ஒரே இரத்தம் (சிங்கள மொழிக்கதை)

ஜே.ஷீலா விக்கிரமரத்ன

தமிழாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்


லயன் வரிசைப் பக்கத்தில் பெருத்த கலவரம். மற்றைய நாட்களில் இல்லாத விதமாக அச்சம் கலந்த தன்மையில் தமிழ்ச்சொற்களும், இருந்திருந்து ஒரு தடவை சிங்களச் சொற்களும் கேட்டன. நான் ஜன்னலின் பாதியைத் திறந்தேன். வீட்டிற்குக் கீழே இருந்த லயம் வரிசையில் முதலில் எனக்குத் தெரிந்தது தொலைவில் தேயிலைப் பற்றைகளுக்கு இடையே கெதிகெதியாக ஓடிவந்து கொண்டிருந்த தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களையே. முதுகிலே தொங்கிய கூடைகள் அங்குமிங்குமாக அசைந்தும் பற்றைகளுக்குள்ளும் மலையின் கீழும் வீசப்படும் விதமாக தேயிலைப் பற்றைகளோடு ஒட்டி ஒட்டி அவற்றில் தொங்கியவாறு மலையிலிருந்து கீழே ஓடிவருகின்ற அவர்களது முகங்களில் சந்தேகம் கலந்த பார்வையே தென்பட்டது. மட்டம் செய்யப்பட்ட மரங்களில் குந்திக் குந்தி கான்களிடையே பாய்கின்ற சில வயோதிபப் பெண்கள் பாதங்கள் வழுக்கி விழும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன.

ஏதோ ஒரு வித்தியாசம் உள்ளது பற்றித் தெரிந்தாலும், லயம் வரிசையில் நடைபெறுகின்றவைகள் சரியான விதமாகத் தெரியாதது அது எங்களின் வீட்டிற்குக் கீழே என்பதனால். நான் அடுத்த பாதி ஜன்னலையும் திறந்து எழுந்து பார்த்தேன். நீலமணி ஆட்கள், கந்தையா ஆட்கள் சாமான் பொதிகளைத் தூக்கியபடி அங்கும் இங்கும் ஓடுவது கலவரத்தோடு.

நான் சரத்தை அணிந்தபடியே அறையைவிட்டு வெளியேறி விறாந்தைக்கு வந்தேன். 'பெரிய தம்பி, லயத்திலை உள்ள தமிழ்ச்சனங்களை வெளியேறச் சொல்லியாம்' அக்கா கூட்டிக் கொண்டிருந்த விளக்குமாற்றை ஒரு கையில் பிடித்தபடி வாயைத் திறந்தவாறு லயம் பக்கத்தையே பார்த்தவாறு இருந்தாள்.

'யார்?' நான் கேட்டேன்.

'எல்லா வீடுகளுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்களாம். இன்று மாலைக்கு முன்பாக வெளியேறும்படி'. விளக்குமாற்றை செல்வரத்தை மரத்தில் சாத்திவைத்த அக்கா கற்படிகளில் இறங்கியவாறு லயப் பக்கமாகப் போனாள். எனது பார்வை கோவிந்தனின் லயத்தின் பக்கம் நேராகச் சென்றது. மற்றைய நாட்களில் கதவின் கீழ் பாதி மாத்திரம் திறந்திருக்கும். அங்கு இன்று அடுப்பங்கரை வரை தெரியும்விதமாக வாயில்கடை திறந்து இருக்கிறது. தலையணைகள் இரண்டையும் பனை ஓலைப் பாயையும் தலையில் உயர்த்திப் பிடித்தபடி செல்லமணி எங்கள் பக்கம் பார்த்தபடியே வெளியே வந்தாள். முன்னால் வந்துகொண்டிருந்தது கீழ் தோட்டத்து கிரியன்பா மாமா.

'பாரடா மகன், லயத்து மனுசங்களுக்கு போகச் சொல்லிக் கடிதங்கள்கொடுத்திருக்காம். ஐயோ பாவம்! அதுகள் அன்றைக்கு இருந்து இங்கேயே இருந்ததுகள் தானே... எங்கை போறது?' லயம் வரிசைப் பக்கம் பார்த்தவாறே அவர் கூறினார்.

'இப்ப நாட்டிலை கரைச்சல் முடிஞ்சது என்று நான் நினைச்சன்.....' அக்கா வாயில் வந்ததைச் சொன்னாள்.

'அந்தக் காலத்திலை சிங்கள, தமிழ்ச் சனங்கள் எவ்வளவு நன்றாக சகோதரங்களாக இருந்ததுகள்? எப்பவாவது இதுபோன்று அடிச்சுக் கொண்டாங்களா?' கொஞ்சம் வேகத்தோடு எனக்குக் கூறினார். லயவரிசைகளில் வீடு வாசல்களில் உரப்பைகளில் அவர்களது வீட்டுப் பொருட்கள், கறுத்த மட்பாண்டங்கள், சிறிய விறகுக்கட்டு, காய்ந்த தேயிலை மிலார்கள், பனை ஓலைப் பாய்கள் இவைகளைக் காணுகின்றபோது எனக்குள்ளே பலமான சோகம் ஏற்பட்டது. ஆயினும் நாங்கள் என்ன செய்யமுடியும்? லயத்தில் இருக்கும் எல்லோரும் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். எங்களது வீட்டுக்கு ஏழெட்டு கற்படிகளுக்குக் கீழே அமைந்திருந்த லயத்தைச் சேர்ந்தவர்கள். தெரிந்த காலம் தொட்டு எங்களோடு எதிராக இல்லை.

சில நாட்களில் லயத்தில் அதிகமானோர் குடிப்பதற்கு நீர் கொண்டு செல்வது எங்களது பீலியில் இருந்தே.

எங்களது அக்காவும் பீலித் தண்ணீரில் பிரச்சனை வரும்போது சில நாட்களில் லயத்தின் குழாய்க்குச் சென்று தண்ணீர் கொண்டு வருவார். அது சிலவேளைகளில். ஆனால் அம்மா அடிக்கடி சொல்வது, லயத்து குழாயடிக்குப் போகாமல் மேலே களுமெனிக்கேயின் ஆட்களது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்படி. எங்களது அம்மாவுக்கு அகங்காரத் தன்மை பிறப்பில் இருந்தே உள்ளதொன்று. அம்மா நோய் வாய்ப்பட்ட வேளையில் கார் ஒன்றைக் கொண்டு வருவதற்குக் கூட பெல்கஹதன்னவுக்கு அக்காவுடன் போனது கோவிந்தன், செல்லமணிதான். செல்லமணியின் அம்மா காசநோயினால் இறந்ததும் எங்களுக்கு ஞாபகத்தில் உள்ள காலத்தில்தான். அவள் நோய் துன்பம் பாராது வெய்யில் மழை பாராது, தேயிலைத் தளிர் கூடைகளைச் சுமந்துள்ளாள். சரியான விதமாக சாப்பாடு தண்ணி இல்லாதபடியால்தான் அவள் இறந்து போனாள் எனக் கொழுந்துகொய்யும் பெண்கள் கூறினார்கள். சரியான விதமாகச் சிகிச்சை இல்லாததாலேயே அவளது மரணம் விரைவாக வந்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

எப்படியாயினும் அவளது மரணத்தின் பின் தனியாகிப்போன கோவிந்தனும் செல்லமணியும் வாழ்வது மிகவும் துக்கத்துடனேயே. கோவிந்தன் இடைக்கிடை அயலவர்களின் வீடுகளில் கூலி வேலை செய்து உழைத்தான். சிறிய வருமானம் மாத்திரமே அவர்களுக்கு இருந்தது. ஆகையால் சில நாட்களாகச் செல்லமணியும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்குச் சென்றாலும் அவளுக்கு வேலை கிடைப்பது சில வேளைகளிற்தான். அந்த வாழ்க்கை நிலவரம் பற்றி எனது கருத்து மாற்றமடைந்தது. வேகமாகச் செல்லும் இந்த விதி பற்றி நினைக்கும்போதுதான் அம்மா திடீரென நோய்வாய்ப்பட்டாள். அப்போதுதான் செல்லமணி எங்கள் வீட்டோடு மிகவும் நெருக்கமானாள். எங்கள் அம்மா நோயாளியாகி ஒரே இடத்தில் இருக்காவிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறுசிறு நோய்களுக்கு உள்ளானாள். திடீரென்று கடுமையாகிப் போனபொழுது, அப்பாவும் நானும் வீட்டில் இல்லாதபோது அக்காவும் செல்லமணியும் காரொன்றைக் கொண்டு வந்து அம்மாவை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். அது சென்றவாரம். ஒரு நாள் அப்பாவும் ஒருநாள் நானும் அம்மாவுக்குச் சாப்பாடு தண்ணி எடுத்துக்கொண்டு மாறி மாறி அம்மாவைப் பார்த்தோம். சில நாட்கள் அக்காவும் செல்லமணியோடு போய் உள்ளாள். தோட்டத்து வேலைகளில் பிரயோசனத்தை எடுத்துக்கொள்வதற்குத் தேவையாக இருந்தபடியால் அம்மா கோவிந்தனைக் கவனித்தாலும் செல்லமணியை அந்த அளவிற்குக் கவனத்தில் எடுக்கவில்லை. அக்காவோ நானோ அவர்கள் இருவரையும் விNஷசமாகக் கவனிக்கவும் இல்லை.

லயனில் இருக்கக் கூடியவர்களில் செல்லமணியே அழகானவள் என்று நினைக்கிறேன். சிலவேளைகளில் அது நான் நினைக்கின்ற விதமாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும் இன்றுவரைக்கும் அவள் என்னோடோ நான் அவளோடோ ஒரு சொல்லாவது பேசியதில்லை. அவளது இரு விழிகளும் எனது விழிகளுடன் ஒரே தடவையில் சந்திக்கும்போது, பல தடவைகள் கஷ;டமான நிலைக்கு நான் அறியாமலேயே சுற்றியுள்ளதை நான் உணர்ந்தேன். சில வேளைகளில் எனக்கு அவளோடு கதைக்க வேண்டும் எனத் தோன்றும். ஆயினும் எதைப் பற்றியாவது குறைந்தது இதுபோன்ற எதிர்பார்ப்புகளோடு கூடிய சந்தர்ப்பங்கள் இதற்கு முன்பு ஆரம்பித்திருந்தாலாவது இரு வார்த்தைகளாவது பேசுவதற்கு எங்களுக்கு இடம் கிடைத்திருக்கும். எங்களது லயத்திற்குப் போனபொழுது அங்கு இருந்தவர்களது கூற்றுக்கள் செயல்கள் அதிகரித்தன.

'பாருங்கோ தொரே நாங்கள் எங்கே போறது? தெருவுக்குத்தான் மஹாத்தயா நாங்கள் போகவேணும்!' வேலு தோளில் போட்டிருந்த அழுக்கான துவாய்த் துண்டினால் வெற்றிலைத் துப்பலைத் துடைத்துக் கொண்டான். கவலை நிறைந்த முகங்களை நிலத்தினை நோக்கித் தாழ்த்திக் கொண்ட சிலர் கலவரத்தோடு பொருட்களைக் கட்டிக்கொண்டார்கள். வெளியில் எடுத்தார்கள். இரண்டு மூன்று லயங்கள் இப்பொழுது வெறுமையாகி இருந்தன. சிலர் போய்க் கொண்டு இருந்தார்கள். அக்கா செல்லமணியின் பக்கமாகச் சென்றாள். வெற்றிலை சப்பிச் சிவந்து போயிருந்த இரு உதடுகளையும் இடது கரத்தினால் துடைத்தபடியே கோவிந்தன் என்னை ஏக்கத்தோடு பார்த்தான்.

'கோவிந்த எங்கே போகின்றீர்கள்?' நான் கேட்டேன்.

'போவதற்கு ஒரு இடமும் இல்லை ஐயா. தேயிலைப் பற்றைகளுக்குக் கீழேதான் போகவேணும்!'

'செல்லமணி போவம் எங்கடை வீட்டுக்கு' அக்கா ஒரே தடவையில் கூறினாள். எனக்குள் சிறிய மகிழ்ச்சி ஏற்பட்டது. 'கோவிந்தன் இந்தச் சாமான்களைக் கட்டி எங்காவது வைச்சுப்போட்டு இரவானதும் மெதுவாக எங்கடை வீட்டுப் பக்கம் வாங்கோ' அக்கா என்பக்கம் பார்த்தபடியே மெதுவாகக் கூறினாள். கோவிந்தனதும் செல்லமணியினதும் முகங்களில் ஆச்சரியத்தக்க லட்சுமிகரம் தோன்றியது.

நான்கு பக்கமும் இருண்டுபோயிருந்தன. மற்றைய நாட்களில் லயன்களில் இருந்து வெளியே பரம்பிச் செல்கின்ற பெண்களினதும் பிள்ளைகளினதும் சத்தங்கள் இன்று இல்லை. முழுமையான லயன்களும் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. நான் அக்காவுக்கும் செல்லமணிக்கும் முன்பாக கற்படிகளில் ஏறினேன். வைத்தியசாலையிலிருந்து வந்த அப்பா முற்றத்திற்கு வந்து லயம் வரிசைகளைப் பார்த்தபடியே நின்றார்.

'லயத்து மனுசங்களை போகச் சொல்லிக் கடிதம் கொடுத்திருக்கிறது உண்மையோடா?' அவர் தொலைவில் இருந்தே என்னிடம் வினவினார்.

'ஆம்... அங்கே எல்லாரும் போகமாட்டாங்கள். எங்களது கோவிந்தன் ஆட்களுக்கு போறதுக்கு இடம் இல்லை. இன்றைக்கு தங்கிறதுக்கு அக்கா இடம் கொடுத்திருக்கிறாவோ என்னவோ...'

நான் பக்கம் பார்க்கும்பொழுது அக்கா வந்துகொண்டிருந்தாள். அப்பா அதைப்பற்றி அதிகம் கதைக்காமல் விறாந்தையில் உள்ள கதிரையில் உட்கார்ந்தபடியே பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினார்.

'எப்படி அப்பா அம்மாவுக்கு...' அக்கா முற்றத்தில் ஏறிக்கொண்டே கேட்டாள் செல்லமணியை குசினிப்பக்கம் அனுப்பியவாறு. அப்பா கதைப்பதற்குப் பதிலாக எங்கள் இருவரின் பக்கமும் பார்த்தது மாத்திரமே. எனக்குள் வேதனையும் உண்டாயிற்று. நான் அவருக்குச் சமீபமாகச் சென்று 'என்ன அப்பா?' என்றேன்.

'இன்னமும் ஒப்பரேஷன் செய்ய இல்லை. இன்றும் சிலபேர் வந்திருக்கினம். றேடியோவிலை கேட்டுப் போட்டு இரத்தம் கொடுக்கிறதுக்கு. அவையள் ஒருவருடையதும் பொருந்த இல்லை. கர்மம். சொல்லப்பட்ட இரத்தம் தேடுவதுதான் கஷ;டமா இருக்கு...' அப்பா யோசிக்கத் தொடங்கினார். எங்களுக்குள் திகைப்பும் மலைப்புமான சுபாவமே ஏற்பட்டது.

அம்மாவுக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதென்பதை நாங்கள் சில நாட்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டோம். அதனை ஒப்பரேசன் மூலம் அகற்றுவதை உடனடியாகச் செய்யாவிட்டால் அது வேர்விட்டுப் பரவிவிடும். எங்களது குடும்பத்தார் முன்வந்தாலும் அம்மாவுக்குத் தேவையாக இருந்த 'டீ' நெகட்டிவ் வகை அல்ல எங்களுக்கு இருந்தது. ஆகையால் அப்பாவிடமிருந்தோ அக்காவிடமிருந்தோ என்னிடமிருந்தோ இரத்தம் பெறுவதற்கு முடியவில்லை. அதன்பின்பு வானொலியிலும் பத்திரிகையிலும்கூட ஆபத்தான நோயாளிக்கு இரத்ததானம் செய்யும்படி அறிவித்தும் எவ்வித பலனும் இல்லை. நாட்டின் நிலவரத்தை அவதானிக்கும்போது அது அதைவிட மோசமாக இருந்தது. எங்களுக்கு இப்பொழுது அதைப்பற்றி அல்ல நினைவுக்கு வருவது.

'அப்பா இந்தச் செல்லமணி இரத்தம் தாறதாம்' அக்கா வீட்டினுள் இருந்து வந்தாள் செல்லமணியுடன். 'ஓம் ஐயா... நான் எண்டாலும் அப்பா எண்டாலும் வாறம். பரவாயில்லைத் தானே.... பெரிய அம்மாவை தப்ப வைக்கிறதுக்கு'. செல்லமணி எனக்கு முன்னால் சந்தேகமோ பயமோ இன்றி முதல்தடவையாக கதைத்தது அதுதான். நாங்கள் எல்லோருமே அன்று இரவு அம்மாவினுடைய நோயைப் பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டோம். மறுநாள் காலையிலேயே நாங்கள் அனைவரும் பதுளை ஆஸ்பத்திரிக்குப் போனோம். படுக்கையின் மீதிருந்த அம்மா முழுமையாகத் திறக்காத இருவிழிகளாலும் எங்களைப் பார்த்தாள். இந்த உலகின் ஆசைகளைத் துறந்தவள் போன்று.

'மகன், அக்காவுக்கு நடக்க வேண்டியதுகளைப் பார்க்கவேணும். உங்கள் இரண்டு பேரையும் கண்கள் மாதிரிப் பார்த்தேன். ஆனால் எனக்கு ஒருவருடைய முன்னேற்றத்தைத் தானும் பார்க்க முடியாமல் போயிட்டுது. எனக்கு அதில் அதிஷ;டம் இல்லை' அம்மா சொற்களை உடைத்துச் சொல்லும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியாதிருந்தது.

'எனக்கு த...ண்...ணி' அடிக்கடி தண்ணீர் கேட்டார். அவரது தொண்டை காய்ந்து போயிருந்தது. 'கருமத்தினால் ஏற்பட்ட இந்த நோய்க்கு ஒப்பறேசன் செய்யிறதெண்டு சொல்லி எத்தனை நாட்கள் சாப்பிடாமல் குடிக்காமல் இருந்திருக்கு.... இது சரி என்ற வேலையள் இல்லைப் பிள்ளையள்...'

அம்மா இந்த உலகத்தைக் கைவிட்டதைப் போன்று கதைக்கின்றார். பராமரிக்கும் தாதி ஒருத்தி குழப்பத்தோடு எங்களை நோக்கி வந்ததைக் கண்டு நான் சற்று ஒதுங்கிக் கொண்டேன்.

'எங்கை இந்த நோயாளிதானே புற்று நோய்கேஸ்... வந்த செல்லமணியினுடைய இரத்தம் உங்களுக்குச் சரி.... 'டீ' நெகட்டிவ். இன்றைக்கே ஒப்பரேஷன் செய்யமுடியும்' தாதி அம்மாவினுடைய ரிக்கற்றையும், இன்னும் ஏதோ கடதாசியையும் கையில் எடுத்துக்கொண்டு சென்றாள். அம்மாவின் இரு உதடுகளிலும் எங்கள் மூவரினது உள்ளங்களிலும் சந்தோசம் பொங்கியது. செல்லமணி எங்களை இரட்சிக்க வந்தவள் என நான் நினைத்தேன். அம்மாவை ஒப்பரேஷன் அறைக்கு எடுத்துச் சென்ற பின்பு நாங்கள் வைத்தியசாலைக்கு வெளியே வந்து சவுக்கம் மரத்திற்குக் கீழே உட்கார்ந்துகொண்டது வேறெதும் செய்ய முடியாமையினாலேயே.

மாலையாவதற்கு முன்பு அக்காவும் செல்லமணியும் வீட்டுக்கு வந்ததும் நாங்கள் திரும்ப வைத்தியசாலைக்குச் சென்றோம். அம்மாவுக்குச் சரியான சுயநினைவு இல்லை. ஆனால் முகம் பூராவும் ஆச்சரியப்படும்விதமாக பிரகாசம் இருந்தது. 'பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதிகம் பரவவில்லை. கடவுள் புண்ணியத்தில் இப்ப எல்லாம் சரி. சில நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குக் கொண்டு செல்லமுடியும்'. தாதியினுடைய வார்த்தைகள் எனது வாழ்க்கையை புதிதாக்கியது.

இப்பொழுது அம்மாவுக்குச் சுகம். அவர் முன்புபோலவே உயிரோடு வீட்டுக்கு வெளியே வந்து அங்கும் இங்கும் நடமாடுகின்றார். செல்லமணியும் எங்கள் வீட்டிலேயே ஒரே கூரையின் கீழ் சோற்றை உண்கின்றாள். அவளது உடலில் ஓடுவதும் ஒரே இரத்தம்தானே!

அவளை இந்த வீட்டிற்கு வெளியே அனுப்புவதில்லையென நான் தீர்மாணித்துக் கொண்டேன்.