வெள்ளரிக்காய்

கலாநிதி பால.சிவகடாட்சம்
 

வித்துத்தான் சலவடைப்பை விலக்குங்காய் வாதமாக்கும்
மெத்திய பழத்தாற்பித்தம் வீடிடுந் நீரும்போகும்
உத்தம மானபிஞ்சா லோங்கிடுஞ் சிறுநீர்போகும்
வைத்திடிக் குணங்கடாமே வளரும்வெள் ளரியின்றன்மை


                                                                                        - பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: வெள்ளரிவித்து சல அடைப்பைக் குணமாக்கும். வெள்ளரிக்காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிப்பழம் பித்தத்தைபோக்கும். சிறு நீரை வெளியேற்றும். வெள்ளரிப்பிஞ்சும் சிறு நீர் கழிவதை ஊக்குவிக்கும்.

பிஞ்சு வெள்ளரிக் காய்க்குப் பேசுதிரி தோஷம்போம்
வஞ்சியரே முற்றியகாய் வாதமாம்-நைஞ்சகனி
உண்டாற் சத்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நீரிறங்கும் காண்

                                                                                        
 - பதார்த்த குணசிந்தாமணி

இதன் பொருள்: வெள்ளரிப்பிஞ்சு வாதம் பித்தம் கபம் என்னும் மூன்று தோஷங்களையும் போக்கும். காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிபழத்தின் உள்ளே இருக்கும் விதை சிறுநீரை வெளியேற்றும்.

இவ்வருடம் ஏப்ரல் மே மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் சிறந்த விளைச்சல் கண்டதாக அறியமுடிகிறது. மிகுந்த வெப்பம் காணப்பட்ட இக்காலப்பகுதியில் மக்கள் வெள்ளரிப்பழத்தை விரும்பி வாங்கிச்சாப்பிட்டார்கள். ஒரு வெள்ளெரிக்காய்
50 ரூபா முதல் 150 ரூபாவரை விற்பனையானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடலில் உஷ்ணத்தக்குறைத்து குளிர்ச்சியூட்டும் குணம்வெள்ளரிக்கு உள்ளது. எனவே வெய்யில் காலத்தில் மக்கள் இதனை விரும்பி உண்பது வழக்கம்.

முற்றிய வெள்ளரிப்பழம் வெடித்துப் பிளந்துவிடுமென்பதால் ஒவ்வொருபழத்தையும் பச்சை ஓலைகளால் சுற்றிக்கட்டிய பின்னரேயே சந்தைக்குக் கொண்டுசெல்லுவார்கள்.
‘உருவாரகம்’ என்பது வெள்ளரிக்காயின் சமஸ்கிருதப்பெயர். வேதமந்திரம் ஒன்றில் வெள்ளரிக்காய் இடம்பெற்றுள்ளது. வெள்ளரிக்காய் முதிர்ந்தவுடன் காம்பின் பிணைப்பில் இருந்து தானாகவே விடுபட்டுவிடுவதுபோல் மரணம் என்பது இயற்கையாக நிகழவேண்டும் என்பதையே இந்தமந்திரம் உணர்த்துகின்றது என்கிறார் தமிழறிஞர் கலாநிதி நா.சுப்பிரமணியன்.

சிறுநீர் கழிவதை ஊக்குவிக்கும் வெள்ளரிவிதைகளின் குணம் குறித்துப் பல்வேறு தமிழ் மருத்துவநூல்கள் குறிப்பிடுகின்றன. புரொஸ்ரேற்
(prostate) வீக்கத்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் ஏற்படுமாயின் அதனைச் சதையடைப்பு என்று குறிப்பிட்டனர் தமிழ் மருத்துவநூலோர். சதையடைப்புக்கு இவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் உள்ளடக்கமாக வெள்ளரிவிதையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனக்குக் கிடைத்த பழந்தமிழ் மருத்துவ ஏட்டுச்சுவடி ஒன்றில் ‘சதைஅடைப்புக்கு மருந்து’ என்ற தலைப்பில் இரண்டு சிகிச்சை முறைகள் கீழ்க்கண்டவாறு தரப்பட்டுள்ளன.

  • 1. ‘பொரிகாரம் (borax) அரைக்கழஞ்சு (0.9g) பொரித்து வெள்ளரிகொட்டை அரைக்களஞ்சு (0.9g) தண்ணீர்விட்டரைத்து இரண்டும் இளநீர் விட்டரைத்துக் கொடுக்கவும்’
     

  • 2. ‘வெந்தோன்றிக்கிழங்கும் வெள்ளரிக்கொட்டையும் வெருகங்கிழங்கும் வவ்வால் புழுக்கையும் எலிப்புழுக்கையும் தண்ணீர் விட்டரைத்துக் காலிலும் கீழ்வயிற்றிலும் பூசச் சலம் வலம் உடைக்கும்’


இது போன்ற மருத்துவக்குறிப்புக்களை அபத்தம் என்று கூறி நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது. இவை யாரோ ஒருவரது கற்பனையில் உதித்தவை அல்ல. வெள்ளரிக்குடும்பத்தைச்சேர்ந்த பூசணிவிதைகள் சதையடைப்புக்கு மருந்தாகலாம் என்ற உண்மை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சதையடைப்பு தொடர்பாக பழந்தமிழ்நூல்களில் கூறப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும். அதேசமயம் எலிப்புழுக்கை வவ்வால்புழுக்கை போன்ற விலங்குக் கழிவுகளை வெளிப்பூச்சாகவேனும் மருந்தாகப்பயன்படுத்துவது ஆபத்தானவிடயம் என்கிறார் டாக்டர் லம்போதரன் அவர்கள். காரணம் இத்தகைய கழிவுகளில் மனிதருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கிருமிகள் வாழக்கூடும் என்கிறார் இவர்.

Snap melon என்பது வெள்ளரிக்காயின் ஆங்கிலப்பெயர்.
Cucumis melo .L. variety mormodica என்பது இதன் தாவரவியற்பெயர்.


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்