குறிஞ்சா

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் குறிஞ்சாவைப்பற்றி என்ன சொல்கிறது.......

குறிஞ்சாவின் இலைநோய் புண்ணே கோரமாம் வாயுவாதம்
குறுகிட வொட்டா தென்று கூறும் வாகடங்கள் எல்லாம்

                                                                                                                          -  பதார்த்த சூடாமணி

இதன்பொருள்: குறிஞ்சா இலைக்குப் புண், வாய்வு, வாதம் என்பன வராமல் தடுக்கும் குணம் இருப்பதாக வைத்திய நூல்கள் எல்லாம் கூறுகின்றன.

கரப்பான் கிரந்தி கடியவிரும் புண்காச
முரப்பாம் விஷபாக மோட்டு- நிரைப்பான
அக்கரத்தை மாற்றிவிடு மாயிழையே பித்தமுமாந்
தக்குறிஞ் சாவினிலை தான்.


                                                                                                                    - பதார்த்தகுண சிந்தாமணி


இதன்பொருள்: பெண்ணே! குறிஞ்சா இலை பித்தத்தை ஏற்படுத்தும். கரப்பான், கிரந்தி, புண், விஷங்கள் என்பவற்றைத் துரத்திவிடும். அக்கரம் எனப்படும் ஒருவகை பேதிக்கு மருந்தாகும்.


Wattakaka volubilis  -  குறிஞ்சா                                          Gymnema sylvestre -சிறுகுறிஞ்சா

மேலதிகவிபரம்: சமையலுக்கு உதவும் இலைக்கறிவகைகளுள் குறிஞ்சா இலையும் ஒன்று. நீரிழிவு நோயாளர் இந்தக்கீரையை அடிக்கடி தமது உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படும் சிறுகுறிஞ்சா வேறு இந்தக்குறிஞ்சா வேறு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கனடா போன்ற வெளிநாடுகளில் கடைகளில் பச்சை இலையாக விற்பனைக்கு வருவது குறிஞ்சா மட்டுமே. சிறுகுறிஞ்சா இல்லை. இரண்டும் இருவேறு தாவரங்கள்.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய அதிக அளவிலான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த குறிஞ்சா இலைசேர்த்துத் தயாரிக்கப்பட்ட குறிஞ்சாயிலைப் பிட்டு உணவாகப் பயன்படுத்தப்பெறுகிறது. தென்மராட்சிப்பகுதியில் குறிஞ்சாயிலைக்குப் பதிலாகப் பொருத்துமான்கொடி என்னும் மூலிகை பயன்படுவதாக அறியமுடிகிறது. இந்த மூலிகையை இன்னமும் இனங்காணமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் இந்த மூலிகைபற்றி அறியத்தந்தால் நல்லது.

குறிஞ்சாய் வறை செய்முறை: குறிஞ்சாயிலைகளைக் கழுவாமல் ஈரத்துணி ஒன்றினால் துடைக்கவேண்டும். கழுவினால் கசப்புச்சுவை அதிகமாகும் என்று அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு துடைத்து எடுத்த இலைகளை (
250-300 கிராம்)ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி உருட்டிவைத்துக்கொண்டு மிகமெல்லிய துண்டுகளாக அரியவும். இதனுள் தேங்காய்ப்பூ (3 மேசைக்கரண்டி), மஞ்சள்தூள் (1/4 தேக்கரண்டி) உப்பு (தேவையான அளவு) போட்டுப் பிரட்டிவைக்கவும். அடுப்பில் சட்டியை வைத்து சட்டியில் நல்லெண்ணெய் (3 மேசைக்கரண்டி) விட்டு அதில் மூன்று செத்தல் மிளகாயும் சின்னவெங்காயமும் (2 மேசைக்கரண்டி) அரிந்துபோட்டுத் தாளிக்கவும் வதங்கியதும் பிரட்டிவைத்துள்ள குறிஞ்சாயிலையைக் கொட்டிப் பிரட்டிஎடுக்கவும். கூடிய நேரம் வறுக்கத்தேவையில்லை.

குறிஞ்சாய்ப் பிட்டு செய்முறை: குறிஞ்சாயிலை ஒருகட்டு எடுத்து வெய்யிலில் உலர்த்தவேண்டும். நன்கு காய்ந்ததும் உரலில்போட்டு மாவாக இடித்து அரிதட்டில்போட்டு அரித்து எடுக்கவும். குறிஞ்சாமாவை அரைக்கிலோ சிவப்புப் பச்சைஅரிசி மாவுடன் கலந்து சிறிதளவு உப்புடன் சுடுதண்ணீர்விட்டுப் பதமாகக் குழைத்து சின்னச்சின்னக் குறுணியாய் உலுத்திஅடுத்து அதனுடன் தேங்காய்ப்பூ தேவையான அளவு சேர்த்துப் புட்டாக அவித்து எடுக்கவும். அவிந்தைபின் விரும்பினால் சிறிதளவு பட்டர் சேர்த்துக்கிளறிவிடலாம்.

Wattakaka volubilIis (L. f.) Stapf. என்பது குறிஞ்சாவின் தாவர இயல் பெயர்.