நோய் நீக்கும் யோகக்கலை

திருமதி செ.யோகரத்தினம். M.A


மது முன்னோர்கள் தம் உடலையும் உள்ளத்தையும் ஒருமைப்படுத்தி வைத்திருக்க கையாண்ட ஓர் அறிவியல்க் கலையே யோகக்கலை. இது கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தியான முறையாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பயின்ற கலையே யோகக்கலை. தமது மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் இயற்கையைத் தம் வசப்படுத்திச் சாதாரண மனிதர்களால் இயலாதவற்றைச் செய்யும் ஆற்றல் படைத்தவர்;கள் சித்தர்கள். யோகக் கலை அல்லது யோகாசனம் என்பது அந்தக்காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறவைகள் இவற்றின் செயல்களைப் பார்த்து இதனை வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் சொல்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சுமமாக வாழ்ந்த கொண்டிருக்கும் தமிழச் சித்தர்கள் தம்மைச்சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளைக் கொண்டு இயங்கியதைக் கண்டனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளைக் கவனித்துப் பட்டியலிட்டனர். பின்பு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்துப் பார்த்தனர். நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்பட்டதை அவதானித்தனர். இதனையே இயற்கை சார்ந்த உடற் பயிற்சிகளாக வடிவமைத்தனர். இவையே பிற்காலங்களில் யோகாசனம் மற்றும் பிரணாயாமம் என்றாயிற்று. இந்த வகையில் மயிலை அடிப்படையாகக் கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம். வடமொழியில் மயூரா என்றால் மயில். இதே போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாகக் கொண்ட ஆசனங்களும் அமைந்தன. இருந்தாலும் இந்த அரிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பதஞ்சலி முனிவர். எழுத்து வடிவில் இருந்த இந்த நூலுக்கு பின்பு வந்த நூல்களில்ச் செய்முறைப் படங்களுடன் தந்து உதவியுள்ளார்கள். யோகக்கலை என்பது ஒரு பரந்த பரப்பளவைக் கொண்டது. தன்னுள் ஐந்து பிரதான பாகங்களை உள்ளடக்கியது. சுவாசப் பயிற்சி, ஆசனங்கள், சிறந்த உணவுப் பழக்கம், நேர்மறைச் சிந்தனைகள், உடன் தியானப் பயிற்சியுமாகும். ஆசனப்பயிற்சி யோகக் கலைக்கு இன்றியமையாதது. யோகப் பயிற்சிக்குப் பின் ஓய்வெடுத்தல் முக்கியமானது.

இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சியை மறந்து, நோய் வந்தபின் மருத்துவரிடம் செல்லும் போதுதான் ஞானம் பிறக்கிறது. அங்கே சென்று அவர் தரும் மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட யோகாசனம் செய்வது மிக்க பலனைத் தரும் என்பதும், புத்துணர்ச்சியுடன் வாழலாம் என்பதும் பின்பு தான் புரிகிறது. 'கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்பது போல ஆகிவிடுகிற நிலை. ஆனாலும் ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புக்கள் மட்டுமன்றி உடலிலுள்ள அனைத்து நாடி நரம்புகள் அத்தனைக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சக்தி படைத்தவை யோகாசனங்கள். நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு ஆசனம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவை எந்தளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். யோகாசனப் பயிற்சியில் இன்னொரு முக்கிய அங்கமாக யோகா முத்திரைகள் விளங்குகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திர உச்சாடனத்துடன் ஆரம்பிக்கும் ஆசனப் பயிற்சியின் முதற்கட்டமாக மனத்தையும் உடலையும் தயார் படுத்தும் தியானப் பயிற்சியின் போது 'சின் முத்திரை' பயன்படுத்தப் படுகிறது. அதே போன்று 'விஷ;ணு முத்திரை' பிரணாயாமம் செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது. சுட்டு விரலால் பெருவிரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாகத் தனியே நீட்டிப் பிடித்தல் 'சின் முத்திரை'. சின் முத்திரை ஞான முத்திரை எனவும் அழைக்கப்படும். இதனைச் செய்வது மனதை ஒருநிலைப் படுத்த உதவும். மூளை புத்துணர்ச்சி பெறும், தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். நடு விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து நேராக நிறுத்த வேண்டும். கட்டை விரலால் மற்ற இரண்டு விரல்களையும் அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே 'விஷணு முத்திரை'.

தற்காலத்தில் தமக்கும் தம் குடும்பத்திற்குமாக அரும்பாடுபட்டு பொருள் சேர்ப்பதுடன் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முழுமூச்சுடன் அதிக பொழுதைச் செலவிடுகின்றனர். இதன் விளைவாக போதிய அளவு உணவு, ஓய்வு, தூக்கம் எவையுமின்றி ஏன் தேவைக்கு அதிகமாகவே அலைகிறார்கள். தம் அகத்தையும் புறத்தையும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அதன் பலனாக மன உளைச்சல், பதட்டம், பயம், உணர்ச்சிக் கொந்தளிப்பு இவற்றுடன் நோய் வாய்பட்டும் விடுகின்றனர். இவ்வாறாக ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் நாகரிகமும் தொழில் நுட்பமும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்னொரு புறம் நம் முன்னோர்களின்; வாழ்க்கை முறையும் அதன் விழுமியங்களும் அதிக அளவில் உணரப்பட்டு போற்றப்பட்டும் வருகின்றது. கட்டுப்பாடான வாழ்க்கை முறையினால் கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் மேலானது என அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் விளைவாக யோகக் கலையின் முக்கியத்துவம் பற்றிய விழுப்புணர்வு மக்கள் மத்தியில் பரவி வருவதை அண்மைக்காலமாகக் காணமுடிகிறது. யோகக்கலையானது பல கிளைகளையுடைய மாபெரும் விருட்சத்திற்கு ஒப்பானது. யோகக் கலையை ஆர்வமுள்ள எந்த வயதினரும் பால் வேறுபாடின்றி பயில முடியும். சிறியவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், பெரியவவகள், ஏன் கர்ப்பிணித் தாய்மார்கள் என்று அனைவரும் தமது வயதுக்கும் தேவைக்கும் ஏற்றாற்போல ஆசனங்களைப் பயிலக்கூடிய வசதி உள்ளது.

1. யோகக் கலை அல்லது யோகாசனம் என்பது உடல், மனம், அறிவு, உணர்வு, மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமன்பாட்டிற்கும் உதவிடும் கலையாகும். இது ஒரு அறிவியல் மற்றும் வாழும் கலையாகும். பதஞ்சலி முனிவரால் இந்தியாவில்த் தோற்றம் பெற்று வழி வழியாக வளர்ந்து வரும் ஒரு ஒழுக்க நெறியாகும். உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கம் பற்றிய நெறி. ஒவ்வொரு ஆசன நிலையிலும் ஒவ்வொரு அங்கமும் பயிற்சி பெறுகின்றது. அதனுடன் சேர்ந்து முக்கியமான உள்ளுறுப்புக்களும் அதிகளவில் இயக்கம் பெறுகின்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால் நரம்பு மண்டலம், மூளை, நுரையீரல், இதயம், சமிபாட்டு உறுப்புக்கள் போன்ற அனைத்து அவயவங்களையும் தூய்மைப்படுத்தி அவை திறமையுடன் வேலை செய்யும் ஆற்றலை இப்பயற்சிகள் வழங்குகின்றன. பயிற்சிகளின் போது மனமும் உடலும் ஒருங்கிணைக்கப்படுவதால் சமநிலை எய்துகிறது. இதன்மூலம் சீரான சுவாசம், சமிபாட்டுத் தொழிற்பாடு, இரத்த ஓட்டம், தெளிவான சிந்தனை, மனக் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு போன்ற பண்புகள் உருவாகுவதை உணரலாம். பிரதானமாக முள்ளந்தண்டுப் பிரதேசம், கால், கை, எலும்புத் தொகுதி தசைநார்கள் வலுவடைகின்றன. முதுகு வலி, மூட்டுவலி, தோள்பட்டை வலி எனச் சகல வலிகளிலிருந்தும் நிரந்தரத் தீர்வு தரக்கூடியது யோகாசனம். மேலும் ஆசனங்கள் செய்யும்போது இடுப்புத் தசைகள், வயிற்றுத் தசைகள், இறுக்கமடைவதால் உடல் பருமன் குறைந்து ஊளைச் சதையும் நாளடைவில் இல்லாது போய்விடும். எதற்கும் ஒழுங்காகவும் கிரமமாகவும் பயிற்சிகள் செய்யப்பட வேண்டும். ஏறத்தாள பல மில்லியன் அளவிற்கு ஆசனங்கள் யோகா உலகில் உள்ளதாகச் அறியப்படுகிறது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டவர்கள் தமது பயணத்தில் உள்ளத்தையும் உடலையும் வருத்திப் பல கடினமான ஆசனங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். அதனாலே யோகக்கலையின் உள்ளடக்கமாக எண்ணிலகடங்கா ஆசனங்கள் உள்ளன. இருந்தாலும் அத்தனையையும் பயின்றிட முடியாது. எனினும் சில குறிப்பிட்ட ஆசனங்களைச் செய்தாலே வாழ்நாள் முழுதும் நோய் நொடியின்றி புத்துணர்ச்சியோடு சந்தோசமாக வாழலாம்.

2. யோகப் பயிற்சியின் பலன்கள்:

உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்கிறது.

உடலினை வலுப்படுத்தி அரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது.

மூச்சுப் பயிற்சியின் மூலம் உடலின் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது.

நாள் முழுவதும் உடலைப் புத்துணர்வுடன்;, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

பாலியல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து மலட்டுத்தன்மையை போக்க வழி செய்கிறது.

அனைத்துவிதமான நோய்களையும் குணமாக்க வழியமைக்கிறது.

உடலையும் மனதையும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

அலோபதி மற்றும் எந்த வைத்திய முறையாலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளைத் தீர்க்க வழி சமைக்கிறது.
வாழ்க்கையின் இறுதி வரை நோய் நொடி இல்லாமல் வாழ வகை செய்கிறது.

மேலும் மனித சமூகத்திற்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் கைவிரல்களிலேயே உள்ளது. விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும்.

நம் சுவாசத்திற்கும் எண்ணங்களுக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது. கோபம், கண்ணீர், அதிக சந்தோசம், போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம். அந்த நிலையில் மனதின் எண்ண ஓட்டம் அதிகமாக இருக்கும். மாறாக அமைதியான தருணங்களில் தெளிவான எண்ண நிலையில் இருப்போம். இந்த அடிப்படையில் மூச்சுப் பயிற்சி நம் சுவாசத்தை நம் எண்ணத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும். இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனைத்தரும்.

யோகாசனம் செய்வதற்கென்று விதிமுறைகள் உண்டு. அவற்றை ஓரளவேனும் பின்பற்றினால் நல்ல பலன் அடையலாம்.

1. தயார்படுத்தல்: யோகாசனம் செய்வதற்கு ஆரம்பநிலையில் உடலையும் மனதையும் ஒருமைப் படுத்தி, உடலைத் தயார் நிலைக்குக் கொண்டுவர சூரிய நமஸ்காரத்துடன் தொடங்க வேண்டும்.

2 காலம்: அதிகாலை வெறும் வயிற்றுடனும், மாலை நேரங்கள் ஆயின் உணவு உண்டு நான்கு மணி நேரம் கழித்தும் ஆசனங்களைச் செய்யலாம். அதிகாலை செய்வதே சிறந்தது. தண்ணிர் தவிர வேறு ஏதாவது அருந்தினால் அரை மணி நேரம் கழித்துச் செய்ய வேண்டும். மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

3. இடம்: சுத்தமான காற்றோட்டமான அமைதியான இடம் விரும்பத்தக்கது. திறந்த வெளி நல்லது. ஏதாவது விரிப்பின் மீது செய்வது நன்று.

4. ஆடை: ஆசனம் செய்யும் போது தளர்வானதும் வசதியானதுமாக இருத்தல் அவசியம். நானம்மாள் எனும் 98 வயதுப் பாட்டி, ஒரு யோகக்கலை ஆசிரியர். அவர் சாதாரண சேலையிலேயே யோகா செய்கிறார். ஆகவே தற்கால நாகரிக உலகில் சுரிதார் போடவேண்டும், பான்ஸ் போடவேண்டும் என்றில்லை. தன் மனதுக்கும் வசதிக்கும் உகந்ததாக இருக்கலாம்.

5. வயது: எட்டு வயதிலிருந்து எண்பது வயதிற்கு மேலும் ஆசனங்கள் செய்யலாம். உடலும் உள்ளமும் ஒப்புமானால்ச் செய்யலாம். மனதை ஒருநிலைப் படுத்திச் செய்யவேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடினமான ஆசனங்களைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களும் தவிர்த்தல் வேண்டும்.

6. சுவாசம்: யோகாசனம் செய்யும் போது முன்னோக்கிக் குனியும் போது சுவாசத்தை வெளியேற்றியும், பின்நோக்கி வளையும் போது சுவாசத்தை உள்ளே இழுத்தும் செய்ய வேண்டும். இது சிரமப்படத் தேவையில்லை. தானாகவே அமையும். ஆனால் இதுவே பொது விதி. எந்த ஆசனம் என்றாலும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும்.

7. பார்வை: மனதை ஒரு நிலைப்படுத்தி கண்களை மூடிக் கொண்டு செய்வது நலம். இதுவும் தானாகவே நடக்கும்.

8. மனம்: மனத்தை ஒருநிலைப் படுத்திச் செய்வது அவசியம். முழுப்பலனும் கிட்டும்.

9. வழிமுறைகள்: சில ஆசனங்கள் ஒருபக்கம் மட்டும் செய்யாமல் இரண்டு பக்கமும் செய்தல் வேண்டும். ஆரம்பத்தில் சிறிது வலி இருக்கும் தொடர்ந்து செய்ய தானாகவே சரியாகிவிடும்.

10. ஆசனப் பயிற்சி முழுமைபெற ஒவ்வொரு ஆசனத்தையும் இரண்டு அல்லது மூன்று முறை செய்தல் வேண்டும். ஆசனம் செய்த பின் ஓய்வு அவசியம்.

ஆசனங்கள் செய்யும் வரிசை:

முதலில் நின்றபடி செய்யக்கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும்.

இரண்டாவது படுத்தபடி செய்யக்கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும்.

மூன்றாவது வயிற்றில் படுத்தபடி செய்யும் ஆசனங்கள் செய்ய வேண்டும்.

நான்காவது உட்கார்ந்தபடி செய்யக்கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும்.

ஆசனப் பயிற்சிக்குப் பிறகு உட்கார்ந்தபடி தியானம் செய்ய வேண்டும்.

இதற்குப் பின் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.

ஆசனங்களை வரிசைப்படுத்திச் செய்வது நலம் தரும்.

யோகப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் இளைப்பாற வேண்டும்.

யோகாசனப் பயிற்சிகளை நாம் முறையாகப் பின்பற்றும் பொழுதே அதன் முழுமையான பலனைப் பெறமுடியும். ஆகவே யோகக்கலையை நாமாகக் கற்பதைவிடத் தேர்ச்சி பெற்ற குரு ஒருவரிடம் பயில்வது சாலச் சிறந்தது. எனினும் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியால் நாமே சுயமாகப் பயிலக்கூடிய வாய்ப்புகளும் அதிகமுண்டு. கிடைக்கும் வசதியை உபயோகிப்பதில் தப்பு எதுவுமில்லை. வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதும் தப்புத்தானே! இவ்வாறு ஒரு கலையைப் பயில்வதற்குத் தேவையான தகுதியும், பயில்வதால் கிடைக்கும் பயன்களும் யோகப் பயிற்சி மூலம் கிடைப்பதால் இது யோகக்கலையின் ஒரு வடிவமாக நோக்கப்படுகிறது. சில பெரியோர்கள் யோகப் பயிற்சியின் இறுதி இலக்குத் தன்னைத்தான் அறிவதும் முழுமை அடைவதும் என்று கூறுகின்றனர். எனினும் தற்கால சமூகத்தில் பல்வேறு பொறுப்புக்களும் கடமைகளும் எம்முன் குவிந்து கடக்கின்றன. உளரீதியானதும் உடல்ரீதியானதும் ஆன சக்திகளை வளப்படுத்துவதற்கு உற்ற கருவியாக யோகக்கலை விளங்குகிறது நம்மைநாமே அறிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும் போது நம்முடைய தொடர்பாடல்த் திறன் அதிகரிக்கும். எனவே எமது ஆளுமையின் வளர்ச்சிக்கு யோகக்கலை ஒரு உந்து சக்தியாக அமைகின்றது என்பது பொய்யல்ல!.



 


திருமதி செ.யோகரத்தினம். M.A





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்