பித்தம்

கதை:  கோவிலன்

தொகுப்பு:  எம். முகுந்தன்

மொழிபெயர்ப்பு : ம.இராஜாராம்
 

 

கமலாவின் தாயாராயிருக்குமோ?

வாயிலில் நிழலாடியதும் டாக்டரின் முகம் கேள்விக்குறியாயிற்று. வாய் ஓயாமல் வம்பு பேசுகிற ராம்மோகன் டாக்டரைக் கவனிக்க வில்லை. தன்னுடைய பேச்சின் பீறிடலில் அவன் மூழ்கிப்போனான். நிழல் சற்றுத் தயங்கி நின்றது. திரைச்சீலையின் கீழே பதிந்த பாதங்களும், முனைத்து நின்ற நரம்புகளும், காய்ப்பு ஆணியும், குழி நகம் விழுந்த விரல்களும் தெரிந்தன. மாலிக்குட்டிதான். அவள் போகவில்லையா? மோகன், கொஞ்சம் மெதுவாகப் பேசு. இது ஆஸ்பத்திரி. டாக்டர் எழ முனைந்தபோது காலடிகள் நீங்கிவிட்டன. மோகன், உனக்கு பயந்து உன் சப்தத்தில் பயந்து அவள் உள்ளே வரவில்லை. ஏன் அவள் போகவில்லை?

டாக்டர் வாட்சைப் பார்த்தார். வாட்ச் தெரியவில்லை. மணிக்கட்டில் கமலாவின் வட்ட முகம் தெரிந்தது. முட்களோ, கண்களோ, அவயவங்களோ, சிறு பற்களோ எவையுமில்லை. வீங்கி வட்டமான பிஞ்சுமுகம்தான் மணிக்கட்டில் செத்துக்கிடந்தது.

"டானி, இதுதான் அவர்களுடைய நோக்கு. நாட்டில் மூலச்சொத்து மனித இனமாகும். தாயும் குழந்தையும்..."

நீ சற்று நிறுத்துவாயா? நீ எப்போதுமே வாயாடி. உன் மூலதனமே வாய் வீச்சு. அதைத் தாராளமாகக் கையாண்டு நீ இளைய சமுதாயத்தின் ஆளானாய். நீயே இளைய சமுதாயத்தின் உதாரணமானாய். உனது உயர்ந்த வாலிப உடம்பு, உன் மேல்மீசை இவையெல்லாம் உலகம் சுற்றின. விழாவோ, சாவோ! நீ சற்று இங்கிருந்து போவாயா? எனக்கொரு குழந்தையின்... மோகன், கமலா இறந்து போனாள். அவளுடைய பிணமும், தாயும் ஆஸ்பத்திரியிலிருக்கிறார்கள். அவர்கள் இது வரையிலும் போகாதது ஏனென்று கொஞ்சம் விசாரிக்கட்டும்.

"பை பை, என்ன நடந்தது டானி?"

"ஒரு குழந்தையின் கேஸ் இருந்தது. சற்றுப் பார்த்துவிட்டு வருகிறேன். ஜஸ்ட் மினிட்." 

வாயிலில் மாட்டியிருக்கும் திரைச்சீலை தலைகீழாய்த் தொங்குகிறது. இதுவரை இப்படிக் கண்டதில்லை. வாயிலில் யாருமில்லை. திரைச்சீலை அசையக்கூட இல்லை. துக்கமோ? எவ்வளவு அழகானவை இப் பூக்கள்! திரைச்சீலையில் செடியின் தண்டுகள் கீழ்ப்பக்கமாக வளருகின்றன. அவை மண்ணில் உரமும் வாயுவில் உப்பும் தேடுகின்றன. யார் அவற்றின் வளர்ச்சியைத் தடுத்தார்கள்? தையல்காரனா, அட்டெண்டரா, பெருக்குபவளா? ஸிஸ்டர்களாக இருக்காது. அவர்கள் மலர்களை ஆராதிக்கிறார்கள். நட்டு நீரிட்டுப் போற்றுகிறார்கள்.

கமலாவின் தாயார் எங்கே?

இப்போது டாக்டர் டானியல் வாட்சைப் பார்க்க முயலவில்லை. மணிக்கட்டில் நினைவுகள் பத்திரப்படுத்தப்படுவதில்லை. கமலாவின் எல்லையற்ற தூய மென்முகத்தை டாக்டருக்கு எங்கும் தேட வேண்டியிருக்காது. ராம்மோகனின் பார்வை நிலைத்த வலதுகை மணிக்கட்டில் நிமிடங்களை அளந்தார். நான்கு நாற்பத்து மூன்றை நிமிட முள் அசைந்து அடைகிறது - நாற்பத்து நான்கு, நாற்பத்தைந்து, ஐந்து முப்பதுக்கு வரவேற்பு விழா.

அன்பர்களே,

உலக இளைஞர் சபையின் நல்வரவேற்பைத் தெரிவிக்க..- உலகத்தின் இதயம் ராம்மோகனின் நெஞ்சத்தில் பறையடித்தது. தொண்டையடைத்தது. நிமிட முள் ... திரும்பி வந்திருந்தபோது டாக்டரின் முகத்தில் முன்பில்லாத தளர்வு உண்டாகியிருந்தது.

"டானி, நான் .என்ன கூறிக்கொண்டிருந்தேன்? நீ தியானத்தில் ஆழ்ந்துவிட்டாயோ? யு.எஸ்.எஸ்.ஆரிலும் மத பக்தர்கள் உண்டு. மாதா கோவில்களும் கன்னி மேரியும் உண்டு. அவர்கள் தாய்மாரை ஆராதிக்கின்றனர். ஒருத்தி கர்ப்பிணி என்று தெரிந்தால்...

இப்போது டாக்டர் டானியலின் முகத்தில் சற்றும் தளர்ச்சியில்லை. அவருடைய பெரிய கண்களில் தாகத்தின் திரி எரிகிறது. அவர் காதால் கேட்கவில்லை. ராம்மோகனின் முகத்தை நோக்கி, கண்ணிலெரியும் திரி தாவிப் படருகிறது.! செய்தி: யு.எஸ்.எஸ்.ஆரில் ஒருத்தி கர்ப்பவதி என அறிந்தால் என்ன நடக்கும்! கணவன் சபிப்பானோ? மாமியார் சாபமிடுவாளோ? மூத்த குழந்தைகள் தாய்க்குத் துரோகம் இழைப்பார்களோ?

"நான் ஐரோப்பாவும் அமெரிக்காவும் பார்த்தேன். யு.எஸ்.எஸ். ஆர் பார்த்தேன். அமெரிக்கத் தம்பதிகள் இருக்கிறார்களே, ஒப்பிடும் போது அவர்கள் தனவந்தர்கள்தாம். பணமுண்டு. ஒவ்வொருத் தருக்கும் கார் உண்டு. ஆர்ப்பாட்டங்களுண்டு. ஆனாலும், ஒருத்தி பெற்றுப் பிழைத்து வருவதற்குள் சகல சம்பாத்யமும் தீர்ந்து, கணவனையும், காரையும்,வீட்டையும்,பணயத்தில் வைத்துவிட்டிருப்பார்கள். அதுதான் அங்குள்ள செலவின் நிலைமை. பிள்ளைப்பேறு நிலையத்துள் நுழையவே அவர்கள் பயப்படுகிறார்கள். சோவியத்தில் ஒருத்தி கர்ப்பிணி என அறிந்தால் போதும்; சோவியத் நாடு காத்து நின்று கொண்டிருந்ததோ என்று தோன்றும். அவளை நாடு ஏற்றுக் கொண்டு விடும்.முதுகு வலிக்கிறதா? எலும்பு நெரிகிறதா;மனம் குமட்டுகிறதா? அவள் தாயாகப் போகிறாள்.அவள் நாட்டின் சொத்தாகப் போகிறாள். அவளுடைய கர்ப்பப் பையில் நிதி சுமக்கிறாள். பெண், மாதா ஆகிறாள். குழைந்தைகள் பொன் மணிகள். கர்ப்ப சிச்ருஷைகள், சுகப்பிரம். நர்ஸரிகள்-தாய்க்குத் தெரியாது; ப்பனுக்குத் தெரியவேண்டாம்; நாடு தாயார்களை உபரிக்கிறது: குழந்தைகளை ர்க்கிறது."

டாக்டர் டானியல் வாயிலிலேயே பார்வையை ஊன்றியிருந்தார். ராம்மோகனின் பேச்சை ஒரு காதால் கேட்டார். வாயிலில் வந்தடையும் காலோசைக்காக இன்னொரு காதைக் காத்து வைத்தார்.பழக்கமான செயலாகிப்போயிற்று. பிரித்தறியும் உணர்வின் விரவிப் பரவுதல் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கிறது; எடுத்துக் கொள்கிறது; தள்ளுகிறது; புலனுணர்கிறது. மோகன், நீ பாட்டில் சொல்; நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

திரைச்சீலை தலை கீழாய்த் தொங்கியது. செடிக்காம்புகளில் பூக்கள் தொங்கின. இது என்ன பழிகேடு; பார்த்திருக்கையிலேயே திரைச்சீலை ஒரு முறை சுருங்கி அசைந்தது.

கமலாவின் தாயாரோ? காற்று.

காற்று திரைச்சீலையில் சப்தங்கள் விளைவித்தது. சப்தங்கள் திரைச் சீலையில் நீந்தி விளயாடின. வழுக்கி வழுக்கி இறங்கின. புடைத்துப் பெருத்து நின்றது. 

கர்ப்பமோ?

ஓசைகள் சட்டென்று குறைந்தன. செடிக்காம்புகளும் பூக்களும் கீழ் வரையிலும் வளர்ந்து இடித்தன. வாடி, வெளிறி, விறைத்து நின்றன. உதிர்ந்து விழுகின்றனவோ?

"என்ன டானி, உனக்கு ஓர் அசுவாரசியம்?"

"என்னுடைய ஒரு குழந்தை இறந்து போயிற்று."

ராம்மோகன் திடுக்கிட்டுப்போனான்.

"உன்...?"

"என் குழந்தையில்லை. கமலா என்னுடைய சிகிச்சைக்கு வந்தவள்."

"என்னவாயிருந்தது கமலாவுக்கு?" 

மோகன், நீ என்னை உற்சாகமூட்ட, கமலாவைத் தத்தெடுத்தாற்போல சொந்தம் கொண்டாடிக் கேட்கிறாய். உன் கபடநாடகத்தில் சாமான்யர்கள் மயங்குவர், இரங்குவர். டாக்டர் டானியல் அல்ல. டானியலுக்கு உன்னிடம் வெறுப்பு உண்டென்பதல்ல. நீயும் ஒரு மனிதன். உன்னை வாழவைக்கும் ஜீவஅணுக்கள் உன்னை ஒட்டுணியாக்கி விட்டன. உனக்கு நான் என்றும் மன்னிப்பளிப்பேன். உன் குணத்தை மாற்ற இன்று சிகிச்சையில்லை. நீ இறக்கும் முன், என் வாழ்நாளிலேயே அதற்கும் சிகிச்சை உண்டாகும். ஹரிகோவிந்த் கொரானாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயோ? ஸ்டேட்ஸில் நீ அவரைப் பார்த்தாயா? உன்னை சிருஷ்டித்த ஜீவ அணுக்களில் டி.என்.ஏயின் (D.N.A) சுபாவம் தீர்மானிக்கப்படுகிறது. தூய ஒழுக்கம், சத்தியகுணம் இவை உள்ளவனின் ஜீவஅணுக்களிலிருந்து வேறுபடுத்தியெடுத்து அவற்றை உன்னுள் குத்திவைக்க முடிந்த டாக்டராக எனக்கு வாழவேண்டும்.

கமலாவுக்கு இதய நோயாயிருந்தது. இதயத்திற்கு சக்தியில்லை. இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாமல் அவளுடைய நெஞ்சில் இதயம் தளர்ந்து கிடந்தது. அவளுக்குப் பித்தம் என்று மாலிக்குட்டி கருதினாள். சோகைதான் முதலில் தெரிந்தது. மூச்சு முட்டத் தொடங்கியது. பிறகு நீர்வீக்கம், இழுப்பு ஆரம்பித்தது. வைத்யர் சொன்னார். ஒன்றுமில்லை, பித்தமாக்கும் என்று. இங்கே கொண்டு வந்தபோது கமலாவுக்கு மொத்தமாக வயிறு மட்டுமே இருந்தது. வயிறு வீங்கி நீர் சேர்ந்து நெஞ்சுவரைக்கும் ஏறிக்கிடந்தது. கைகளோ, கால்களோ கமலாவுக்கு இல்லை. முகம் இருந்தது. தலையும் வயிறுமான உடம்பில் அடங்கிப்போயிருந்தாள். உபஜந்துக்களைப் போல முகம்மட்டும் தெரிந்தது. அவள் அப்படி. அவளுடைய தாயார்? தாய் விதவை. கணவன் இறந்தபோது நாலாவது குழந்தை கர்ப்பத்திலிருந்தது. ராம்மோகன், மாலிக்குட்டி தாயாகிறாள். மாதா; ஸ்ரீ என்ற உன் சொத்து. அவளது இளைய குழந்தை வயிற்றுப்பக்கம் குறுக்காக, இளைத்த, இளைத்து இல்லையென்றான குச்சிக்கால்களால் தத்தித் தத்தி அவளது முன்னால் கமலா, அவர்கள் இந்தத் திரைச் சீலைக்குப் பின்னால் வந்து நின்றார்கள். விம்மலும் விசிப்பும் கேட்டன. உள்ளே யாரும் வரவில்லை. திரைச்சீலையை ஒதுக்கித் தள்ள தாயாருக்கு வசதியில்லை. ஒன்று கையணைப்பில், மற்றது விரல் நுனியில். கையை விட்டால் இண்டும் விழும். இப்படியொரு காட்சியை நீ கண்டதில்லை. நீ அதிருஷ்டசாலி. வாலிப சங்கத்திற்குச் செயலாளன்- ஸெக்ரட்டரி ஜெனரல் - உனக்குச் சுற்றிவரக் கார்; தங்க ஹோட்டல்கள்; உனக்கு சேவை செய்யத் தனி வேலைக்காரர்கள்; உன்னைப் பின்பற்ற ரசிகர்கள். நான் யாரைக் கவனிப்பேன்? தாயாரையா, இல்லாத முலைப்பாலைச் சப்பும் குழந்தையையா, கமலாவையா? தாயார் கமலாவுக்காக மட்டும் ஒரே ஒரு சீட்டே எடுத்திருக்கிறாள். மருந்தோ?

மருந்திற்கு என்னிடம் பணமில்லை. இன்று இங்கே வந்ததினால் நானும் நாலு குழந்தைகளும் பட்டினி. பட்டினி!

ராம்மோகனால் சகிக்க முடியாமல் போயிற்று. டாக்டர் டானி எப்படியாவது பட்டினிப் பாட்டுப் பாடிக் கேட்கவேண்டி வராது என்று நினைத்துத்தான் உள்ளே வந்தான். வார்டுகளில் சுற்றி வந்த பின்னும் இன்னும் நேரம் இருக்கிறது. வரவேற்பு விழா வரையிலும் எங்கே போவது?

"நீ என்ன செய்தாய்?"

கமலாவுக்கு கார்டியோ மயோபதி. வைத்யன் சொல்வான் பித்தமாக்கும் என்று. இரத்தம் இல்லை. இரத்தம் குறையக் குறைய நீர்ப் பங்கு ஏறுகிறது. வெளிறுகிறாள். நீர் வைக்கிறது. பித்தமாம்! இந் நாட்டில் யாருக்குத்தான் பித்தமில்லை? இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாமல் இதயத்தின் தசைப்பகுதிகள் தளர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவளுக்கு. தன் மகள் இறந்துகொண்டிருக்கிறாளென்று மாலிக்குட்டிக்குத் தெரியாது. ராம்மோகன், நீ அந்தத் திரைச்சீலையைப் பார்த்தாயா?"

ராம்மோகன் திரும்பிப் பார்த்தான். திரைச்சீலையில் என்ன இருக்கிறது?

"பூக்கள் கீழ்ப்பக்கமாக மலர்கின்றன. தலைகீழாக மண்ணை நோக்கி யாருடைய குற்றம் அது?"

பாவம் ராம்மோகன். அவன் வரவேற்புரையில் மனித இனத்தை அழைக்க நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறான். தலைகீழாக மலரும் பூக்களைப்பற்றி என்ன சொல்ல?

"நான் டிஜாக்ஸின் கொடுத்தேன். - இதயத்தின் தளர்ச்சி நீங்கட்டும். டென்ஸாலின் கொடுத்தேன் - நீர் கழிந்து இறங்கட்டும்."

தலைவரின் பற்றற்ற தன்மையுடன் பற்றற்ற புன்னகையுடன் ராம் மோகன் கேட்டான்:

"மருந்து ஃப்ரீயாகக் கொடுத்தாயோ?"

"கொடுக்கலாம். அநாதைகளின் சிகிச்சை நிதி இருக்கிறதே ஆஸ்பத்திரியில்."

"மருந்து வாங்கமுடியாதவர்களும் இந்நாட்டில் இருக்கிறார்களோ?"

முற்றிலும் வெளிநாட்டானுடையதைப் போல ஆகிவிட்டது கேள்வி! ராம்மோகன் திருத்தினான்.

"இங்கே வருபவர்களில் இருக்கிறார்களோ?"

"சில சமயங்களில்."

"உன்னை ஏமாற்றி சிகிச்சை பெறலாமில்லையா?"

"டாக்டராகிவிட்டேனல்லவா?" 

"உன் குழந்தைகள் இதை அனுபவிப்பார்கள். அவர்களை நீ பட்டினி போடுவாய். வேலை செய்ய முயலாமல் பிச்சையெடுத்தலைபவர்கள் வாசலில் வந்து ஆழாக்குக் கஞ்சி தாருங்கள் என்று கெஞ்சினால் நீ அவர்களைப் போற்றுவாய்."

டானியல் சிரித்தார். அவருடைய முகம் அச் சிரிப்பில் வெளிறிப் போயிற்று.

"ராம்மோகன், என் குழந்தைகள் வளர்வது சோஷலிஸ்ட் இந்தியாவில் அல்லவா?" வாயாடியானாலும் ராம்மோகனுக்கு மென் தோல் உண்டு. அவன் கேட்டான்:

"டானி, நீ ஏன் பாதிரியாகவில்லை?"

"அதுதான் நானும் கேட்கிறேன். நான் விசுவாசி ஆகிறேன். ஆத்மாவைவிட உடம்பை வணங்குகிறேன். கைகளை விரித்து ஆகாயத்தைப் பார்க்கும் மனிதனை நான்; சேவிப்பதில்லை. என் மனிதன் அறிவும், தலையும், இதயமும், சுவாசகோசங்களும், உணவுக்குழாயும், அடிவயிறும், கன்னமும், குடலும், நரம்பு மண்டலமும், எலும்புக்கூடும், தசைகளும், சரும முடியும்."

"ஏன் நிறுத்திவிட்டாய்?"

"வாயிலில் யாரோ இருக்கிறார்கள்."

"நீ உன் மனிதனைப்பற்றிச் சொல்"

டாக்டர் எழுந்தார். ராம்மோகன் ஆச்சரிய வயப்பட்டிருந்தான்.

இவனுடைய சந்ததிகள்!

வாயிலில் மாலிக்குட்டிதான்!

"போகவில்லையா?"

அவளுக்குப் பேச முடியவில்லை.

டாக்டர் டானியல் இரண்டாம் முறை கேட்க நிற்கவில்லை. அவசரமாக நடந்தார். மாலிக்குட்டிக்குப் பார்க்க முடியவில்லை. கோபப் பட்டுக்கொண்டே போய்விட்டார்! ஆக மொத்தம் கனிவாக இருந்தது டாக்டர் மட்டும்தான். அவருக்கும் கோபம். மதருக்குக் கோபம்.

ஏன் போகவில்லை?

இங்கே நோயாளிகள் இருக்கிறார்கள். பிணம் கிடந்தால் நோயாளிகள் பயப்படுவார்கள்.

கொண்டு போ!

எல்லோருக்கும் கோபம். 

அவளுக்கு மூச்சு இல்லை; மூச்சு இருந்தது. மூச்சு நெஞ்சில் முட்டியது. கையால் அழுத்திக்கொண்டாள். அவளுடைய நெஞ்சில் கைகளுக்குக் கீழே வீக்கம். வீக்கத்தில் மூச்சுக் கிடந்து வீங்கியது. நெஞ்சம் பொரிந்தது. நெஞ்சு வீங்கி, முளைத்தது முனையாகி, முனை ஊசியாகி, ஊசி கடப்பாறையாகி, கோடாலியாகி நெஞ்சு வெடிக்கிறது. வெட்டுகிறது. வெடிக்கும், வெடித்துவிட்டது. கூக்குரல் வெடித்துச் சிதறிய போது ராம்மோகனுக்குப் பொறுக்க முடியாமல் போயிற்று. அவன் எழுந்து வாசலுக்கு வந்து திரைச்சீலையை நீக்கினான்.

நாசம்!

எங்கே டானியல்?

மாலிக்குட்டி தகர்ந்த தொண்டையில் எழுத்துக்களை முனங்கி உருட்டினாள்.

கடவுளே!

"என்ன, என்ன?"

சட்டென்று ராம்மோகனுக்கு நெஞ்சம் குமைந்தது.

"நான் டாக்டரல்ல. நானல்ல டாக்டர்! டாக்டர் வெளியே போயிருக்கிறார்."

இன்னும் பதிமூன்று நிமிடங்கள் இருக்கின்றன. போய்விடலாமா? யோசித்து நிற்கையில் டாக்டர் டானியல் அவசரமாக வந்தார். அவருக்குப் பின்னாலேயே மதர் வருகிறாள்.

ராம்மோகன் கேட்டான்.

"என்ன, என்ன டானி?"

"ஒன்றுமில்லை! இவளுடைய மகள்தான் செத்தது. பிணத்தைக் கொண்டு போக முடியவில்லை"

கொஞ்சமாவது சுயபுத்தி இருந்திருந்தால்!

ராம்மோகன் வேறுவிதமாகக் கேட்டான்.

"டாக்சி ஸ்டாண்டு இல்லையா இங்கே?"

டாக்டர் சொன்னார்: "முப்பது ரூபாய் சார்ஜ் தேவைப்படும்; இவளிடம் இல்லை. என்ன செய்யலாம்?"

கொண்டு போகவேண்டாம் என்று ராம்மோகன் மனத்துள் நினைத்துக்கொண்டான். ஆஸ்பத்திரிகளில் எலெக்ட்ரிக் க்ரிமெட்டோரியம் இருக்கவேண்டும். ஓவனில் சவம் எறியவேண்டும். ஸ்விட்ச் ஆன்! உடனே தகிக்கவேண்டும். தாயும் மகளும் தங்கையும் - எல்லா பித்த நோயாளிகளும், எல்லா இதய நோயாளிகளும் - நாட்டின் எல்லா சாபக்கேடுகளும்... மதர் பரந்து விரிந்து நடந்தடைந்தாள். மாலிக்குட்டியிடம் சொன்னாள்: 

"வா!"

மதரின் குரல் கனத்துவிட்டதென்று ராம்மோகனுக்குத் தோன்றியது. டாக்டர் தேவதையாகும்போது ஆஸ்பத்திரியின் மேட்ரன் தேவதூதராக வேண்டாமா?

அவர்கள் மெதுவாக நடந்து நீங்கியபோது டக்டர் கேட்டார்:

"ராம்மோகனின் கார் எங்கே?"

ராம்மோகனுக்குக் கொஞ்சம் நாடகமாடவேண்டி வந்தது. இன்று சுற்றிவரத் தகுதியான ஒரு வாகனம் கிடைக்கவில்லையே. பழைய என்னிடம் மினியே இருக்கிறது. பிணத்தைக் கிடத்தினால் தாயாருக்கு அமர இடம் இருக்காது. உன் வண்டியை எடுத்துக் கொள்ளலாமென்று நினைத்தேன்.

ராம்மோகன் அருவருப்படைந்தான். அருவருப்பை முகத்தின் மயிர்க் காம்புகளில் மூழ்கடித்து ராம்மோகன் சொன்னான்:

"பத்து நிமிடங்களே வரவேற்பு விழாவுக்கு பாக்கியுள்ளது. உலகம் சுற்றி வந்திருக்கிறேனல்லவா. நான் சற்று பங்க்சுவலாக இருக்க வேண்டும்."

அவனுடைய கூம்பிய கன்னங்களில் நிறங்கள் போட்டியிட்டன. சிரிப்பின் வெண்மையை முகத்தில் பிடித்து நிறுத்த அவன் பற்களை வெளியே காட்டினான்.

டாக்டர் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அவசரமாக வாசற்படியிலிறங்கிக் காரில் ஏறினார். பெண்கள் வார்டின் முன்புறத்தை அடையும் போது, ஸிஸ்டர்மார் கமலாவின் சவத்தை எடுத்து வருகிறார்கள். நன்றாகப் பின்புறம் திரும்பி டாக்டர் கதவைத் திறந்துவிட்டார். அவர் எதையும் காணவில்லை. அவருடைய மனதில் மலர்கள் நிறைந்திருந்தன. அம் மலர்கள் தலைகீழாக மலர்கின்றன.

படியில் தயங்கி நின்ற ராம்மோகன் வரவேற்பு விழாவிற்காகச் சொல்லடுக்குகளைத் தேடிக்கொண்டிருந்தான்.

அன்பர்களே... 

 

கதாசிரியர் அறிமுகம்:

 

கோவிலன் 

வட்டம் பரம்பில் வேலப்பன் அய்யப்பன் என்பது இயற்பெயர். கொல்லம் வருடம் 1098-ல் குருவாயூரருகே ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதக் கல்லூரியில் வித்வான் பட்டத்துக்குப் படிக்கையில் படிப்பை நிறுத்தவேண்டி வந்தது. 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு" இய்க்கத்தில் பங்கு கொண்டார். 1943-ல் 'நேவி'யில்

சேர்ந்தபோதிலும் ஒரு வருடத்திற்குப் பிறகு அதிலிருந்து விலக்கப் பட்டார் - நேவி ம்யூட்டினியைத் தொடர்ந்து. நான்கு வருடங்களுக்குப் பின் ஆர்மியில் ஸிக்னல் கோரில் சேர்ந்தார். 1968-ல் ஹவில்தார் மேஜரென்ற பட்டத்துடன் ராணுவத்திலிருந்து விலகினார். கஷ்டமும் கொடுமையும் நிறைந்த ஒரு வாழ்க்கையாகவிருந்தது அவருடையது. ஆரம்ப கால நூல்களில் அதைத் தெளிவாகக் காணலாம். ஒரு கவிஞராகத்தான் இலக்கிய மேடையில் பிரவேசித்தார் என்றாலும், எழுதிய

நாவல்களும் கதைகளுமே ஏராளம். மலையாளக் கதை இயக்கத்தில்

'பட்டாளக் கதை' என்ற ஒரு பகுதியை வளர்த்தவர்களில் ஒருவர். 

நூல்கள் : ஒரு காலத்தில் மனிதனாயிருந்தான், ஒரு துண்டு எலும்பு, ஒரு பலம் நஞ்சு, இவ்வாழ்க்கை நாதியற்றது (கதைத் தொகுப்புகள்); உடைந்த இதயங்கள், மைனஸ் பி,

தோற்றங்கள் (நாவல்கள்); உன் நம்பிக்கை உன்னைக் காக்கும் (நாடகம்). 

முகவரி : கங்ஙாணசேரி, குருவாயூர், கேரளா.