கனவு

 

கதை:   அசமன்னூர் ஹரிஹரன்

தொகுப்பு:  எம்.முகுந்தன்

மொழிபெயர்ப்பு : .இராஜாராம்

 

கதவைத் திறந்தாள். உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பேசமல் கவிழ்ந்து படுத்திருக்கிறாள். மறுபடியும் கூப்பிட்ட போதும் எழுந்திருக்காததினால் வெளியே போனான்.

டாக்ஸி டிரைவருக்குக் கட்டளையிட்டான். ”திரும்பிப் போய்க்கொள் நிராசையுடன் அவன் திரும்பிப் போனான்.

தங்கத்திற்கு என்னவாயிற்று? ஒன்பது மணியாகியும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை. காலையிலே டாக்டரிடம் போகலாமென்று நேற்றிரவு சொல்லியிருந்தான். தான் டாக்ஸியோடு வரும்பொது அவள் ரெடியாகி இருப்பாள் என்று நினைத்திருந்தான். உறக்கம் போதவில்லையாக இருக்கும். அப்படியானால் இனி டாக்டரிடம் இன்னொரு நாள் போகலாம்.

நேற்றுப் பாதி ராத்திரி ஆன பின்னும் தங்கமணிக்கு உறக்கம் வரவில்லை. அவள் தன்னையே சலித்துக்கொண்டு படுத்திருந்தாள். பிறந்திருக்க வேண்டியத்தில்லையென்று தோன்றியது. ஆனால் சொல்லி என்ன பயன்? பிறந்தாயிற்றல்லாவா? நினைவு தெரிந்தது முதல் இப்படி நினைக்கத் தொடங்கி விட்டாள். இவ்விரவிலேயே இறந்து போய்விட்டால்... இல்லாவிட்டால், நாளைக் காலையில் டாக்கடரிடம் போகும்போது திருட்டுத்தனமெல்லாம் வெளிப்படும். இரகசியமெல்லாம் அம்பலமாகும். புருஷன் அவளை தள்ளி வைப்பான்.

பிறகு என்னவெல்லாம் நேரும்? ஒன்றும் நினைக்க முடியவில்லை

திரும்பியும், புரண்டும் படுத்தாள். நினைவுகள் அசைபோடுகின்றன.

ஸ்கூலில் படிக்கையில் முதலிலெல்லாம் அவளுக்கு கர்வம் உண்டாகியிருந்தது. நிறையப் பணமிருந்தது. வேண்டிய அளவு ஆபரணங்களிருந்தன. தனது சிநேகிதிகளெல்லாம் ஏழைகள். அவர்கள்எண்ணெய்க் கருப்பி என்றும்குள்ளப் பெண்ணே என்றுமெல்லாம் அழைப்பதுண்டு. அப்போது கோபம் உண்டாகும். பலவும் சொல்வாள். கடைசியி்ல்தான்எல்லாம் புரிந்தது. அப்போது ஆயுதத்தையுப் போட்டுவிட்டுச் சரணடைந்தாள்.

அவள் கருப்பு. உயரம் குறைந்தவள். அழகற்றவள். அதனால்தான் அவளைப் பையன்கள் யாரும் பார்ப்பதில்லை.

சிநேகிதிகளுடன்கூடப் போகையில் மீதிப்பேரை மட்டும் பையன்கள் உற்று நோக்குவார்கள். கருப்பிடம் இத்தனை விரோதமா ஆண்களுக்கு? உயரம் குறைந்திருந்தாலும், கொஞ்சம் விரூபமானவளானாலும் அவர்கள் சற்றுப் பார்க்கக் கூடாதா? வாழ்க்கையில் அவளுக்கு ஒரு ஓரப் பார்வைகூடக் கடைக்கவில்லையே.

சிநேகிதிகளிடமெல்லாம் பொறாமையே உண்டாயிற்று. குறிப்பாக ரமாவிடம். விலை கூடிய ஆடைகளும் நகைகளும் எதுவும் இல்லாமலேயே பையன்கள் அவளில் அழகைக் காண்கின்றனர். அவளைப் பார்க்கின்றனர். பாடுகிறார்கள். இதெல்லாம் அவளுக்கு வெறுப்பாயிருந்தது. ஆண்களிடமும், அழகான பெண்களிடமும் ஒரு வெறுப்பு.

அவளது நிறம் சிவப்பில்லையென்பதினால் பெரிய மனச்சோர்வு உண்டாயிற்று. அதுபோல உயரமும் அழகும் குறைந்து போவதிலும், அதோடு வீட்டுக்காரர்கள் ஒரு பெயர் வைத்திருக்கிறதைப் பாரு! ’தங்க மணியாம். ’தங்கம்தான் போ! பார்த்திராத ஆண்பிள்ளைகள் ஏமாற்ற உதவும். அவ்வளவுதான்.

ஸ்கூலுக்குப் போகும்போது எவ்வளவு நேரம் கண்ணாடி முன்னால் செலவாக்கிக் கொண்டிருந்தாள். இரண்டு அங்குலக் கனத்திற்காவது பௌடர் பூசுவாள். லாக்டோகலாமின் உபயோகிப்பாள். சங்கிலிகளை மாற்றி மாற்றி அணிவாள். காதுகளில் சில சமயம் வளையம் அணிவாள். சில சமயம் நட்சத்திரக் கடுக்கன். மற்ற சில சமயம் ஜிமிக்கியாக இருக்கும்.

மயிர் நல்ல அடர்த்தியாயிருந்தது. அது என்னவானாலும் நல்லாதாயிற்று. அதற்காகவது சவுரி வைக்க வேண்டாமில்லையா?

ஹைஹீல்ஸ் செருப்புதான் அணிவது. உயரம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுமில்லையா.

இதெல்லாம் இருந்தும் போதுமெனத் தோன்றவில்லை. அதனாலொன்றும் ஒரு பயனும் காணோம்.

அவள் சவுரி வைத்துக் கட்டக்கட்ட இன்னும் அதிகமாக முழைத்துக் காணப்பட்டது. சிநேகிதிகள் வெறும் வேடிக்கைபோல அவளைக் கேலி செய்தனர். ’கருப்பியென்றும்குள்ளி என்றும் அழைப்பது வேடிக்கைக்கு என்று எப்படிச் சொல்வது! அவர்கள் சொல்வது நிஜம்தானே. அவள் கருப்புத்தான். உயரம் குறைந்தவள்தான். அழகற்றவள்தான்.

பெயர் வேறு தங்கமணி. இதெல்லாம் உண்மையல்லவா? வேடிக்கையில்லையே.

 

இறுதியில் மனம் சோர்வுற்றது. ஆடம்பரங்களையெல்லாம் விட்டாள். பெண்ணாணால் பணமில்லாவிடினும் அழகு வேண்டும். வீட்டு வேலைக்காரியான மாதவிகூடத் தன்னைவிடச் சிவப்பு. வயசு முப்பத்தைந்து ஆனபோதிலும் அழகு மங்கவில்லை.

யார் கண்டாலும் சற்றுப் பார்ப்பர். அப்படியானால் அவள் மாதவியைவிட......

பத்தாம் வகுப்பில் ஜெயித்தபோது அப்பா சொன்னார்: "மகள் இனிமே படிக்க ஒண்ணும் போகவேண்டாம். படிச்சி ஜெயிச்சு வேலை கிடைச்சுத்தானோ செலவுக்குப் பணம் கிடைக்கணும்?"

நிம்மதியாய்போயிற்று. அவ்வாறு படிப்பை நிறுத்தினாள். பிறகு வீட்டில் இருப்பாயிற்று. சினேகிதிகளின் திருமண அழைப்புகள் முறையாக வந்துகொண்டிருந்தன. ஒன்றிற்கும் போகவில்லை, வாழ்த்தவுமில்லை முன்பிருந்தே யாருடனும் அதிகமாகப் பேசுவதில்லை. முக்கியமாக ஆண்களுடன். பக்கத்து வீடுகளில் நுழைவதில்லை. ஏகாந்தமே பிடிக்கும். சகோதர சகோத ரி யாருமில்லை. வீட்டுவேலைகளிலும் பங்கெடுப்பது வேண்டாம்.அப்பா வாத நோயில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அம்மாதான் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்கிறாள். அப்படியிருக்கையில் அவளது தனிமைக்கு எந்த இடையூருமில்லை யல்லவோ.....

ஓரிரவில் தூங்கிக்கொண்டிருக்கையில் அந்தக் கனவு. பதறிப் போனாள். அவளை ஒருவன் திருமணம் செய்துகொள்வதாகவும், கொஞ்சகாலம் ஆனபோது தானொறரு மலடியென்பது தெரிவதாகவும், அப்போது அவன் அவளை விலக்கிவிட்டுப் போவதகவும்.

பயங்கரமான கனவு. பீறிட்டெழுந்துகொண்டு விழித்தாள். இருட்டில் கையால் துழாவிப் பார்தாள். ஓடிப்போகும் கணவனைப் பிடித்து நிறுத்த.

அவளை மனவேதனைகுள்ளாகிய அக் கனவை கண்டபின் அன்றிரவு உரக்கம் வரவில்லை. நினைத்து நினைத்துப் படுத்திருந்தாள்.

ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்! எத்தனை சந்தோஷத்துக்குரியது அது. ஆனால் சற்றுக்கழிந்து விலக்கி வைத்தானல்லவோ. அதுவும் அவள் ஒரு மலடி என்று தெரிந்தபோது!

! அவள் அப்படி ஏதாவதாக இருப்பாளோ?

கனவு நனவாகிப்போகுமோ? கனவிலும் உண்மையின் கூறுகளைக் காணமுடியுமோ?

அப்படியானால் பின்னர் அவள் வாழ்க்கை என்னவாகவிருக்கும்?

 

தலைமுறைகள் தன்னோடு முடியும். ஒரு சங்கிலித்தொடரின் கடைசிக் கண்ணியாகிப் போவாள் அவள்.

"என் குருவாயூரப்பா... கப்பாற்று...." உள்ளம் நொந்து பிரார்த்தித்தாள்

மனதில் எப்போதும் ஒரேயொரு சிந்தனை. அவள் பிரசவிக்காதவள் என்று. அந்த கனவைப்பற்றி யோசித்துக்கொண்டே அப்போதும் இருக்கை. வேதனையப்பற்றிய ஏகாந்த சிந்தனைகள். அந்தச் சிந்தனையிலிருந்து சுகம் கிட்டும். தனிமையில் சுகம். அதுவும் ஒருவிதமான சுகம்தான்.

ஆண்வர்கத்திடம் வெறுப்புத் தோன்றத் தொடங்கிற்று. அவர்களுடைய நட்பும் வேண்டாம். பேசத்தோன்றுவதில்லை. வீட்டு வேலைக்காரன்கூட நிறையத் தடவைகள் கேட்டபின்பே அவள் ஒரு பதில் கொடுப்பாள்.

ஆசைகள் இல்லையென்றில்லை. அவளும் ஒரு பெண்ணல்லவா. உலகத்தோடும் உல்கத்தாரோடும் ஒரு வெறுப்பு. வாழ்க்கையில் ஒரு கசப்பு. ஆனாலும் வாழ்ந்து தள்ளுகிறாள், அவ்வளவுதான். மனம் நிறைய வேதனை.

பேரூழியிலிருந்து ஓடிவரும் நதியை அவள் அடைத்துக்கட்டி நிறுத்துகிறாள், தடுத்துவைக்கிறாள், ஓட்டத்தை நிறுத்துகிறாள். அவ்வோட்டம் அப்படியாக அவளில் வந்து முடிகிற்து. கண்ணை மூடிக்கொண்டு குனிந்தமர்ந்திருப்பாள். அப்போது அந்த நாசமாய்ப் போகும் கனவு பறந்து வரும். யாருமற்ற கணவனால் கைவிடப்பட்ட ஒரு மலடி. அவளுக்கு தலைமுறைகளை வளர்த்த முடியாது. நினைக்கையில் துன்பம்தான். அவள் முழுவதும் நலிந்து சிதைந்து வேதனைமட்டுமேயாக ஆகிவிடுவதைப்போல. அப்போது எல்லா இடத்திலும் ஒரு இருள். இருளும் வேதனையும் மட்டும். அவள் வேதனையாகிவிடுகிறாள். இருளாகிவிடுகிறாள். மீண்டும் மனுஷியாக மாறுகிறாள். அப்போதுதான் எல்லாக் கஷ்டமும். இருளாக மட்டும் ஆகிவிட்டாலும், வேதனையாக மட்டுமே ஆகிவிட்டாலும், அவை ஒன்றையும் அவள் அனுபவிப்பதாகத் தோன்றாமலிருந்தது.

தனிமையோடு சிதைந்து இணைவது சுகம், எங்கும் வெறுமைதானே. அங்கேயும் அவளும் சூன்யமாகிவிடுகிறாள். அது ஒரு பரவசநிலை. அவள் எல்லாவற்றையும் மறந்து ஒன்றும் இல்லாமலாகிவிடுகிறாள், இருட்டாகிறாள், துன்பமாகிறாள், வெறுமையாகிறாள், மீண்டும் மனுஷியாகிறாள்.

அப்படி துன்பம் மனத்தையும் உடம்பையும் அரித்துத் தின்று கொண்டிருந்தது. அப்பா, அம்மாவுக்குக் கவலை தோன்றத் தொடங்கியது. ஆசைமகள் எப்படி இப்படிச் சோர்ந்து போனாள்? வருவோரும் போவோரும் கூறினார்கள்.

கல்யாணம் பண்ணாததினால் இருக்கும்.”

 

கல்யாணம் பண்ணாததினாலாம்! ரொம்ப நல்லது. அவள் மனம் குமைந்து புகைவதினால்தான் என்று யாருக்காவது தெரியுமா?

அப்பா பலதடவை கட்டாயப்படுத்தியதும் ஒரு டாக்டரிடம் போனாள். அவர் ஒரு ஸைக்யாட்ிரஸ்ட். எல்லாவற்றையும் விவரித்தாள். அவளது மனத்தின் அடித்தட்டு வரையிலும் அவர் துழாவி மூழ்கிக் கண்டார். விரிவான மெடிக்கல் செக்கப்பும் நடத்தினார். பிறகு சொன்னார்: மனதின் உளைச்சலே உடலின் சோர்வுக்குக் காரணமென்று. கண்டதையும் சிந்தித்து மனதைப் புண்ணாக்கிகொள்ளக் கூடாதென்று.

பல டானிக்குகள் எழுதிக் கொடுத்தார். கடைசியில் இதுவும் சொன்னார்:

ஒரு டாக்டர் என்கிறதினால இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் திறந்து சொல்கிறேன். கலவரமடைய வேண்டாம். நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டாம். செய்துகொண்டாலும்...”

அவர் கூறியது முழுவதையும் கேட்க முடியவில்லை. தலை சுற்றுவது போலத் தோன்றியது. பிறகு எதுவும் நினைவில்லை. வெகு நேரத்திற்குப் பின்னரே நினைவு திரும்பியது.

வீட்டுக்குப் போனாள். மனதின் கஷ்டமே சோர்வின் காரணமென எல்லோருக்கும் அறிவித்தாள். திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சொன்னதை மட்டும் யாரிடமும் கூறவில்லை. அந்த இரகசியம் அவளோடேயே இருக்க வேண்டியதொன்று. யாரும் அதை அறிய வேண்டியதில்லை. அவளுடைய இதயத்திலிருந்து வேகட்டும்; வெந்து புகையட்டும்; புகைந்து எரியட்டும். அப்படியே சாக வேண்டும். அப்படியானால் எவ்வளவு நல்லது!

டானிக்குகளாலும் லேகியங்களாலும் அலமாரி நிறைந்திருந்தது. அவள், அவை எதையும் சாப்பிடவில்லை, அவ்வளவுதான். மனதில் வேதனை வளர்ந்து பந்தலிட்டிருந்தது. அதில் பூக்களும் காய்களும் நிறைந்துவிட்டன. தனியாக இருந்து வெந்து வெந்து இறக்கிறாள். ஒரு கனவு நனவாகிவிட்டது. அவளது வாழ்க்கையைத் தகர்த்த - தகர்த்துக்கொண்டிருக்கும் கனவு. மனத்தின் சாந்தியை நெரித்துக்கொன்ற கனவு. தலைமுறைகளுக்கு உயிர் கொடுக்கத் தன்னால் முடியாதெனக் காட்டிக் கொடுத்த கனவு. இனிமேல் கனவே காணாமலிருந்தால்!

அம்மா ஒரு நாள் அவளுடைய கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்து வீட்டாள்--டானிக்குகளை டம்ளரில் ஊற்றிக்கொண்ட பின் முற்றத்தில் கொண்டுபோய்க் கொட்டுவதை.

"மகளே,நீ மருந்தையெல்லாம் கொண்டுபோய் ஏனிப்படிக் கொட்டுகிறாய்? அதைச் சாப்பிட்டால்தானே உடம்பு சரியாகும்?"

பிறகு தாயின் நிர்ப்பந்தப்படி எல்லாம் சாப்பிடவேண்டி வந்தது. தாய் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் சாப்பிடவைக்க ஆரம்பித்தாள்.

 

நிரந்தர நோயாளியான அப்பாவின் உடல்நிலை மோசமாயிற்று. ஆனால் அவளுடைய உடம்பு தேறிக்கொண்டுமிருந்தது. தாயின் கவனிப்பும் சிசுருக்ஷையும் காரணமாயிருக்கலாம். டானிக்குகளுக்கு உடம்பைத் தேற்றத்தானே முடியும்!

அவளது மனத்துள் இருளுக்கும் ஒளிக்குமிடையே வட இழுப்புப் போட்டி. ஒளியைத்தான் அவள் வேண்டுகிறாள். அதற்காக வேட்கையுறுகிறாள். ஆனால் அவளுக்கு அதற்கொன்றும் அருகதை இல்லை யல்லவோ.

இறுதியில் இருள்தான் வெற்றி பெறுகிறது. பூமியில் ஒளி விழுந்தாலும் அவ் வெளிச்சம் மனம் வரையிலும் எட்டுவதில்லை.

இருள் ஒளியை அரித்துத் தின்கிறது -- கார்மேகங்கள் சூரியனைத் தின்பதுபோல.

அவள் பலவாக மறுகுகிறாள். வேதனை, வெறுமை, அந்தகாரம். அப்பாவின் கட்டாயம் பொறுக்க முடியவில்லை. ஒரேயொரு மகள். தான் சாகும் முன் கல்யாணம் செய்து பார்க்கவேண்டுமாம். இப்போது நோயெல்லாம் தீர்ந்து ஆரோக்கியசாலியாகிவிட்டிருக்கிறாளே என்று. அவளது மனம் கொதித்தபோதும் உடல்தேறுவது ஏனோ?

தாயும் தொந்திரவுபடுத்தத் தொடங்கினாள். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்று. அவளிலும் ஆசைகளின் நரம்புகள் இல்லாமலில்லை. ஆனால் தெரிந்துகொண்டே புருஷனை எப்படி வஞ்சிப்பது?

உண்மையை உடைத்துச் சொன்னால்? அப்பாவும் அம்மாவும் அலமந்து தர்ந்து போவார்கள்.

அப்பா மீண்டும் கட்டாயம்தான் படுத்துகிறார். ஒரு நாள் அருகிலழைத்துத் தடவி கொடுத்தவாறு சொன்னார்:

"மகளே, நான் சாகும் முன்னால் உன் கல்யாணம் நடந்து பார்க்கணும். வேறு கல்யாணத்தைப் பார்த்துக்கலாம்னு வைக்க நீயொண்ணும் வேற்ரு மனுஷி இல்லியே!"

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

கடைசியில் அப்பா, அம்மா கட்டாயத்திற்கு பணிய வேண்டி வந்தது. மனத்திற்குள் ஒரு போர்.

பையன் பெண்ணைப் பார்க்க வந்தான். அவனை நேருக்கு நேர் பார்த்தபோது தலைசுற்றத் தொடங்கியது. ஆனால் அதிலிருந்தெல்லாம் எப்படியோ தப்பினாள்.

 

விவாகம் நிச்சமாயிற்று. கல்யாண நாளும் வந்தது. பையன் தாலி கட்டியபோது மீண்டும் ஒரு தலை சுற்றல்போல. மனம் ஒரு போர்க்களமாக மாறியது.

அவள் உண்மையை மறைத்து வைக்கிறாள். தப்பு செய்கிறாள். வஞ்சிக்கிறாள்.

அப்போதும் உண்மை தோற்றுப்போயிற்று.

மாமி பின்னால் நின்று அவளைப் பிடித்துக்கொண்டிருந்தாள், தாலி கட்டுகையில் அவள் விழாமலிருப்பதற்காக. வெடிக்கத் தொடங்கியது புஸ்ஸென்று போயிற்று.

மணஇரவில் அவள் மணவறையில் அலங்கரித்த கட்டிலேறி அசையாமல் அமர்ந்தாள். நாற்காலியில் பொறுமையற்றவனாக அமர்ந்திருக்கிறான் கணவன். யாரும் சற்று நேரத்திற்கு ஒன்றும் பேசவில்லை. கடைசியில் அவன் கூப்பிட்டான்.

தங்கம்...”

பேசவில்லை.

இ்ன்னொரு முறை கூப்பிட்டான். அப்போது அவள் கீழோட்டமாகப் பார்த்துக்கொண்டு குனிந்திருந்தாள். அவன் பக்கத்தில் வந்தான். ஒரு மலரை ஸ்பரிசிப்பதுபோல அவளுடைய உடலைக் கையால் தொட்டான். ஆனாலும் சலனமற்றிருந்தாள். அவனது முயற்சிகளைத் தோல்வியுறச் செய்தாள்.

மனத்தில் போர் ஓய்ந்திருக்கவில்லை. தவறு செய்தாயென மனம் சபித்தது. இறுதியில் மனம் செத்து விழுந்தது. உணர்ச்சி மனதின் செத்த உடலின்மேல் நின்று நையாண்டி காட்டிச் சிரித்தது.

வாரங்கள் மாதங்களுக்கும், மாதங்கள் வருடங்களுக்கும் வழிவிட்டன. பிரசவித்த பெண்களிடமும் கர்ப்பிணிகளிடமும் அவளுக்கு வெறுப்புத் தோன்றவாரம்பித்தது. அருகாமையைச் சேர்ந்த ரோசியின் திருமணம், அவளுடைய திருமணத்தன்றுதான் நடந்தது. அவளுடைய சிநேகிதியும்கூட. இதனிடையில் இரு முறை பிரசவித்து விட்டாள். பிரசவிக்கும் முன் அவளிடமிருந்த நட்பு, அதன்பின் குறைந்து வந்தது. அவளது ஆசைக் குழைந்தையை வீட்டிற்கு கொண்டு வருகையில், கணவனும் கணவனின் தாயும் அள்ளியெடுப்பதைப் பார்ப்பதுண்டு. அதைக் காண்கையில் வெறுப்புத் தோன்றும்.

அக் குழந்தையிடமும் ரோஸியிடமும். அப்போது அவள் உள்ளறைக்குள் போய்விடுவாள். படுக்கையில் விழுந்து தேம்பியழுவாள். யாருமறியாமல் கண்ணீரைத் துடைத்தெறிவாள்.

ரோஸி மூன்றாம் முறையும் கர்ப்பிணியானதைக் கேள்விப்பட்ட போதும் அவள் பெற்றதை யறிந்தபோதும் போய்ப் பார்க்கவில்லை.

கணவனிடம் அவனுடைய தாய் பல சமயங்களில் உள்ளர்த்தம் வைத்துப் பேசுவதைக் கேட்டதுண்டு. பக்கத்திலிருந்து எந்தக் குழந்தை வந்தாலும், அக் குழந்தைகளை அள்ளியெடுத்து முத்தமிடுவதும், தாலாட்டு்ப பாடுவதும், மகனுடைய கையில் கொடுப்பதும் எல்லாம் ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு.

ஐந்து வருடங்களாகிவிட்டன கல்யாணமாகி. இன்னும் ஒரு புது மணப் பெண்போலத்தான் அவளைப் புருசன் கருதுகின்றான்.

கணவன் மிகவும் நேசிக்கின்றான் - நேசம் உள்ளதினால்.

கணவனையும் நேசிக்கிறாள் - நேசிக்காமலிருக்கக் கூடாதென்பதினாலும். வெறுமையும், அந்தகாரமும், வேதனையும் எப்போதும் தன்னோடேயே தான் இருக்கின்றன. அவள் அவைகளெல்லாமேயல்லவா!

பல இரகசியங்களையும் இதயத்தில் ஒளித்து வைத்திருக்கிறாள். அவை எப்படியாவது வெடித்துச் சிதறிவிட்டால்!

இத்தனை காலமும் நாட்களை நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தாள். கடைசியில் நேற்று இரவில்....

அம்மா முகப்பறையிலமர்ந்து அப்பாவின் ஒற்றைக் காது கண்ணாடியை வைத்துக்கொண்டு பாகவதம் வாசிக்கிறாள்.

கணவன் படுக்கையறைக்குள் போனான். உறங்கும் நேரமாயிறென்று அதன் பொருள். அவளும் பின்தொடர்நதாள். வழக்கம் போல் மயிரை அவிழ்த்து உதறி மேல்புறமாகத் துாக்கிக் கட்டிக் கொண்டாள்.

அப்போது கணவன் அவளை வாரியணைத்து உதட்டோடு சேர்த்துக்கொண்டு அமுங்கிய குரலில் அழைத்தான்.

தங்கம்...”

உம்...” அதைவிட அமுங்கிய தொனியில் கேட்டாள்.

உனக்கு என்னைப் பிடிக்கிறதா?”

ஏன் இப்படிக் கேக்கிறீங்க?”

அப்படின்னா நான் சொல்றதைக் கேப்பியா?”

உம்...”

பிறகு சற்று நேரத்திற்கு ஒன்றும் சொல்லவில்லை.

அவன் என்னவோ யோசித்துக்கொண்டிருந்தான். முகத்தில் இடரார்ந்த சிந்தனை. விவாகரத்து செய்யலாமா என்பதைக் குறித்து இருக்கும்.

அப்படியானால் நல்லதாய்ப் போயிற்று. அவருடைய எதிர்காலமாவது நன்றாகும் அல்லவா. நாலைந்து வருடமாயும் அவருக்கு ஒரு குஞ்சுக் காலைப் பார்க்க முடியவில்லையல்லவோ. அந்த விஷயத்தைப்பற்றித்தானிருக்கும் இவ்வளவு பலமாகச் சிந்திப்பது. இல்லாவிட்டால் இப்படி இருக்க மாட்டாரே.

 

மீண்டும் அவளை உதட்டோடு இணைத்தான். பிறகு சொன்னான். ”நாளைக் காலையில் நாம் கொஞ்சம் அந்த டாக்டர் கிட்டப் போய்ப் பார்க்கலாம். கல்யாணமாகி நாலைஞ்சு வருஷமாயிட்டுதில்லையா? என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்.”

கேட்டபோது பதறிப்போனாள்.

அந்த உதடுகளிலிருந்து தன் உதடுகளைப் பறித்தெடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டி வந்தது.

போகலாமென்றோ வேண்டாமென்றோ சொல்லவில்லை.

நாளை அவள் தீர்ப்புக்குள்ளாவாள்... எல்லாம் வெளியாகும்.

மனம் அமர்ந்து வீங்கி, கொதித்து, துடித்தது. இறந்துபோய்விட்டிருந்தால்!...

எவ்வளவு நேரம் அப்படிக் கிடாந்தாளென்பது நினைவில்லை. கடிகாரம் இருமுறை அழுவது கேட்டது. அந்தக் கடிகாரத்திற்கும் வேதனை இருக்கலாம்.

தாகம் உண்டாயிற்று. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க எழுந்தாள். அவளது உடல்மேல் அணைத்து வைத்திருந்த கணவனின் கையை எடுத்து மெதுவாகத் தள்ளி வைத்தாள். குறட்டைவிட்டுத் துாங்குகிறார் அவர்.

இரண்டு டம்ளர் நிறைய தண்ணீர் குடித்தாள். மீண்டும் வந்து படுத்தாள். ஜீரம் போலத் தோன்றியது. சற்றுக் குளிரவும் செய்தது. இதய பாகத்தில் எவ்வளவு வேதனை! இருளின் கனம் அதிகமாகிறது. கண்ணை மூடிக்கிடந்தாள். மனத்தின் இருள் வெளியேயும், வெளியிருட்டு மனத்திற்குள்ளும் வீசுகிறது.

எங்கும் வெறுமை நிறைகிறது. தான் இருளாகிவிடுகிறாள். வெறுமையாகிவிடுறாள்.

முடிவில் சூன்யத்திற்கு உயர்த்தப்படுகிறாள். இனி, விழிக்காமலிருக்கட்டும்.

 

 

கதாசிரியர் அறிமுகம்:
 

அசமன்னூர் ஹரிஹரன்.

முழுப்பெயர் டி.கெ.ஹரிஹரன் நாயர். பிறப்பு 1940-ல். மனத் தத்துவத்தில் எம்.., பாஸாயிருக்கும் அவர், மத்ய அரசாங்கத்தில், திருடர்கள் பள்ளியில் மனத்தத்துவ நிபுணர் என்ற பதவி வகிக்கிறார். கவிஞரும் நாவலிஸ்டும் கட்டுரையாளரும் கூட. 

நூல்கள்: மன நோய்கள் (கட்டுரைகள்.); மஞ்சட்குருவிகள் (நாவல்); கள்ளி (துண்டுக் காவியம்). 

முகவரி: ரிஸர்ச் ஆபீஸர். டைரக்டரேட் ஆஃப் சைக்காலஜிக்கல் ரிஸர்ச், 'எம்' பிளாக். ப்ரதிரோத மந்த்ராலயம். நியூ டில்லி-1.

-----------------------------------------------------------