நெல்லிக்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

நல்லநெல்லிமுள்ளி நாவுக்குரிசைதரும்
அல்லல்தரும் பித்தம்அகலுமே-மெல்லத்
தலைமுழுகக்கண்குளிரும் தவிர்த்திடும்பித்தவாந்தி
கலைபடுமே மேகமெல்லாம் காண்.


பாடபேதம்:

நல்லநெல்லிமுள்ளி நாவுக்குரிசைதரு
மல்லல்தருபித்தமகற்றுமதை-மெல்லத்
தலைமுழுகக்கண்குளிருந் தாவுபித்தவாந்தி
இலையிழிமேகங்களும்போமெண்

                                                                  - பதார்த்தகுண சிந்தாமணி


இதன் பொருள்: நெல்லிக்காய் நாவுக்குச் சுவை தரும். பித்தத்தைப் போக்கும். நெல்லிக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் எண்ணெய் கண்ணுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது பித்தத்தினால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவும்.

Figure 3 Emblic Myrobalan (நெல்லிக்காய்)

மேலதிகவிபரம்: வைட்டமின் சீ
(vitamin C) நிரம்பப்பெற்றது பெருநெல்லிக்காய். நூறு கிராம் (100g) நெல்லிக்காயில் 700 மில்லி கிராம் (700mg) அளவிலான வைட்டமின் சீ உள்ளது. உலர்ந்த காயிலும் இந்த வைட்டமின் பேணப்படுகிறது. உலர்ந்த நெல்லிக்காய்த் தூளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒருவருடத்துக்கு அதன் பலன் கெடாமல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெல்லிக்காய்த்தூளைத் தயிருடன் சேர்த்து உண்டால் சீதபேதி
(dysentery) எனப்படும் வயிற்றோட்டம் குணமாகும். இந்தக்குடிநீரைச் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

வயிற்றில் மேலதிக அமிலச்சுரப்பினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் குடற்புண் என்பவற்றுக்கு நெல்லி பயன் தரக்கூடிய மருந்து என்பது ஆய்வுகள்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லிக்காய்த் தூளில் குடிநீர் காய்ச்சிக்குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் அல்சர் வராமல் தடுக்கலாம்.

நெல்லிக்காய்த்தூள் சிறுவர்களுக்கு
500 மில்லிகிராம் முதல் ஒருகிராம் வரையிலும் பெரியவர்களுக்கு 3 தொடக்கம் 6 கிராம் வரையிலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வெறும் வயிற்றில் விழுங்கக்கொடுக்கலாம் அல்லது சாப்பட்டுக்குமுன் தண்ணீருடன் கொடுக்கலாம். (30 times vitamin C than in Oranges)

கர்ப்பிணிப்பெண்களும் நோயாளருக்கும் தேவையான விட்டமின்
C யை நெல்லிக்காயில் பெற்றுக்கொள்ளலாம்.

Emblic myrobalan என்பது இதன் ஆங்கிலப்பெயர்.

Amlaka என்பது இதன் வர்த்தகப் பெயர்

Emblica officinalis GAERTN. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர். 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்