பூசணிக்காய் (பறங்கிப்பூசணி)

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் பூசணிக்காயைப்பற்றி என்ன சொல்கிறது.......

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்
கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகு
மிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்
சர்க்கரைப் பறங்கிக்காய் தான்

                                                                                              பதார்த்தகுண சிந்தாமணி

இதன்பொருள்: சர்க்கரைப்பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக்கூட்டும். பெருமளவில் நீரைக்கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும்.மேலதிகவிபரம்: பூசணிக்காய் என்று இன்று நாம் குறிப்பிடும் காயின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா என நம்பப்படுகிறது. மனிதரால் முதன் முதலாகப் பயிரிடப்பட்ட காய்கறிகளுள் பூசணிக்காயும் ஒன்றாகும். மெக்சிக்கோவில் கண்டறியப்பட்ட பூசணிவிதைகள் கிறித்துவுக்கு
5500 ஆண்டுகளுக்கு முற்பட்டன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கப்பூர்வீகக் குடிகளால் பயிரப்பட்ட பூசணிக்காயின் விதைகள் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் மூலமாக ஐரோப்பாவை வந்தடைந்தன. பின்னர் போர்த்துக்கேயர் மூலமாக பூசணிக்காய் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழ்மக்களின் முக்கிய காய்கறிகளுள் ஒன்றாகப் பூசணிக்காய் திகழ்கின்றது. பறங்கியரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் என்பதால் இது பறங்கிக்காய் என்று அறியப்பட்டது. பின்னர் இது பறங்கிப்பூசணி என்று அழைக்கப்பெற்றது. இன்று பூசணிக்காய் என்றால் அது இந்தக்காயையே குறிக்கும். எனினும் பழந்தமிழரின் பூசணிக்காய் இது அல்ல. நமது முன்னோர் பூசணி என்று குறித்தது நீற்றுப்பூசணியை மட்டுமே.

நிலத்தோடு ஒட்டிப்பரந்து வளரும் தாவரங்களில் கனியுப்புச்சத்துக்கள் செறிந்து காணப்படுவது இயல்பு. பூசணிக்காயிலும் அதன் விதைகளிலும் அவ்வாறே பொசுபரஸ்
(phosphorus), மக்னீசியம் (magnesium), கொப்பர் (cooper), சிங் (zinc), மற்றும் இரும்புச்சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. குறிப்பாக எமக்குத் தேவையான அளவு சிங் (zinc) உலோகச்சத்தினை பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையாகும்.

ஒரு நூற்றாண்டுக்குமுன்னர் அமெரிக்க விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தீவனமாகப் பூசணிவிதைகளைக் கொடுத்தபோதெல்லாம் அவை வழக்கத்திலும் கூடுதலாக சிறுநீர் கழிப்பதை அவதானித்தனர். தமிழ்மருத்துவர்கள் பூசணிக்குடும்பத்தைச்சேர்ந்த வெள்ளரிவிதைகளுக்கும் இந்தக்குணம் இருப்பதைப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அறிந்துவைத்திருந்தனர் என்பதைப் பழந்தமிழ் மருத்துவநூல்களின் வாயிலாக உறுதிப்படுத்தமுடியும்.

அமெரிக்கப்பூர்வீகக்குடிகள் சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்குப் பூசணிவிதைகளை உண்ணக்கொடுத்தனர். இது படுக்கைக்கு போகுமுன்னரேயே சிறுநீரை முழுமயாக வெளியேற்றிவிடுவதால் படுக்கையில் சிறுநீர்போவது
(bed-wetting) தவிர்க்கப்படுகிறது.

புரொஸ்ரேற் சுரப்பி
(prostate gland) என்பது ஆண்களில் மாத்திரமே காணப்படும் ஒரு விந்து கூழ்ச்சுரப்பியாகும். நடுத்தர வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தசுரப்பி வீங்குவது உண்டு. அடிக்கடியும் குறைவாகவும் சிறுநீர் கழிவது அல்லது கசிவது இந்நோயின் குறிகுணங்களாகும். இதனை Benign Prostatic Hyperplasia (BPH) என்று ஆங்கிலமருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். பண்டைய தமிழ் மருத்துவர்கள் இந்நோயினைச் சதையடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரவில் சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு மூன்று தடைவகளுக்கு மேல் எழுந்துபோகும் ஒரு ஆண் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஊகிக்கமுடியும். இது புறொஸ்றேற் கான்சரிலும் (prostate cancer) வேறானது.இயல்பான புறொஸ்றேற் - வீங்கிய புறொஸ்றேற்

அறுபதுகளில் ஜெர்மன் நாட்டவரால் நடாத்தப்பெற்ற ஆய்வுகள் மூலம் நாளாந்தம் 5 கிராம் தொடக்கம் 15 கிராம் வரயிலான பூசணிவிதைகளை உட்கொன்டு வரும் ஒருவருக்கு சதையடைப்புக் (prostate) குறிகுணங்கள் குறைந்துவருவது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் ஆரம்ப நிலையில் உள்ள சதையடைப்புக்கு பூசணிவிதைகள் மருந்தாகலாம் என்பதை உறுதிப்படுத்தியதோடு இந்தச் சிகிச்சையினால் குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் இருப்பதாகக் கூறவில்லை.

சமீபகாலமாக பூசணிவிதையில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சதையடைப்புக்கு மருந்தாகப்பயன்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் இந்த பூசணிவித்தெண்ணெயை மருந்துக்கடைகளில் வைத்தியரின் பரிந்துரை இன்றிப்பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு
500 தொடக்கம் 1000 மில்லிகிராம் என்ற அளவில் பூசணிவித்தெண்ணெய் மூன்று மாதங்களுக்கு எடுத்துவரும் ஒருவருக்கு பகல்நேரத்திலும் இரவிலும் சிறுநீர் கழிக்கப்போகும் தடவைகள் குறைந்தமை ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளது.

சிறுநீரக்கற்கள் தோன்றுவதைத் தவிர்க்கும் ஆற்றலும் பூசணிவிதைக்கு இருப்பதாகக் ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன. விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட வேறு சில ஆய்வுகள் நீரிழிவுநோயினால் சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத பாதிப்புக்களைத் தடுக்கும் குணம் பூசணிவித்துக்கள், விதைச்சாறு, விதைஎண்ணெய் என்பவற்றுக்கு இருப்பதை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

குடற்பூச்சிகளை அகற்றவும் பூசணிவிதைகள் மருந்தாகப்பயன்படுகின்றன. இருநூறு கிராம் தொடக்கம்
400 கிராம் வரையிலான உலர்ந்த தோல் உரிக்கப்படாத பூசணிவித்துக்களை இடித்து எடுத்துப் பாலௌம் தேனும் சேர்த்துப் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழிந்தபின் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு குடிக்கவேண்டும். மறுநாள் காலையிலும் இதையே திரும்பவும் செய்யவேண்டும். குடற்பூச்சிகள் அனைத்தும் மலத்துடன் வெளியேற்றப்பட்டுவிடும்.

கெட்ட கொலெஸ்ரெறோலைக்
(LDL cholesterol) குறைப்பதாக அறியப்பட்ட பைரோஸ்ரெறோல் (phytosterol) என்னும் இரசாயனங்கள் பூசணிவித்தில் உள்ளன.

Pumpkin என்பது பூசணிக்காயின் ஆங்கிலப்பெயர்.

Cucurbita pepo L. , Cucurbita moschata (LAM.) DUCHESNE EX POIR. ஆகிய இரண்டு இனங்களின் காய்களும் பூசணிக்காய் என்றே அறியப்படுகின்றன.
 

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)