கியூகம்பர் (Cucumber)

கலாநிதி பால.சிவகடாட்சம்

பொதுவாக இதனை வெள்ளரிக்காய் என்றே குறிப்பிடுகிறார்கள். எனினும் இது ஒரு தனி இனமாகும். கியூகம்பரில் பலவகைகள் உண்டு. இவற்றில் ஒருசில சலாட்டுக்குப் (salad) பயன்படுவன. வேறுசில ஊறுகாய் (pickles) போடப் பயன்படுகின்றன.

மிகக்குறைந்த கலோரிப் பெறுமானமுள்ள காய்கறிகளுள் கியூகம்பரும் ஒன்றாகும். கொழுப்புச்சத்து இதில் இல்லை. கியூகம்பரின் தோலில் சிறந்த நார்ச்சத்துள்ளது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பெருங்குடலுக்குப் பாதுகாப்பளிப்பதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கின்றது.
பீற்றா கரோட்டீன் , வைட்டமின்
C, வைட்டமின் A, சியா சந்தின் மற்றும் லுட்டீன் என்னும் ஒட்சி எதிரிகள் ஓரளவில் கொண்டுள்ளது கியூகம்பர். இதில் பொட்டாசியம் மற்றும் எலும்புக்கும் தோலுக்கும் வலுவளிக்கக்கூடிய வைட்டமின் K என்பன செறிந்து காணப்படுகின்றன .

தூய நீர் நிறைந்திருக்கும் கியூகம்பர் உடலுக்குக் குளிர்ச்சியூட்டக்கூடியது. உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் குணமுள்ள கியூகம்பர் சாறு காய்ச்சல் இருக்கும்போது அருந்தக்கூடிய பானமாகும்.

காரத்தன்மை உடைய இதன் சாறு வயிற்றில் மேலதிகமாகச் சுரக்கும் அமிலத்தை செயல் இழக்கச் செய்கின்றது. அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் குடற்புண் என்பவற்றுக்கு கியூகம்பர் நல்ல மருந்தாகும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் கியூகம்பர் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலையில் எழுந்திருக்கும்பொழுது சிலருக்குக் கண்கள் வீங்கியிருக்கும். இவர்கள் இரண்டு கியூகம்பர் துண்டுகளைக் கண்களின் மேல் வைத்தபடி பத்து நிமிடங்கள் படுத்திருந்தால் வீக்கம் குறைந்துவிடும்.

யூரிக் அமிலம் சேருவதால் மூட்டுகளில் ஏற்படும் நோவு ஏற்படுகிறது. கியூகம்பர் மூட்டுகளைச் சுத்தப்படுத்தி மூட்டுநோவைக்குறைக்கின்றது.

முதனாள் கூடுதலாக மது அருந்தியதானால் அல்லது பிறிதொரு காரணத்தினால் அதிகாலையில் தலைவலியுடன் சேர்ந்த மேற்தொங்கல் (hangover) ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு கியூகம்பர் உதவும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஒருசில கியூகம்பர் துண்டுகளைச் சாப்பிடவும்.

வாயின் கூரையில் ஒரு துண்டு கியூகம்பரை
30 செக்கண்டுகள் வைத்திருப்பதன்மூலம் வாய்நாற்றத்தைக் குறைக்கமுடியும்
.
அவசரமாகக் காலணியைப் பொலிஷ் பண்ணவேண்டுமாயின் புதிய கியூகம்பரால் காலணியைத் தேய்த்துவிடவும்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் எறும்பு பூச்சிகளின் தொல்லை இருப்பின் சில கியூகம்பர் துண்டுகளை ஒரு அலுமினியப்பாத்திரத்தில் போட்டுத் தோட்டத்தில் வைத்துவிடவும் கியூகம்பர் சாறு அலுமினியத்துடன் தாக்கம் அடைவதன்மூலம் வெளிவரும் ஒருவித வாசனை தோட்டத்துப்பூச்சிகளைத் துரத்திவிடும். இந்தவாசனை மனிதர்களால் உணரப்படமாட்டாது.

Cucumber அல்லது Gherkin என்று இதனை ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.
Cucumis sativus L. என்பது இதன் தாவரவியற்பெயர்.
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்