மிளகாய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)


ற்றைக்கு  இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் மிளகாயைப் பற்றி என்ன சொல்கிறது.......


தீதிலா மிளகாய்க்குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோ
வாதமே சேடம் வாயு மந்தம் என் றினைய வெல்லாம்
காதம்போம் போசனங்கள் தம்மைக் கடிதினிற் சமிக்கப்பண்ணும்
போதமார் பித்தம் தோன்றும் பிரிவில் சீ மலமும்போமே


                                                                                  -    பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: குற்றமில்லாத மிளகாயினுடைய குணங்களைச் சொல்லக் கேளுங்கள். வாதம் சளிக்கட்டு வாய்வு மந்தம் என்பனவெல்லாம் தூரவிலகிப்போம். போசனத்தை விரைவில் சமிபாடு அடையவைக்கும். அதிகம் சாப்பிட்டால் பித்தம் கூடும். வாந்தி வயிற்றோட்டம் என்பன ஏற்படும்.


மூலவிரத்த முளைகடுப்பும் உண்டாகும்
தாலமதில் தாதுவும் தழைக்குமே - ஆலமெனு
மந்த மரோசிகுன்மம் வாய்வு பொருமலும்போ
முந்து மிளகாய் பழத்தா லோர்


                                                                                   - பதார்த்த குண சிந்தாமணி


இதன் பொருள்: மூலத்தில் இரத்தம்போதல் மூலக்கடுப்பு என்பன உண்டாகும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். விஷமென்று சொல்லக்கூடிய மந்தம் அரோசியம். குன்மம் வாய்வு வயிற்றுப்பொருமல் என்பன மிளகாய்ப் பழத்தால் தீரும்.

மேலதிகவிபரம்: இற்றைக்கு
500 ஆண்டுகளுக்குமுன்னர் வாழ்ந்த இலங்கை இந்தியமக்கள் மிளகாய் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய உணவிலோ மருத்துவத்திலோ மிளகாய்க்கு இடம்பெற்றிருக்கவில்லை. சங்ககாலத்தில் ‘கறி’ என்றால் மிளகு. மிளகு இல்லாமல் அவர்களால் கறிசமைக்க முடியாது. அன்றைய தமிழகத்தில் சேரநாடு (இன்றைய கேரளம்) கறிமிளகு விளையும் பூமியாக மிளகை ஏற்றுமதிசெய்யும் நாடாக விளங்கிற்று.

சங்ககாலத்துக் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்திறங்கிய வணிகப்பொருள்களை உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறிமூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கைவாரியும் காவிரிப்பயனும்
ஈழத்துணவும் காழகத்தாக்கமும்


ஆம். “நிமிர்ந்த தோற்றம் உடைய குதிரைகள் நீரின் மேல் வந்திறங்கின. கருமிளகு மூடைகள் காலின் மேல் வந்தடைந்தன.” சோழநாட்டின் துறைமுகப்பட்டினமாகிய பூம்புகாருக்கு கடல்கடந்த நாடுகளில் இருந்து கப்பல் மூலம் குதிரைகள் கொண்டுவரப்பட்டதையும் சேரநாட்டில் இருந்து கால்நடைகளின் உதவியுடன் மிளகுமூடைகள் கொண்டுவரப்பட்டதையுமே "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்" என்று குறிப்பிட்டுள்ளார் உருத்திரங்கண்ணனார். இந்த மிளகுக்காகத்தான் யவனரும் அராபியரும்கூட தமிழகம் நோக்கிவந்தனர்.

இந்தியாவுக்குப் போவதற்கு ஸ்பெயின் நாட்டுக்கு மேற்குப்பக்கமாகச்செல்லும் கடல்வழிப்பாதை ஒன்றைக் கண்டுபிடித்தால் மிளகைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று கூறிக்கொண்டு புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ்  கண்டுபிடித்தது அமெரிக்காவை மட்டுமல்ல பிற்காலத்தில் மிளகைவிடப் பிரசித்திபெற்ற சுவையூட்டியாக விளங்கப்போகும் மிளகாயையும் தான்.


கரீபியன் தீவுகளில் மிளகைத்தேடிய கொலம்பசுக்கு மிளகாயைக் கொண்டுவந்துகொடுத்தார் ஒரு உள்ளூர்வாசி. மிளகாயைச் சுவைத்துப்பார்த்த கொலம்பஸ் ‘மிளகைப்போல் இந்தக்காய் உறைக்கிறதே’ என்று வியந்தார். இதுவும் ஒருவகை ‘பெப்பர்’ (மிளகு) தான் என்ற முடிபுக்கு வந்தார். மிளகாய்க்கு ‘பெப்பர்’
(pepper) என்ற ஆங்கிலப்பெயர் வந்ததன் வரலாறு இது. தாவரவியலைப் பொறுத்தமட்டில் மிளகுக்கும் மிளகாய்க்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. வெற்றிலைக்குடும்பத்தைச் சேர்ந்தது மிளகு. கத்தரிக்குடும்பத்தைச் சேர்ந்தது மிளகாய்.

மிளகாயின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. ஈக்குவடோர் நாட்டில் புதைபொருள் ஆய்வாளர்களினால் கண்டெடுக்கப்பட்ட
6100 வருடங்களுக்கு முற்பட்ட உணவுப்பாத்திரங்களுள் மிளகாய்கள் காணப்பட்டன. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் பழங்குடிகளால் முதன்முதலாகப் பயிரடப்பெற்ற பயிர்வகைகளுள் மிளகாயும் ஒன்று. தென் அமரிக்காவின் அஸ்ரெக்ஸ் (Aztecs) பழங்குடிகளின் மொழியில் ‘சிலி’ என்பது மிளகாயைக்குறிக்கும். இதிலிருந்து பெறப்பட்டதே மிளகாயைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான ‘சிலி’ (chilli).

1493 இல் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான இரண்டாவது கடற்பயணத்தை மேற்கொண்டபோது அவருடன் கூடச்சென்றவர்களுள் டியகோ ஆல்வாரே சான்சா (Diego Alvarez Chanca) என்ற மருத்துவரும் ஒருவர். இவர்தான் முதன்முதலாக தென் அமெரிக்காவில் இருந்து மிளகாய்விதைகளை ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். 1494 இல் மிளகாய் பற்றிய மருத்துவக் குறிப்புகளை உள்ளடக்கிய ஒரு நூலையும் எழுதிவைத்தார்.

முதலில் மிளகாய்ப்பயிர் ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் இருந்த கிறித்துவ மடாலயங்களில் வளர்க்கப்பட்டது. அக்காலப்பகுதியில் விலைமதிப்பு கூடிய மிளகுக்குப்பதிலாக மிளகாயைப் பயன்படுத்தலாம் என்ற உண்மையை கிறித்துவ மதகுருமார்களே கண்டுபிடித்தனர்.

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியமக்களுக்கும் இலங்கைமக்களுக்கும் மிளகாயை அறிமுகப்படுத்தியவர்கள் போர்த்துக்கேயரே ஆவர். உள்நாட்டில் வளரும் கறிமிளகுக்கு மாற்றாகப் பயன்படக்கூடிய கப்பலில் வந்த சரக்கை ‘கப்ப(ல்)மிளகு’ என்று அழைத்தனர் மலையாளிகள். மிளகுக்குப்பதிலாகக் கறியில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு காயாக இருந்தமையால் இதற்கு ‘மிளகாய்’ என்று பெயர் வைத்தனர் தமிழர்கள். சிங்களத்தில் மிளகுக்குப் பெயர் ‘கம்மிரிஸ்’; மிளகாய்க்குப் பெயர் ‘மிரிஸ்’. மிகவிரைவில் தெற்கு ஆசிய மற்றும் கிழக்கு ஆசிய மக்கள் மத்தியில் கறிக்கு இன்றியமையாத சுவையூட்டியாக மிளகாய் இடம்பிடித்துவிட்டது.


இன்று இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு
2.032 கிலோகிராம் செத்தல் மிளகாய் சாப்பிடுகிறார்கள். இலங்கையின் மொத்தச் செத்தல்மிளகாய்த் தேவை ஆண்டொன்றுக்கு 42.634 மெட்ரிக் தொன்களாகும். இதில் அரைவாசிக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மிளகாய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. எனினும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மிளகாயில் 10 சதவீதமே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மிளகாய் மோகம் இந்திய இலங்கை மக்களை எவ்வளவு ஆட்டிப்படைக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் உணர்த்தி நிற்கின்றன.

வெப்பமான காலநிலையை உடைய நாடுகளில் வாழும் மக்களே மிளகாயை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதை அவதானிக்கலாம். இதற்கு ஒரு காரணம் உண்டு
.
மிளகாயின் சூட்டுத்தன்மை (காரம்) உட்கொண்டதும் உடலில் எரிவு உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதன் விளவாக எச்சிலும் வியர்வையும் அதிகரிக்கின்றன. வயிற்றிலும் கடலிலும் சமிபாட்டுச் சுரப்புக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. உணவு துரிதமாகச் சமிபாடு அடைகின்றது. இரத்தச் சுற்றோட்டம் அதிகரித்து உடலில் சூட்டுணர்வு பரவுவதன் மூலம் வியர்வை அதிகரிக்கிறது. இந்த வியர்வை ஆவியாகும்போது உடல் உண்மையில் குளிர்ச்சி அடைகிறது. வெப்பமான சுவாத்தியம் உடைய நாடுகளில் வாழும் மக்கள் சமையலில் மிளகாயை கூடுதலாக விரும்பிச் சேர்த்துக்கொள்வதற்கு இதுவே காரணமாகும். மிளகாய் இல்லாமல் இறைச்சிக்கறி சமைப்பதை இன்று பலர் நினத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

மிளகாய் அதிகம் சாப்பிட்டால் ‘அல்சர்’ (வயிற்றுப்புண் குடற்புண்) வரும் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயிற்றில் ‘அல்சர்’ என்பது ஒருவகை பக்ரீரியாக் கிருமியினால் தோற்றுவிக்கப்படுகிறது என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிருமிகொல்லும் குணம் உடைய மிளகாய் ‘அல்சர்’ வராமல் தடுக்கக்கூடும் என்பதுதான் உண்மை. அதேசமயம் ஏற்கெனவே வயிற்றில் அல்லது குடலில் புண் உடைய ஒருவர் மிளகாயைச் சாப்பிட்டால் அந்தப்புண்ணில் மிளகாய்பட்டு எரிவு அதிகமாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

மிளகாயின் உறைப்புக்குக் காரணமான ‘கப்சைசின்’
(capsaicin) என்னும் இரசாயனப்பொருள் மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளுடன்கூடிய தொப்பூழ்க்கொடியிலேயே (placenta) அதிக அளவில் உள்ளது. மிளகாய் இனம் ஒன்றின் காரத்தின் அளவு அதன் பரம்பரை அது வளரும் சூழல் மற்றும் மண்ணின் தன்மை போன்ற பலவிடயங்களில் தங்கியுள்ளது. இவ்விடத்தில் ஒரு சுவையான தகவல். விவசாயி ஒருவர் மிளகாய் நடும்போது மிகவும் கோபவசப்பட்டு இருந்தால் அங்குவிளையப்போகும் மிளகாயும் காரம் கூடியதாய் இருக்கும் என்னும் ஒரு கருத்து ஆபிரிக்க மக்களிடம் உள்ளது.

பதார்த்தகுண சிந்தாமணியில் கூறப்பட்டிருப்பதுபோல் மிளகாய்க்கு காமத்தை அதிகரிக்கச்செய்யும்
(aphrodisiac) குணம் உள்ளது என்பது நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கை. தென்னமெரிக்கப் பூர்வீகக் குடிகள் இந்த நோக்கத்துக்காக மிளகாயைப் பயன்படுத்தினர். மிளகாய் பற்றிய தென்னமெரிக்கப் பழங்குடிகளின் நம்பிக்கைகள் ஏதோ ஒரு வழியில் நம்மவரிடமும் வந்து சேர்ந்துவிட்டன. இவற்றுள் ஒன்று கண்ணூறு கழிப்பதற்கு மிளகாயைப் பயன்படுத்துவதாகும்.

கலகம் அடக்கும் பொலீசார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகைக்குண்டுகளில்
(tear gas) மிளகாயின் எரிச்சலை ஏற்படுத்தும் இரசாயனமான ‘கப்சைசின்’ சேர்க்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபடமுயல்வோர், வழிப்பறிக்கொள்ளையர்கள் திருடர்கள் மற்றும் கரடிகள் போன்றவற்றை அண்டாமல் விரட்டி அடிப்பதற்கு உதவும் ‘பெப்பர் ஸ்பிறே’ (pepper spray) யின் உள்ளடக்கமும் இந்தக் ‘கப்சைசின்’ தான்.

வெள்ளை இனத்தவர் இன்னமும் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளத் தயங்குகிறார்கள். ஐரோப்பியநாடுகளில் உள்ள பெரும் சந்தைக்கடைகளில் மிளகாயைக் காண்பது கடினம். அதேசமயம் மிளகாய் விரும்பிகளான ஆசியரும் ஆபிரிக்கரும் செறிந்துவாழும் கனடாவில் அனைத்துப் பலசரக்குக் கடைகளிலும் இதனைக்காணமுடியும்.

Capsicum, chilli, pepper, paprika என்பன மிளகாயின் ஆங்கிலப்பெயர்கள்.

Capsicum annum L. என்பது மிளகாயின் தாவரவியற்பெயர்.


பின்குறிப்பு: எந்த ஒரு தமிழ் மருத்துவநூலிலோ வேறு தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலோ மிளகாய் இடம்பெற்றிருந்தால் அந்த நூல் இலங்கை இந்திய மக்களுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்பட்ட பதினாறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதை உறுதிபடக்கூறமுடியும். யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணி என்னும் நூல் இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கப்பெற்றது. இந்நூலில் மிளகாய் பற்றிக்கூறப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்தியாவில் ஆக்கப்பெற்ற பதார்த்தகுணசிந்தாமணியிலும் மிளகாய் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த நூலானது பழைய நூல்களில் இருந்து திரட்டியும் புதிதாக இயற்றிச் சேர்க்கப்பட்டும் மிகவும் பிற்காலத்திலேயே ஆக்கப்பட்டுள்ளது என்பதை ஊகிக்கமுடிகிறது.