ஏழு தீக்குச்சிகள் (வாங் யுவான்ஜியன்)

                

சீனச் சிறுகதை (ஆங்கிலத்தினுடாக)    -    தமிழில்: ஜெயந்தி சங்கர்

மூல ஆசிரியர் குறிப்பு

1922ல் ஷhங்தோங்கில் பிறந்த வாங் யுவான்ஜியன் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கலாசாரக் குழுவில் இடம் பெற்றார். விடுதலைக்குப் பின்னர் 1952ல் இராணுவப் பத்திரிக்கைக்கு ஆசிரியர் ஆனார். சில முக்கிய தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டார். 1954ல் எழுத ஆரம்பித்தார். சில சிறுகதைத் தொகுப்புகள் தவிர சில திரைக்காட்சிகளும் எழுதியுள்ளார்.


வுpடியற்காலையில் மழை ஓய்ந்தது. புல்பிரதேசத்தின் வானிலை மிகவும் விநோதமாக இருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் முன்னர் தான் வானம் நிலவொளியில் தெளிவாக இருந்தது. ஆனால், திடீரென்று புற்றரையிலிருந்து கிளம்பியதைப் போல கனத்த மேகத்துடன் ஒரு குளிர்காற்று எழுந்து வானை நிரப்பியது. பிறகு, கொட்டைப்பாக்களவு பனிக் கட்டிகளுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.

சிவப்புப்படை வீரன் லூ ஜிங்யோய் மரங்களிடையேயிருந்து தலையை நீட்டி சுற்றிலும் பார்த்தான். புற்றரையெங்கும் ஒரே மழைநீரும் பனிக்கட்டியுமாக இருந்தது. புயலில் அடிக்கப்பட்டு சேற்றில் சாய்ந்து கிடந்த காட்டுப்புல் பூதாகாரமான பெரிய ஒரு சீப்பின் மீது வளர்ந்திருப்பதைப் போல மிhன்னியது. பாதையைக் காண்பதே கடினமானது. வானம் இன்னும் மேக மூட்டமாகவே இருந்தது. அடிக்கடி ஆலங்கட்டி மழை பெய்தது. விழுந்த கட்டிகள் சேற்றுப் பச்சையில் இருந்த சிறு குளங்களின் நீரைத் தெறித்தன.

லூ சோர்வைக் குலுக்கி விலக்கினான். அவனின் கெண்டைக் காலில் ஏற்பட்டிருந்த காயம் மோசமான நிலையிலிருந்தது. ஆகவே, அவன் பின் தங்கிவிட்டிருந்தான். இரண்டு நாட்களாகிவிட்டிருந்தன. இரவு பகலாக நடந்து மற்றவருடன் சேர்ந்து கொள்ள அவனும் முயன்றபடியிருந்தான். இன்றேனும் முடியும் என்று கணக்கிட்டிருந்தான். ஆனால் பாழாய்ப்போன புயல் வந்து காரியத்தைக் கெடுத்தது. அவன் தாமதமானான்.

வானிலையைச் சபித்துக் கொண்டே சதுப்புத் தோப்பினுள்ளிருந்து வெளியானான். வலுவையெல்லாம் திரட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். குளிர்காற்று அவனை நடுங்க வைத்தது. அப்போது தான் தன் ஆடைகள் அனைத்துமே தொப்பலாய் நனைந்திருப்பதை உணர்ந்தான்.

உட்சட்டையைத் திருகிப் பிழிந்த படியே, காற்சட்டையின் மீது கொட்டும் நீரையே பார்த்தான். கொஞ்சம் என்னைக் காயவைத்துக் கொள்ள ஒரு கணப்பு மட்டும் இருந்தால்... என்று நினைத்துக் கொண்டான். ஆனால், அது வெறும் கனவு என்று அவனுக்குக் தெரியும். நேற்று முன்தினம் தன் சகாக்களுடன் அவன் நடந்து கொண்டிருந்த போது அவர்களை தங்களின் ரேஷன் மாவை அப்படியே பச்சையாகச் சாப்பிடச் சொன்னார்கள். ஏனெனில், ஒரு தீக்குச்சி கூடமிச்சமிருக்கவில்லை. அவர்களின் கையிருப்பு எல்லாம் முடிந்து போயிருந்தது.

இருந்தும், அவன் அனிச்சையாகத் தன் காற்சட்டைப் பையில் கைவிட்டான். ஏதோ பிசுபிசுவென்று தட்டுப்பட்டது. மகிழ்ச்சியுடன், பையை உள் வெளியாகத் திருப்பிப் பார்த்தான். கொஞ்சம் மிச்சமிருந்த பார்லி மாவு மழை நீரோடு சேர்ந்து ஒரு உருண்டையாகிப் போயிருந்தது. எல்லாவற்றையும் திரட்டி உருட்டினான். ஒரு கோழி முட்டையளவு தேறியது. நன்றாகப் பிசைந்து நீண்ட இழையாக இழுத்தான். மீண்டும் உருண்டைகாக்கினான். நேற்றே இதைக் கண்டு பிடிக்காது போனோமே என்று ஆண்டவனுக்கு நன்றி கூறினான்.

இருபத்திநான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஒன்றுமே சாப்பிடவில்லை அவன். இப்போது இவ்வுணவைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பசித்தது. கிளம்பிய பசியைச் சகிக்க முடியாது போலத் தோன்றியது. எல்லாவற்றையும் ஒரே வாயில் தின்று விடமாட்டான். மீண்டும் இழுத்தான் நீளமாக. முதல் வாயைத் தின்னப் போகும் கணத்தில், சன்னமாக ஒரு குரல் ஒலிக்கக் கேட்டான். 'காம்ரேட்,....' அந்தக் குரல் மிகவும் சோர்வுடன் மிகமிக மெல்லியதாக தரையிலிருந்து கிளம்பி வருவதைப் போல் ஒலித்தது. சட்டென்று நின்று நிதானித்தான். ஒலி வந்த திசையில் மெல்ல நகர்ந்தான்.

இரண்டு சாக்கடைகளை நொண்டிய படியே கடந்து போய் ஒரு சிறு மரத்தை அடைந்தான். மடங்கிய நிலையில் பாதி உட்கார்ந்து மரத்தின் மீது சாய்ந்திருந்தான். அவனின் கீழுடற் பாகம் கிட்டத் தட்ட முழுமையாகவே சேற்றில் அமிழ்ந்திருந்;தது. கொஞ்ச நேரமாகவே நகர முடியாதிருந்திருக்கிறான் என்று புரிந்தது. மிகவும் ஆச்சரியத்தக்க விதத்தில் வெளிறிக் காணப்பட்டான். மழை அவனின் கேசத்தை நெற்றியோடு ஒட்டியிருக்கச் செய்திருந்தது. தலையிலிருந்து மழை நீர் ஒழுகி கன்னங்களில் வழிந்து நிலத்தில் விழுந்தது. குழி விழுந்த கண்கள் இறுக மூடியிருந்தது. அவனின் தொண்டையும் வெடித்த உதடுகளும் மட்டுமே அசைந்தன.

'காம்ரேட்,.. காம்ரேட்,...'

லூவின் காலடி ஓசை கேட்டதுமே, தன் கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தான். எழுந்து அமர முயற்சித்துத் தோற்றான். லூவின் கண்கள் விரிந்தன. அவன் சேனையிலிருந்து பிரிந்த இந்த இரண்டு நாளில் காயம் பட்டு, பின் தங்கிய மூன்றாவது வீரன். பசியிலிருப்பான்! லூ நினைத்தனான். சட்டென்று முன்னால் நகர்ந்து, தோளைச் சுற்றிக் கையைப் போட்டு கை தாங்கலாக அவனை எழுப்பினான். பார்லி மாவைக் கொஞ்சம் எடுத்து அவனின் உதடுகளில் காட்டி, 'சாப்டுங்க காம்ரேட், சாப்பிடுங்க!', என்றான். மினுக்கமில்லாத கண்களைத் திறந்து அந்த வீரன் லூவைப் பார்த்தான். கையைத் தட்டி விட்டான். மீண்டும் அவனின் உதடுகள் துடித்தன. பற்களிடையே சொற்களை சிரமப்பட்டு உதிர்த்தான்.

'இல்லை,... பயனில்லை,.....'

லூவின் கரம் அந்தரத்தில் நின்றது. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு. பனி மழையிலும் குளிர் மழையிலும் நனைந்து நீலமாகிப் போயிருந்த அந்த முகத்தைப் பார்த்தான். ஒரு சிறு நெருப்பு மட்டும் இருந்தால், ஒரே ஒரு கோப்பை சுடுநீர் போதும் இவன் உயிரைக் காப்பாற்ற. லூ மிகவும் கவலையோடு யோசித்தான். தலையை நிமிர்த்தி யோசித்தவன் சூன்யத்திற்குப் போய் விட்டான். பிறகு, அவ்வீரனின் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

'வாங்க போவோம். நடங்க, நான் பிடிச்சிக்கறேன்.'

அவன் தலையை ஆட்டி மறுத்தான். தன் வலுவையெல்லாம் திரட்டி தன் கண்களைத் திறந்தான். தன் வலக் கரத்தால் தன் இடது அக்குளைச் சுட்டிக் காட்டி, அவன் ஏதோ சொன்னான். 'இங்கே,... இங்கே!,...' குழப்பத்துடன் லூ தன் கையை அவ்வீரனின் ஈரமாகியிருந்த உட்சட்டைக்குள் விட்டான். அவனின் மார்பும் ஆடைகளும் பனியாய்க் குளிர்ந்தது. அக்குள்ளினுள் ஒரு காகிதப் பொதி கிடைத்தது. லூ அவனின் கையில் வைத்தான்.

நடுங்கும் விரல்களால், அவ்வீரன் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான். அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அடையாளக் கையேடு ஒன்று இருந்தது. அதற்குள் ஒரு சிறு தீக்குச்சிப் பொட்டலம். சிவப்பு நுனிகள் எல்லாமே கட்சியின் சிவப்பு முத்திரையுடன் நெருப்பைப்போலத் துலங்கின. 'காம்ரேட்,... இங்கே பாருங்கள்,....' என்று வீரன் லூவை அருகில் அழைத்தான். பிறகு, மெதுவாகவும் கவனமாகவும் தீக்குச்சிகளை எண்ணினான். குரல் மிகவும் பலகீனமாக ஒலித்தது. 'ஒன்று இரண்டு, மூன்று,.....'.

ஏழு தீக்குச்சிகளை எண்ணி முடிக்கவே அவனுக்கு நிறைய நேரமெடுத்தது. எண்ணி முடித்ததுமே, 'புரிகிறதா காம்ரேட் உங்களுக்கு?', என்ற கேள்வி தொங்கி நிற்கும் பார்வையை லூவின் மீது வீசினான்.

'ஆம், புரிகிறது!' லூ மகிழ்ச்சியுடன் தலையாட்டிக் கொண்டே கூறினான். ஒன்றும் சிரமமாக இருக்காது என நினைத்தான். அடர்சிவப்பு நிற நெருப்பை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். லூ தன் கையில் தாங்கியிருந்தான் அவ்வீரனை.

அக்கணத்தில் அவ்வீரனின் முகம் தளர்வதைக் கண்டான். சோர்ந்திருந்த அம்முகத்தில் ஒரு அலாதி நிறைவு. மிகவும் பவ்யமாக, ஏதோ ஒரு நீர் தளும்பும் பாத்திரத்தைப் கொடுப்பதைப் போல லூவின் கையில் தன் உறுப்பினர் குறிப்பேட்டுடனான அப்பொட்டலத்தைத் தந்தான் வீரன். லூவின் கையையும் சேர்த்து அழுத்திப் பிடித்தான். அவனின் கண்கள் லூவின் முகத்திலே நிலைத்திருந்துது.

'மறந்துடாதீங்க. இவை எல்லாம் காம்ரேடுகளுக்கு உரியது', என்ற படியே கையை விலக்கிக் கொண்டு விட்டான். நீண்ட பெருமூச்சு விட்டபடியே வலுவையெல்லாம் திரட்டி வடக்குத் திசையைச் சுட்டி, 'நல்லது, காம்ரேட். அவர்களிடம் கொடுங்கள்,.....', என்றான்.

அங்கே சொற்கள் நின்று போயின. வீரனின் முழு எடையும் தன் கைகளில் இறங்குவதை லூ உணர்ந்தான். அவன் கண்கள் பனித்து மங்கின. தூரத்து மரங்கள், பக்கத்து புற்கள், ஈர ஆடைகள், இறுக மூடிய கண்கள்,..... எல்லாமே புல்பிரதேசத்தைப் போலவே மூடுபனியினுள். அந்தக் கரம் மட்டும் உயரே அந்தரத்தில், தெளிவாக படை முன்னேறிக் கொண்டிருந்த வடக்கு நோக்கி.....

லூ மீதமிருந்த பயணத்தை விரைவாகவே முடித்தான். இருட்டும் முன்னர் சேனையைப் பிடித்து விட்டான்.

பிறகு, முடிவற்ற இரவின் இருளில், ஒரு நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களைக் காற்றிலும் மழையிலும் சேற்றிலும் கழித்திருந்த வீரர்கள் கணப்பைச் சுற்றி நின்று பேசி சிரித்து மகிழ்ந்தனர். அவர்களின் ஈர ஆடைகளிலிருந்து ஆவி மேலேழுந்தது. அவர்களின் சாப்பாட்டுத் தட்டில் காட்டுக் கீரையும் மூலிகையும் சுடச்சுட மணத்தது.

லூ அமைதியாக சேனைத் தளபதியை நோக்கிப் போனான். கணப்பின் ஒளி அவன் கைகளில் பிரதிபலிக்க, நடுங்கும் விரல்களால் கட்சி உறுப்பினர் அடையாளக் கையேட்டையும் மீதமிருந்த ஆறு தீக்குச்சிகளையும் நீட்டினான். வீரனை நினைத்துக் கொண்டு துயரக்குரலில் எண்ணினான். 'ஒன்று, இரண்டு, மூன்று,.....'.




                                                                                                                            ஆங்கில மொழிபெயர்ப்பு:
Sidney Shapiro (20 Jan 1958)



jeyanthisankar@gmail.com