விசர்நாய்க்கடி (அரபுமொழிக்கதை)

அரபியில்: மஹ்மூத் சயீத்
ஆங்கிலத்தில்: ஷாக்கிர் முஸ்தஃபா (பொஸ்டன் பல்கலைக்கழகம்)
தமிழில் : அஷ்ரஃப் சிஹாப்தீன்


'வாயில் மணி ஒலிக்கிறது... உனக்குக் கேட்கிறதா?'

அவர் அவளிடம் கேட்டார். அவரது கண்கள் முடியிருந்தன.

'பேசாமல் தூங்குங்கள்| அது அதான் ஒலி!'

அவள் அவருக்கு முதுகைக் காட்டியபடி புரண்டாள். மிருதுவான படுக்கைக்குள் தனது தலையைப் பதித்துக் கொண்ட போது காலைத் தொழுகைக்கான அதானின் எதிரொலி தேய்ந்து வந்து காதில் விழுந்தது.
அந்த அதானின் வார்த்தைகள் சொல்லின:-

'தூக்கத்தை விடத் தொழுகை சிறந்தது!'

'இது அதிசயமாக இருக்கிறது... இன்னும் ஐந்து மணி கூட ஆகவில்லை! என்ன அதான் இது? யாருக்கோ நேரம் தப்பி விட்டது!'

'நீங்கள் பேசாமல் தூங்க மாட்டீர்களா? அது ஷாபிஈ அதான்! மற்றவர்களை விடச் சற்று முன்னதாகத்தான் ஒலிக்கும். என்னைச் சற்றுத் தூங்க விடுங்கள்!'

புலம்பியவாறு அவள் அவரது தலைக்கு மேலாக மிருதுவான போர்வையை இழுத்தாள்.

வாயில் மணி மீண்டும் ஒலித்தது. அவர் பேர்வையை விலக்கிவிட்டுச் சொன்னார்...

'நான் வாயில் மணி என்கிறேன்... நீ ஷாபிஈ அதான் என்கிறாய்...!'

அவள் எழுந்து மின் விளக்கை எரியவிட்டாள். 'இந்த வேளையில் யாராக இருக்கும்?' அவள் யோசித்தபடி எழுந்து உட்கார்ந்தாள். இப்போது என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை. அவரும் எழுந்து அமர்ந்தார். அவரது முகத்தில் நித்திரையின் ரேகைகள் முழுதாய்ப் படர்ந்து கிடந்தது.

'கதவைத் திறந்து விட வேண்டாம்' என்று அவரிடம் சொன்னவள், 'கீழ்த் தளத்துக்குப் போகவும் வேண்டாம்' என்றாள்.
'இது சரியான வேலையா?' என்று அவளைத் திருப்பிக் கேட்டார்.

'அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் இங்கே இருங்கள்!'

'அவர்கள் தொடர்ந்து மணியை அழுத்துகிறார்கள். வீட்டில் யாருமில்லை என்று தெரிந்து கொண்டால் வீட்டை உடைத்துப் புகுந்து நம்மைக் கொலை செய்யவும் கூடும்'

அவர் தன் இரவு மேலாடையை எடுத்து அணிந்தார். அது இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டு விட்டதா என்று ஒரு முறை சரிபார்த்தார். லாச்சியை இழுத்துக் கைத்துப்பாக்கியை எடுத்தார். அவள் அவரைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிந்தாள்.

'இதை எப்படிப் பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியுமா? விசையை அழுத்தினால் போதும். அபூ காலித் சொல்லித் தந்தான். இது ஒன்றும் பெரிய ரொக்கட் இயக்கும் விடயமல்ல...'

'நானும் உங்களுடன் கீழே வருகிறேன்... கீழே கவனமாகச் செல்ல வேண்டும்... உங்களுக்கு அறுபது வயதாகிவிட்டது என்பதை மறந்து விடவேண்டாம்.'

அவரது பாரமான காலடி வைப்பு அவரது அசைவைக் காட்டியது.

'கதவைத் திறக்க வேண்டாம். இப்படித்தான் உம்மு சமியின் வீட்டுக் கதவைத் திறந்ததும் அவர்கள் சுட்டார்கள்...'

' எனக்குத் தெரியும்!'

'சில வேளை அவர்கள் ஏதோ ஒரு பக்கத்தால் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்திருக்கவும் கூடும். நகைக் கடைக்காரர் அபூ அமீரின் வீட்குக்குள் நுழைந்தது போல கார் நிறுத்துமிடத்தில் ஒளிந்துமிருக்காலம்| அவர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றார்கள் தெரியுமா?'

அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கைத்துப்பாக்கியின் பாரம் உறுத்தியது. பாரமற்ற ஒன்றை அபூ காலித் தந்திருக்கக் கூடாதா? சிறியதாக இருந்தால் இதை விட அரைப் பங்குப் பாரம்தான் இருக்கும்| உள்ளங்கைக்குள்ளேயே வைத்திருக்கலாம். ஒட்டமன் சகாப்தத்துக் கைத்துப்பாக்கியை அவன் எனக்குத் தந்திருக்கிறான். குறைந்தது இரண்டு கிலோ பாரம் இருக்கும். 'ஆமாம் டாக்டர்... பாரம்தான். ஆனால் நிச்சயமானது' என்று சொன்னான்.

'நான் எல்லா விளக்குகளையும் எரிய விடுகிறேன்: நீ மெதுவாக வீட்டின் பகுதிகளையும் கார் நிறுத்துமிடத்தையும் மெதுவாகப் பார்!'

'ஆனால் நான் இறங்கும் வரையும் கதவைத் திறக்க வேண்டாம்!'

அவர் எல்லா விளக்குகளையும் எரிய விட்டார். மேல் தளம், கீழ்த்தளம், கார் கராஜ், வீட்டு முன்புறம் எல்லாம். அவள் படியிறங்கும் சத்தம் கேட்டதும் கதவைத் திறக்கச் சென்றார். ஜனவரி மாதத்தின் குளிர் காற்று அவரது உடம்பின் ஒவ்வொரு எலும்புக்கூடாகவும் துளைத்துச் சென்று கொண்டிருந்தது. கதவு முழுவதும் திறக்க முடியாத படியான சங்கிலிக் கொக்கியைக் இணைப்புச் செய்தார். துப்பாக்கி இன்னும் அவரது கையில் இருந்தது. கரிய இருளுக்கூடாக இன்னும் அதானின் சத்தம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவரது மனைவி வாட்டமுற்ற முகத்துடன் அவர் அருகே வந்து 'இந்த வேளையில் வந்தவர்கள் யார்?' என்று கிசு கிசுத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் கதவை அடைந்ததும் அவள் கதவின் சாவியைத் தனியே பிரித்தெடுத்தாள். அவர் விறைத்துப் போன தன் கரங்களால் கதவை மெதுவாகத் திறந்தார். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் இராணுவ உடையில் நின்றிருந்தான். அவனது சிரிப்பு அவனது களைப்பைக் காட்டியது. கறுப்பு நிற மேர்ஸிடஸ் கார் வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது.

'பயப்படவேண்டாம். கதவைத் திறவுங்கள்!'

'நீங்கள் யார்?'

'ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து...'

'அவரது இதயம் புதிதாகத் துடித்தது... சூடான இரத்தம் அவரது உடல் முழுவதும் பரவுவது புரிந்தது. வியர்வை குளிரை விரட்டியடித்தது. அவரது மனைவி அவளது நடுக்கத்தைக் கட்டுப்படுத்த அவரில் சாய்ந்து கொண்டாள். அந்த மனிதன் என்ன சொன்னான் என்பதை நினைத்துப் பார்த்தாள்| முடியவில்லை.

'நீங்கள் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் கிடையாது'

இராணுவத்தினனின் குரல் குளிர் உறைந்த கதவு வழியாக வந்தது.

'ஒன்றுமேயில்லை... கொஞ்ச நேரம்.... எங்களுடன் வாருங்கள்...!'
'எங்கு போக?'

'ஜனாதிபதி காரியாலயத்துக்கு!'

'விடியும் வரை ஏன் தாமதிக்கக் கூடாது' அவள் தளைந்த குரலில் கேட்டாள்.

இராணுவத்தினனின் புன்னகை மறைந்தது. அவன் எதற்காக வந்தானோ அதிலேயே கண்ணாயிருப்பது அவனது பேச்சில் வெளிவந்தது.

'அதிமேதகு ஜனாதிபதி அவர்களே இவரை அழைத்து வரும்படி சொன்னார்!'

அவர் தனது அழுகையைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தார்.

'எதற்காக?'

'அது ஏதோ ஒரு ஐந்து நிமிடத் தேவைக்காக!'

கதவுக்கு அப்பால் நிற்கும் மனிதன் விளக்கம் சொல்வதற்கு அவசியம் இல்லையென்ற தொனியில் உரையாடியது குறித்து அவர் திணறினார். அவர் இணங்கிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இருள் கலையாத குளிர் மிகுந்த காலைப் பொழுதில் வந்திருக்கும் அந்த மனிதன் அறிவான். அவர் அதிக நேரம் அமைதியாக இருக்கவில்லை.

'நான் உடை மாற்றி வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள்' அவரது குரல் பயமும் தளர்ச்சியும் கலந்து வெளிவந்தது.

'போதிய நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!'

அவர் வீட்டுக்குள் திரும்பி நடந்தார். சட்டெனக் குளிர் தாக்கியதை உர்ந்தார். அவரது மனைவி பார்த்தவுடன் புரிந்து கொள்ளத் தக்கதான குழப்ப மன நிலையுடன் அவருக்கு முன்னால் நடந்தாள்.

'நீங்கள் போகவா போகிறீர்கள்?' அவர்கள் சற்று உள்ளே வந்ததும் கேட்டாள்.

'அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று யாருக்கும் தெரியும்? அவர்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். டாக்டர் இப்றாஹிம் நேற்று இங்கு இருந்தார் என்பது அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறார்கள். அவரது மச்சானும் அவரது முத்த மகனின் மனைவியின் தந்தையும் டாக்டர் இப்றாஹீமின் கண்காணிப்பில் இருந்த போது இறந்திருக்கிறார்கள். டாக்டரை அவர்கள் போக விடுவார்களா? நீ அதை நம்புகிறாயா? இது ஐரோப்பா அல்ல. நமது நாகரிகமற்ற கனவுகள் போல் அல்ல.'

'அவரை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர் என்ன செய்து விட்டார்? அந்தக் கதையைப் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். முழுக் கதையையும். உங்களுக்கு முன்னால் அவர் அதைச் சொல்லும் போது நீங்கள் சிரித்தீர்கள். உறவினருக்கு நாய் கடித்து நாற்பது நாட்களுக்குப் பிறகுதான் அவரை அழைத்து வந்தார்கள். காப்பாற்றுவதற்கு அவரால் என்ன செய்ய முடியும்?வைரஸ் கிருமிகள் நாய் கடித்தவரின் நரம்பு மண்டலம் முழுவதையும் தாக்கியிருக்கிறது.'

அந்தக் கதையைச் சொன்ன போது டாக்டர் இப்றாஹீமின் முகம் எப்படியிருந்தது என்பதை அவர் கற்பனை செய்து பார்த்தார். பரிவுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்த தனது மனைவி வாதியாவின் முகத்தையும் அவர் கற்பனையில் கொண்டு வந்தார். குடியரசுப் படை வீரர்கள் அவரை அழைத்து வந்த போது போர்முனைக்கு அந்த வைத்தியசாலை மாற்றப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டதாக டாக்டர் இப்றாஹிம் சொல்லியிருந்தார். இராணுவக் கவச வாகனங்கள் மற்றும் ஜனாதிபதியின் படையணி ஆகியன அவரை அழைத்து வந்திருந்தன. அவற்றின் சைரன் ஒலி காதுகளைச் செவிடாக்கி விடக் கூடியவை. ஹோர்ன் சத்தம் வெறுப்பூட்டக் கூடியது. இராணுவத்தினராலும் ரைபிள்களோடு நின்றிருந்த விசேட படையினராலும் வைத்தியசாலை கைப்பற்றப்பட்டதைப் போல அத்தனை பேர் நிரம்பி வழிந்தார்கள். 'தோழர் ரக்கான் மிஹ்கான் மிஸ்பான்இ அதிமேதகு ரக்கான் மிஹ்கான் மிஸ்பான்இ லெப்டினன்ட் ஜெனரல் ரக்கான் மிஹ்கான் மிஸ்பான்' என்ற பெயரையே அந்த இடத்தில் ஒருவரால் கேட்கக் கூடியதாக இருந்தது. அவரை உங்களுக்குத் தெரியுமா என்று டாக்டர் இப்றாஹீம் கேட்டபோது நாங்கள் எல்லோரும் சிரித்தோம். ஒரு மாடுமேய்ப்பவனை இரவோடு இரவாக லெப்டினன்ட் ஜெனரலாக்கியதாக ஒரு கதை நிலவுகிறது.

ஒரு நாள் டாக்டர் இப்றாஹிம் சொன்னார்:- 'ஒரு நாள் நோயாளிகளைப் பரீட்சிக்கும் அறைக்கதவு உதைத்துத் திறக்கப்பட்டது. விசேட படையின் கேர்ணல் அவ்வழியாக வந்தார். அப்போது ஒரு மூதாட்டியை நான் பரிசோதனை செய்து கொண்டிருந்தேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னை ஒரு திமிர்ப் பார்வையால் நோக்கினார் அவர். நான் மூதாட்டியைக் கைவிட்டு அவருடன் வெளியேறினேன். நடை வழி இராணுவத்தினரால் நிறைந்து காணப்பட்டது. அந்தக் கூட்டத்துக்குள் ஒருவர் நுழைந்து செல்வதுகூடக் கஷ்டமானது. ரக்கான் மிஹ்கான் மிஸ்பானை நாங்கள் காணச் செல்லும் வழியில் 'இராணுவத்தினரை வைத்தியசாலையை விட்டுச் செல்ல உத்தரவிடுமாறு' கேர்ணலிடம் கோரினேன். அவர்கள் அவசியப்படும் போது வெளியேறிவிடுவார்கள் என்றும் நாம் நமது வேலையைக் கவனிக்க வேண்டும் என்று பதில் சொன்னார் கேர்ணல். நாங்கள் அங்கு சென்ற போது மிஸ்பான் வெளியேறிக் கொண்டிருந்தார்.

--------------------------------------

வாயிலிருந்து வீணி வழிந்து கொண்டிருந்தது... கண்கள் இரத்தச் சிகப்பாகியிருந்தன... அவருக்கு அதியுச்சக் காய்ச்சல் இருந்தது... அவரது உறவினர்கள் சொன்னார்கள்... அவர் அவரால் முடிந்த எல்லோரையும் கடித்திருந்தார்... அவரது மனைவிஇ அவரது இரண்டு புதல்வர்கள்இ அவரது மகள்.. மற்றும் சில மிருகங்களையும் - அதாவது ஒரு நாய்இ ஒரு குதிரை ஆகியவற்றையும் கடித்திருந்தார். அவர் மயங்கும் வரை ஓர் அறையில் அவரைப் பூட்டி வைத்திருந்தார்கள். அவருக்கு முதலில் சிகிச்சை வழங்க வேண்டியிருந்தது. நோய்த் தடுப்பூசி மருந்தை ஜோர்தானிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் அன்றே கொண்டு வந்தார்கள். அவரது நான்கு மனைவியர்இ அவர்களது பிள்ளைகள்இ மற்றும் அவரது முப்பத்து ஏழு பேரப் பிள்ளைகள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்தேற்றினேன். ஜனாதிபதியின் தோட்டத்துக்கு நானே சென்றேன். பல வகையான பெருமளவிலான கால் நடைகள் அங்கிருந்தன. அவர் இரண்டு தினங்களில் இறந்து விடுவார் என்றும் தடுப்பு மருந்து ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு நான் சொன்னேன். அவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு என்னை வற்புறுத்தினார்கள். அவரது புதல்வர்களின் கையெழுத்துக்களை நான் ஆவணங்களில் பெற்றுக் கொண்டேன்.

'ஆனால் அவர்கள் டாக்டர் இப்றாஹீமின் பின்னால் ஏன் செல்கிறார்கள்? உங்களுக்குத் தெரியாதா?'

'நீ மிகைப்படுத்துகிறாய்... வைத்தியசாலையிலிருந்து நேற்று டாக்டர் இப்றாஹீம் போனில் பேசினார். ஒரு தொகை ஜோக் சொன்னார். நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம்'

'அவர்கள் ஏன் உங்களைத் தேடி வரவேண்டும், அதுவும் இந்த அகாலப் பொழுதில்?'

'எனக்கு எப்படித் தெரியும்?'

'இது உங்கள் பிரச்சினை. பத்து வருடங்களாக இங்கிருந்து போய் வெளிநாட்டிலிருக்கும் நமது பிள்ளைகளுடன் இருப்போம் என உங்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். உங்களது நண்பர்கள் எல்லோரும் போய் விட்டார்கள். இங்கு நாம் வாழ்வது ஒரு வாழ்க்கையா? ஒரு நாளைக்கு பலநூறு தடவை செத்துப் பிழைக்கிறோம். நாம் எதற்காக இங்கு இருக்க வேண்டும்?'

அவர் தனது கோர்ட்டை எடுத்தார். உடைகளை அமைதியாக அணிந்தார். கடுஞ்சிவப்பு நிறத்தினாலான கோடுகள் கொண்ட நீல நிலக் கழுத்துப் பட்டியை அணிந்தார். கொஞ்சம் வாசனையைப் பூசிக் கொண்டார்.

'அவர்கள் உங்களை என்ன செய்யப்போகிறார்கள்?' அவள் அழ ஆரம்பித்தாள்.

அவருக்குப் பிரியாவிடை கொடுக்கும் போது அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். இப்போது அவளால் குளிரை உணர முடியவில்லை. கதவுக்குப் போடுவதற்கான பூட்டு மற்றும் சங்கிலியை எடுத்துக் கொள்ள அவள் அவகாசம் எடுததுக் கொண்டாள். பூட்டு இப்போது குளிரில் இறுகிப் போயிருக்கும். அவளை உறுத்திய

தனிமை கதவருகே அவளைச் சற்று தாமதப்படுத்தியது. மேர்ஸிடஸ் அவரை ஏற்றிக் கொள்ள இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர்ந்தன. இந்த இரண்டு வாகனங்களும் எங்கிருந்து வந்தன என்பது அவளுக்குத் தெரியாது. அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள். புறப்படுவதற்கு முன்னர் காருக்குள் இருந்த அவரது புன்னகையும் பார்வையும் கையசைவும் அவளது மனதில் நிரந்தரமாகத் தங்கி விட்டிருந்தன. அவை அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததா? அல்லது கசப்பான பிரிவை உணர்த்தியதா? அவருக்கு எதுவும் நேராது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது போல் அவர் இருந்தார். அதனால்தான் அவர் புன்னகைத்திருக்க வேண்டும். அவர் திரும்பி வருவதற்கான சைகை அது. அவளுக்கு அதில் நம்பிக்கை இருந்தது.

இராணுவத்தினன் அவரது ஆசனப் பட்டியை அணிந்து கொள்ளப் பணித்தான். அவர் ஆச்சரியமாகப் பார்த்த போது 'அது மேலிடத்து உத்தரவு' என்றான். பின்னர் தனது காற்சட்டைப் பையிலிருந்து முகத்தை மூடும் அங்கியை எடுத்து அவரிடம் கொடுத்து முகத்தை மூடிக் கொள்ளுமாறு பணிவுடன் சொன்னான். கைவிலங்கு மாட்டாமல் விட்டார்களே என்பது அவருக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. பிள்ளைகளை விட்டுத் தூரத்திலே வாழ்வதில் அவள் அவர் மேல் வைத்திருக்கும் கவனத்தைப் போல அவர் தன்மேல் கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்போது தனிமையும் பயமும் ஏற்பட்டது. அவர் காணாமல் போனவராக மாறினால் அவள் நிச்சயம் வலுவிழந்து விடுவாள். வாழ்க்கை என்பது ஊறுகளை ஏற்படுத்தும் புரிய முடியாத சதி வலை. ஆண் என்று சொல்லிக் கொள்வது கூட மடத்தனம்தான். சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் நாட்டின் முக்கியமான வைத்தியசாலைகளினது பணிப்பாளரும் உரிமையாளருமாக இருந்தார். ஆனால் இப்போது முகம் மூடப்பட்டு அறுவைக்குக் கொண்டு செல்லப்படும் ஆடு போல ஆகிவிட்டிருக்கிறார்.

கார் அதன் அதிகாரத்தை அந்த இருள்பிரியாக் காலையில் வேகம் பிடித்துக் காட்ட ஆரம்பித்த போது அவருக்குப் பயம் ஏற்பட்டது. ஆசனப் பட்டியை அவர்கள் ஏன் போட்டுக் கொள்ளச் சொன்னார்கள் என்பது இப்போது அவருக்குப் புரிந்தது. அந்த வாகனத்தின் வேகம் பாதைச் சட்ட விதிகளை மீறுவது மட்டுமன்றி தப்பிச் செல்வதற்கு வாய்ப்பற்றவர்களின் வாழ்வின் மீதும் மீறிக் கொண்டிருப்பதை உணர்த்தியது. அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்தார் என்று தீர்மானிக்க முடியவில்லை. முகமூடி நீக்கப்பட்ட போது இருபது நிமிடங்களுக்கு முன்னர் பார்த்த அதே முகத்துடன் அந்த இராணுவத்தினன் தோற்றமளித்தான்.

'நீங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு விடயத்தின் போதும் எதுவும் பேச வேண்டாம். நேரடிக் காட்சிக் கமராக்கள் எல்லா இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. நான் சொல்வதைப் புரிந்து நடந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்' என்று காரிலிருந்து அவர் இறங்குவதற்கு முன்னர் அவன் சொன்னான். அவரது பார்வையில் அவன் ஒரு பிழையான நபராக இல்லமல் நம்பத் தகுந்தவனாகத் தெரிந்தான்.

அது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடம் போலத் தோற்றமளித்தது. முழுவதும் கொங்கிறீற்றினால் வார்க்கப்பட்ட கரிய சாம்பல் நிறக் கட்டடத்துள் மஞ்சள் நிற மின் விளக்குகள் எரிந்தன. ஓர் அழுத்தமான சூழலாக அது இருந்தது. பல்வேறு வகையான ஒரு தொகைப் புதிய கார்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் போர் அல்லது வியாபாரம் ஆகியவற்றின் சாயல் தொடாத இடம் போலத் தோன்றிற்று. அநேகமாக அவர் ஐந்து நிமிடமளவில் தரித்து நின்றார். அங்கு வீசிய இதமான குளிர் காற்று அந்த இடம் புறநகர்ப் பகுதியில் அமைந்திருப்பதற்கு சான்று பகர்வதாயிருந்தது. அவன் அவனுக்கு முன்னால் அவரை நிற்கப் பணித்தான்.
சில நிமிடங்களின் பின்னர் லிஃப்டுக்கு முன்னால் அவர்கள் தரித்து நின்றனர். சாம்பல் நிற உலோக லிஃப்டின் பொத்தான்களை அவன் அழுக்கினான். அந்த லிஃப்ட் விசாலமானதாகவும் சூடாகவும் இருந்த அதே வேளை அந்த இடம் அவருக்குப் பரிச்சயமான ஓர் இடம் என்பதைப் போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது. இருந்த போதும் அது எந்த இடம் என்று அவரால் நினைவுக்குக் கொண்டுவர முடியாதிருந்தது. அதன் பக்கங்கள் கடினமான பலகைகளாலும் கண்ணாடிகளாலும் ஆனதாக இருந்தது. தொல்பொருளியல் காட்சியகத்திலிருப்பது போன்ற சலிப்புத் தரும் படங்கள் சிலவும் இருந்தன. அவர் இருவருடங்களுக்கு முன்னர் தங்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் இதே மாதிரி ஒரு லிஃப்ட் இருந்ததல்லவா! என்னவொரு மறதி! லிஃப்டின் கதவு திறந்ததும் எதிரே நீண்ட ஒரு நடை வழி இருந்தது. சுவர்களில் புகழ் பெற்ற ஓவியங்கள். 'இந்த இடம் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான இடம்' என்ற உணர்வு மீண்டும் துளிர்த்தது. ஆனால் எங்கே... எங்கே... ?

'தயவு செய்து இந்த வழியாக...' இராணுவத்தினன் சொன்னான். அவனுக்கு முன்னால் குட்டையானஇ உருண்டை போன்ற கனமான ஒரு மனிதன். இராணுவத்தின் பச்சை உடையில் இருந்த அவன் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். முகத்தில் ரோமங்கள் இல்லை| உறைந்த தோற்றம்!

'டாக்டர் அல்லவா?' அவன் கேட்டான். அவனது குரல் சன்னமாக ஒலித்தது.

'ஆம்!' இராணுவத்தினன் பதில் சொன்னான்.

ஒரு பார்வையற்றவருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்று அவருக்குத் தெரியாது. அந்த இடத்தில் இராணுவத்தினன் மறைந்து போனான். டாக்டருக்கு வழிகாட்டும் பொறுப்பை குட்டையான அந்தப் பார்வையற்றவன் ஏற்றுக் கொண்டு மற்றொரு நடை வழியூடு அழைத்துச் சென்றான். அந்த வழியும் கூட வெதுவெதுப்பாக இருந்தது. எனவே கோர்ட்டைக் கழற்றிக் கைகளில் எடுத்துக் கொண்டார். ஒரு திருப்பத்தில் மாறி நிமிர்ந்த போது மற்றொரு லிஃப்ட் இருந்தது. வெகு லாவகமாக அவன் பொத்தானைச் சரியாக அழுத்தினான். இவன் உண்மையிலேயே பார்வையற்றவனா? என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது.

'உள்ளே போகலாம்' என்றான் அவன். ஏற்கனவே அவர் வந்த லிஃப்ட் போலவே இதுவும் இருந்தது. இங்கு வருபவர்கள் நாம் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டு நிற்கிறோம் என்ற எண்ணத்தை இது உருவாக்காதா? அந்த விடயம் முக்கியமானதல்ல. லிஃப்ட் ஏதோ ஒரு தளத்தில் நிற்கக் கதவு திறந்தது. அங்கே அவருக்காக மற்றொரு பார்வையற்ற மனிதன் நின்று கொண்டிருந்தான். முன்னர் வழிகாட்டியவனை விட இவன் கொஞ்சம் உயரமாகவாவது இருக்கக் கூடாதா? அவனைப் பார்த்தவுடன் சந்தேகம் தோன்றும்படியாக இருந்தான் அவன். முன்னர் அழைத்துவந்தவனை அப்படியே அச்சில் வார்த்தாற் போல் இருந்தான் இவனும். சில வேளை அவனது சகோதரனாக இவன் இருப்பானோ? அவர்கள் சகோதரர்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரே லிஃப்டில் ஐந்து முறை வருவதில் உள்ள மர்மம்தான் புரியவில்லை. ஒருவாறான ஒரு தளத்தின் கீழ்ப் பகுதியில் வெளியிறங்கிய போது அங்கே டாக்டரை வரவேற்க ஒரு பார்வையற்றவர் காத்திருக்கவில்லை. முப்பது வயது மதிக்கத்தக்க வாட்டசாட்டமான ஒருவன் நின்றிருந்தான். அவன் அநேகமாக ஒரு தாதியாக இருக்க வேண்டும்| தன்னைத் தொடருமாறு சைகை செய்தான்.

தன்னை வழிகாட்டி அழைத்து வந்த பார்வையற்றவர்களது நினைவுகளை அறுத்தார். கீழ்த்தளத்துக்குச் செல்லும் சைகையை வழித் தொடர்ந்தார். தான் ஓர் ஆடு போல இயங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். தற்போது அவர் வந்து கொண்டிருந்த நடை வழி முடிவற்று வளைந்ததாக இருந்த போதும் மீண்டும் தனக்குப் பரிச்சயமான இடம் என்பதை உணர்வூட்டியது. சற்றுத் திறந்திருந்த கதவுகளூடாக நம்மை யாரோ அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரது உள்ளுணர்வு தெரிவித்தது. எல்லாக் கதவுகளும் சற்றுத் திறந்த நிலையில் இருந்தன. யாராவது அங்கு துப்பாக்கிகளைத் நீட்டிக் கொண்டு நிற்கிறார்களோ?

'தயவு செய்து இந்த வழியாக...'

அவருக்கு இடது பக்கத்திலிருந்த கதவு திறந்தது. அங்கு ஒரு பெரிய கழிவறையைக் கண்டார். அதற்குள் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியிருந்தது. ஒரு பரீட்சிப்பு மேசைஇ இரண்டு சிறிய அலுமாரிகள்இ கதிரைகள்இ ஒரு சிறிய மேசை மற்றும் ஒரு வைத்தியரும் அங்கிருந்தார்| முறுவல் முகத்துடனான கட்டுமஸ்தான நபர்! இந்த இடமும் கூட பரிச்சயமானது போல் இருந்தது. அல்லது அவரது மனம் தடுமாற ஆரம்பித்து விட்டதா என்ன?

'தயவு செய்து இங்கே...' தாதி அவருக்குப் பின்னால் நின்றான்.

'ஆடைகளைக் களையுங்கள்' என்றவாறு அங்கிருந்த டாக்டர் கையுறைகளை அணிந்தார்.

அவர் எதுவும் புரியாமல் அந்த டாக்டரைப் பார்த்தார்.

'தயவு செய்து ஆடைகளைக் கழற்றுங்கள்' அந்த டாக்டர் மீண்டும் சொன்னார்.

'என்னுடைய ஆடைகளையா கழற்றச் சொல்கிறீர்கள்?' ஒருவாறு தயக்கத்துடன் கேட்டார்;.

'ஆம்!'

தாதி அவரது கோர்ட்டை எடுத்து வெண்ணிறக் கொழுவியில் வைத்தான். மேலாடைகளைக் களைவதில் ஒத்தாசை செய்தான். கழுத்துப் பட்டி, பனியன் என்பனவற்றைக் கழற்றும் வேளை அவனது முகத்தின் இலகுவான ஒரு புன்னகை இருந்தது. மேலாடைகள் யாவும் களையப்பட்டன. அவரது மேலுடம்பு முழுவதையும் வெண்ணிற ரோமங்கள் மூடியிருந்தன. ஆனால் அவரது கரங்களில் உள்ள ரோமங்கள் கறுப்பானவை. தாதி அவரது காற்சட்டைப் பட்டியை அவிழ்த்த போது அவர் ஆச்சரியப்பட்டார்.

அங்கிருந்த டாக்டரைக் கெஞ்சும் பார்வையுடன் அவர் பார்த்த போது அவர் அங்கிருந்த தொலைக் காட்சியில் கடல் பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அப்போது ஒரு பெரிய சுறா ஆபத்தற்ற ஒரு பிராணியை முரட்டுத் தனமாகத் தாக்கிக் கொண்டிருந்தது. தாதி லாவகமாக அவரது காற்சட்டையை உருவிக் கொழுவினான். அந்த டாக்டர் தனது பார்வையைச் சுறா மீனிலிருந்து அவர் மீது ஒரு இனிமையான புன்னகையுடன் படிய விட்டார்.

'எல்லாவற்றையும் சேர்!'

அந்த டாக்டர் அவரை சேர் என்று அழைத்ததும் அவரது மாணவர்களில் ஒருவராக அந்த டாக்டர் இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் அவரது பெயரை ஞாபகிக்க அவரால் முடியவில்லை. ஆனால் அவரது பெயரல்ல இப்போது முக்கியம்: அந்த இடத்தில் முழு நிர்வாணமாக நிற்பதுதான்! அது பெரும் அவமானகரமானதாக இருந்தது. அவர் அவரது ஆணுறுப்பைத் தனது கரங்களால் மறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து அந்த டாக்டர் ஒரு சிறிய புன்னகையை வழிய விட்டார்.

இந்தச் செயல்களின் பின்னால் உள்ள அர்த்தம்தான் என்ன? ஓர் ஐந்து நிமிடச் சிறிய விடயம் என்று அந்த இராணுவத்தினன் சொன்னானே...

அந்த டாக்டர் அவரைப் படுக்கையில் கிடத்தினார். தாதி வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தனது ஆணுறுப்பைக் கைகளால் மறைத்தபடி பெரும் மன அழுத்தத்தில் இருந்தார். இரண்டு கமராக்கள் மேலே தெரிந்தன. ஏன் இரண்டு? அநேகமாக ஒன்று எனக்கும் மற்றது அந்த டாக்டருக்குமாக இருக்கும்! அவர் கண்ணை மூடிக் கிடந்தார். இராணுவத்தினன் கமராக்கள் பற்றியும் யாருடனும் பேசாமல் இருக்கும் படியும் சொன்னவற்றை ஞாபகப்படுத்தினார். அவருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் அந்த டாக்டர் வாயை அகலத் திறக்கும் படி சொன்னார். அவர் 'ஆ' என்று விரித்தார். கமராக்களைப் பார்ப்பதை அவர் தவிர்த்தார். தானே ஒரு வைத்தியராக இருக்கும் போது எதற்காக தன்னைப் பரிசோதிக்க வேண்டும்? என்ற கேள்வி தோன்றியது.

பரிசோதனையை முடித்த டாக்டர் அவரைப் புரண்டு படுக்கும் படி கேட்டார்.

என்னவொரு வெட்கம் இது! வயிற்றில் பாரம் கொடுத்தபடி புரண்டார். பிரச்சினை அந்த டாக்டரோடு அல்லவே! டாக்டர் தனது ஸ்தெதஸ்கோப்பை உடலில் ஆங்காங்கே வைத்துப் பார்த்தார். பரிசோதனை முடிந்த உடனேயே ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

'ஒரு நிமிடம் சேர்!'

அந்த டாக்டர் அவரது குதத்தில் தனது விரலைச் செருகிப் பார்ப்பது அவருக்குப் புரிந்தது. அவர் எத்தனையோ பேரை அப்படிப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் தனக்கு ஏன் இந்தப் பரிசோதனை?
'அவ்வளவுதான் சேர்!'

கட்டிலிலிருந்து கீழே குதித்தார். அவருக்கு யாருடனாவது பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் இராணுவத்தினன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவர் தனது ஆடைகளை நோக்கி நகர்ந்த போது அந்த டாக்டர் அவரைத் தடுத்தார். அடுத்த வினாடி தாதி அவருக்கு ஒரு பருத்தி மேலாடையை அணிவித்தான். அதற்குப் பொருத்தமான கீழ் உள்ளாடையையும் வெண்ணிறச் சப்பாத்தையும் அவருக்குக் கொடுத்தான். அவற்றை அணிவதற்குத் தாதி உதவி செய்தான்.

பரிசோதனைக் கூடத்திலிருந்து அவர்கள் வெளியேறி கருப்புக் கண்ணாடிகளிலான அறை ஒன்றுக்குள் நின்றார்கள். தாதி அவரை அடுத்த அறைக்குச் செல்லுமாறு பணித்தான். அவர் அந்த அறையைத் தாண்டியதும் கதவு தானாகவே மூடிக் கொள்ள அவர் நின்றது பெரிய ஓர் அறையாக இருந்தது. அதையும் தாண்டி அடுத்த அறைக்குள் நுழைந்த போது மற்றொரு கண்ணாடி அறை இருந்தது. அதையும் தாண்டி அவர் சில எட்டுக்கள் வைத்த போது அது மிகவும் விசாலமான பெரிய மண்டபம் போல் அமைந்த அறை. அந்தப் பெரிய விஸ்தாரமான அறையின் நடுவே ஒரு மனிதர் பச்சை நிறப் பட்டு இரவுடையில் தொட்டில் கதிரையில் சாய்ந்திருந்தார். அவருக்கு முன்னாலிருந்த சுவரில் பொருத்தப்பட்டிருந்த மிகவும் விசாலமான தொலைக் காட்சித் திரையில் இரண்டு மாமிச மலைகள் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அவர் மிகவும் அமைதியாக ஓய்வெடுப்பது போல் இருந்தது. அவரது கண்கள் மூடியிருந்தன. டாக்டர் அப்பெரும் புள்ளியைக் கூர்ந்து பார்த்து அடையாளம் கண்டு கொண்ட அடுத்த கணம் அவர் ஏறக்குறைய உறைந்து போனார். சாய்ந்திருந்த தொட்டிற் கதிரை ஆடிக் கொண்டிருந்தது. அவரால் அப்பெரும்புள்ளியின் நிறத்தை; தெளிவாகப் பார்க்க முடிந்தது. வெளிர் பழுப்புஇ வெளிர் மஞ்சள்இ மற்றும் நீலம் ஆகியவற்றின் கலவை அது. அந்த அறையிள் ஒரு கோடியில் பிரமாண்டமான ஒரு கட்டில் கிடந்தது. அதற்குப் பின்னால் புத்தகங்கள் அடுக்கப்பட்ட ஒரு புத்தக அலுமாரி. மற்றொரு கோடியில் பிரம்மாண்டமான ஒரு மீன் தொட்டி. அதில் பல்வேறு வகையானதும் நிறங்களிலுமான மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.

டாக்டர் தன் உணர்வுகள் கட்டுப்படுத்த முடியாமல் மேலும் மேலும் இறுக்கமடைவதாக உணர்ந்தார். சாய்ந்திருந்த அந்தப் பெரும் புள்ளி அதிர்ஷ்டவசமாகப் பேசத் தெடங்கினார். ஆனால் அவரது கண்கள் மூடிக் கிடந்தன.

'தொட்டுக் கொள்ளாமலும் நாய் விசர் நோய் தொற்றிக் கொள்ளுமா?'

அப்பெரும் புள்ளியின் வார்த்தைகள் காதில் சரியாக விழவில்லைப் போலத் தோன்றிற்று. பெரும்புள்ளியின் சொற்கள் தெளிவானவை. குரலில் கம்பீரம். ஆனால் அவர் சரியாக எதைக்குறித்துக் கேட்கிறார்?

'மன்னிக்கவேண்டும். புரியவில்லை!' வார்த்தை உளறலாக வெளியானது.

சாய்ந்திருக்கும் அந்தப் பெரும் புள்ளியின் கண்கள் மூடியேயிருந்தன. அவர் டாக்டரையோ சண்டை நடந்து கொண்டிருந்த தொலைக்காட்சித் திரையையோ அல்லது நீண்ட நேரம் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கருஞ் சிவப்பு நிறமீன்களையோ பார்க்கவில்லை!

'வைரஸ் கிருமி காற்றில் பரவுகிறதா?' பெரும்புள்ளி கேட்டார். கண்கள் மூடியேயிருந்தன.

'அது இடைவெளியைப் பொறுத்தது!'

'எனக்கும் உங்களுக்குமான இடைவெளி போல்?'

'பத்து வீதம் சாத்தியம்!'

'விசர் நாய்வெறி எப்படி?'

'எப்படியென்றால்....?'

'விசர் நாய்வெறி தொடுகை இல்லாமல் தொற்றுமா?'
'இல்லை!'

'ஒருவருடன் கைகளைக் குலுக்கிக் கொள்வதற் மூலம் வைரஸ் பரவுமா?'

'இல்லை!'

'நீங்கள் நிச்சயமாகச் சொல்கிறீர்களா?'

'நிச்சயமாக!'

ஓய்விலிருக்கும் அப் பெரும்புள்ளி ஒரு வினாடி கண் திறந்தார். அவரது கண்கள் சிகப்பு நிறமாக இருப்பதை அவர் அவதானித்தார். அது அநேகமாக அவர் உறங்காமல் இருந்ததால் ஏற்பட்டிருக்க வேண்டும். திரையில் ஒரு மல்யுத்த வீரன் மற்றையவனின் பின்னால் நின்று வெற்றிக் களிப்போடு ஆடிக் கொண்டிருந்தான். மீன் தொட்டிக்குள் இருந்த அந்த இரண்டு கருஞ் சிகப்பு மீன்களிரண்டும் காணாமல் போயிருந்தன.

டாக்டருக்குப் பின்னாலிருந்த கண்ணாடி அறைக்கதவு திறந்து கொள்ள தூரத்திலிருந்த குரல் கேட்டது.

'டாக்டர்... இந்த வழியாக..'

சந்திப்பு முடிவடைந்து விட்டது என்பதை இந்தப் பெரும்புள்ளி எப்படி அவரது சூழலில் இருப்போருக்குத் தெரிவித்தார் என்பது அவருக்குப் புதிராக இருந்தது. அவர் திரும்பி அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.

பரீட்சிக்கும் அறையில் வைத்தியரையோ தாதியையோ அவரால் காண முடியவில்லை. அவர் அவரது ஆடைகளை அணிந்து கொண்டார். அவருக்கு அழுகை எட்டிப் பார்த்தது| கமராக்களை நினைத்து அடக்கிக் கொண்டார். அவரது சப்பாத்துக்களின் நாடாவைக் கட்டிக் கொண்டிருக்கையில் தாதி உள்ளே நுழைந்தான்.

'இந்த வழியாக....'

'எங்கே போக...?'

'வீட்டுக்கு!'


சந்தோஷத்துடன் அந்த அறையிலிருந்து அடியெடுத்து வைத்தார். அழுகைக்கான வெளிப்பாட்டுணர்வு இன்னும் அவரை உறுத்திக் கொண்டிருந்தது!

குறிப்பு:
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சத்தாம் ஹூஸைனின் ஒன்று விட்ட சகோதரர்களான பர்ஸான், வத்பான் ஆகியோர் அரச அதிகாரிகளாகவும் கட்சி முக்கியஸ்தர்களாகவும் இருந்தவர்கள்.

 

ashroffshihabdeen@gmail.com