நேசவாளி சிலந்தி  (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை)

ஆங்கிலம் வழி தமிழில் பல்லவிக்குமார்


முன்னோரு காலத்தில் விவசாயி ஒருவன் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் யோசாகு. ஒருநாள் அவர் தன் நிலத்தில் வேலைசெய்துகொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பாம்பு அங்குவந்தது. அது ஒரு சிலந்தியை விழுங்கத்தயாராக இருந்தது. யோசாகு சிலந்தியின் நிலையை உணர்ந்து மிகவும் கவலையடைந்தார்.

உடனே, வேகமாக பாம்பினை நோக்கி ஓடினார். தனது கையிலிருந்த மண்வெட்டியால் பாம்பினை விரட்டியடித்தார்.

பாம்பு சிலந்தியைவிட்டுத் தப்பியோடியது. இதனால், சிலந்தி உயிர் தப்பியது. உடனே அது யோசாகுவை நன்றியுடன் பார்த்தது. சற்றுநேரத்தில் புல்வெளிகளில் மறைந்தது.

அதன்பிறகு, ஒருநாள் காலையில் யோசாகு தன் வீட்டிலிருந்தார். அப்பொது 'யோசாகு யோசாகு' என்ற மெல்லியதொரு குரல் அழைத்தது.

யோசாகு கதவைத் திறந்து பார்த்தார். வீட்டுக்கு வெளியே ஒரு அழகான இளம்பெண் நின்றிருந்தாள். அவள் 'உங்களுக்கான ஆடைகளை நெய்யவேண்டுமென அறிந்தேன், நீங்கள் அனுமதியளித்தாள் இங்கேயே இருந்துநான் நெய்துதருகிறேன்' என்றுகேட்டாள்.

இதனைக் கேட்ட யோசாகு மிகமகிழ்ச்சியடைந்தார். ஏனெனில், அப்போது அவருக்கும் நெசவு தெரிந்தவொரு பெண் தேவையிருந்தது.

எனவே, யோசாகு அந்தப் பெண்ணை வேலையிலமர்த்தினார். அவளுக்குத் தறி இருக்கும் அறையைக் காட்டினார். அப்பெண்ணும் தறியில் உட்கார்ந்துநெசவுசெய்யஆரம்பித்தாள்.

மாலையில் யோசாகு நெசவு அறைக்குச் சென்று பார்த்து மகவும் ஆச்சரியமடைந்தார். அந்தப்பெண் எட்டு நீளமான துணிகளை நெய்திருந்தாள். அதனைக்கொண்டு 'கிமோனா' என்னும் ஜப்பானிய பாரம்பர்ய ஆடையினைத் தைத்திடமுடியும்.

யோசாகு, இதுவரை ஒரு பெண் ஒரேநாளில் இவ்வளவு நீளமான துணியினை நெய்ததாகக் கேள்விப்பட்டதில்லை. எனவே, அப்பெண்ணிடம், 'உன்னால் எப்படி இவ்வளவு துணிகளை செய்யமுடிந்தது?'  என்று கேட்டார்.

அதற்கு அப்பெண் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. அவள்,'நீங்கள் தயவுசெய்து இதுகுறித்து எதுவும் கேட்கவேண்டாம். மேலும், நான் நெசவு செய்யும்போது எக்காரணத்தைக்கொண்டும் நெசவு அறைக்குவரவேண்டாம்' என்றுகேட்டுக் கொண்டாள்.

இதனால் யோசாகு இதுகுறித்து அறிய விரும்பினார். ஒருநாள் அவர் நெசவு அறையின் சன்னல் கதவினை மெதுவாகத்திறந்தார். சன்னல் வழியாக உள்ளேபார்த்தார். அங்கே நடப்பதைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.

ஏனெனில், உள்ளே தறியில் அப்பெண் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், மிகப்பெரிய ஒரு சிலந்தி அமர்ந்து, தனது எட்டுக்கால்களாலும் நெசவு செய்துகொண்டிருந்தது. அதேநேரத்தில் நெசவு நூலிழைகளை அது தனதுவாயிலிருந்து உருவாக்கிக்கொண்டிருந்தது.

யோசாகு அதனை மிகவும் தெளிவாக உற்றுப் பார்த்தார். அதுஅவரால் காப்பாற்றப்பட்ட சிலந்திதான் என்பது தெரிந்தது. அவர் அதன் நன்றியுணர்வினை எண்ணி ஆச்சரியமடைந்தார். பாம்பிடமிருந்து காப்பாற்றியதற்காக தனக்கு உதவி புரிய பெண் வடிவில் வந்துள்ளதைப் புரிந்துகொண்டார்.

நெசவு அறையில் அச்சிலந்தி பஞ்சினை மிகவும் வேகமாகத்தின்றது. அதனுடைய வயிற்றில் சென்ற பஞ்சினைவாய் வழியாக நூலாகமாற்றியது. அந்நூலைக் கொண்டு தனது எட்டுக்கால்களாலும் வேகவேகமாக  நெசவு செய்தது.

அந்நிலையில் தறி அறையிலிருந்த பஞ்சு அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருந்ததை யோசாகு உணர்ந்தார். எனவே, மேலும் பஞ்சுவாங்கி வரவேண்டுமென விரும்பினார்.

மறுநாள் காலையில் அவரருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றார். அக்கிராமம் ஒருமலையை அடுத்து அமைந்திருந்தது. அங்கு ஒருபெரிய பஞ்சு மூட்டையைவாங்கினார். ஆதனை முதுகில் சுமந்துகொண்டு வீடு திரும்பினார்.

வீடு திரும்பும் வழியில் ஒரு கொடூரமான நிகழ்வு நடைபெற்றது. மூட்டையுடன் மலையேறிவரும் போது ஓரிடத்தில் யோசாகுஓய்வெடுத்தார். அப்பொழுது, எதிர்பாராவிதமாக ஒருபாம்பு அந்தப் பஞ்சு மூட்டையில் வந்துநுழைந்துவிட்டது. அது முன்பு அவரால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பு தான்.

இதனை அறியாத யோசாகு மூட்டையுடன் வீட்டுக்குவந்தார். பஞ்சு மூட்டையினை நெசவு அறையில் வைத்தார். அப்பெண்ணும் மூட்டையைமிகமகிழ்வுடன் பெற்றுக் கொண்டாள். ஏனெனில், அப்போது அறையிலிருந்த பஞ்சுமுழுவதும் தீர்ந்திருந்தது.

யோசாகு சென்றவுடனே அப்பெண் சிலந்தியாக மாறினாள், மூட்டையிலிருந்த பஞ்சினை வேகவேகமாகத் தின்றாள். அதன் மூலம் உடலுக்குள் மாற்றம் ஏற்பட்டது. அதுவாயிலிருந்து நூலை உருவாக்கியது.

அந்தப் பஞ்சு மிகத் தரமானதாகவும், மென்மையாகவும் இருந்தது. எனவே, சிலந்தி அதனை நன்கு சுவைத்து முழுவதுமாகத் தின்றது.

அப்போது மூட்டையின் அடிப்பகுதியிலிருந்து பாம்பு வேகமாகவெளிவந்தது. அதுவாயைப் பிளந்துகொண்டுசிலந்தியைநோக்கிப் பாய்ந்தது.

அதைக்கண்ட சிலந்தி, அதிர்ச்சியில் ஆடிப்போனது. ஊடனடியாக சுதாரித்துக் கொண்டு வேகமாக ஓடியது. ஆறையின் சன்னல் வழியாகவெளியேறியது.

இதனை எதிர்பார்க்காத பாம்பு திகைத்துப் பின் சுதாரித்து பின் தொடர்ந்தது. நிறைய பஞ்சினை சாப்பிட்டிருந்ததால் சிலந்துயால் வேகமாக ஓட முடியவில்லை.

எனவே, பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக சிலந்தியை நெருங்கியது. மீண்டும் பாம்பு வாயைப் பிளந்து சிலந்தியைப் பிடிக்க முயன்றது. அப்போது அந்த அதிசயம் நிடைபெற்றது. வானத்திலிருந்த வயதான கிழவரான சூரியன் இதனைப்பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குச் சிலந்தியின் செயல்பாடுகள் அனைத்தும் தெரியும். எனவே, அதற்கு உதவவேண்டுமென்று விரும்பினார்.

சூரியயனான தாத்தாதனது சூரியக்கதிர் ஒன்றினை சிலந்தியை நோக்கி அனுப்பினார். அக்கதிர் சிலந்தியின் வாயிலிருந்த பஞ்சு நூலுடன் இனைந்தது, அப்படியே அதனை வானை நோக்கி இழுத்துக் கொண்டார். அப்போதுபாம்பால் சிலந்தியைப் பிடிக்கமுடியவில்லை.

இதனையுணர்ந்த சிலந்தி மிகவும் மகிழ்ந்தது. அது சூரியத்தாத்தாவை வணங்கியது. பாம்பிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய சூரியனுக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென எண்ணியது.

தான் தின்றிருந்த பஞ்சினை நூலாக்கி அழகிய வெண்மையான ஆடையாக நெய்தது. அதனை சூரியனுக்கே வானில் போர்த்தியது. அதுவே மேகமாக வானில் பரவியது.

எனவேதான் மேகம் வெண்மையாகவும், மென்மையாகவுமிருக்கிறது. இக்காரத்தால்தான் ஜப்பானில் சிலந்தியையும் மேகத்தையும் 'குமோ' என்றஒரேபெயரில் அழைக்கின்றனர்.




நன்றி: திசைஎட்டும்