நூற்றாண்டு கண்ட ஹைக்கூ கவிதைகள் புதிய பார்வையை தமிழிலக்கியத்திற்கு தந்துள்ளன - கவிஞர் மு.முருகேஷ்

வாலாஜாபேட்டை.செப்.10.

நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு

வாலாஜாபேட்டை அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி நூற்றாண்டைத் தொட்டிருக்கும் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள், இன்றைக்கு தமிழிலக்கியத்திற்கு புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

இவ்விழாவிற்கு வேலூர் மாவட்ட உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் த.வ.சிவசுப்பிரணியன் தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் கவிஞர் ப.கார்த்திகேயன் வரவேற்றார்.

வாலாஜாபேட்டை நூலக வாசகர் வட்டத் தலைவரும், ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான கவிஞர் மல்லிகைதாசன் எழுதிய ‘கோபுர உச்சியில் அரச மரம்’ ஹைக்கூ கவிதை நூலை வேலூர் தமிழ்ச் சங்கப் பொருளாளர் புலவர் வே.பதுமனார் வெளியிட, வாலாஜா தமிழ்ச் சங்கத் தலைவர் ந.அசோக்குமார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், வாலாஜா முன்னாள் நகர்மன்றத் தலைவர் டபுள்யு.எஸ்.வேதகிரி, வேலூர் மாவட்ட நூலகர் க.ஆனந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் டபுள்யு.எஸ்.மணி, டபுள்யு.ஜி.மோகன், வேலூர் தமிழ்ச் செயலாளர் மு.சுகுமார் படைக்கள பாவலர் துரை.மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், சிறப்புரையாற்றிய வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேஷ் பேசியதாவது:

"1916-இல் மகாகவி பாரதியார் எழுதிய சிறுகட்டுரை மூலமாக தமிழுக்கு அறிமுகமான ஜப்பானிய மூன்று வரி ஹைக்கூ கவிதைகள், இன்றைக்கு உலகின் திசையெங்கும் அறிமுகமாகி இருக்கின்றன. புத்த மத ஜென் தத்துவப் பார்வையில் எழுதப்பட்ட 17 அசைகளையுடைய ஜப்பானிய மரபுக்கவிதையான ஹைக்கூ கவிதைகளை உலக மொழிகளிலுள்ள கவிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர்.

தமிழில் 1972-இல் கவிக்கோ அபுதுல்ரகுமானால் நேரடியான தமிழ் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்டன. தமிழில் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாகி, ஒரு நூற்றாண்டைத் தொட்டிருக்கும் இவ்வேளையில், இதுவரை
450-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதை நூல்கள், ஹைக்கூ கவிதையின் கிளை வடிவங்களான சென்ட்ரியு, லிமரைக்கூ, லிமரைக் சென்ட்ரியு, ஹைபுன் ஆகிய வடிவங்களிலும் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் ஹைக்கூ கவிதைக்கென்றே சிற்றிதழ்கள் நடத்தப்படுகின்றன. இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் மிகுதியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. ஹைக்கூ கவிதை தொடர்பான செயல்பாடுகளும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஹைக்கூ கவிதைகள் குறித்த ஆய்வரங்குகளும், ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களும் நடைபெற்றுள்ளன. பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஹைக்கூ கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜப்பானிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படு வருகின்றன.

தமிழில் அறிமுகமாக ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள், ஜப்பானிய மரபுப்படி ஜென் தத்துவப் பார்வையோடு எழுதப்படுவதில்லை. தமிழ் மண், தமிழர் வாழ்க்கை தொடர்பாகவே எழுதப்படுகின்றன. வார்த்தைச் செறிவையும், காட்சியழகையும் தமிழ் கவிதைக்கு தந்ததில் ஹைக்கூ கவிதைகளின் பங்களிப்பு அதிகம். சமூக நிகழ்வுகளை ‘சுருக்’கென மூன்று வரிகளில் பதிவு செய்யும் ஹைக்கூ கவிதைகளை இன்றைய தலைமுறை இளைய கவிஞர்கள் மட்டுமின்றி, மூத்த மரபுக் கவிஞர்கள் பலரும் தமிழில் எழுதி வருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை உணர்வும், சமூக நடப்புகளை சா
இவ்வாறு அவர் பேசினார்.

நூலாசிரியர் கவிஞர் மல்லிகைதாசன் ஏற்புரை வழங்கினார்.
நிறைவாக, வாலாஜா நூலகர் ப.நரசிம்மன் நன்றி கூறினார்.

படக்குறிப்பு,

வாலாஜாபேட்டை அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கிளை நூலக கூட்ட அரங்கில் கவிஞர் மல்லிகைதாசனின் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில், வேலூர் தமிழ்ச் சங்கப் பொருளாளர் புலவர் வே.பதுமனார், வாலாஜா தமிழ்ச் சங்கத் தலைவர் ந.அசோக்குமார், வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர், கவிஞர் மு.முருகேஷ், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் த.வ.சிவசுப்பிரணியன், கவிஞர் மல்லிகைதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இணைப்பு: படங்கள்-

 






 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்