிட வேதனை குறைந்து சுகப்பிரசவம் ஆகும் என்பது அநுபவபூர்வமாகக் கண்டறியப்பட்ட உண்மை என்கிறார்கள்.

முடக்கொத்தான் இலைச்சாற்றை ஆமணக்கெண்ணெயுடன் கலந்து அருந்த மலம் சுகமாகக் கழியும்..

முழுத்தாவரத்தையும் சேர்த்துக் குடிநீர் காய்ச்சி இக்குடிநீரில்
20 தொடக்கம் 30 மில்லி லீட்டர் வரை குடித்துவர மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் தீரும்.

மூன்று நாளைக்கு ஒரு தடவை முடக்கொத்தான் ரசம் குடித்து வந்தால் வாய்வு மற்றும் சம்பந்தமான நோய்கள் மாறும் மலச்சிக்கல் தீரும் என்று கூறப்படுகிறது.

முடக்கொத்தான் ரசம் செய்முறை: ஒரு கைப்பிடி அளவு முடக்கொத்தானை இலை காம்பு தண்டு என்பவற்றுடன் சேர்த்தெடுத்து ஒரு கோப்பை தண்ணீர் விட்டுக்கொதிக்கவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்தெடுத்து அதில் புளி கரைத்து உள்ளி மிளகு சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்கவும்

தமிழ் இலக்கியத்தில் முடக்கொத்தான்:சங்க இலக்கியமான புறநாநூற்றில் உழிஞைத்திணை என்று ஒரு திணைஉண்டு. பகைவர்மீது படையெடுத்து அவர்களது மதிலை சுற்றிவளைத்துப்போராடுவது உழிஞைத் திண எனப்படும். இவ்வாறு மதிலைச் சுற்றிவளைக்கும்போது மன்னன்உழிஞை எனப்படும் முடக்கொத்தான் கொடிகளை மாலையாக சூடிக்கொள்வான்.

Balloon vine என்பது இதன் ஆங்கிலப்பெயர்.
Cardiospermum halicacabum L. என்பது முடக்கொத்தானின் தாவரவியல் பெயர்.