அந்தோ! மறைந்தார் மாமனிதர் மா.நன்னன்

முனைவர் அ.கோவிந்தராஜூ


பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் காலமாகிவிட்டார் என்னும் செய்தியைச் சற்றுமுன் மின்னஞ்சல் வாயிலாக அறிந்து கழிபெரும் துன்பமுற்றேன்.

பேராசிரியர் நன்னனுக்கும் எனக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த முகம் காணா நட்பு போன்றது. ஐந்தாண்டுகளுக்கு முன் இளைஞர் ஆத்திசூடி என்னும் நூலை இயற்றி அவருக்கு அனுப்பினேன். நகர வரிசையில் நன்னன் சொல் கேள் என்று ஒரு சூடியை அதில் சேர்த்திருந்தேன். அதனைப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் ஓர் அஞ்சல் அட்டை அனுப்பினார். அதைப் பொன்னே போல் போற்றி என் கோப்பில் வைத்துள்ளேன்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் ஒருநாள் சென்னை வானொலியில் அவர் நிகழ்த்திய திருக்குறள் பேருரை கேட்டேன். அவருடைய வானொலி உரை முடிந்ததும் ன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினேன். அவருடைய குறள் விளக்கம் சிறப்பாக இருந்ததைப் பாராட்டினேன். தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குமேல் பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே தம்பி தம்பி என்று அழைத்துப் பேசினார். “என்ன வயசிருக்கும்/” என்று கேட்டார்.”அறுபத்தைந்து” என்று சொன்னேன். “சின்னப் பையன்தான்” என்று சிரித்தார். அப்போது அவருக்குத் தொண்ணூற்று நான்கு வயது ஆகியிருந்தது.. ஆனால் அவரது பேச்சு ஐம்பது வயது இளைஞருக்கு உரியதாய் இருந்தது..

நன்னன் அவர்கள் விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள சாத்துக்குடல் என்னும் ஊரில் பிறந்தவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தவர். பெரியாரியலில் கரை கண்டவர்.

பேராசிரியர் நன்னனும் பேராசிரியர் அன்பழகனும் ஒருசாலை மாணாக்கர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

நேற்றுவரை அவர் எழுதிய நூல்கள் எழுபதுக்கு மேற்பட்டவை. சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றப் பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரகாவும், வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நன்னன் அவர்கள் தமிழ் பயிற்றுவிப்பதில் வல்லவர். நன்னன் கற்பித்தல் முறை என்ற தனித்துவமான முறை உருவானது என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு நூலை எழுதி அவர் பிறந்த நாளான ஜூலை முப்பதாம் நாளன்று சென்னையில் வெளியிடுவது என்னும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். இவ்வாண்டு அவர் எழுதிய சிலப்பதிகார உரை வெளியானது.

முதுமையில் முடியுமா என்று வினாத் தொடுப்போருக்கு முதுமையிலும் முடியும் என வாழ்ந்து காட்டினார் எனதருமை நண்பர் பேராசிரியர் நன்னன் அவர்கள்.

பேச்சுவாக்கில் ஒன்றைச் சொன்னார். “பள்ளத்தில் விழுந்தவனுக்குக் கை கொடுத்துத் தூக்க முயலும்போது, அவன் மேலே வர வேண்டுமே அன்றி நாம் பள்ளத்தில் விழுந்துவிடக் கூடாது. தமிழை மேம்போக்காகப் படித்தவருக்குப் புரிய வேண்டும் என்பதற்காகக் கொச்சையாக எழுதுவது கூடாது. மாறாக நம்முடைய தரத்துக்கு அவர்களை உயர்த்த வேண்டும்” என்றார்.

தமிழின் தரத்தைப் பாதுகாப்பதற்காகப் நன்னன் அவர்கள் பல நல்ல நூல்களை எழுதியுள்ளர்.

ஒரு சிறிய நூற்பட்டியல் இதோ:

செந்தமிழா கொடுந்தமிழா?, செந்தமிழைச் செத்தமொழி ஆக்கிவிடாதீர், தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை?, தமிழ் எழுத்தறிவோம், தமிழைத் தமிழாக்குவோம், தமிழைத் தவறின்றி எழுதுவோம், நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, எல்லார்க்கும் தமிழ், எழுதுகோலா கன்னக்கோலா?, கல்விக்கழகு கசடற எழுதுதல், பைந்தமிழ் உரைநடை நைந்திடலாமா?

இந்த நூல்களைத் தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், செய்தியாளர்கள், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், பேச்சாளர்கள், வலைப்பூவர் போன்றோர் கட்டாயம் படிக்க வேண்டும்; பிழையில்லாமல் எழுத வேண்டும்; பேச வேண்டும். இதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.


முனைவர் அ.கோவிந்தராஜூ

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்