உணவே மருந்து மருந்தே உணவு

வைத்தியர் கே.பி.அருச்சுனன்


திருபத்தூரில் தூயநெஞ்சம் கல்லூரியில் நடைபெற் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் 'சித்த மருத்துவத்தில் உணவு முறைகள்' என்ற தலைப்பில் வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவ சேவை மைய நிறுவுநர் வைத்தியர் கே.பி.அருச்சுனன் பேசும் போது, உணவு பசிக்காக மட்டுமல்ல: ஆரோக்கியமான எண்ணம், ஆரோக்கியமான உடல் ஆகியவற்றைப் பெறுவதற்காகவும்தான். அப்படிப்பட்ட உணவு, கலப்படமில்லாததாக, இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாததாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 'பசித்துப் புசி' என்ற முதுமொழி பறந்துபோய்விட்டது. நேரம் பார்த்து உண்ணும் நிலை உருவாகிவிட்டது.

கடைகளில் விற்கப்படும் 'பாஸ்ட் ஃபுட்' வகைகளை நாம் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதால் பல தீங்குகள் உண்டாகின்றன. இதனால் அவர்களால் சரிவரப் படிக்க முடியவில்லை. சீக்கிரம் களைப்படைந்தும் விடுகின்றார்கள். நம் முன்னோர்கள் உட்கொண்ட ஆரோக்கியமான, சத்தான உணவுகளையே நாமும் உட்கொள்ள முன்வர வேண்டும். வரகு, சாமை, கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கொழுப்புச் சத்து குறையும். உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும் என இயற்கை உணவு முறைகள் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தொடர்ந்து அருட்தந்தை அமலவினோத் 'மதுவின் தீமைகள்' குறித்து பேசும் போது 'ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்: பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். இதனால் மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரத்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். குடும்பமே சீரழியும் குடியை ஒழிப்பதே நமது முதல் கடமையாக இருக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டு பேசினார்.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்