பீர்க்கங்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் பீர்க்கங்காயைப்பற்றி என்ன சொல்கிறது.......

தின்றவுடன் பீர்க்கங்காய் சீதமுறுங் காண்பித்த
மொன்று மூன்றாக வுயருமே- மன்றலணிக்
காரளகக் கச்சுமுலைக் காரிகையே வாதகப
நேரளவைத் தாண்டு நினை


                                                                             - பதார்த்த குண சிந்தாமணிகருக்குப்பீர்க்கு

பாற்பீர்க்கு

பீர்க்கம்தும்பு ஸ்பொன்ஜ் (sponge)


பீர்க்கங்காய் ஈரலின் ஆரோக்கியத்தைப் பேணுகின்றது. மதுபானத்தால் ஈரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காமாலை நோயாளர்க்கும் பீர்க்கங்காய்ச்சாறு மருந்தாகப்பயன்படுகிறது.

பீர்க்கங்காய் தடுமலுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மாதவிலக்கு தடைப்படும் போது அதை மீளக் கொண்டுவருவதற்கும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிப்பதற்கும் பீர்க்கங்காய் உதவுகின்றது.

மலமிளக்கியாகப் பயன்படும் பீர்க்கங்காய் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். மூலவியாதி உள்ளோருக்கும் பயன்படும் காய்கறியாகப் பீர்ர்க்கங்காய் உள்ளது.

நீரிழிவுநோயாளர் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள இரசாயனங்கள் இரத்தத்திலும் சிறுநீரிலும் காணப்படும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் குணமுடையன என்று கூறப்படுகிறது.

சிறுநீர்கழிக்கும்போது ஏற்படும் எரிவைப் பீர்க்கங்காய்ச் சாறுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து அருந்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பீர்க்கங்காய் உடலுக்குக் குளிர்ச்சி தருவது. இதில் உள்ள β கரோட்டீன் என்னும் பொருள் கண்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்லது.

பீர்க்கங்காய் முற்றிக் காய்ந்ததும் அதனுள் இருக்கும் தும்பு ஸ்பொன்ஜ் (sponge) ஆகப் பயன் படுகிறது. தோலையும் விதைகளையும் அகற்றியபின் தும்பை மாத்திரம் எடுத்து குளிக்கும்போது உடலை தேய்த்துக்கொள்ளப் பயன்படுத்தலாம். தோலில் உள்ள அழுக்கையும் கிருமிகளையும் இறந்த கலங்களையும் அகற்றி தோலைச் செழிப்புடன் வைத்திருக்க இந்த ஸ்பொன்ஜ் உதவுகின்றது.

பீரம் என்பது பீர்ர்க்கின் பழந்தமிழ்ப்பெயர். கருக்குப்பீர்க்கு, கருக்குப்பிசுக்கு என்றெல்லாம் பீர்ர்க்கங்காய் அறியப்படுகிறது.

Sponge gourd அல்லது ridge gourd என்று ஆங்கிலத்தில் இந்தத்தாவரம் குறிப்பிடப்படுகிறது.

Luffa acutangula (L.) ROXB.என்பது இதன் தாவரவியற்பெயர்.

காயின் மேற்பரப்பில் வரம்புகள் உயரமாக இல்லாத பாற்பீர்க்கு அல்லது பாற்பிசுக்கு என்னும் ஒருவகைப் பீர்க்கும் உண்டு.

Luffa aegyptiaca MILL.EX.HOOK.F.
என்பது பாற்பிசுக்கின் தாவரவியற்பெயர்..