ஜனவரி 31 ஆம் திகதி   (சிங்கள மொழிக்கதை)

அமரபால கறசிங்கஹ ஆரச்சி

தமிழாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்


நாங்கள் எதற்காக அலுவலகங்களில் எழுதுவதற்காகப் போகவேண்டும்? அப்படிப் போகின்றவர்கள் இராணுவத்திற்கோ பொலிஸிற்கோ போக முடியும் என்றால் இந்த சான்றிதழுக்குக் கொஞ்சம் பெறுமதி இருக்கும்.

சுதந்திரதின விழா முடிவடைந்து பரிசினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போகும் வழியில் சஜீவ இவ்வாறு பத்மசேனவிடம் கூறினான்.

'என்னிடமும் அப்படியொரு எண்ணம் உள்ளது. அப்பிளிக்கேசன் ஒன்று போடுவம்' பத்மசேன மலர்ச்சியயோடு கூறினான். பாடசாலை செல்லும்போது பன்னேகமவில் இருந்து இஹனகமவுக்கு நடந்து சென்றவிதம் சஜீவவுக்கு இன்றுபோல் ஞாபகமாக உள்ளது. புதுவருட விழாவின்போதும் சுதந்திர தின விழாவின் போதும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று களிசான், துணித்துண்டு, சேர்ட் என்பனவற்றை வெற்றிகொண்ட விதத்தினை இன்னமும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது சஜீவவின் மனம் கிளர்ந்தெழுகின்றது. சஜீவவோடு சரிக்குச் சரியாக ஓடுகின்ற ஒருவன் கிராமத்தில் இருந்தானென்றால் அது பத்மசேன மாத்திரமே.

சஜீவ முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டான். நேர்முகப் பரீட்சை நன்று என அவன் நினைத்தான்.

சேர்ட்டைக் கழற்றி சான்றிதழ்கள் சிலவற்றை கையிலே வைத்துக்கொண்டு ஒன்றரை மணிநேரம் அளவில் வரிசையில் நின்றிருந்தான். மார்பின் அகலம் பார்த்தார்கள். 34 அங்குலம், உயரம் பார்த்தார்கள். 5 அடி 7 அங்குலம். இணைத்துக் கொள்ளும் பெரிய அதிகாரி சரியான கம்பீரத்தோடு கதைத்தார்.

முதுகை நேராக நிமிர்த்திக் கொண்டு டக்... டொக்... டக்.... டொக்... என சப்திக்கும் போது பார்க்க ஆசையாக இருந்தது. சரியான கம்பீரத்தோடு... 'நாங்களும் சீருடை அணிந்தால் அப்படித்தான்....' புத்மசேன காதருகே மெதுவாகக் கூறினான். சஜீவவின் சான்றிதழ்களைப் பார்வையிட்ட அதிகாரி நெற்றியைச் சுருக்கி, தலையை நிமிர்த்தி இருதடவை அவனை நன்றாகப் பார்த்தார்.

இராணுவத்தில் என்றாலும் பொலிசில் என்றாலும் சேருவதென்பது இலகுவான வேலை இல்லை. முக்கியமான உயர்ந்த தொழில்களுக்கு தேர்ந்தெடுக்கும்போது பரம்பரைகள் பற்றி ஆராய்ந்து பார்ப்பார்கள் என சஜீவவிடம் தந்தையார் கூறியிருந்தார். நல்லொழுக்கம் இருந்தால் மாத்திரமே இணைத்துக் கொள்வார்கள். மெம்பர் ஐயாவின் மகன்மார் இருவரினதும் ஒழுக்கம் நல்லதனால் போலும் இராணுவத்திலும் பொலிஸிலும் பெரிய அதிகாரிகளாக இருக்கிறார்கள். முக்கியமான குடும்பங்களுக்கு எப்பொழுதுமே நல்ல கவனிப்பு, சஜீவவுக்கும் மகிழ்ச்சி. தனக்கும் முக்கியத்துவம் இருப்பதாக சஜீவ தெரிந்து கொண்டான். அதுவும் போதாதென்று பல சான்றிதழ்களை இணைத்துக் கொள்ளும் அந்தக் கம்பீரமான அதிகாரி, தன்னை ஊடுருவிப் பார்த்தது...... 'இந்த இளைஞனும் இந்த அளவிற்கு திறமைசாலி' என தெரிந்து கொள்வதற்குதான் என சஜீவ நினைத்தான்.

'இந்த காலத்தில் வீரமுள்ள இளைஞர்கள் இருக்க வேண்டியது படைகளில்தான். வீரமுள்ள பிள்ளைகள் இருக்கின்ற அம்மா அப்பாவும் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் தான்' பன்சலவின் பெரிய ஹாமுதுறு (பிக்கு) பிரித் நூலைக் கட்டிய வேளையில்தான் இவ்வாறு கூறினார்.

தியத்தலாவ பயிற்சி முகாமில் நடைபெற்ற கலைந்து செல்லும் நிகழ்வின்போது அம்மா, அப்பா, தம்பி, தங்கை நால்வரும் வந்திருந்தார்கள். நல்ல பயிற்சிபெற்ற சிப்பாயாக சஜீவவின் பெயர் சொல்லப்படும்போது அம்மா, அப்பாவின் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தோன்றியது. தங்கையும் தம்பியும் பெருமையோடு கரவொலி எழுப்பினார்கள்.

அம்மாவின் முகத்தில் இருக்கும் சிரிப்பில் சந்தேகம் போன்ற ஒன்றும் கலந்திருந்தது. கண்கள் இரண்டிலும் பெருமையின் பிரகாசத்திற்குக் கீழே அவநம்பிக்கையின் நிழலையும் காணமுடிந்தது. தங்கையினதும் தம்பியினதும் முகங்களில் பிரகாசம் மாத்திரமே தனியாக இருந்தது.

'எதனையும் கவனமாகச் செய்ய வேண்டும் பரந்த பூமியில் இருந்த வண்ணம் ஆகாசத்தின் தொலை தூரத்தை நோக்கு' என்று அப்பா கூறினார். 'பன்சலவின் ஹாமுதுறுவும் அண்ணாவை ஞாபகப்படுத்தினார்' திரும்பிச் செல்வதற்கு ஆயத்தமான வேளையில் தம்பி அவ்வாறு கூறினான்.

யுத்தம் மீண்டும் கொடிய விதமாக வந்துவிட்டதாக தனியார் வானொலி ஒன்றின் மூலமே முதலில் பிரச்சாரப்படுத்தப்பட்டது. பயங்காரவாதிகளுக்கு உரிய முக்கிய வரிசை பயிற்சி முகாம் ஒன்று முழுவதுமாக அழிக்கப்பட்டதாகவும் பயங்கரவாதிகள் அதிகமானோரின் இறந்த உடல்கள் இடத்துக்கிடம் பரவிக் கிடந்ததைக் கண்டதாகவும் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரினால் அறிக்கை வெளியிடப்பட்டு அரச படைகள் மிகவும் அவதானமாக இருப்பதாகவும் பயங்கரவாதிகளை விரட்டிக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும் தொலைக்காட்சியில் காட்சிகளையும் காண்பித்தார்கள்.

'எப்படி இருந்த நாடு இது.... ஏதாவதொரு விலங்குதானும் தெருவோரத்தில் இறந்து கிடந்தாலும் ஐயோ அப்போயி என்றுதான் யாரும் சொல்வார்கள்..' விதானே மஹத்தயா வரம்பை விட்டு றோட்டுக்கு ஏறும்போது சொல்லிக்கொண்டே வந்தார்.

பயங்கரவாதச் செயல்களினால் தானே இந்த எல்லா அழிவும்...'

'அவர்கள் மாத்திரமல்ல இவர்கள் செய்தாலும் பயங்கரவாதச் செயல்கள் பயங்கரவாதம்தான்...' பள்ளி ஆசிரியர் பத்திரிகையில் பார்வையைச் செலுத்தியவாறே கூறினார்.

சஜீவவின் அப்பா சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது வீடு சரியான வெளிச்சம்போல காட்சி தந்தது. கனகாலத்திற்குப் பிறகு வீட்டினுள்ளே பலமாகப் பேச்சுச் சப்தம் கேட்டது. கடவுள் செயல் சஜீவ வீட்டுக்கு வந்திருந்தான். சஜீவவின் முகத்தைக் கண்டபோது அப்பாவின் வதனத்தில் மலர்ச்சி தோன்றியது.

'நான்கு நாட்களே விடுமுறை தந்தார்கள்.... வீட்டுக்கு போய் வா என்று கூறி... மீண்டும் இடத்துக்கு இடம் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று கடற்படையின் டோரா படகு ஒன்றை தாக்கி அழித்துவிட்டார்கள்' சஜீவ அதனைக் கணக்கில் எடுக்காத விதமாகக் கூறினான்.

'ஏன் இன்றைக்கோ நாளைக்கோ யுத்தம் முடியும் என்று சொன்னாங்களே...' அப்பா எழுந்தமானத்தில் சொல்லவில்லை என்பதை சஜீவ அறிவான். சமாதான முயற்சி உடைந்து விழுந்தது எப்படி என்பதை சஜீவவும் அறியமாட்டான்.

சமாதான முயற்சி முடிவடைந்து விட்டது. இப்பொழுது அங்கே யுத்தம்... நாங்களும் ஒப்பரேஷன் ஒன்றுக்கு போவதற்கு தயாராகின்றோம்...' சஜீவ அப்படிக் கூறும்போது அம்மா அப்பாவின் பக்கம் பார்த்தார். அப்பா அம்மாவின் பக்கம் பார்த்தார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'ஒப்பரேஷன் செய்ய..? இருக்கிற கஷ;டம் என்ன...?' அம்மாவும் அப்பாவும் ஒரே தடவையில் கேட்டார்கள்.

'அது சுகயீனத்திற்கு அல்ல. ஒப்பரேஷன் என்பது யுத்தத்தை ஆரம்பிப்பதைச் சொல்வது...'

'ஏன் பிள்ளை... யுத்தத்தை நிறுத்திப் போடுவதற்கு பேசுகிறார்கள் என்று சொல்லி வாய் மூடமுன்னம் மீண்டும் யுத்தம்... என்னத்திற்காக மீண்டும் இந்த யுத்தத்தை ஆரம்பிப்பது...?' அப்பாவினுடைய குரலில் கடுமை அதிகரித்ததைப் போன்று தோன்றியது. 'அப்பாக்களுக்கு இன்னும் தெரியவில்லை... அவங்கள் அடிப்பாங்கள்... நாங்களும் அடிப்பம்... இருதரப்பும் அடிபடுவம்.... நிறுத்துவம்'

'எங்களுக்கு தெரிகிறது ஒன்றுதான்... நாங்கள் எப்பவும் இருப்பது நெருப்பிலை. இந்த நெஞ்சத்திலை பற்றி எரியிற நெருப்பு அணைய வேண்டும் என்றால் உந்த யுத்தம் முடிவடைய வேணும்' இயலாத தன்மையிலேயே அம்மா இந்த சில சொற்களைச் சேர்த்துக் கொண்டாள். சஜீவவுக்கு அம்மாவினுடைய பேச்சு எங்கோ மிகவும் தொலை தூரத்தில் கேட்பதைப் போன்றிருந்தது.

சஜீவ சுவரின் மூலைச்சுவரில் பின்னப்பட்டிருந்த பழைய சிலந்தி வலையை பார்த்தவாறு இருந்தான்.

சஜீவவுக்கு இராணுவ மருத்துவமனை ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையிலும் எங்கிருந்தாவது யாரையாவது காயப்பட்டவர்களைக் கொண்டு வருவார்கள். இல்லையென்றால் இறப்பார்கள். நாட்டின் பொருட்டு இறப்பார்கள். அவர்களது நாளைய தினத்தை மற்றையவர்களது இன்றைய தினத்திற்காக அர்ப்பணிப்பார்கள்.

அந்நாட்களில் இளநீர் பறிக்கச்சென்று பெருவிரலில் சிறிதளவு வெட்டுப்பட்டுப் போன ஒருவன் வேதனை அனுபவித்த விதம் சஜீவவுக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய வேதனை தனக்கு ஏற்பட்டதைப் போன்று அன்று நினைத்தான். ஆனால் இன்று அதற்கு மேலானவைகளைக் கூட அவன் கணக்கில் எடுப்பதில்லை.

வீடு வாசல்களுக்கு செய்தி அனுப்புவதற்கு நேரம் இல்லை. றைபிளை இலக்கு வைத்தவாறு காட்டின் மத்தியில் தொடர்ச்சியாக நாட்கணக்கில் இருக்க வேண்டும். சிறுநீர் கழிப்பதும் மறைந்து அல்லது பெரிய மரத்தில் சாய்ந்தவாறு. அப்படியான நேரங்களில் எத்தனை ஆடைகளைத் தளர்த்துவது? ஆடைகள் கழன்றாலும் றைபிளைக் கைவிட முடியாது. காட்டு மிருகங்கள் ஆடைகளை அணிவதற்கு பழகிக் கொள்ளாதது அவர்களது அதிர்ஷ;டம்.

ஒருநாள் பத்மசேனவும், சஜீவவும் சிறுவயதுக் காலத்தினைப் போன்று முதுகில் முதுகைச்சாத்திக் கொண்டு முடிந்தளவு தூரத்திற்கு மூத்திரம் பெய்து கொண்டிருந்தார்கள். மூத்திரம் தெருவில் இருந்த காய்ந்த சருகுகள் மீது விழுந்த சப்தம் கேட்கும்பொழுது, யாருக்கோ இலக்கு என்பதைப் போன்று மேலும் ஒரு இடத்திற்கு பெய்தார்கள். அதிக வேளைகளில் உணவுகளைச் சாப்பிட்டு விட்டு கை துடைப்பது களிசானிலோ சீருடையிலோதான்.

தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்களுக்கு சீருடை அணிந்திருப்பது சிரமமாக இருக்கும். எந்தவிதமாக என்றாலும் சீருடையை மாற்றிக் கொள்வது விடுமுறை கிடைத்தால் மாத்திரமே. யுத்தத்தின்போது விடுமுறை கிடைக்காது. நாங்கள் விடுமுறை எடுத்தால் இங்கு இருக்கின்ற எல்லாமே எல்லோருக்குமே இல்லாமற் போய்விடும். மழை பெய்யும்போது மழையில் சீருடை நனைந்து போய்விடும். றைபில் பிடியை நனையாதவாறு நிலத்தில் திருப்பிக்கொண்டு இருந்த இடத்திலேயே அப்படியே இருப்போம். எந்தநேரத்தில் இலக்கு வருமோ என்று இரு கண்களினாலும் மாத்திரமல்ல இரு செவிகளினாலும் வழியைப் பார்த்தவாறு இருக்கும்போது ஒரே தடவையில் ஆகாயத்தில் முழங்கிச் செல்கின்ற இடித் தாக்குதல் போன்று வீடு ஞாபகத்திற்கு வரும். ஒளிக் கீற்றினைப் போன்று அம்மா, அப்பா, தங்கை, தம்பி ஆகியோர் தோன்றி கணப்பொழுதில் மறைந்து போவார்கள்.

யுத்தம் முடிவடைந்தால் மீண்டும் கிராமத்தில் புதுவருட விழாக்களுக்கு ஓட்டப் பந்தயத்தில் ஓட முடியும். ஓடி வெற்றி பெற முடியும். சுதந்திர தின விழாவிற்கும் பத்துமைல் ஓட முடியும். கூக்குரலிட்டவாறு அருவியில் குளிக்க முடியும். பத்மாவதி பற்றிய பாடலை பத்மாவின் வீட்டிற்கு கேட்கக் கூடிய விதமாக பாடிய விதம் சஜீவவுக்கு ஞாபகத்திற்கு வந்தபோது இதழின் ஓரத்தில் சிரிப்பும் தோன்றியது. அப்பா, அம்மா, தம்பி, தங்கை உறவினரோடு ஒன்றாக சேருவாவில, நாகதீபம், கோணேஸ்வரம் போன்ற இடங்களுக்கு யாத்திரை போகமுடியும் என சஜீவ நினைத்தான். கடந்துபோன கொஞ்ச நாட்களாக தொடர்ச்சியாக நித்திரையின்றி இருந்தமையால் முகாமிற்கு வந்தவுடன் செய்வது நித்திரை கொள்வது மாத்திரமே.

'யுத்தத்தின் புகை மண்டலம் முடிவடைந்து விட்டது, மன அமைதியோடு வீட்டிற்குச் செல்ல வேண்டும்' என மனதை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த சிப்பாய்களுக்கு மீண்டும் அவதானமாக இருக்குமாறு ஆணை கிடைத்தது. மேலும் படையணிகள் இரண்டு இன்றோ நாiளையோ வடக்கின் யுத்தமுனையோடு இணைந்து கொள்ள கொழும்பிலிருந்து புறப்பட்டது. கடற்படைக்கு கொண்டுவரப்பட்ட படகுகளின் குற்றங்கள் பற்றியும் செய்திகள் வந்தன. உயர்தர எல்லைக்குள் அது மட்டுப்படுத்தப்பட்டது.

நினைத்திராத வேளையைப் போன்று மழைகாலமும் வந்தது. சரியாக சமாதானப் பேச்சு உடைந்து விழுந்து ஒரே தடவையில் யுத்தம் ஆரம்பித்த விதமாகவே மழையும் வந்தது. றைபிளை உடலோடு இறுக்கிப் பிடித்தபடி நித்திரையை மறையச் செய்தார்கள். விநாடிக்கு விநாடி யுத்தமுனைகளில் நிலவரம் கெட்ட விதமாகவே செல்கிறது. இலக்கு பார்த்துப் பார்த்து தாக்குதல் தொடுக்கப்பட்டது. சிறு காடுகள், வயல்வரம்புகளினூடாக மெதுமெதுவாக முன்னேறிச் செல்கின்றார்கள். இப்படிப் போவது எந்தக் காட்டின் ஊடாக எந்தப் பிரதேசம் என்பது பற்றி சஜீவவுக்கு மாத்திரமல்ல யாருக்குமே தெளிவான விளக்கம் இல்லை. எதிரிகளின் முகாம் அருகில் இருப்பதாக படைச்; சிப்பாய்களிடையே கதை பரவிச் சென்றது. எந்த வேளையில் இலக்காக நேருமோவென்று மனதினில் திகைப்பு ஏற்பட்;டது. மர இலைகளும் மூச்சுவிடுவது சஜீவவுக்கு கேட்டது.

த...ட்... டோன்...ங்... வெடிச்சப்தம் மாத்திரம் சஜீவவுக்கு ஞாபகம். மருத்துவமனையின் மருந்துநெடி நாசித்துவாரத்தினுடாக உட்செல்லும்போது, தான் இருப்பது எங்கே என்பது சஜீவவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடல்பூராவும் பலத்த வலி. தலையை சிறிது உயர்த்த முயன்றும் கடினமாக இருந்தது. வலக்கால் பாரமடைந்ததைப் போன்று உயர்த்த திருப்ப முடியாததைப் போன்றதோர் உணர்ச்சி. அம்மா, அப்பா, தங்கை, தம்பி சிறிது சிறிதாக வரிசையாக நிற்கின்றது தெரிகிறது.

'பரவாயில்லை மகன்... உன்னுடைய உயிர் தப்பினது போதும்... ஒரு இடத்தில் இருத்திவைத்து ஊட்டுவதற்கு பருக்குவதற்கு என்றாலும் நீ இருக்கின்றாய் தானே...' அப்பா அதனைச் சொல்லும்போது சஜீவவுக்கு அது தொலைவில் இருந்து சொல்வதைப் போன்று காதில் விழுந்தது. அம்மாவும் தங்கச்சியும் விம்மி விம்மியழத் தொடங்கினார்கள்.

'அதிகம் பிள்ளைகளுக்குக் காயம்... அதே போன்று அதிகம் பேர்...?' அம்மாவினுடைய குரல் ஒலி முனங்கல் சப்தமாக வெளிவந்தது.

'பன்சலவின் பெரிய ஆமுத்துறுவும் கடந்து போன நாட்களில் வந்தார். தினமும் போதி பூசை செய்கின்றார்..... மகனுக்கு விரைவில் சுகமாகிவிடும்...' அப்பா சொல்லிக் கொண்டே போகின்றார். 'இப்ப மகனை வீட்டுக்கு கொண்டுபோக இயலாது என்று தான் துரைமார் சொல்லுகினம்'

சஜீவவைப் பார்ப்பதற்காக தினந்தோறும் அதிகம் பேர் வந்தார்கள். எல்லோருமே சஜீவவைப் பற்றி பெருமையாகவே பேசிக் கொள்கின்றார்கள். யுத்தத்தை மீண்டும் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக செய்தியும் வந்தது. பன்சலவின் பெரிய பிக்கு சஜீவவின் தலைமாட்டில் இருந்தபடி தலையைத் தடவி விரைவில் குணமாகுமாறு கூறி ஆசீர்வாதம் செய்தார்.

'இதோ மீண்டும் போர் நிறுத்தம் பற்றிக் கதைக்கினம்' இந்தத் தடவையாவது சரிவருமோ தெரியவில்லை. பெரிய பிக்கு அமைதியான குரலில் அப்படி சொல்லும்போது சஜீவ தலையைத் திருப்பி பிக்குவின் பக்கம் பார்த்தான்.

...??? ......??? சுஜீவவுக்கு ஏதோ சொல்லவேண்டும். ஆனால் சொல்லிக்கொள்ள முடியாது.

'இந்தத் தடவை என்றால் சர்வதேச தலையீடு இருக்கிறது. ஆனபடியால் மற்றைய நாளைவிட அதிகம் நம்பிக்கையும் இருக்கிறது. அடுத்த கிழமை அதுபற்றி பேசப் போகினமாம்.... இதன்பிறகு வெளிநாடொன்றில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம் இடுவினம்' பிக்கு நிச்சயமான குரலில் கூறுகின்றார். சஜீவவின் விழிகள் இரண்டிலும் கண்ணீர் தோன்றுவதைப் போன்று அவனுக்குத் தெரிந்தது. வலது காலில் வலி. வலது கையினால் வலது காலைத் தடவிக்கொண்டான். இதன் பிறகு இடக்காலினால் வலது கால் பாரத்தை பொறுப்பேற்றுக் கொண்டான். சஜீவ மிகப் பெரியதான பெருமூச்சை வெளிவிட்டான். அது மூச்சு அல்ல நெருப்பு மலை.

'இந்த போர் நிறுத்தம் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால்... எனது நண்பர்களும் இப்பொழுது இருப்பார்கள். எனது வலது காலும் இப்பவும் இருக்கும். ஒன்றில் மூதேவித்தனமான 31 ஆம் திகதி இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால்...'