'பொங்கல் விளையாட்டு' என்ற தலைப்பில் ஏறுதழுவல் நடத்தத் தமிழ்நாடு அரசு அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும்!

 

தோழர் பெ.மணியரசன்


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
 



ல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் 'சல்லிக்கட்டு' என்ற ஏறுதழுவல் விளையாட்டிற்கு நேற்று(12.01.2016) உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளத்தில் மிகுந்த வேதனையையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது. இந்த வேதனையிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கு கொள்கிறது.

ஏறுதழுவலுக்கு எதிராகச் செயல்படுபவர்களில் பெரும்பாலோர் தமிழர் இன அடையாளத்திற்கும் தமிழர் பெருமிதங்களுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எதிரானவர்கள். பா.ச.க. ஆட்சிகூட தமிழ்நாட்டுப் பா.ச.க.வின், குறிப்பாக நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் அவர்களின் அழுத்தத்திற்கு இணங்கியும் தமிழ்நாட்டில் பா.ச.க.வை வளர்த்திடும் உத்தியில் ஒன்றாகவும்தான் ஏறுதழுவலை அனுமதித்து ஒப்புக்கு ஓர் அறிவிக்கையை
07.01.2016 அன்று வெளியிட்டது.

அப்பொழுதும் காட்சிப்படுத்திக் கொடுமைப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்காமலேயே இந்த அறிவிக்கையை வெளியிட்டது. அப்பொழுதே இதை நாமும் சுட்டிக் காட்டினோம். பலரும் சுட்டிக்காட்டினர். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டக்கூடிய இரட்டை அணுகுமுறையில் இவ்வறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டது.

காளைகள் துன்பப்படுத்தப்படுகின்றன என்பது இதில் உண்மையான சிக்கலில்லை. மறைக்கப்பட்டுள்ள உண்மையான சிக்கல் ஆரியப் பார்ப்பனியத்துக்கும் தமிழினத்திற்குமான இன முரண்பாடுதான்! ஆரிய விலங்கான குதிரையை பந்தயத்தில் பயன்படுத்தி அதைத் துன்புறுத்துவதையோ, அதை வைத்து சூதாடுவதையோ யாரும் கண்டிக்கவில்லை. அது காட்சிப்படுத்திக் கொடுமைப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை. காளை என்பது பழங்காலத்திலிருந்து தமிழர்களின் அடையாளமாக – உடன்பிறப்பாக உள்ளது.

காட்டு விலங்குகள்தான் கொடுமைப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இடம்பெறுகின்றன. காளை காட்டு விலங்கல்ல. வீட்டு விலங்கு. வீட்டு விலங்குகள் என்பதால்தான் நாய்இ பூனை போன்றவை அப்பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த உட்கருத்து புரியாத அப்பாவிகள் சிலர் விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது என்ற மேம்போக்கான உணர்வில் ஏறுதழுவலை எதிர்க்கிறார்கள். பகுத்தறிவின் பெயரால் கேள்விமுறையற்று விஞ்ஞான வழிபாடு செய்யும் சிலரும் இந்தத் தமிழர் விளையாட்டை எதிர்க்கின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஏறுதழுவலை ஆதரிக்கின்றன. இந்தியத்தேசியம் – தமிழினத்தின் பகைக் கருத்தியல் என்பதை ஏறுதழுவல் விளையாட்டிற்கு வடநாடு காட்டும் எதிர்ப்பின் மூலம் மேலும் புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளபடி, மாநில அதிகாரப் பட்டியலில்வரும் விளையாட்டு வகையில் ஒன்றாக ஏறுதழுவலை ஏற்று இதனைப் 'பொங்கல் விளையாட்டு' என்ற தலைப்பின்கீழ் நடத்திட தகுந்த விதிமுறைகளை உருவாக்கி, தமிழ்நாடு அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதற்கு எதிர்ப்பு வந்தால் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.