கறிவேப்பிலை

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் கறிவேப்பிலைப்  பற்றி என்ன சொல்கிறது.......

 


 

கருவேம்பின் இலை பூ நெய்யில் கதித்த பொன்னிறமதாக
விரைவதாய் வறுத்துப் பின்னர் மிளகு சீரகமோடு உப்பும்
உரைசெயும் கடுகு நல்ல வெந்தயம் உறைப்புமிக்க
வர மிளகாய் மற்றெல்லாம் வரிசையாய்ச் சேர்த்துக் கூட்டே

கூட்டியே சம்பீரத்தின் கொழுங்கனிச் சாறேயாதல்
நாட்டிய எகினில் உற்ற நற் பழப்புளியே யாதல்
ஆட்டிவிட்டு அரைத்துப் பாக்கின் அளவதாய் அந்தி சந்தி
ஊட்டியே பசுமோர் உண்ண ஒழிந்திடும் வாதம் வாயு

நற்சுவையாகும் உண்ண நன்மணம் கொள்ளும் கொண்டால்
பின் சமித்திடவும் செய்யும் பின்னிய மந்தம் போக்கும்
சொற்றிடு தேகத்திற்குச் சுகமதாம் நாளும் உண்பாய்
அற்றம் இல்லாத வீதே அறைந்தனர் பெரியோர்தாமேஇதன் பொருள்: கறிவேம்பின் இலை மற்றும் பூ என்பவற்றை எண்ணெய்விட்டு சற்று வறுத்து எடுத்து அதனுடன் மிள்கு சீரகம் உப்பு கடுகு வெந்தயம் உறைப்புக்கூடிய செத்தல் மிளகாய் என்பவற்றை ஒவ்வொன்றாக அளவுடன் சேர்த்துக்கூட்டி அரைத்துப் பின்னர் எலுமிச்சம் பழச்சாறு அல்லது பழப்புளிச்சாறு விட்டு அரைத்து எடுத்து இந்தப் பச்சடியில் ஒருபாக்களவு காலையும் மாலையும் சாப்பிட்டு பசுமோரும் குடித்துவர வாதம் வாய்வு என்பன ஒழிந்துவிடும். நல்ல மணமும் சுவையும் கொண்ட இந்த உணவு சமிபாட்டை ஊக்குவிக்கும். மந்தம் போக்கும். உடலுக்குச் சுகம்தரும். ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம். ஒரு கெடுதியும் இல்லாதது இது என்று பெரியோர்கள் கூறிவைத்துள்ளனர்.

மேலதிகவிபரம்: கறிவேப்பிலையைத் தனியாகவோ உணவுடனோ சேர்த்துச் சாப்பிட்டுவர இளவயதில் தலைமுடி நரைப்பதைத் தவிர்க்கலாம் என்பது பலரது நம்பிக்கை. வைட்டமின் A செறிந்து காணப்படும் கறிவேப்பிலை கண்பார்வையை மேம்படுத்தவும் உதவுகின்றது. நூறு கிராம் வேப்பிலையை அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் நூறு கிராம் தேங்காய் எண்ணெய் சேர்த்து இளஞ்சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி எடுக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்குத் தேய்த்துவந்தால் இளவயதில் தலைநரை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கண்பார்வைக்குறைவும் ஏற்படாது.

கறிவேப்பிலை நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாகும் என்பது மலேசியநாட்டுப் பாரம்பரிய மருத்துவர்களின் நம்பிக்கை. நீரிழிவுநோயாளர்க்கு ஏற்படக்கூடிய சிறுநீரகப்பாதிப்பைத் தவிர்ப்பதற்குக் கறிவேப்பிலை உதவும் என்பதும் இவர்களது நம்பிக்கை..

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்து கறிவேப்பிலைகள மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும் என்கிறார்கள். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திக் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு அதில் குடிநீர் தயாரித்துக் காலை மாலை குடித்துவந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது. .
முயல்களில் செய்யப்பட்ட சமீபத்தைய ஆய்வு ஒன்று நீரிழிவின் காரணமாக ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகளுக்குக் கறிவேப்பிலை மருந்தாகப் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கைக்கு வலு ஊட்டுவதாக உள்ளது.
(Kesari AN1, Gupta RK, Watal G. Hypoglycemic effects of Murraya koenigii on normal and alloxan-diabetic rabbits. J Ethnopharmacol. 2011 Apr 26;135(1):88-94.)

கீமொதெரபி
(chemotherapy) மற்றும் ரேடியோதெரப்பி (radiotherapy) ஆகிய புற்றுநோய்க்கான சிகிச்சைகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைக் குறைக்கும் குணம் கறிவேப்பிலைக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரலுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒட்சிஎதிரிகள் கொண்டது இந்தக்கறிவேப்பிலை.

கறிவேப்பிலைப் பச்சடி செய்யும் முறை:

  • 1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, அரைத்தக்கரண்டி கடலப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உழுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். இதனுடன் கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி, செத்தல் மிளகாய் 5 சேர்த்து வறுக்கவும். இவற்றுடன் இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து எடுக்கவும். சூடு குறைத்ததும் உப்பும் புளியும் அளவுடன் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
    இந்தப்பச்சடியை இட்டலி, தோசை, சோறு என்பவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

    2. பச்சைமிளகாயுடன் உப்புசேர்த்து அரைக்கவும். இதனுடன்கறிவேப்பிலை, வெங்காயம், உள்ளி சேர்த்து அரைக்கவும். பின்னர் தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும். பின்னர் எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கவும்.

கவனத்துக்கு: சமீபத்தில் இந்தியாவில் இருந்து கறிவேப்பிலை இறக்குமதி செய்யப்படுவதை இங்கிலாந்தும் ஐக்கிய அமெரிக்காவும் தடைசெய்திருப்பதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கறிவேப்பிலைகளில் அளவுக்கு மீறிய பூச்சிநாசினி மருந்துகள் காணப்பட்டதாகவும் சில இலைகளில் எலுமிச்சை தோடை போன்ற பிற தாவரங்களுக்குத் தொற்றக்கூடிய பூச்சி இனம் ஒன்று காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் இலைகளை மிக நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பின்னரேயே அவற்றைக் கறிகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது இதன்மூலம் உணரப்படும். எலுமிச்சை, தோடை, லெமன் என்பனவும் கறிவேம்பும் RUTACEAE என்னும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

இலங்கையையும் இந்தியாவையும் தாயகமாகக்கொண்ட கறிவேப்பிலை மரம் இன்று தெற்காசியா முழுவதும் பரவிவிட்டது.

Curry leaf என்பது கறிவேப்பிலையின் ஆங்கிலப்பெயர்.
Murraya koenigii (L.) Spreng. என்பது கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர்..