பாகற்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் பாகற்காயைப்பற்றி என்ன சொல்கிறது.......

மருந்துகளி நற்குணத்தை மாற்று மஃதொன்றா
திருந்துவலி வாதத்தை சேர்க்கும் - பொருந்துபித்தங்
கூட்டுமவ பத்தியத்தைக் கொண்டிருக்கும் வன்கரப்பன்
காட்டுங் கொம்புப் பாகற் காய்.

                                                                       - பதார்த்த குணசிந்தாமணி

பாகற்காய் கிருமிபோக்கும் பயித்திய பித்தஞ் சேர்க்கும்
பாகமா யுண்மருந்தைப் பகைத்துடன் கெடுக்குமாமே


                                                                        - பதார்த்த சூடாமணிநீரிழிவு நோயாளர்க்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் காய்கறிகளுள் பாகற்காயும் ஒன்று. இதில் உள்ள சாரன்ரின் (charantin) என்னும் இரசாயனம் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்க உதவுகின்றது. இன்சுலின் போன்று செயற்படும் பொலிபெப்ரைட் p (polypeptide –p) என்னும் இரசாயனமும் பாகற்காயில் உள்ளது. பாகற்காய் டயபிட்டீஸ் ரைப் 2 ( diabetes type 2) என்னும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளர் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கோப்பை பாகற்காய்ச் சாறு குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. எனினும் நீரிழிவு நோய்க்கு வேறு மருந்து எடுப்போர் பாகற்காயைத் தொடர்ந்து எடுக்குமுன் இதுபற்றி குடும்பவைத்தியரிடம் ஆலோசனை கேட்பது மிக மிக அவசியம். ஏனெனில் மருந்தும் பாகற்காயும் சேர்ந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரும்பத்தகாத அளவுக்குக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது.

நூறு கிராம் பாகற்காய்
17 கலோரி சக்தியை மாத்திரமே தரக்கூடியது. எனினும் நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், மங்கனீஸ் மற்றும் மக்னீசியம் என்னும் கனிமங்களும் வைட்டமின் C, வட்டமின் A உட்பட்ட பல வைட்டமின்களும் β கரோட்டீன் என்பனவும் பாகற்காயில் உண்டு. இந்த β கரோட்டீன் கண்பார்வையை சீர்செய்ய உதவுகின்றது.

பாகற்காய்க்கு வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும் குணம் உண்டு.

பாகல் இளம் இலைகள் ஒரு பிடி எடுத்து ஆமணக்கெண்ணெயில் போட்டுக்காய்ச்சி ஆறியபின்னர் வடித்தெடுத்து அதில் ஒரு தேக்கரண்டி குடிக்கக்கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் கொல்லப்பட்டு வெளியேற்றப்படும். அல்லது பாகல் இலைச்சாற்றில்
20 மில்லி லீட்டர் எடுத்து தேனுடன் அல்லது வெந்நீருடன் கலந்து குடிக்கக்கொடுக்கலாம்.

தலைமுடி இயற்கையாக உதிர்வதைக் குறைப்பதற்கு பாகற்காய்ச்சாறு உதவும். பாகற்காய்ச்சாற்றுடன் சிறிதளவு சீனிசேர்த்து தலைக்குப்பூசிவிடத் தலைமுடி உதிர்வது குறையும் என்று கூறப்படுகிறது.

மருந்தை முறிக்கும் குணம் பாகற்காய்க்கு உண்டு என்பது தமிழ் மருத்துவர்களின் கருத்து.

Bitter gourd, Bitter melon என்பது பாவற்காயின் ஆங்கிலப்பெயர்.

Momordica charantia L. என்பது இதன் தாவரவியற்பெயர்.

 

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)