"புத்தகம் படிப்பதால் மட்டுமே சமூக விழிப்புணர்வு சிந்தனையைப் பெற முடியும்..".- உலக புத்தகத் தின விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு

கவிஞர் மு.முருகேஷ்


வந்தவாசி.ஏப்.
17.

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தகத் தின விழாவில், ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால் மட்டுமே சமூக விழிப்புணர்வு சிந்தனையைப் பெற முடியும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். கிராம உதவியாளர்கள் சங்க வந்தவாசி வட்டார செயலாளர் பிரபாகரன், ஆசிரியர் திவாகர்இ நூலக உதவியாளர் மு.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் அ.சரவணன்இ ரோட்டரி சங்கச் செயலாளர் டாக்டர் ஆர்.ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் 'தினந்தோறும் புத்தகத் தினமே...' எனும் தலைப்பில் பேசியதாவது:

ஒவ்வொரு மனிதனும் சுவாசிப்பதைப் போலவே, புத்தகம் வாசிப்பதையும் அவசியம் கைக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கும், சுய சிந்தனையைத் தூண்டுவதற்கும் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம். நாம் பெறுகிற கல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமாக்குகிறது என்றால், பாடப்புத்தகம் தாண்டிய ஏனைய சமூகம், வரலாறு, அறிவியல், இலக்கியம், பண்பாடு சார்ந்த நூல்களே மனிதனின் அறிவு விசாலமடைவதற்கு உதவியாக இருக்கின்றன.

1923--இல் ஸ்பெயினில் கூடிய உலக புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஏப்ரல்-23-ஆம் தேதியை உலக புத்தகத் தினமாக அறிவித்தது. அந்த நாளில்தான் நவீன இலக்கியத்தின் முன்னோடி என்று கொண்டாடப்படும் ஸ்பானிய மொழி எழுத்தாளர் செர்வாண்டிஸ் மறைந்த தினமாகும். பிறகு, அதே நாளைத்தான் யுனெஸ்கோ நிறுவனமும் உலக புத்தகத் தினமாக அறிவித்தது. அதே நாளில் தான் உலகின் தலை சிறந்த நாடக மேதை ஷேக்ஸ்பியரும் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தகங்களைப்போல் சிறந்த நண்பர்கள் வேறில்லை என்பார்கள். நவீன அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள தற்கால சூழலில் இ-புக்ஸ், சி.டி, இணைய வழி புத்தக வாசிப்பு என்பதெல்லாம் புதிய வரவுகளாக இருக்கலாம். ஆனாலும், கையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும் பரவச அனுபவத்தை வேறு எதனாலும் தர முடியாது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும் காகிதங்களில் அச்சிடப்பட்ட புத்தகம் என்பதே என்றென்றைக்கும் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால் மட்டுமே சமூக விழிப்புணர்வு சிந்தனையைப் பெற முடியும். அந்த விழிப்புணர்வோடு வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.

விழாவில், வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசுக்கிளை நூலகத்திற்கு
10 இருக்கைகள் வழங்கப்பட்டன.

நிறைவாக, மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

படக்குறிப்பு :
வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் சார்பாக கிளை நூலகத்திற்கு
10 இருக்கைகளை நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் வசம் வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் அ.சரவணன் வழங்கிய போது எடுத்த படம். அருகில, ரோட்டரி சங்கச் செயலாளர் டாக்டர் ஆர்.ராம்குமார், கிளை நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் உள்ளனர்.