குங்குமப்பூ

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
 
ற்றைக்கு  இரநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் குங்குமப்பூ வைப்பற்றி என்ன சொல்கிறது.......

சுரம்தாகம் வரட்சி மேகம் சொல்கண்ணோய் இருமல் மூச்சு
அருமூலம் சயத்தினோடுள் ளவியல்கண் முற்று மாற்றும்
உரமல நன்றாய்ப் போக்கும் உயர்ந்த குங்குமப்பூ மேவும்
தரமிலாக் குணம் ஈதென்று சாற்றினர் சீற்ற மில்லார்


                                                                                      - பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: காய்ச்சல், தேகவரட்சி, கண்ணோய், இருமல், ஆஸ்த்மா, காசரோகம் என்பவற்றை முழுமையாகக் குணமடைய வைக்கும். மலத்தைப்போக்கும். உயர்தரமான குங்குமப்பூவின் குணங்கள் இவையென ஆன்றோர் கூறிவைத்துள்ளனர்.

விந்துநட்டம் தாகமண்டம் மேகசலம் சூலை கபம்
உந்துசுரம் பித்தம்கால் உச்சிவலி-முந்துகண்ணில்
தங்கும்அப் பூவோடுறுநோய் சத்திஇவை நீங்கவென்றால்
குங்குமப்பூ ஓர் இதழைக் கொள்


                                                                                        - பதார்த்தகுணசிந்தாமணி

இதன் பொருள்: விந்திழப்பு தாகம் சலரோகம் சூலை சளிக்கட்டு காய்ச்சல் பித்தம் கண்ணில்பூ வாந்தி என்பவை தீரவேண்டுமென்றால் குங்குமப்பூவில் ஓர் இழையைக்கொள்வாயாக.

குங்குமப் பூவைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்
தங்குசெவி தோடம் சலதோடம்- பொங்கு
மதுரதோடம் தொலையும் மாதர் கருப்ப
உதிரதோடங்கள் அறும் ஓர்.


                                                                                     - பதார்த்தகுணசிந்தாமணி

இதன் பொருள்: குங்குமப்பூவைச் சாப்பிட்டால் கொடிய பீனிசநோய் காதுநோய் சலதோஷம் பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்களும் முற்றாக இல்லாமல் போகும்.


மேலதிகவிபரம்: ஆறு அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை உயரமான உருண்டைவடிவிலான கிழங்கில் இருந்து தோன்றும் ஆறு முதல் பத்து வரையிலான இலைகளும் ஒன்று அல்லது இரண்டு ஊதாநிறப்பூக்களும் கொண்ட ஒருதாவரத்தில் இருந்து. குங்குமப்பூ பெறப்படுகிறது. .

தெற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக்கொண்ட இத்தாவரம் இன்று ஸ்பெயின் ஆஸ்திரியா பிரான்ஸ் கிரேக்கம் இங்கிலாந்து துருக்கி ஈரான் இந்தியா ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மானிலத்திலும் ஹிமாச்சலபிரதேசத்திலும் உற்பத்தியாகும் குங்குமப்பூ உலகில் தரம் கூடியதாகக் கருதப்படுகிறது.

குங்குமப்பூ உலகிலேயே அதி விலைகூடிய வாசனைத் திரவியமாகும். குங்குமப்பூவின் தரத்தின் அடிப்படையிலேயே அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான குங்குமப்பூ ஒரு இறாத்தல் (
454 கிராம்) 3000 டொலர் முதல் 5000 டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஓரளவு தரமான குங்குமப்பூ ஒரு கிராம் 8 டொலருக்கு வாங்கமுடியும். இதற்கு ஏன் இந்தவிலை என்ற கேள்விக்கு விடையளிப்பதற்கு குங்குமப்பூ எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குவது அவசியமாகின்றது.

குங்குமப்பூ என்பது தனிப்பூ அல்ல. பூவின் உள்ளே சிவந்த நூலிழை போன்ற மூன்று கிளைகளையுடைய பெண்குறி காணப்படும்.

இந்த ஸ்ரிக்மா
(stigma) எனப்படும் பெண்குறியே குங்குமப்பூ என்னும் பெயரில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியமாகும்.

ஒரு அவுன்ஸ் குங்குமப்பூ தயாரிப்பதற்கு ஏறத்தாழ
14000 ஸ்ரிக்மாக்கள் தேவைப்படும். இதன்படி ஒரு இறாத்தல் குங்குமப்பூ தயாரிப்பதற்கு 75000 மலர்களில் இருந்து குங்குமப்பூவின் ஸ்ரிக்மாக்களைக் கைகளினால் பிரித்தெடுக்கவேண்டும். இந்த மனித உழைப்புக்கான செலவை ஓரளவு ஊகித்துக் கொள்ளமுடியும். அத்தோடு வருடத்துக்கு ஒரு கிழமை மாத்திரமே இத்தாவரத்தில் பூக்கள் பூக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எங்காவது குறைந்தவிலையில் குங்குமப்பூ கிடைக்கிறது என்றால் அதை உடனே வாங்கிவிடாதீர்கள். அனேகமாக அது போலியாகத்தான் இருக்கமுடியும்.

குங்குமப்பூவின் மருத்துவப்பயன்பாடு

கர்ப்பிணிப்பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதன்மூலம் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டுமே. ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஜீன்ஸ் எனப்படும் பரம்பரை அலகுகள் மட்டுமே. ஒரு ஆபிரிக்க நாட்டுக் கறுப்பினத் தம்பதியருக்கு வெள்ளைத்தோலும் நீலக்கண்ணும் உடைய பிள்ளை பிறக்கமுடியுமா? அப்படி ஒன்று பிறந்தாலும் அது அவர்களுடைய குழந்தைதான் என்று உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

உண்மையில் சுத்தமான குங்குமப்பூ அளவுக்கு மீறிச்சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக்கூடும். சாதராணமாக கடைகளில் குங்குமப்பூ என்றபெயரில் குறைந்தவிலையில் கிடைப்பது சிவப்புச்சாயம் ஏற்றப்பட்ட தேங்காய்ப்பூ போன்ற போலிகள் என்பதால் இந்தப் போலிக்குங்குமப்பூ பெரிய தாக்கம் எதனையும் தோற்றுவிப்பதில்லை.

ஆஸ்த்மா, இருமல், சளிக்கட்டு, நித்திரைக்குறைவு, வாய்வு, சூதகவலி, அறளைநோய் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு குங்குமப்பூ மருந்தாகப் பயன்படுகிறது. ஆண்களில் துரித விந்துவெளியேற்றம்
(premature ejaculation), மலட்டுத்தன்மை ஆகியவற்றைப் போக்கவும். இது உதவும்.

அல்சைமர்
(Alzheimer) எனப்படும் அறளைநோய் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள் குங்குமப்பூ 15 மில்லி கிராம் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் எடுத்துவருவது நல்லபலனைத் தருவதாக சமீபத்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தொலைக்காட்சிமூலம் உலகெங்கும் அறிமுகமாயுள்ள டாக்டர் ஓஸ்
(Dr.Oz) என்பவர் வாயிலாக உடற்பருமனைக் குறைக்கும் அற்புதமருந்தாகக் குங்குமப்பூ பிரபலம் அடைந்துள்ளது. மனச்சோர்வு பசியுணர்வு என்பவற்றைக் குறைப்பதற்கு குங்குமப்பூ பெரிதும் உதவுகின்றது. பசியைக்குறைத்து சாப்பிடும் உணவின் அளவைக் குறைப்பதன்மூலமே உடற்பருமனைக் குறைக்க குங்குமப்பூ உதவுகின்றது.

சமையலில் குங்குமப்பூ

குங்குமப்பூவை நேரடியாக உணவில் சேர்ப்பதனால் போதிய பலனைப் பெறமுடியாது. குங்குமப்பூவை ஒரு உலோகக்கரண்டியினால் மசிக்கவும். சுடுநீரில் அல்லது பாலில் 30 நிமிடங்களுக்கு குங்குமப்பூவை ஊறவிட்ட பின்னர் ஊறவைத்த பாலை அல்லது நீரை உணவில் சேர்க்கலாம். குங்குமப்பூவைப் பயன்படுத்தும்போது மரத்தாலான சட்டி அகப்பை என்பவற்றைப் பாவிக்கவேண்டாம். குங்குமப்பூச் சாயம் அவற்றில் உறிஞ்சப்பட்டுவிடும்.

ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவைப் பொடிசெய்து இரண்டு கோப்பை சுடுநீரில் ஊறவைக்கவும். தண்ணீர் குளிர்ந்ததும் அதனை ஐஸ் கியூப் தட்டுக்களில்
(ice cube trays) ஊற்றி குளிர் சாதனப்பெட்டியில் உறையவைக்கவும். குங்குமப்பூ ஒரு விரற்பிடியளவு (pinch) பதிலாக உறைந்த ஐஸ் கியூப்களை ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் ஈரப்பதனும் இல்லாத இடத்தில் குங்குமப்பூவை சேமித்து வைக்கவேண்டும்.

உலகவரலாற்றில் குங்குமப்பூ

அசிரியா என்பது இன்றைய சிரியா ஈரான் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் சிறுசிறு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு புராதன சாம்ராச்சியமாகும். கிறித்துவுக்குமுன் ஏழாம் நூற்றண்டில் அசிரியாவை ஆண்டமன்னன் அஷுர்பனிப்பால். அந்தக்காலத்திலேயே ஒரு நூலகத்தை உருவாக்கிப் பிற்காலச் சந்ததியினருக்கு விட்டுச்சென்ற மகத்தான மன்னன் இவன். இவனது நூலகத்தில் இருந்த நூல் ஒன்று தாவர அகராதியாகும். இந்த அகராதியில் குங்குமப்பூவும் இடம் பெற்றுள்ளது.

பண்டைய ரோமாபுரியில் குளியலுக்கு நறுமணம் கொடுக்கக் குங்குமப்பூ பயன்படுத்தப்பெற்றது. அராபியரின் மருத்துவத்தில் இடம்பிடித்த குங்குமப்பூ அவர்களால்
8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பெற்றது. saffron என்னும் இதன் ஆங்கிலப் பெயர் as-zaffran என்னும் அரபுச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். 15ஆம் நூற்றாண்டில் குங்குமப்பூவில் கலப்படம் செய்த ஜெர்மன் நாட்டு வியாபாரிகள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியின் அந்தப்புரப் பெண்மணிகள் தமது கூந்தலுக்குச் சாயமூட்ட குங்குமப்பூவைப் பயன்படுத்தியதாகவும் அதனால் சமையலுக்கு குங்குமப்பூ கிடையாமல்போகலாம் என நினைத்த மன்னன் அந்தப்புரப்பெண்கள் குங்குமப்பூவை அழகுசாதனமாகப் பயன்படுத்தத் தடைவிதித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.


Crocus sativus என்பது குங்குமப்பூவின் தாவரவியற்பெயர். 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்