முசுமுசுக்கை

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் முசுமுசுக்கைப்  பற்றி என்ன சொல்கிறது.......


"தேடுதன் முசுமுசுக்கை சேடமே வரட்சி தாகம்
ஓடரும் இருமல் பித்தம் உழலையே சுரத்தை மாற்றும்"

                                                                                                        பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: சளி. வரட்சி, இருமல், பித்தம் காய்ச்சல் என்பவற்றுக்கு முசுமுசுக்கை மருந்தாகப் பயன்படுகிறது

இருமலுடன் ஈளை இரைப்பு புகைச்சல்
மருவுகின்ற நீர்த்தோஷ மாறும்- திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி அவ்விலையைத்
தானே யருந்துவர்க்குத் தான்
பதார்த்தகுண சிந்தாமணி

இதன் பொருள்: இருமலுடன் கூடிய ஆஸ்த்மா, இரைப்பு, நீர்த்தோஷம் என்பன முசுமுசுக்கையால் தீரும்.



மேலதிகவிபரம்: இலங்கையின் வரண்ட பிரதேசங்களில் வீட்டுச்சுவரின் வெளிப்புறத்திலும் சுற்றுமதிற் சுவர்களிலும் இந்தக்கொடி சுயமாக வளர்ந்து படர்ந்திருப்பதை அவதானிக்கமுடியும்.

நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட இருமல், இரைப்பு, சளிக்கட்டு போன்ற வியாதிகளுக்கு முசுமுசுக்கை மருந்தாகப்ப யன்படுகிறது. ஆஸ்த்மா நோயாளர் முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்த்ய்டன் சேர்த்து நெய்விட்டுவதக்கி பகல் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர ஆஸ்த்மா குணங்கள் குறையும் என்று கூரப்படுகிறது.

‘இருகுரங்கின்கை’ என்பது முசுமுசுக்கையின் மற்றுமொரு பெயர். முசு என்பது குரங்கைக் குறிக்கும் ஒரு சொல்.

Mukia maderaspatana (L.) M.ROEMER என்பது முசுமுசுக்கையின் தாவரவியல் பெயர்..