வாழைப்பூ-காய்-தண்டு

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் வாழைப்பூ-காய்-தண்டு  பற்றி என்ன சொல்கிறது.......

வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போம்காய்
சூழுறும் அரிய மூலப் பிரமேக முன்னே தொலைக்கும் இத்தண்(டு)
ஆழுறு மலக்கட் டெல்லாம் அகற்றுமென் றுரைத்தார்
தாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் தானே


                                                                                                         - பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: வாழைப்பூவினாலே மாதவிலக்கின்போது இரத்தம் அதிகமாகவெளியேறும் பெரும்பாடு என்னும் நோய்தீரும். மூலநோய்க்கும் மருந்தாகும். வாழைத்தண்டு மலச்சிக்கலைப் போக்கும் என்று தாழ்வில்லாத பொதிகையில் வாழும் முனிவர்க்கு அரசனாகிய அகத்தியர் கூறினார்.

மேலதிகவிபரம்:

வாழைப்பூ

வாழைப்பொத்தி இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளர்க்கும் ஏற்ற உணவாகின்றது.


வயிற்றில் அல்சர் எனப்படும் புண் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டுமுறை வாழைப்பொத்தியை உணவில் சேர்த்துவரப் புண் ஆறும்.

மூலநோயாளர்க்கு வாழைப்பொத்தி சிறந்த மருந்தாகும். வாழைப்பூவைச் சுத்தம்செய்து அதனை இடித்து ஒரு வெள்ளைத்துணியில் வைத்துப் பிழிந்து எடுக்கவும். இந்தச் சாற்றில்
125 மில்லி லீற்றர் எடுத்து அதில் நற்சீரகம் ஒருபாக்களவு அரைத்து போட்டுக்குடிக்க இரத்தமூலம் குணமாகும்.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது இரத்தப்போக்கு அதிகமாக இருப்பின் அதனைக்கட்டுப்படுத்த வாழைப்பொத்தியை உணவில் சேர்த்துவர நோய் குணப்படும்.

வாழைப்பொத்தியின் வெளியிலுள்ள இரண்டு அல்லது இதழ்களை நீக்கிவிட்டு பூவை சிறுதுண்டுகளாக அரிந்து அவற்றுடன் இஞ்சி
5கிராம் உள்ளி 5 பல் மிளகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி கொத்தமல்லி (தானியா) 1 தேக்கரண்டி கறிவேப்பிலை 5 சேர்த்து இடித்து எடுத்து தண்ணீர்விட்டுக் குடிநீர் காய்ச்சி காலையும் மாலையும் மாதவிலக்கு தோன்றும் இரண்டுநாட்களுக்கு முன்பும் மாதவிலக்கு காலங்களிலும் மாதவிலக்கு முடிந்து இரண்டுநாட்கள் என்று மூன்று அல்லது நான்கு மாதம் குடித்துவர கர்ப்பப்பை சம்பந்தமான பலவியாதிகள் தீரும் என்பது இலங்கை இந்திய மருத்துவர்களின் அநுபவ வைத்தியமாகும்.

வாழைப்பொத்தியைச் சமைக்கும்போது உள்ளே இருக்கும் வெள்ளைநிறமான பாகம் தெரியும் வரை வெளியில் உள்ள இதழ்களைப்பிரித்து எடுத்துவிட்டு மிகுதியையே சமைப்பது அல்லது சலாட்டில் சேர்ப்பது சிலரின் வழக்கம். வாழைப்பொத்தியை அரிந்தபின் துண்டுகளை எலுமிச்சம்பழச்சாறும் சிறிதளவு உப்பும் சேர்ந்த கரைசலில் கழுவியபின் சமைக்கும்போது அதன் கயர்ப்புத்தன்மை தோன்றாது.

வாழைக்காய்

வாழைப்பழத்தில் சீனிச்சத்து உண்டு. வாழைக்காயில் மாச்சத்து உண்டு. எனினும் இந்த மாப்பொருள் சமிபாடு அடைய மாட்டாது. எனவே இது ஒரு நார்சச்சத்து போலவே செயல்படும். நீரிழிவு நோயாளர்க்கு இரத்தத்தில் சீனியின் அளவைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது உதவும். இரத்தத்தில் உள்ள கொலெஸ்ரெறோலின் அளவைக்குறைக்கவும் இந்த மாச்சத்து உதவுகின்றது. எளிதில் சமிபாடு அடையாத வாழைக்காய் பசியுணர்வைக் குறைத்துவிடுவதால் உடல்நிறையைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

வாழைப்பழத்தைப்போலவே வாழைக்காயிலும் பொட்டாசியம் சத்து கூடுதலாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். எனினும் இரத்தத்தில் பொட்டாசியம் கூடுதலாக உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்கள் வாழைப்பழம் வாழைக்காய் என்பவற்றைத் தவிர்ப்பது நல்லது. தொடர்ந்தும் கூடுதலாகவும் வாழைக்காயைச் சாப்பிடுவது சிலருக்கு சமிபாட்டுக்குறைவை ஏற்படுத்தக்கூடும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு மலச்சிக்கலைக் குணமாக்குவதுடன் உடலில் இருந்து அழுக்குகளை வெளியேற்றும் குணம் கொண்டது. வாழைத்தண்டுச்சாறு சிறுநீரகக்கற்களை அகற்றக்கூடியது. உடலில் இருந்து அசுத்தநீரை வெளியேற்றும் சிறுநீர்ப்பெருக்கியாகவும் வாழைச்சாறுபயன்படும். உஷ்ணப்பிரதேசங்களில் வாழ்வோர்க்கு உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் பானமாகவும் வாழைத்தண்டின் சாறு பயன்படுகிறது.


Banana என்பது வாழைக்காயின் ஆங்கிலப்பெயர்.
Musa paradisiaca L. என்பது வாழைக்காயின் தாவரவியற் பெயர்.