கடுக்காய

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)


மிடுக்காக்கும் காயத்தை விந்து விளைவிக்கும்
சடக்கெனவே உந்திதனைத்தள்ளும் - கடுக்காய்க்கு
வாதபித்தசேட்டுமம்போம் வன்னிமிகுவாலிபமாம்
சாதிசிறு காலையிலே தான்


பாடபேதம்:

மிடுக்காக்குந்தேகத்தை விந்துவையுண்டாக்குஞ்
சடக்கெனவே யுண்டியை யுட்சாடுந் - துடுக்கான
வாதபித்தவையகற்றும் வன்னியொடு தவ்விதருஞ்
சாதிவரிக்கடுக்காய்தான்    
 

                                                             -  பதார்த்தகுண சிந்தாமணி

இதன் பொருள்: கடுக்காய் உடலுக்குப் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தரும். விந்து உற்பத்தியைக்கூட்டும். இலகுவில் மலம் கழியச்செய்யும். வாலிபத்தை மீளக்கொண்டுவரும்.

மேலதிகவிபரம்: இழையங்களுக்கு வலுவும் ஊட்டமும் கொடுப்பதன்மூலம் கடுக்காய் பெருங்குடல், ஈரல், நுரையீரல் என்பவற்றுக்கு வலு ஊட்டுகிறது. இது ஒரு பயன் தரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பான மலமிளக்கி
(laxative) யாகும். சமிபாட்டுக்குடலில் சேரக்கூடிய இயற்கையான நச்சுப்பொருட்களை அகற்றிக் குடலைச்சுத்தம் செய்கிறது. எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி இதனைத் தொடர்ந்து பயன்படுத்திவரலாம். வயிற்றில் வாய்வு கூடுதலாக உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பெரும்பலன் அடைவர்.

காலை விளாங்கனி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் தின்பரேல்
கோலை ஊன்றிக் குறுகிநடந்தவர்
கோலை வீசிக் குலாவி நடப்பரே


என்று ஒரு பழைய பாடல் உள்ளது. காலையில் விளாம்பழம் மத்தியானத்தில் சுக்கு படுக்கைக்குப் போகுமுன்னர் கடுக்காய் என்று தொடர்ந்து
40 நாட்கள் ஒருவர் சாப்பிட்டு வருவாராயின் வயது முதிர்ந்தவருக்கும் வாலிபம்திரும்பும் என்பது இப்பாடலின் கருத்து.
 

Figure 1 chebulic myrobalan (கடுக்காய்)

மூலிகைக்கடைகளில் கடுக்காய் அல்லது ஹரிதகி
(haritaki) என்னும் பெயர்களில் தூளாகவோ வில்லை (capsule) யாகவோ பெற்றுக் கொள்ளமுடியும் அல்லது நீங்களே கடுக்காய்த்தூளைத் தயாரித்துக் கொள்ளலாம்.

உலர்ந்த கடுக்காயின் விதைகளை அகற்றியபின்னர் அதனை நிழலில் காயவைக்கவேண்டும். பின்னர் அதனை இடித்து அல்லது கிறைன்டரில் அரைத்துத் தூளாக்கவேண்டும். பிறவுண் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கடுக்காய்த்தூளை காற்றுப் புகமுடியாத ஒரு குப்பியில் மூடி வைத்திருந்து ஆறுமாதத்துக்குள்பயன்படுத்தவேண்டும்.

பெரியவர்களுக்கு
3 முதல் 6 கிராம் வரையிலும் இலேசான சூடுள்ள நீருடன் குடிக்கக்கொடுக்கலாம். ஒருநாளைக்கு ஒருதடவை அதிகாலையில் அல்லது இரவுச்சாப்பாடு உண்டு மூன்று மணித்தியாலங்கள் சென்றபின் இம்மருந்தை எடுக்கவேண்டும்.

மலச்சிக்கல் உடைய சிறுவர்களுக்கு
500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரையும்
Chebulic myrobalan என்பது கடுக்காயின் ஆங்கிலப்பெயர்.

Haritaki என்பது இதன் வர்த்தகப் பெயர்
(trade name).

Terminalia chebula RETZ. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

உடல் பலவீனமானவர்களும் கர்ப்பிணிப்பெண்களும் கடுக்காய் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும். நீரிழிவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்
(low blood pressure) உள்ளவர்களும் இம்மருந்தைத் தவிர்ப்பது நல்லது.
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்