மக்களின் ஆரோக்கியம் மேம்பட சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை வளர்க்க வேண்டும் - சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் டாக்டர்.இராமசுவாமி தகவல்

ரு சமூகத்தில் உள்ள பாரம்பரிய வைத்திய முறைகள் பராமரிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இத்தகைய மதிப்பு மிகுந்த பாரம்பரிய வைத்திய முறைகள் அழிந்து போக இன்றைய தலைமுறையினர் விட்டுவிடக் கூடாது. தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்த வைத்திய முறையை புவியியல் எல்லைகளைத் தாண்டி உலகத்துக்கே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு விஞ்ஞான முறையிலான சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் வளர வேண்டும். ஆராய்ச்சியின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் போது அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். சித்த மருத்துவம் என்பது ஒழுக்க நெறிகளின் தொகுப்பாகவே உள்ளது. இது நோய் அணுகா வாழ்க்கை முறையை முன் வைக்கிறது. இன்றைய காலகட்டத்துக்கு சித்த மருத்துவமே ஏற்றது என மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் டாக்டர். ஆர்.எஸ்.இராமசுவாமி தெரிவித்தார்.


மத்திய அரசின் களவிளம்பர அலுவலகம், புதுச்சேரியில் உள்ள மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேலூரில் உள்ள தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம் ஆகியன இணைந்து இன்று
(26-4-17) வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் கிராமத்தில் நடத்திய 'தாய்-சேய் நலம் & கோடை வெப்பத்தின் தாக்கத்தை தவிர்த்தல்' விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் இராமசுவாமி இவ்வாறு தெரிவித்தார்.


டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தியதன் மூலம் சித்த மருத்துவம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. கடந்த ஆண்டு பெருவெள்ளத்தின் போது தற்காப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் கொடுத்ததால் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. தாய்-சேய் நலத்திற்கு சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில்தான் உள்ளன. பிரசவம் இன்று நோயாக மாறி உள்ளது. எளிய சித்த மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் பிரசவத்தை எளிதாக்கலாம். எனவே தாய்மார்கள் சிறுசிறு நோய்களுக்கு மூலிகைகள் மூலமே தீர்வு காண முன்வர வேண்டும் என்று டாக்டர் இராமசுவாமி மேலும் கேட்டுக் கொண்டார்.


நிகழ்ச்சிக்கு ஆரோவில் இளைஞர் கல்விமைய இயக்குனர் கவிஞர் இரா.மீனாட்சி தலைமை வகித்தார்.

களவிளம்பர உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் தனது துவக்கவுரையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில்
31.8% குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம் இல்லாமல் இருக்கின்றனர். 28.6% குழந்தைகள் வயதிற்கேற்ற எடை இல்லாமல் குறைவான எடையுடன் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ளாவிட்டால் பிறக்கும் குழந்தையும் பாதிக்கப்படும். ஆகவே தாய்-சேய் நலத்திற்கு ஆதாரமாக இருப்பது ஊட்டச்சத்துதான் என சிவக்குமார் தெரிவித்தார்.


தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் வைத்தியர் கே.பி.அருச்சுனன் தனது உரையில் கோடைக்காலத்து வெப்பத்தால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளையும் அவற்றை எளிய சித்த மருந்துகளால் குணப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் ஆர்.ராஜேந்திரகுமார், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி அலுவலர்கள் டாக்டர் ஷியாமளா ராஜ்குமார், டாக்டர் முகுந்தன், பூத்துறை ஆரண்யா வன இயக்குனர் தே.சரவணன, வேலூர் கிராமத் தாவரவியல் வல்லுனர் வைத்தியர் ப.செல்வம்இ உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேன்மொழி உட்பட பலர் உரையாற்றினர்.


நிகழ்ச்சியில் ஆரோக்கியக் குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளைத் தலைமை இயக்குனர் டாக்டர் இராமசுவாமி வழங்கினார். களவிளம்பர அலுவலகத்தின் சார்பில் மாத்தூர் அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் டாக்டர் இராமசுவாமி வழங்கினார்.


முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கண்காணிப்பாளர் திருமதி பானுமதி வரவேற்றார். இறுதில் களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

 

 

 

 


(மாத்தூரில் நடைபெற்ற தாய்-சேய் நலம் மற்றும் கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்த்தல் விழிப்புணர்வு முகாமில் அங்கன்வாடி மையத்திற்கு களவிளம்பர அலுவலகத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் டாக்டர். ஆர்.எஸ்.இராமசுவாமி வழங்குகிறார். அருகில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் வைத்தியர் கே.பி.அருச்சுனன், இளையோர் கல்வி மைய இயக்குனர் ஆர்.மீனாட்சி, களவிளம்பர உதவி இயக்குனர் தி.சிவக்குமார், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் ஆர்.ராஜேந்திரக்குமார் ஆகியோர் உள்ளனர்.)

 


arjunan_maharishi@yahoo.in