கொவ்வைக்காய்

கலாநிதி பால.சிவகடாட்சம்

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் கொவ்வைக்காயைப்பற்றி என்ன சொல்கிறது.......


நறுங் கொவ்வைக்காய் கையாது நாடொறும் உண்ணில் தேகம்
இறுகுறும் இளமை யுண்டாம் ஏகிடும் வெட்டை காந்தி


                                                                                   - பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: கைப்பில்லாத கொவ்வைக்காயை நாள்தோறும் உண்டுவந்தால் உடம்பு இறுகும். கணைச்சூடு தீரும்.

வாயின் அரோசிகம்போம் மாறா வழலையறும்
நோயின் கபமகலும் நுண்ணிடையே-தூயவதன்
வற்றறக் கருசி மருவுகரப் பான்போகும்
சுத்தக் கோவைக்காயைச் சொல்

                                                                                - பதார்த்த குணசிந்தாமணி

இதன் பொருள்: வாய்க்கசப்பு தீரும். மாறாத நெஞ்சுச்சளி அகலும். கரப்பான் போன்ற தோல் நோய்கள் மாறும்.


மேலதிகவிபரம்: ‘குனித்தபுருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ காட்டிநிற்கும் நடராசப்பெருமானின் அழகைப்போற்றிப் பாடுகின்றார் அப்பர் சுவாமிகள். பெருமானது உதடுகளின் சிவந்தநிறத்துக்குக் கொவ்வைப் பழத்தை உதாரணமாகக் காட்டுகிறார் அப்பர்.

பண்டுதொட்டு கொவ்வைக்காய் எமது காய்கறி உணவுகளுள் ஒன்றாகப் பயன்பட்டு வந்துள்ளது. இது பூசணிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்.

கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின்
A யைத் தோற்றுவிக்கும் பீற்றா-கரோட்டீன் (beta-carotene) கொவ்வைக்காயில் செறிந்து காணப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் கொவ்வைக்காயில் உள்ளன. இவற்றுள் வைட்டமின் C, வைட்டமின் B1 மற்றும் B2 என்பன அடங்குகின்றன. காய்ச்சல் இருக்கும்போது உணவுடன் கொவ்வைக்காயைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

இருதயம், ஈரல், சிறுநீரகம் என்னும் உறுப்புக்களில் கொவ்வைக்காய் எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதில்லை.

பாரம்பரிய மருத்துவத்தில் ஆஸ்த்மா, குஷ்டம், நெஞ்சுச்சளி, செங்கமாரி, வயிற்றுக்கோளாறு போன்ற வியாதிகளுக்கு கொவ்வை மருந்தாகப் பயன்பட்டுவந்துள்ளது.

சின்னமுத்து
(measles) போன்ற வைரஸ் காய்ச்சல்களின்போது ஏற்படக்கூடிய தோல்பருக்களை அகற்றும்பொருட்டு கொவ்வை இலைகளை வெண்ணெயுடன் சேர்த்து அரைத்துத் தோலில் பூசப் பருக்கள் மறையும் என்னும் தகவல் இற்றைக்கு 350 ஆண்டுகளுக்குமுன்னர் இன்றைய கேரளா மானிலத்தில் உள்ள கொச்சின் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த வான் ரீட் (Van Rheede) என்பவரின் மேற்பார்வையில் ஆக்கப்பெற்ற HORTUS MALABARICUS என்னும் மருந்துமூலிகைகள் பற்றிய நூலில் காணப்படுகின்றது.

சமீபகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் மூலம் நீரிழிவுநோய்க்கு கொவ்வை இலைகள் மருந்தாகலாம் என்ற உண்மை தெரியவந்துள்ளது. நீரிழிவின் ஆரம்பகட்டத்தில் கொவ்வை இலையை அருந்திவரும் ஒருவரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு
16 சதவிகிதத்தால் குறைவடைந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

கொவ்வை இலைகளை உலர்த்தித் தூளாக்கி எடுத்ததூள் நீரிழிவு நோயாளர்க்குப் பரீட்சார்த்தமாகக் கொடுக்கப்பட்டது. முன்னூறு கிராம் தூள் கொண்டு தயாரிக்கப்பட்ட வில்லைகள் மூன்று ஒரு நாளைக்கு இரு தடவைகள் எடுத்துவந்த ரைப்
2 நீரிழிவு (type 2 diabetes) நோயாளர்களுக்கு இன்சுலின் சுரப்பு திருப்திகரமான அளவுக்குக் கூடியதை மற்றுமொரு ஆய்வு பதிவு செய்துள்ளது. அதே சமயம் நீரிழிவுக்குக் குறிப்பிட்ட சில ஆங்கில மருந்துகள் எடுத்துவரும் ஒருவர் கொவ்வைபோன்ற மூலிகை மருந்துகளையும் சேர்த்து எடுக்கும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரும்பத்தகாத அளவுக்குக் குறைந்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளர் கொவ்வை போன்ற மூலிகை மருந்துகளை எடுக்குமுன்னர் தமது குடும்பவைத்தியருடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும். அத்துடன் தனது இரத்த சர்க்கரையின் அளவையும் அடிக்கடி பரிசோதித்துக்கொள்வதும் அவசியமாகும்.

Ivy gourd என்பது கொவ்வையின் ஆங்கிலப்பெயர்.

Coccinia grandis (L.) VOIGT என்பது இதன் தாவரவியற்பெயர்

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்