எதிரொலி  (சிங்கள மொழிக்கதை)

குசும் அறம்பத்

தமிழாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்


மிகவும் நீண்ட தூரத்திற்கு நேராகச் செல்கின்ற வீதியில் பயணம் செய்கின்ற எவரையுமே காணக்கிடைக்கவில்லை. காடு சூழ்ந்துள்ள சூழல் குளிர்ச்சியை வழங்கியது. காட்டினால் சூழப்பட்டுள்ள எங்களது முகாம் பொது மக்களிடமிருந்து விலகியிருந்தது. முகாமிற்கு பக்கத்தில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய மலைகள் சிறுகாடுகளினால் சூழப்பட்டு சுற்றாடலை மறைவாகத் தங்க வைத்துக்கொண்டிருந்தது.

முகாமில் வசிக்கும் நாற்பது பேர்கள் அளவிலான குழுவினர்க்கு உணவுவகைகளை எடுத்து வருவதற்காக மாத்திரமே நாங்கள் நகரத்திற்குச் செல்வதற்கு நேர்ந்தது. அவசரமாக வீடுகளில் இருந்து அழைப்பு வந்தாலும் நீண்ட காலத்தின் பின்பே விடுமுறையை பெறுவதற்கு இயலும், எப்படியாவது விடுமுறையை பெற்றுக் கொண்டாலும் வீட்டை அண்மிப்பதற்கு ஒரு நாளைவிட அதிக காலம் கழியும். முகாமினுள் காலத்தைக் கழிக்கும் நாட்களிலும் வாழ்வது பற்றிய நிச்சயமான எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாமலேயே கழித்தோம். பகலிலும் சில தடவை முழு இராக்காலமும் சுற்றாடலில் கேட்கும் துப்பாக்கிச் சூட்டுச் சப்தங்கள் தமிழ் போராளிகளினுடையதாக இருக்கலாம். பயிற்சியின் பின்பு சேவைக்கு வந்த ஆரம்ப நாட்களில் இந்த நிகழ்வுகள் எனது மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு தடவை எதிரிகளுடன் சூட்டுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த பிறகு அந்த அச்சம் அற்றுப்போனது. ஆனாலும் நான் மரணத்திற்கு அஞ்சாதவன் என்று சொல்லமுடியாது. இந்த உலகத்தில் எந்த ஒரு உயிரினமும் அதிகமாக வாழ்வதற்கே விரும்புகின்றது. பள்ளிக்கூடக் காலத்தில் ஒரு நாள் ஆசிரியர் கற்பித்த பாடம் ஒன்று எனது நினைவுக்கு வந்தது.

உயிரை விடுவதற்காக தண்ணீரில் பாய்கின்ற ஒருவன் இறுதிக் கணப்பொழுதில் நீரினுள்ளே பேராடுவதும், மூழ்கிப் போகின்ற ஒருவன் இறப்பை அண்மிக்கும்போது வீரியத்தைக் காண்பிப்பதுவும் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புவதனாலேயே.

கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு பரம்பிச் செல்கின்ற வீதியில் ஆறு மைல் தூரம் வந்து, திரும்பி இரண்டு மைல் தூரம் வரும்போது எங்கள் இராணுவ முகாமைக் காணலாம். தேவையான உணவு வகைகள் தங்குமிடம் அனைத்தும் முகாமினுள்ளேயே வழங்கப்படும். இந்தச் சூழலினுள்ளே ஆச்சரியமான தனிமை உள்ளது. நான் அதிக வேளைகளில் தனிமையை விரும்பினேன். இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன்பு நான் கடற்கரையோரம், ஆற்றங்கரையோரம் அல்லது வேறு சாந்தமான சூழலில் அதிக நேரத்தைக் கழித்தது அந்தத் தனிமையான சூழலை விரும்பியமையினாலேயே.

சாதாரண தரம் பயிலும் மாணவனாக இருந்த காலத்தில் தகப்பனார் எங்களை விட்டுப் பிரிந்து சென்றமையால் அதன் பிறகு எங்களது நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கு அளவில்லாத துன்பங்களை அனுபவித்தது அம்மாவே. உயர் தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதிகளைப் பெற்றுக்கொண்ட எனது கல்வி இடை நடுவில் முடிவடைந்தது எங்களை வாழப் பண்ணுவதற்கு அம்மா மேற்கொண்ட முயற்சிகளில் குறிப்பிட்ட அளவையாவது குறைப்பதற்கும், சகோதரனதும், சகோதரியினதும் கல்வி நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்குமே. இதன்பின் தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதற்கு முயற்சி எடுத்தேன். தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதற்கு இருந்த எதிர்பார்ப்பு உடைந்து போய்க்கொண்டிருக்கும் போது நாட்டில் உண்டான கலவர நிலவரம் இராணுவப் படையில் இணைந்து கொள்வதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கியது. நான் எதிர்பார்த்த தொழிலாக இது இல்லாவிடினும் நான் இந்தத் தொழிலுக்கு வந்தது மிகவும் விருப்பத்துடனேயே. அது எனது அம்மாவினதும், தங்கையினதும், தம்பியினதும் எதிர்காலத்தின் பொருட்டே.

அனைத்து அதிகாலை வேளைகளிலும் எங்களது குழு குறுகிய காலத் தேகப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதன்பின்பு எட்டு மணி நேரம் குழு சேவையில் ஈடுபடுவோம். அவசர சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட நேரிடும். இதற்கு மேலதிகமாக எங்களது குழுவிற்கு வேறும் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது இந்தக் காலப்பகுதியில் உண்டான மக்கள் கிளர்;ச்சிகளில் தலைமை வகிப்பவர்களைத் தேடிச் சென்று அவர்களை முகாமுக்குக் கொண்டுசென்று விசாரிக்கும் பணி. தொடர்ச்சியாக விசாரிக்கும்போது அச்ச மூட்டுவதன் மூலமும் அவர்கள் விபரங்களை வெளியிடுவார்கள்.

எட்டுமணி நேரம் காவற்பணி முடிந்தவுடன் எங்களது குழுவினர் படைவீட்டிலேயே தங்கியிருப்போம். அதிக தலைவலி இருந்தமையால் மருந்து மாத்திரை பெற்றுக்கொண்டேன். முகாம் தலைவரின் திடீர் அழைப்புக் கிடைத்தது. கிடைத்திருந்த உளவுச் செய்திக்கு அமைய தேச விடுதலைக் கிளர்ச்சிக்காரன் ஒருவனைத் தேடிச் செல்வதற்கு எனக்கு ஆணை கிடைத்தது. அநாமதேய உளவுச் செய்தியின் ஊடாக நாங்கள் செயற்படுவோம்.

பிற்பகல் ஐந்து மணியளவில் நாங்கள் முகாமை விட்டுப் புறப்பட்டோம். ஒரு மணி நேரம் அளவிற்கு 'ட்ரக்' வாகனத்தில் பயணம் செய்தோம். ட்ரக் வண்டி வேகமாகப் போனதால் தூரம் பற்றி நிச்சயமான தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.

சூரியனின் இரக்கமற்ற தாக்குதலினால் மரங்கள் அனைத்தும் வரண்டு போயிருந்தன. கடும் வரட்சியினாற் போலும் அதிக காலமாக சேனைகளில் பயிர்ச் செய்கை செய்ததாகத் தெரியவில்லை. இடைக்கிடை நாங்கள் சந்தித்த பெண்கள் தண்ணீர்க் குடங்களை தலைகளில் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். ஆண்களும் தண்ணீர் கொண்டு வருவதில் பங்கேற்பது தெரிந்தது. அவர்கள் தண்ணீர் நிரப்பிய பிளாஸ்ரிக் கேன்களையும், குடங்களையும் சைக்கிளின் கரியரில் கட்டிக்கொண்டு சென்றார்கள். அப்பிரதேசம் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அந்த மனிதர்களின் முகங்களில் ஆதரவற்ற தோற்றம் தெரிந்தது. நீண்டகாலம் நோய் வாய்ப்பட்டிருந்தவர்களைப் போன்று மெலிந்த உடல்களோடு காட்சி தந்த அவர்களது முகங்களில் வெறுமையான சிந்தனையே வெளிப்பட்டது. ட்ரக் வண்டியைக் கண்ட அவர்கள் கண்களை அகலத் திறந்தபடியே தெருவின் ஓரத்திற்குப் பாய்ந்தார்கள்.

வறுமையின் மறு உருவங்களாகக் காணப்பட்ட இவர்கள் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றார்கள் என நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. எனக்கு எனது தங்கையினதும் தம்பியினதும் நினைவு வந்தது. நாங்கள் வாழ்ந்ததும் இப்படித்தான். கடையப்பம் தயாரித்துக் கொண்டும், இடைக்கிடை தேடிக்கொண்ட கூலி வேலைகளைச் செய்தும் எங்களை வாழ்விப்பதற்காக அம்மா எவ்வளவு தூரம் கஷ;டப்பட்டாள் என்பது எனது நினைவுக்கு வந்தது. இன்று நான் அம்மாவுடைய வாழ்க்கைச் சுமையின் பாரத்தைக் குறைத்த ஒரு பிள்ளை. அம்மாவை நான் மதிப்பதும், பக்தியோடு கவனிப்பதும், அன்பு செலுத்துவதும் அதனாற்தான் என நான் நினைத்தேன்.

ட்ரக் வண்டி தூசியைக் கிளப்பியவாறு பயணிக்கின்றது. பின்னர் அது சிறிய கிளைப் பாதையில் திரும்பியது. தென்னோலைகளால் வேயப்பட்ட குடிசைகளைத் தொடர்ச்சியாகக் காணக்கிடைத்தது. அதிகமான வீடுகள் களிமண் சுவர்களினல் மறைக்கப்பட்டு இருந்தன. தென்னோலைகளில் மறைக்கப்பட்ட வீடுகளையும் காணமுடிந்தது. சில வீடுகளின் ஓலைகள் உக்கிப் போய் சுவர்கள் உடைந்து தகர்ந்து வீழ்ந்திருந்தன. மனிதர்களது முகங்களிலும் இரு விழிகளிலும் உயிர்க்களை இருக்கவில்லை. இருவிழிகளும் வாழ்க்கையின் செழிப்பற்ற தன்மையையும், துக்கத்தையும் கூறின.

வீடுகள் பல ஒன்றாக இருந்த இடத்தில் 'ட்ரக்' வண்டி நிறுத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கூட்டம் 'ட்ரக்' வண்டியின் பக்கமாக ஓடிவந்து நின்றது. மெலிந்த பெட்டை நாய்கள் சில குரைக்கத் தொடங்கின. அவை குரைப்பது ஊளையிடுவதைப் போன்றிருந்தது. களி மண்ணினால் ஆன அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியே எட்டிப் பார்த்தார்கள். ட்ரக் வண்டி நின்றிருந்த வீட்டில் இருந்து பெண்ணொருத்தி சீத்தையை சரிப்பண்ணியவாறு முற்றத்தில் இறங்கினாள். கோப்ரல் அவளைக் கூப்பிட்டார்.

'சிறிவிமலவின் வீடு எங்கே?'

பெண் சிறிது நேரம் திகைப்படைந்து போய் நின்றாள். பதில் கூறவில்லை. கோப்ரல் இரண்டாவது தடவை கோபத்துடன் கேட்டார். அப்போது அவள் பதில் கூறினாள்.

'இந்த வீட்டு வரிசையின் முடிவில் வளைவில் திரும்பிப் போகவேணும்' என ஆரம்பித்த அவள் தயங்கியவாறு பதில் கூறினாள்.

'போவோம்' எனக் கூறிக் கொண்டே கோப்ரல் 'ட்ரக்' வண்டியின் முன் ஆசனப் பக்கமாகச் சென்றான்.

'ஐயோ மஹத்தயா அந்தப் பையன் நல்லவன். யாருக்குமே கெடுதல் செய்யவில்லை. படிப்பிலும் கெட்டிக்காரன். இப்ப சோதனைகள் சிலது பாஸ் பண்ணியிருக்கிறான். ஏன் துரை, பையனைத் தேடுகிறீங்கள்?' தலையில் நெருப்புப் பிடித்தவளைப் போன்று அவள் கலவரம் அடைந்தாள்.

கோப்ரல் வாயின் ஓரத்தில் சிரித்தான்.

'தொழிலுக்கும் விண்ணப்பிச்சிருக்கிறான். பையனுக்குத் தொழில் கிடைச்சா...?' அவள் பலமாகக் கேட்டாள்.

'ஓம்' கோப்ரல் சப்தமாகக் கூறியவண்ணம் வாகனத்தில் ஏறிக்கொண்டான்.

'ட்ரக்' வண்டி மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. தொடர்ந்தும் ட்ரக் வண்டி பயணிக்க முடியாத விதமாக தெரு ஒடுங்கிக் காணப்பட்டது. தெருவின் இரு மருங்கிலும் முட்பற்றைகள் வளர்ந்திருந்தன. மேற்குத் திசையில் சூரியன் இறங்கிச் சென்றிருந்தான். இருள ஆரம்பித்ததோடு 'ட்ரக்' வண்டியில் இருந்து இறங்கிக் கொண்ட கோப்ரலும் சிப்பாய்களும் கால்நடையாக பயணத்தை ஆரம்பித்தனர். அதிகமானோரின் கரங்களில் புதியரக றைபிள்கள். பக்கத்தில் இருந்த சிறிய குடிசையிலிருந்து பாலப்பருவ பிஞ்சு ஒன்று காணியின் நடுவாக முன்னால் ஓடிச்சென்றது.

தூரத் தூரக் குடிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்த உறுதியான உணவுப் பயிர்களும் வளர்க்கப்பட்டிராத காணி சேனைப் பயிருக்கு பயன்படுத்தப்படுவதாகத் தெரிந்தது.

வறட்சியினாலோ என்னவோ ஒரு சில வாழை மரங்களைத் தவிர வேறு எந்த ஒரு பயிரையும் காணமுடியவில்லை.

தென்னோலையினால் மறைக்கப்பட்டிருந்த சிறிய வீடொன்றின் முன்னால் கோப்ரல் நின்றுகொண்டான். அவனைச் சுற்றி அனைவரும் நின்றார்கள்.

'நிமல் கூப்பிடு' கோப்ரல் ஆணையிட்டார்.

'யார் வீட்டில்?' நிமல் சப்தமாகக் கேட்டான்.

வீட்டில் இருந்து மெலிந்த உடலை உடைய பெண்ணொருத்தி சேலையை சரிசெய்து அணிந்தபடி வெளியே வந்தாள். அவள் அச்சம் கொண்டவளாகக் காணப்பட்டாள். அவளின் பின்னால் பதினான்கு வயது மதிக்கத்தக்க இளம்யுவதியும், சிறிய பெண் குழந்தை ஒன்றும், இரண்டு சிறிய ஆண் குழந்தைகளும் வெளியே வந்தார்கள்.

குடிசையின் வாசல் உயரமில்லாத காரணத்தினால் அவர்கள் முதுகை வளைத்துக்கொண்டே முற்றத்தில் இறங்கினார்கள்.

'என்ன நிகழப்போகின்றது?' என்ற ஆவலோடு நான் பார்த்தபடியே நின்றேன்.

'இந்த அப்பாவிகள் கிளர்ச்சியாளர்களா?' அவர்கள் வாழ்வதே சிக்கலாக இருக்கவேண்டும்.

'தேசத் துரோகிகளாகச் செயற்படுவதற்கு அவர்களுக்கு அவசியம் உண்டா?' நான் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். பதினான்கு வயதான யுவதி அழகானவள் அல்ல. ஆனாலும் அவளது முகத்தில் மிகவும் அஹிம்சைத் தன்மை தங்கியிருந்தது. அச்சம் கொண்டிருந்த அவள் பெண் மானினைப் போன்று நடுங்கினாள். வயதான பெண்மணி அழுக்கான துணியையும், சட்டையையும் அணிந்திருந்தாள். அவள் குனிந்து சேலைத் தலைப்பினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அந்த இரு கண்களுக்கும் கண்ணீரிடமிருந்து மன்னிப்புக் கிடைக்கவில்லை. அவள் கண்ணீரை மறைப்பதற்கு முயற்சி செய்தாலும் கண்ணீர்த் தாரைகள் அவளது இரு விழிகளிலிருந்தும் பெருக்கெடுத்தன. அவளது வாழ்க்கையின் கண்ணீர் ஆறு அது என நான் நினைத்துக் கொண்டேன். அவளது கன்னங்கள் குழி விழுந்து தோல் சுருங்கியிருந்தது. தரித்திரம் அவளைப் பீடித்திருந்தது. எதனாலோ வயதுக்கும் அதிகமான தோற்றம் அவளிடம் தெரிந்தது. தலைமயிர் அதிக இடங்களில் நரைத்திருந்தது. உண்மையாகவே இவர்கள் போராட்டத்தை கொண்டு சென்றிருப்பார்கள். அது வாழ்வதற்கான போராட்டம், வயதானவர் இளைஞனின் அம்மாவாக இருக்கலாம். அவர் எதனையோ எங்கள் முன்னால் சொல்வதற்கு முயற்சி செய்தார். இரு உதடுகளும் அசைந்தாலும் சொற்கள் வெளியே வரவில்லை. விழிகளில் கண்ணீர் சொரிந்தது துன்பத்துக்கான முன் அறிகுறி அவளது மனதினில் உட்புகுந்ததன் காரணமாக இருக்கலாம்.

'சிறிவிமல எங்கே?' கோப்ரல் கேட்டான்.

'ஐயோ மஹத்தயா இதற்கு முன்பும் மகனைத் தேடி வந்தவை. மகன் இருக்கவில்லை. ஐயோ ஐயா என்னுடைய மகன் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை. அவன் நல்லா படிச்சுக் கொண்டுதான் இருக்கிறான். யாராவது பொறாமையினால் என்னுடைய பிள்ளையை பிடிச்சுக் குடுக்கப் பார்க்கிறாங்கள் போல'. சிறிவிமலவின் தாய் நினைவிழந்தவளைப் போன்று வேதனையோடு கூறினாள்.

'அதற்காகவா குற்றங்கள் செய்கின்றான்?' கோப்ரல் கோபத்துடன் கேட்டான்.

'ஐயோ பௌத்த துரைமார், என்னுடைய மகன் எந்தவித குற்றமும் செய்யமாட்டான்' அவள் கும்பிட்டபடியே கூறினாள்.

'தொழிலுக்கு விண்ணப்பிச்சு... விண்ணப்பிச்சுக் கொண்டுதான் இருக்கிறான்' அவள் குனிந்து சேலைத் தலைப்பினால் கண்ணீரைத் துடைத்தபடியே கூறினாள். ஆனால் அவளது கண்ணீர் மழையை அழித்து விடுவதற்கு அவளது சேலைத்தலைப்பிற்கு முடியவில்லை.

'ஐயோ என்னுடைய மகனுக்கு வேலை கிடைச்சிதென்றால்... இந்தப் பிள்ளைகளோடை நான் அனுபவிக்கிற துன்பம், மேலை இருக்கிற ஆண்டவருக்குத் தான் தெரியும்... பிள்ளையளின்ரை அப்பாவும் செத்துப்போய்... நான் கூலி வேலை செய்தாற்தான் எங்களுக்குச் சாப்பாடு'

அவள் பெருமூச்சு விட்டாள்.

'ஏன் மகனை கூலி வேலைக்கு அனுப்ப முடியும் தானே?' கோப்ரல் சகிக்கமுடியாத தொனியில் கேட்டான்.

'ஐயோ துரை அவன் படிக்கவேண்டிய ஒருத்தன். நான் பிள்ளைகளைக் கொண்டு உழைப்பிச்சுச் சாப்பிட விரும்பேல்லை ஐயா. நான் துன்பப்படுகிறேன் எண்டு சொல்லி அவன் கூலி வேலைக்குப் போகத் துடிக்கிறான். நான்தான் சம்மதிக்கவில்லை' அவள் அடக்கமாகச் சொன்னாள்.

'சிறிவிமல்லை வெளியில வரச்சொல்லு' தாயாரின் சொற்களைச் செவிமடுக்காத கோப்ரல் சப்தமிட்டார்.

பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அழைப்பு இன்றியே திடீரென வெளியே வந்தான்.

'சிறிவிமல என்பது நான்தான். ஏன் என்னைத் தேடுறீங்கள்?'

மத்தும பண்டாரவைப் போன்று சிறிவிமல கோப்ரலுக்குப் பக்கத்தில் வந்தான். கோப்ரலின் முகத்தில் மீண்டும் பயங்கரமான தோற்றம் ஏற்பட்டது.

'உன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களைக் கேட்டுக்கொள், வகுப்பு நடத்துதல், அழிவு வேலைகளில் ஈடுபடுதல், போராட்டங்களுக்குத் தலைமை வகித்தல்' கோப்ரல் தெளிவாகக் கூறினார்.

சுpறிவிமலவின் மனதில் கோபத்தோடு வேகமும் ஏற்பட்டது.

'சேர் நாங்கள் நடத்துற போராட்டம்தான், வாழ்வதற்கான போராட்டம். நான் வகுப்பு நடத்துறன். சின்னதுகளுக்கு எதையாவது தேடிக்கொள்வதற்கு' சிறிவிமல தயங்காமல் கூறினான்.

'அப்படித்தான் சொல்லுவீங்கள். இவங்களை உனக்குத் தெரியுமா? கடதாசித் துண்டொன்றைக் காண்பித்தபடி கேட்டான்.

'குணபாலா, தயாபால, நிமல்...'

'அவர்கள் என்னுடைய நண்பர்கள்' சிறிவிமல கூறினான். 'இந்தக் குழுவோடு சேர்ந்த நீ அழிவு வேலைகளில் பங்கேற்கிறாய் என்று சொல்லி கடிதம் வந்திருக்கு. அவைகள் உண்மையோ பொய்யோ என்று கண்டு பிடிக்கிறன். வா எங்களுடன் போவதற்கு' கோப்ரல் கூறினான்.

இதுவரை கண்ணீர் வடித்தபடி நின்ற சிறிவிமலவின் அம்மா புலம்பியவாறு முன்னால் ஓடி சிறிவிமலவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

'ஐயோ கடவுளே எனது மகனைக் கொண்டு போகவேண்டாம். மகன் குற்றம் செய்யவில்லை. இது யாருடையதோ பொய். பிழை இருக்கும் என்றால் நான் சொல்லி எச்சரிக்கை பண்ணித் திருத்துறன்' முன்னே வந்த அதிகாரியைப் பார்த்து அவள் அதிர்;ச்சியோடு அழுதாள்.

நாங்கள் எல்லோருமே பெற்றோர்களுடைய பிள்ளைகள் தான். தாயினுடைய அந்தப் புலம்பல் பூமியில் எந்த ஒரு பிள்ளையினதும் மனத்தை அசைக்கக் கூடியது.

அதிகாரி பேசினான். 'அம்மா பயப்பட வேண்டாம். நாங்கள் விசாரிப்பதற்குத்தான் மகனைக் கொண்டு போறம். நாங்கள் மகனைத் திருப்பி அனுப்புவம்' அவர் அவளுக்கு சிறிது ஆறுதலை வழங்கினார்.

'அம்மா விலகிப் போங்கோ. நான் போயிட்டு வாறன்' சிறிவிமல தாயாரிடம் கூறினான். அவள் தனது மகனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒரு பக்கத்திற்குப் போனாள். இராணுவச் சிப்பாய்களின் மத்தியில் சிறிவிமல 'ட்ரக்' வண்டி நின்ற பக்கத்தை நோக்கிச் சென்றான். சிறிவிமலவின் குடும்பத்தவர் மாத்திரம் அன்றி அவனது வீட்டைச் சுற்றியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பலரும் அவன் பின்னால் அனுதாபத்தோடு கூடிய சோகப் பெருமூச்சுக்களை விட்டவாறு சென்றனர்.

'ட்ரக்' வண்டியில் ஏறுவதற்கு முன்னால் சிறிவிமல மீண்டும் ஒருமுறை திரும்பி துக்கத்தோடு நின்ற தாயை ஒரு கணம் பார்த்தான். எதிர்பார்ப்புக்கள் சிதைந்து நெருப்புப் பற்றிக்கொண்ட இதயத்தோடு மகன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த தாயினதும், மகனினதும் கண்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சிறிவிமலவின் விழிகளில் முதற்தடவையாக கண்ணீர் சேர்வதை தாய் கண்டாள்.

'இந்த இளைஞனை எதற்காகக் கொண்டு போகிறார்கள்?' பக்கத்தில் நின்ற பெண்ணொருத்தி சப்தமிட்டபடி வினவினாள்.

வாகனம் உயிர் பெற்றதும் சிறிவிமலவின் தாயார் புலம்பியவாறு முன்னால் ஓடிவந்தாள். சூழ்ந்துநின்ற ஆண்களும் பெண்களும் மௌனமாக பார்த்தவாறு நின்றிருந்தனர்.

அவர்களது கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த் துளிகளை நான் கண்டேன். ட்ரக் வண்டி பயணத்தை ஆரம்பித்தது. ஓடுகின்ற 'ட்ரக்' வண்டியின் பக்கமாக இரு கரங்களையும் நீட்டியவாறு முன்னே ஓடிவந்த சிறிவிமலவின் தாய் நிலத்தில் புரண்டு தரையில் அடித்தவாறு புலம்புவதை நான் கண்டாலும், முன் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த சிறிவிமல அதனைப்பார்க்கவில்லை. முன்னால் ஓடிவந்த பெண்கள் சிலர் சிறிவிமலவின் தாயாரை தாங்கியவாறு அழைத்துச் செல்வதை நான் கண்டேன். அந்தக் காட்சித் திரையிலிருந்து தூரத்திற்கு 'ட்ரக்' வண்டி பறந்து சென்றது.

எனக்கு எனது கடந்தகாலம் நினைவுக்கு வந்தது. அம்மா எங்கள் மீது ;வைத்திருந்த அன்பு, கருணை அவர் எங்களை வாழ்விப்பதற்கு செய்த உழைப்பு, விதியின் கொடிய தாக்குதலுக்கு மத்தியில் அவர் எங்களைப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்தவிதம், என்னுடையதைப் போன்று எங்கள் குடும்பத்தின் மற்றைய சகோதரர்களினதும் வாழ்க்கையின் அநேகமான துன்பங்களின் போது அவர் காண்பித்த முடிவில்லாத கருணை, எங்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து நடவடிக்கைகள் மேற்கொண்ட மாதிரி இவையெல்லாம் எனது ஞாபகத்தில் சித்திரங்களாகின.

நான் சிறிவிமலவின் பக்கம் பார்த்தேன். 'ட்ரக்' வண்டியின் ஆதாரம் ஒன்றைப்பிடித்துக்கொண்டு அவன் வெறுமை கலந்த பார்வையோடு 'ட்ரக்' வண்டிக்கு அப்பால் பார்த்தவாறு இருந்தான். அவனோடு கதைக்க வேண்டும் என நான் எண்ணிக்கொண்டாலும் மீண்டும் அந்த உணர்வை அடக்கிக் கொண்டேன்.

இரவுக்காலம் கழிவதற்கு முன் ட்ரக் வண்டி முகாமிற்கு வந்து சேர்ந்தது. விசாரணை செய்வதன் பொருட்டு சிறிவிமல குறிக்கப்பட்ட அறைக்கு அனுப்பப்பட்டான். வழமைபோல் நான் எனது பணியை முடித்துக் கொண்டேன்.

வாழ்க்கையின் அவலத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முகாமைச் சுற்றி இருந்த அடர்ந்த காட்டில் நான் கண்ட அழகிய தன்மை அழிந்து போயிருந்தது. வறுமையின் மூதேவித்தனத்தை சுற்றாடல் பூராவும் காணக்கிடைத்தது. இந்தச் சுற்றாடலில் இருந்து விடுபட்டு வீட்டுக்குச் சென்று சில நாட்கள் கழிக்க வேண்டியதன் தேவையை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் திடீரென விடுமுறையைப் பெற்றுக்கொள்ளுதல் இலகுவான செயல் அல்ல. நான் சிறிபால இருந்த அறையை எட்டிப் பார்த்தேன். அவன் நிலத்தில் உட்கார்ந்து முழங்;கால்களின் மீது இரு கரங்களையும் வைத்து அதன்மேல் தலையை வைத்துக்கொண்டு நிலத்தைப் பார்த்தவாறு மௌனமாக இருந்தான்.

சில நாட்கள் கழிந்தன. சிறிய காட்டினிடையே தூரத்தில் அமைந்திருந்த சிறிய மலையின் உச்சி தெரிகிறது. மேற்குத் திசை ஆகாயம் சூரியக் கதிர்களின் ஒளியினால் செந்நிறமாக மிளிர்ந்தது. ஆனால் சூழல் சோர்வுடன் கூடியதாக இருந்தது. மழையின் நிழல் இருக்கவில்லை. சூழல் இரகசியமாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அமைதியினுள்ளே கருக்கொள்ளும் அறியும் ஆசை எனது மனதில் துளிர்த்திருந்தது.

வேதனையினால் புலம்பும் குரல் அயலில் அடர்ந்த காட்டுப்பக்கம் கேட்டாலும் சொற்கள் தெளிவின்றி இருந்தன. சிறிது நேரத்திற்குள் சுற்றாடலை சஞ்சலப்படுத்திய வண்ணம் வெடிச்சப்தங்கள் சில எதிரொலித்தன. காவற் கடமை முடிந்திருந்த காரணத்தால் முகாமிற்குப் பக்கமாகச் சென்ற சிறிய பாதையின் நீளத்திற்கு நான் முன்னால் ஓடினேன். சிலர் பேசுகின்ற சப்தத்தைக் கேட்டு நான் அந்தப் பக்கம் பார்த்தேன். கோப்ரலும் சிப்பாய்கள் சிலரும் துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியவாறு நின்றிருந்தார்கள். சிறிது தூரம் மேலாக எனது விழிகள் சென்றபோது சரிந்தபடி அசையாமல் இருந்த உடலை நான் பார்த்தேன். 'கடவுளே சிறிவிமல' நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன். ரயர்கள் சிலவற்றை எடுத்துவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவர் என் கண்களில் பட்டார்கள். எனது இரு விழிகளும் கூசின. தலை சுழன்றது.

'எனது மகனே... எனது மகனே...' மிகப் பெரிய சப்தத்தோடு எழுகின்ற புலம்பல் ஒலி எதிரொலித்தது. அந்த வாய்ச்சப்தம் எனது அம்மாவினுடைய குரலை ஒத்ததாக இருந்தது.