யுத்தத்தின் சாபம்   (சிங்கள மொழிக்கதை)

கே.ரி.கங்கா நிலானி

தமிழாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்


யுத்தம் என்கின்ற நான்கு எழுத்து எங்களுக்கென்றால் இப்பொழுது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

ஆனால் அந்தச் சாதாரணமான எழுத்துக்கள் நான்கும் அசாதாரண விதமாக எங்களது வாழ்க்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி எங்களை மிகவும் ஆழமான இடத்துக்கு இழுத்துச் சென்று போட்டுவிட்டது.

நாங்கள் பிறந்த நாட் தொடக்கம் நாங்கள் பெற்ற புதிய மூச்சுடன் எங்கள் செவிகள் இரண்டிலும் வெடிச்சத்தங்கள் மாத்திரமே கேட்டன. அம்மாவின் தாலாட்டுப் பாடலை கீழே தள்ளிக் கொண்டு வெடிச்சப்தம் மேலெழும்பும்போது சின்னஞ்சிறிய விழிகள் இரண்டும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் சிறிது காலம் கழியும்போது, ஐந்து ஆறு வயதாகும்போது யுத்தத்தின் எதிரொலி அந்தச் சின்னஞ்சிறிய செவிகள் இரண்டிற்கும் சாதாரண சத்தமாகிப் போயிற்று. அதாவது வெடிச்சப்தம் கேட்கும்போது பதறியடித்துக்கொண்டு ஓடிச்சென்று எங்களையறியாமலேயே மரங்களுக்குள் மறைந்து கொள்வது நிகழ்ந்தது.

நாளொன்று கழிந்து மீண்டும் சூரியன் உதிக்கும்போது அவை அனைத்துமே மறைந்து போய்விடும். வெள்ளைக் கவுண் என்று கூறி மஞ்சள் நிறமாகிப் போன பள்ளிச் சீருடையை அணிந்து கொண்டு இரண்டு மூன்று கொப்பி புத்தகங்களையும் அணைத்தபடி அம்மாவின் பாதங்கள் இரண்டையும் தொட்டு வணங்கிவிட்டு கால்களில் சிறுகற்கள் குத்தக் குத்த பள்ளிக் கூடத்திற்கு செல்வது மிகப்பெரிய எதிர்பார்ப்பை மனதினில் வைத்துக்கொண்டு அல்ல.

ஐயோ! ஆயினும் அதிகதூரம் செல்வதற்கு கிடைப்பதில்லை. செல்வது இரண்டு மூன்று அடிகள் மாத்திரமே. பட.... படவென்று சூட்டுச் சப்தங்கள் கேட்கும்போது புத்தகங்கள் சிலவற்றை பலமாக மார்போடு அணைத்துக் கொள்வது அந்தச் சில புத்தகங்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தினாலோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, சில புத்தகங்களை விட உயிர் பெறுமதி வாய்ந்தது என்றோ நினைக்கும் அளவிற்குச் சந்தர்ப்பம் இல்லை. மூடப்படாத அடிப்பாதங்கள் சிவந்து இரத்தம் பெருக்கெடுக்கின்ற விதமாக நாங்கள் ஓடிச்சென்று பாறைகளின் கீழே ஒளித்துக்கொள்வது அந்த இடம் பாதுகாப்பானது என்று நினைப்பதனால் ஐயோ! ஆனால் சிறிது நேரம் சென்ற பின்புதான் தெரியும் அங்கு இருப்பது முட்கள் நிறைந்த பற்றை என்று. அந்த முட்களால் கீறப்படும் சரீரத்தையும், கிழிந்த வெள்ளைக் கவுணையும் பார்த்தவாறு நாங்கள் இருப்பது எங்களுக்கு மாத்திரமே தெரியும். சிலவேளைகளில் அந்த முட்பற்றைகளில் இருந்து வெளியே வருவது எப்படி என்று நினைத்துக் கொள்வதற்கும் இயலாது. எப்படியாவது சக்தியைப் பாவித்து முட்பற்றைகளினின்றும் வெளியே வந்தாலும் மீண்டும் பாடசாலைக்குச் செல்வது எப்படி? வெள்ளைக்கவுண் ஆங்காங்கே கிழிந்துபோய், மீண்டும் திரும்பி வந்த பாதை நீளத்திற்கே அழுது அழுது எத்தனை நாட்கள் இந்த விதமாகச் சென்றிருப்போம்?

எப்படியிருப்பினும் யுத்தத்தினால் வாழ்க்கையில் நாங்கள் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய அனுபவம்தான் துப்பாக்கிச் சூடுபட்டு எங்களது அப்பாவின் உயிர் பறிக்கப்பட்டது. ஆனால் அது அப்பாவின் மரணத்தினால் என்று நினைத்துக் கொள்கின்ற அளவிற்காவது எங்களுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அப்பா இல்லாமற்போன பிறகு நாங்கள் மிகப்பெரியளவு துன்பங்களை அனுபவித்தோம். நாங்கள் சாப்பிடாமல் குடிக்காமல் இருந்த நாட்களின் தொகை நன்கு உடுக்காமல் இருந்த நாட்களின் தொiயைவிட அதிகம்.

இந்த அனைத்துக்குமே பொறுப்புச் சொல்ல வேண்டியது வேறுயாரும் அல்ல. யுத்தம் மாத்திரமே. யுத்தத்தின் காரணமாக இல்லாமற் போனது அப்பா மாத்திரமல்ல. பசியோடு இருந்தது நான் மாத்திரமல்ல. மேலும் பலபேர்களது அப்பாக்கள் இல்லாமற் போனார்கள். அதனால் அதிகம் பேர் பசி பட்டினியோடு இருந்தார்கள். யுத்தம் எங்களது வாழ்க்கைகளை நாசம் செய்து முடித்துவிட்டது. எங்களுக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு கீழே இழுத்துப் போடப்பட்டு எங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நாசமாகிப் போய்விட்டன. எங்களுக்கு பாவம் வந்துவிடும் என்ற அச்சத்தினால் நாங்கள் யுத்தத்தின்மீது குரோதம் கொள்வதில்லை.

சனங்கள், நதீக்காக்கள் மாத்திரமல்ல, நசீம், றியாஸ், கணேஸ் அனைவரும் எனது நண்பர்கள். எங்களிடையே பேதவித்தியாசங்கள் இல்லை. ஆனால் பிறந்த நாளிலேயே சூடுபட்ட எங்கள் வண்ணத்துப்பூச்சிகளின் மனங்கள் எல்லாம் இப்பொழுது இறந்து முடிந்துவிட்டன, மீண்டும் உயிர் பெறுவதற்கு முடியாத அளவிற்கு. தினமும் காலையும் மாலையும் புத்தர்பிரானுக்கு மலர் வைத்து பிரார்த்தனை செய்வது வேறு ஒன்றுக்காகவும் அல்ல, யுத்தம் இல்லாமற்போய், துப்பாக்கிச் சூட்டுச் சப்தங்களுக்குப் பதிலாக குருவிகளின் ரீங்காரங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக.

கடவுளே!

அப்படி நிகழ்ந்தால் எங்களது வாழ்க்கையில் உள்ள பாரங்கள் இல்லாமற்போய் பாரமற்ற மனங்களோடு மேலும் அழகாக பாதங்களை முன்னே வைக்கமுடியும்.

சத்தியமாக...!